Saturday, April 22, 2017

பேச்சரவம் கேட்டிலையோ?

Image result for chatting under tree
"chatting under a red tree" by lam duc manh.


விசேசம் என்று கூடி அளவளாவும்
இந்த மனிதர்களின் ஓயாத பேச்சு
கிளைகளில் பச்சிலைகளின் சலசலப்பா?
அல்லது சருகுகள் மண்ணில் புரள்வது போன்றா?

ஒவ்வொருவரும் ஒரு கிளை
ஒவ்வொரு வார்த்தையும் இலை
பூக்கள் இருப்பின் அழகுதான் அது
சிறிதோ பெரிதோ
கனிகள் இருந்தால் மேலும் அழகுதானே?

சௌக்கியமா? என்னும் விசாரிப்பில்
தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லைதானே? என்பதில்
அங்கே வெய்யில் எப்படி?
மழை கிழை பெய்ததா? போன்றவற்றில்
பெருங்கடலின் துளி என நின்னை முன்வைத்து
இப்பிரபஞ்சமே அல்லவா விசாரிக்கப்படுகிறது!

சம்பிரதாயம் என்று நீ காணும் வாக்கியங்களில்
சலித்துக்கொள்ளும்படியாய் அப்படியென்ன பிழை?
அன்பிட்டு நிரப்பிவிட்டால் அக்கோப்பைகள்
அமிர்தம் நிரம்பியவை அல்லவா?

1 comment: