Monday, July 29, 2019

என்றார் சூஃபி - 16


50
      “நிச்சயமாக இறைவன் ஒரு பொருளை நாடும்போது அதற்கு அவன் ’குன்’ (ஆகு) என்று அவனது கட்டளையைச் சொல்கிறான், திண்ணமாக அது ஆகிவிடுகிறது” (காண்க: குர்ஆன்: 2:117; 3:47; 3:59; 6:73; 16:40; 19:35; 36:82; 40:68).
      
 காதலின் ஆன்மிக ஞானம் கொடுக்கப்பட்ட ரூமியின் ஓர் அவதானம்:
      
 ”படைப்பு ஏற்பட
ஆகு என்னும் ஆணை
ஒற்றை ஓசைதான் எனினும்
அதனைப் பதிவு செய்திட
இரண்டு எழுத்துக்கள்
இயற்றப்பட்டன”

அந்த இரண்டு எழுத்துக்கள்தான் ஆணும் பெண்ணும்! (ஒவ்வொன்றையும் இறைவன் ஜோடி ஜோடியாகப் படைத்தான். “அனைத்திலும் அதன் இணைகளைப் படைத்தவன் பரிசுத்தமானவன்” (குர்ஆன்: 36:36). அத்தியாயம் மற்றும் வசன எண்களைக் கவனிக்கவும். 36:36. ஜோடி!)

ஒரு பொருள் உண்டாவதற்கான ஆணை அறபி மொழியில் ”குன்” எனப்படுகிறது. இரண்டு எழுத்துக்கள். தமிழில் ஆகு என்று எழுதினாலும், BE என்று ஆங்கிலத்தில் எழுதினாலும் இரண்டு எழுத்துக்களே வருகின்றன என்றபோதும் அவ்வெழுத்துக்கள் இணைந்து இல்லை. அறபியில் குன் என்று எழுதும்போது அவ்விரு எழுத்துக்களும் இணைந்து இருக்கின்றன! அது ஆண் பெண் ஆகிய இருவரைக் குறிக்கிறது என்பது மட்டும் அல்ல, தாம்பத்ய உறவையும் குறிக்கிறது. அவ்வுறவு இன்றி எப்படி ஒரு பிள்ளை உருவாகி வரும்? (இறைவனின் நியதி பற்றிய அவதானத்தில்தான் இக்கருத்து முன்வைக்கப்படுகிறது. விதி விலக்குகள் உண்டு. ஆதம் நபி, அன்னை மர்யம் ஆகியோர். எனினும் ஓர் உயிர் பூமியில் தோற்றம் கொண்டு வெளிப்பட ஆண் பெண்ணின் இணைவு, உறவாடல் நியதியாக்கப் பட்டுள்ளது அல்லவா?) “திருமணம் (தாம்பத்யம்) எனது வழிமுறை” என்பது நபிகள் நாயகத்தின் ஞான வாக்கு.

படைப்புக்களின் உச்சம் மனிதப் படைப்பு. அதிலும் ஆண் பெண் இணை. முதல் இணை ஆதம்-ஹவ்வா (Adam and Eve). மனிதப் படைப்பின் உருவம் மகத்தானது. “நிச்சயமாக மனிதனைப் படைத்தோம் மிக அழகிய அமைப்பில்” (குர்ஆன் 95:4).

அவனது அங்க அவயங்களின் வடிவங்களுக்கும் அர்த்தம் உண்டு. இறைவனின் அறிவுக்கு அது அத்தாட்சியாக இருக்கின்றது. அறபியில் எழுதப்படும் குன் என்னும் சொல்லின் வடிவத்தில், காஃப் என்னும் முதலெழுத்து ஆணையும் நூன் என்னும் இரண்டாம் எழுத்து பெண்ணையும் குறிக்கிறது. காஃப் என்னும் எழுத்திலிருந்து அறுபடாமலே நூன் என்னும் எழுத்து எழுதப்படுகிறது, அது காஃபிலிருந்து வெளியாவது போன்றே. முதல் ஆணான ஆதம் நபியிலிருந்தே வெளிப்பட்டு வந்தார்கள் முதல் பெண்ணான ஹவ்வா!

மேலும், அவ்விரு எழுத்துக்களின் வடிவமும் ஜனனேந்திரிய உறுப்புக்களின் வடிவங்களைப் பிரதிபலிப்பதாக உள்ளன. காஃப் என்னும் எழுத்து ஆணினதும், நூன் என்னும் எழுத்து பெண்ணினதும் ராஜகருவிகளைக் குறிக்கின்றன. அவ்விடத்தில்தான் இறைவன் ஜீவ நீரின் ஊற்றினை வைத்துள்ளான். அவன் நித்திய ஜீவன் (ஹய்யுல் கய்யூம்) மட்டும் அல்லன். அதன் அத்தாட்சி உடல் முழுவதும் வெளிப்படுகின்றது. ஆனால், அத்துடன் அவன் உயிரளிப்பவன் (அல்-முஹ்யீ) என்றும் இருக்கிறான். அதன் வெளிப்பாடு, மனிதர்களில் அவர்களின் சந்ததிகள் உருவாக்கத்திற்கான உறவில் வைக்கப்பட்டுள்ளது. ஜீவ தாதுக்களை ஆணிலும் பெண்ணிலும் படைத்துப் பின் அவனே கருவில் குழந்தைகளை உண்டாக்குகிறான். நூன் என்னும் எழுத்தின் மையத்தில் ஒரு புள்ளி (நுக்தா) வைக்கப்படுகின்றது. அது கருவறைக்குள் உருவாகியுள்ள கருவைக் குறிக்கிறது. அறபி மொழியில் நுக்தா (புள்ளி) என்பது பொருட்களின் ஆரம்ப நிலையைக் குறிக்கும்.”குன்” என்று அறபி லிபியில் எழுதும்போது காஃப் என்னும் முதலெழுத்து (ஆண்) கோட்டுக்கு மேலாகவும் நூன் என்னும் இரண்டாம் எழுத்து கோட்டுக்குக் கீழாகவும் அமையும். ”ஆண்களுக்குப் பெண்கள் மீது ஒரு படித்தரம் உயர்வு உண்டு” (குர்ஆன்: 2:228). தாம்பத்ய உறவில் ஆண் மேலேயும் பெண் கீழேயும் இருக்கும் முறையே சிறந்தது என்று ”திப்புன் நபவி” (மாநபியின் மருத்துவம்) என்னும் நூலில் கூறும் இமாம் இப்னு கய்யிம் அல்-ஜவ்ஸிய்யா அவர்கள் அக்கருத்துக்கு வலுவூட்ட மேற்காணும் இறைவசனத்தை முன்வைக்கிறார்கள். (பிற நிலைகள் (positions) அனுமதிக்கப் பட்டவையே. “உமது மனைவியர் உமது விளை நிலங்கள்; ஆகவே, உமது விளை நிலங்களுக்கு நீங்கள் விரும்பியபடிச் செல்லுங்கள்” (குர்ஆன் 2:223)).

இனி, அப்ஜத் என்னும் எழுத்தெண்ணியல் (ஹிஸாபுல் ஜும்மல்) முறைப்படி குன் என்னும் சொல்லில் பொதிந்திருக்கும் ஞானத்தைக் கவனிக்கலாம். காஃப் என்னும் எழுத்தின் மதிப்பு 20. நூன் என்னும் எழுத்தின் மதிப்பு 50. எனவே குன் என்னும் சொல்லின் மதிப்பு எழுபது. எழுபது என்னும் மதிப்பிற்குரிய அறபி எழுத்து ஐன். ஐன் என்றால் கண் என்றொரு பொருள் உண்டு. ஐனிய்யத் என்றால் ஒன்றியிருத்தல் என்று பொருள். இங்கே அது ஆணும் பெண்ணும் தாம் ஒன்றாகிவிட்டோம் என்று உணரும் வகையில் இணைந்திருப்பதைக் குறிக்கும்.

மூலம், தோற்றுவாய் (source) என்பது ஐன் என்பதன் இன்னொரு பொருள். இப்பொருள் படைப்பியக்கத்தைக் குறிக்கின்றது. குன் என்னும் ஈரெழுத்தாக ஆணும் பெண்ணும் இருப்பினும் அவர்களின் இணைவில் உண்டாகும் குழந்தை அவர்களிலிருந்து வருவதல்ல, அவர்களின் படைப்பு அல்ல. அது இறைவனிடமிருந்தே வருகின்றது. உயிரின், ஆன்மாவின் மூலம் இறைவன்தான்.

மேலும், நூன் என்றால் மீன் என்றும் ஓர் அர்த்தம் உண்டு. பெண்ணின் நிதம்ப வடிவத்தைக் கருதி அதற்கு மீன் என்பது குறியீடாகச் சுட்டப்படுவது சமயங்கள் பலவற்றின் தொன்மங்களில் காணப்படுகின்றது. மீன் என்பது சொர்க்கத்தின் உணவு (காண்க ஹதீஸ்கள்: சஹீஹ் புகாரி 3329; சஹீஹ் முஸ்லிம்: 315). கலவியின்பம் என்பது சொக்கத்தின் இன்பங்களில் இருந்து மனிதர்களுக்கு இப்பூமியின் வாழ்வில் தரப்பட்டிருக்கின்ற ஒரு சிறு பகுதியாகும்.

இங்கே நாம் சொல்லக் கருதுவது இன்பம் குறித்த இந்த அவதானத்தை அல்ல. மீன் என்னும் குறியீடு தரும் அர்த்த விகாசங்கள் இன்னும் ஆழமானவை. மீன் என்பது நிலம் வாழ் உயிரி அல்ல; அஃது நீர் வாழ் உயிரி. இதை வேறு விதத்தில் சொன்னால், மீன் என்பது நாம் வாழும் உலகத்தைச் சேர்ந்தது அல்ல; இப்போது நாம் வாழ முடியாத வேறொரு உலகைச் சேர்ந்தது! அவ்வகையில், மீன் என்னும் குறியீடு கொண்டு பெண்ணின் யோனியை அர்த்தப்படுத்தும்போது, கருவறையின் வாசலான அது ஆன்ம உலகிலிருந்து ஆன்மா ஒன்று இவ்வுலகிற்கு வந்து சேர்வதற்கான கதவாக இருக்கின்றது என்று காண்கிறோம். ”குன்” (ஆகு) என்னும் சொல் குறித்து இவ்வாறு விளக்கங்கள் பேசப்பட்ட பிறகு வழக்கம் போல் சூஃபி மௌனமாக இருந்தார். பிறகு சொன்னார்: ”ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இறைவன் நேசத்தையும் கருணையையும் (மவத்ததன் வ ரஹ்மா) ஏற்படுத்தியிருக்கிறான். ஆனால் அதன் எதார்த்தம் என்ன என்பதை இறைஞானிகள் மட்டுமே அறிகின்றார்கள். ‘ஆண் பெண் என்ற திரை மூலம் அவன் தன்னோடு தானே காதல் புரிகிறான்’ என்று மௌலானா ரூமி சொல்கிறார்கள். சரி, ஆணும் பெண்ணும் எதனால் ஆனவர்கள்? ஆதமை மண்ணிலிருந்து படைத்தான். ஆதமிலிருந்து ஹவ்வாவைப் படைத்தான். ஆனால், அந்த மண்ணின் மூலம் எது? இப்படியே ஆதி நிலைக்கு மீண்டால் அப்போது இருந்தது இறைவன் மட்டுமேதான். உள்ளமை அவன் மட்டுமே.” மீண்டும் சில கணங்கள் மௌனமாக இருந்துவிட்டு,

“ஆகு என்னும்
ஆணைக்கு
ஆண் பெண் என
இரண்டு எழுத்துக்கள்
இயற்றப்பட்டன
ஒரே மையில்!”

என்றார் சூஃபி.Tuesday, July 16, 2019

...என்றார் சூஃபி - 15

(...என்றார் சூஃபி என்னும் தொடர் முன்பு எழுதிக் கொண்டிருந்து பாதியிலேயே நின்றுவிட்டது. அதன் பதினான்காம் இடுகையை 28-ஜூலை-2015-இல் பதிவேற்றினேன். அதனைத் தொடர்ந்து கொண்டு செல்ல நாட்டம் வந்தது. ’பாதியில் நின்றுவிட்டது’ என்று சொல்வதும்கூடத் தவறுதான். ஏனெனில், அத்தொடருக்குப் பாதி மீதி என்பதெல்லாம் கிடையாது. தோன்றும்போது எழுத வேண்டியதுதான். சூஃபி உரைத்த ஞான நறுக்குகள் என்று இவற்றைச் சொல்லலாம். இடுகைகள்தாம் 1, 2, 3... என்று தலைப்பில் பகுதிகளாக எண்ணிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியின் உள்ளேயும் நறுக்குகள் ஒவ்வொன்றுக்கும் வரிசை எண்கள் உண்டு. அவ்வகையில் பதினான்கு பகுதிகளில் நாற்பத்தெட்டு நறுக்குகள் ஆயின. இதோ, இந்த பதினைந்தாம் பகுதியில் ஒரேயொரு நறுக்கு. அதன் எண்: 49)
 49
      ஜப்பானிய ஜென் ஞானி இக்கியு சோஜுன் தனது வாழ்நாளின் இறுதியை நெருங்கிய வேளையில் ஒரு கவிதை எழுதினார்:
       
      ”எண்பது, தள்ளாத வயதில்
      மலம் கழித்து
புத்தருக்குப் படைக்கிறேன்.”

இது மிகவும் அற்புதமானதொரு ஞானக் கவிதை என்கிறார்கள் ஜென் ஆன்மிக நெறியினர்!

இந்தக் கவிதையை சூஃபியின் அவையில் கஸன்கான் வாசித்துக் காட்டினான். சீடர்களுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. இது புத்தரைக் கேவலப்படுத்தும் கவிதை அல்லவா? இதுவா ஞானக் கவிதை என்று அவர்கள் வியந்தார்கள். ஆம்! இது புத்தரை மிகவும் உயர்வாகப் புகழும் ஞானக் கவிதையே! நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். புத்தம் அல்லது புத்த நிலை என்பது ஜென் ஆன்மிகத்தில் முழுமையின் பிரக்ஞையைக் குறிக்கும். அதாவது முழுமையான உள்ளமையைக் (வஹ்தத்துல் உஜூது) குறிக்கும். முழுமையை விட்டும் மலம் எங்கே வெளியேறும்? அதுவும் முழுமையின் ஒரு பகுதியே! இக்கியு சோஜுனின் கவிதை இந்த உண்மையைத்தான் பேசுகிறது.

ஆனால், இஸ்லாத்தில் இப்படியெல்லாம் பேசுவது முடியவே முடியாது. படையல் என்னும் கோட்பாடெல்லாம் இஸ்லாத்தில் இல்லை. இறைவன் உண்ணுதல் பருகுதல் ஆகியவற்றின் தேவைகள் அற்றவன். அவனுக்கு உணவை நீங்கள் படைக்க முடியாது. அவன்தான் நமக்கு உணவைப் படைக்கிறான்! (மட்டுமல்ல, அவனே ஊட்டுகிறான்!) எனில், இறைவனுக்கு மலம் ஏது? (அசூயையான (நஜீஸ்) பொருட்களை அவனுடன் தொடர்புப் படுத்திப் பேச முடியாது. அவை மனிதர்களாகிய நமக்குத்தான் நஜீஸ். இறைவனுக்கு நஜீஸ் என்று எது இருக்க முடியும்? ஆனால், நமது சாமானிய மனிதர்களின் மனநிலையைக் கவனித்தே இறை வழிபாடும் பிரார்த்தனைகளும் இஸ்லாத்தில் வகுக்கப் பட்டுள்ளன.) எனினும், மனிதர்களில் இருந்து மலத்தை வெளியேற்றுபவன் அவனே! இது ஒரு ஞான தரிசனம். (மல ஜலத்தை எவரும் தன் தானே சுயமாக வெளியேற்றிக் கொள்ள முடியாது. ஏனெனில் நமக்குச் சுயசக்தி கிடையாது. அவனேதான் நம்மிலிருந்து அதை வெளியேற்ற வேண்டும்.) மல ஜலம் கழித்து முடித்து கழிப்பறையை விட்டு வெளிவரும்போது முஸ்லிம்கள் ஓதும் பிரார்த்தனையின் பொருள்: “இறைவா! உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே! அவன் எத்தகையோன் எனில், அவனே என்னை விட்டும் அசுத்தத்தை வெளியேற்றி நீக்கினான்!” இந்த விளக்கத்தைக் கஸன்கான் சொல்லி முடித்தான். எல்லோரும் சூஃபி எதாவது சொல்வாரா என்று நோக்கினார்கள்.

“அவன்தான் மலத்தை வெளியேற்றுகிறான்.
எனினும், என்னிலிருந்துதான்
அவனிலிருந்து அல்ல”

என்றார் சூஃபி.

(தொடரும்...) 

Thursday, July 4, 2019

நீருக்குள் மூழ்கிய புத்தகம் - 25

2:164-165 தன்னுடைமை மனிதம் அல்ல

      உனக்குச் செய்வதற்கு ஏதுமில்லாத போது அல்லது சூழ்நிலைகள் உனக்குத் தடையாகும்போது அல்லது உனக்கு வாழ்க்கையே இல்லை என்பது போல் நீ உணரும்போது, அசைவுகளின் உள்ளேயும் அனைத்து வேலைகளின் உள்ளேயும் இயங்குகின்ற ஒருவனிடம் செல். ”வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவை அனைத்தும் அவனிடமே (தேவைகளைக்) கேட்கின்றன. ஒவ்வொரு கணமும் அவனொரு புதிய மாட்சி நிலையில் இருக்கின்றான்.” (55:29). பிரபஞ்சம் மற்றுமதன் செயற்பாடுகளின் படைப்பாளன் அவன். ஒரு நூறாயிரம் அற்புதங்கள், ஒரு நூறாயிரம் நகரங்கள்.

      இந்தக் கதவுகளையும் சுவர்களையும் காற்றையும் உற்றுப் பார். ஒவ்வொரு கலைப் பொருளும் ஒருகாலத்தில் ஜீவனும் பிரக்ஞையும் உயிரும் கொண்டிருந்தது. ஒரு நாள் ஒவ்வொன்றும் மீண்டும் அந்த வாழும் தன்மைகளைப் பெறும். இப்பொருள்கள் அனைத்தையும் நண்பர்களாக, காதலர்களாக, ஒரு நகரமாக, நீ வாழ்நாள் முழுவதும் வசித்து வந்த சமூகமாகப் பார்த்து இவை உன்னைச் சுற்றிலும் இருப்பதன் அருளை உணர்வாயாக.

      உலகின் ஒரு பகுதியை தன்னுடைமை கொள்வது மனிதம் அல்ல; மாறாக, அதன் ஒரு பகுதியை நோக்கிச் செல்லாமல் இருந்துவிடுவதே மனிதத் தன்மையின் சாராம்சம் ஆகும். நாய்ச் சண்டை ஒரு காட்சி. இன்னொன்று, ஒரு மனிதன் தனது செல்வங்களை எல்லாம் செல்வு செய்து நண்பர்களைத் தனது அருகிலிருக்கச் செய்கிறான். மிகவும் நிம்மதியான வழி எது எனில், குடும்பத்தில் ஆண்களும் பெண்களும் தம்முள் கொள்ளும் நேசமும், தாம் ஒருவருக்கொருவர் மற்றும் பிள்ளைகள் மீது காட்டும் அக்கறையும்தான். தமது உடல்நலம் மற்றும் மரணம் பற்றிய அவர்களின் கவலைகள், தமது மதிப்பின்மை பற்றிய அவர்களின் எண்ணங்கள், தாம் தமது பிள்ளைகளைப் பாழ்படுத்துகிறோமோ என்னும் சிந்தனைகள் ஆகியவைதான். இப்பணிவே நல்லறிவு. உன் (ஆன்மிக) வேலையில் நல்ல பலன்கள் ஏற்பாடாமல் இருந்தாலும் அதில் நீ மேலும் உறுதியாக இரு, தான் முதுகில் சுமக்கும் சரக்கின் மதிப்பு என்ன என்பதை அறியாதபோதும் அதனை இலக்கு நோக்கிச் சுமந்து செல்கின்ற கழுதையைப் போலிரு. தனக்கு தீவனம் வைக்கப்படும் நேரத்தை மட்டும் எதிர்பார்த்தபடி அது சென்று கொண்டே இருக்கிறது.

      வெப்புக் காற்று அல்லது குளிர் காற்று என்ன கொண்டு வரும், யாருக்கு உதவும் அல்லது நோவு தரும் என்று ஒருவருக்கும் தெரியாது. ஒரு கணத்தில் நற்பயனாக அல்லது தீய விளைவாக மாற முடியாத எதுவும் இவ்வுலகிலலும் அனுபவத்திலும் இல்லை. இறைப் பண்புகளான தொன்னூற்றொன்பது திருநாமங்கள் ஒவ்வொன்றின் உள்ளேயும்கூட கருணையும் கோபமும் மறைந்திருக்கின்றன. பேய்த்தனம் கடினமான கரத்தால் புறந்தள்ளப் படுகிறது; பேரழகு மென்மையான கரத்தால் அருகில் இழுக்கப் படுகிறது.


2:167 தொடர்புறும் உணர்வுத் திறன்

      இறைவனுடன் தொடர்பு கொள்ளும் உணர்ச்சித் திறன் படைப்புக்களுக்கு இல்லை எனில் அவை எங்ஙனம் தம்முள் ஓய்வு கொண்டு தம் இருப்பை இப்படி அனுபவிக்க இயலும்?

      விலங்குகள், மனிதர்கள், பறவைகள், பூச்சிகள், அனைத்தும் இறைவனின் திருப்பண்புகளின் உள்ளேயே வாழ்கின்றன. மிருகத்தின் உள்ளும் ஒரு பண்பட்ட நிலை இருக்கின்றது. காமம் அல்லது காதலில் ஏற்படும் நெருங்குதலின் அசைவு எதுவும், நட்புக்காக அல்லது உரையாடலுக்காக, மேஜையின் மீதொரு ரகசியப் பேச்சு, உடன் சிரித்தபடிச் சாலையிலொரு நடை, இவை எல்லாம் 2:255 (ஆயத்துல் குர்ஸி) என்னும் திருவசனத்தின் முதல் வரி சுட்டும் இறை மர்மத்தின் உள்ளே நிகழ்பவைதான்: “அல்லாஹு லா இலாஹ இல்லாஹுவல் ஹய்யுல் கய்யூம்” (நித்திய ஜீவனான அல்லாஹ்வை அன்றி வேறு இறைவன் இல்லை). ஒரேயொரு ஜீவன் மட்டுமே இருக்கின்றது, ஒன்றே ஒன்றுதான்.


2:174-175 கவன வட்டங்கள்
       
இறை ரகசியத்தின் அடியான் எப்போதும் அழகையும் அருளையும் காண்கிறான். அவற்றின் முன் தனக்குச் செயலும் துனிச்சலும் இல்லை என்பதை உணர்கிறான். தான் எத்தனை அசிங்கமாகவும் விகாரமாகவும் ஆக முடியும் என்பதை அவன் அறிவான். நாம் எதன் மீது கவனம் செலுத்துகின்றோமோ அது நம்மின் பகுதியாக வளர்கிறது. நீ ஒரு நாயை கவனிக்கும் போது நாயின் வாழ்வினுள் நுழைகிறாய். நீ எனக்கு உன் பூனையைக் காட்டினாய். எனவே, நான் உன் பூனையாக இருப்பேன். ஒரு புண்ணிலிருந்து சீழ் வெளியேறி ரத்தம் கட்டுவதை நீ காணும்போது ‘நானே இந்த ரத்தம்’ என்று சொல்லிக்கொள். பூங்காவில் நானே இந்தப் பூக்கள். ஒரு பெண்ணில், நான் இறைவனின் காதலன். ஒப்பரிய விரிவில் அதுவே நான்; மிகப் பரிதாபமான இதயமுடைக்கும் மடமையில் அதுவும் நானே. இறைஞானத்தின் பிரகாசமும் ஆம்.
      
 கவன வட்டங்கள் உன்னைப் பல்வேறு அடையாளங்களில் இட்டுச் செல்கின்றன. நீ ஆகக்கூடிய எதனைக் கண்டும் வியப்புக் கொள்ளாதே.
2:176 பள்ளிகள் மாறுதல்

      ஷைகு தாஜின் மகன் ஃபக்ருத்தீன் சொல்கிறார், ஜலாலுத்தீன் ஒரு புகழ் பெற்ற சூஃபி மடத்திற்குப் போனார், பிறகு அங்கிருந்து விலகி முதவக்கில் சாலையில் உள்ளதொரு கல்விக் கூடத்திற்குப் போக, அங்கே அவரிடம் பள்ளிகளை மாற்றுவது பற்றிக் கேட்கப்பட்டதாம்.

      அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனுக்கே) மற்றும் பிஸ்மில்லாஹ் (இறைவனின் பெயரால் தொடங்குகிறேன்) ஆகிய வாக்கியங்களை அதிகமதிகம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

       நல்லது, நீ என்னிடம் வந்துவிடு என்கிறாராம் ஃபக்ரு கல்லாசி. என்னிடம் ஒரு குழுமம் இருக்கிறது, அதில் நாங்கள் எதையுமே புகழுவதில்லை. இறைவன் அதில் குறிப்பிடப்படுவதே இல்லை. உமக்கு அது பிடிக்கும். அதில் வழிபாடு, சடங்கான அங்கசுத்தி, தலை சாய்த்தல், எதுவுமே இல்லை. அது மிகவும் அமைதியானது.


2:179 கிரகங்களும் செடிகளும்
         
 ”மழை பொழியும் வானத்தின் மீது சத்தியமாக; (தாவரங்கள் முளைக்கும் போது) பிளவுறும் பூமியின் மீது சத்தியமாக” (86:11-12).

          வானம் என்பது கிரகமும் செடியும் ஆகும். அது தன்னைத் திறந்து கொடுத்து இங்கே சூரியக் கதிர்கள் எட்டும்படிச் செய்கின்றது. செடிகள் ஒருவகையில் கிரகங்களைப் போன்றவைதான். அவை பருவகாலங்களின் வட்டங்களில் பயணிக்கின்றன. அவை இறக்கும்போது எங்கே செல்கின்றன என்பது எவருக்கும் தெரியாது.

          யாரோ அதிகாலையில் மிகவும் குழம்பியபடி எழுகின்றார். வானம் ஏன் காரணமாகவும் பூமி ஏன் விளைவாகவும் இருக்க வேண்டும்? ஏன் மாற்றமாக இருக்கக் கூடாது?

          வான மரத்தில் ஒவ்வொரு விண்மீனும் இலையின் நுனி. அம்மரத்தின் ஒவ்வொரு இலையும் ஒரு நாடளவு பெரிது. அந்த இரவு வானமோ சூரிய மரத்தின் ஓர் இலையின் கீழே சுழல்கிறது. ஆன்மாவிலோ, ஓர் இலையின் கீழே ஒரு பெரும் சமூகமே கூடினாலும் வியப்பு ஏதுமில்லை. ஏனெனில், ஆன்ம மரத்தின் ஓர் இலையின் அளவு இப்பரபஞ்சத்தை விடவும் பல மடங்கு பெரிது.


2:181-182 கி.பி.1210-ஆம் வசந்தம்
           
நீதிபதி ஃபஜரி தனது கனவில் பஹாவுத்தீனைக் காற்றில் உயரத்தில் மிதப்பவராகக் காண்கிறார். அவர் தன் சீடர்களுக்கு, “அர்ஷுடையவன்; பெருந்தன்மையன்” (துல் அர்ஷில் மஜீது – 85:15) என்னும் திருவசனத்தை விவரித்துக் கொண்டிருக்கிறார்.

          துருக்கிய வமிசத்தாரான இரண்டு நபர்கள் சொல்கிறார்கள், நோய்ப்பட்ட இளைஞன் ஒருவன் விழிப்பிலேயே இல்யாஸ் நபி, இறையடியார் கிள்ரு ஆகியோரின் தரிசனத்தைப் பெற்றான் என்று. அவர்கள் அவனிடம் சுவரின் திறப்பு ஒன்றின் வழியாக வந்து இந்தச் செய்தியை வழங்கினார்கள்: வக்‌ஷின் அரசன் இன்னும் பத்தாண்டுகள் ஆட்சி செய்வான் என்று பஹாவுத்தீனிடம் போய்ச் சொல்லு. அதன் பின் ஆட்சி கிலஜ் தகுனிடம் செல்லும், யகான் தகுனிடம் அல்ல.

          இது 1210-ஆம் ஆண்டின் வசந்தத்தில் நடந்தது.

(நூல் முற்றும்)