Tuesday, July 16, 2019

...என்றார் சூஃபி - 15

(...என்றார் சூஃபி என்னும் தொடர் முன்பு எழுதிக் கொண்டிருந்து பாதியிலேயே நின்றுவிட்டது. அதன் பதினான்காம் இடுகையை 28-ஜூலை-2015-இல் பதிவேற்றினேன். அதனைத் தொடர்ந்து கொண்டு செல்ல நாட்டம் வந்தது. ’பாதியில் நின்றுவிட்டது’ என்று சொல்வதும்கூடத் தவறுதான். ஏனெனில், அத்தொடருக்குப் பாதி மீதி என்பதெல்லாம் கிடையாது. தோன்றும்போது எழுத வேண்டியதுதான். சூஃபி உரைத்த ஞான நறுக்குகள் என்று இவற்றைச் சொல்லலாம். இடுகைகள்தாம் 1, 2, 3... என்று தலைப்பில் பகுதிகளாக எண்ணிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியின் உள்ளேயும் நறுக்குகள் ஒவ்வொன்றுக்கும் வரிசை எண்கள் உண்டு. அவ்வகையில் பதினான்கு பகுதிகளில் நாற்பத்தெட்டு நறுக்குகள் ஆயின. இதோ, இந்த பதினைந்தாம் பகுதியில் ஒரேயொரு நறுக்கு. அதன் எண்: 49)
















 49
      ஜப்பானிய ஜென் ஞானி இக்கியு சோஜுன் தனது வாழ்நாளின் இறுதியை நெருங்கிய வேளையில் ஒரு கவிதை எழுதினார்:
       
      ”எண்பது, தள்ளாத வயதில்
      மலம் கழித்து
புத்தருக்குப் படைக்கிறேன்.”

இது மிகவும் அற்புதமானதொரு ஞானக் கவிதை என்கிறார்கள் ஜென் ஆன்மிக நெறியினர்!

இந்தக் கவிதையை சூஃபியின் அவையில் கஸன்கான் வாசித்துக் காட்டினான். சீடர்களுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. இது புத்தரைக் கேவலப்படுத்தும் கவிதை அல்லவா? இதுவா ஞானக் கவிதை என்று அவர்கள் வியந்தார்கள். ஆம்! இது புத்தரை மிகவும் உயர்வாகப் புகழும் ஞானக் கவிதையே! நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். புத்தம் அல்லது புத்த நிலை என்பது ஜென் ஆன்மிகத்தில் முழுமையின் பிரக்ஞையைக் குறிக்கும். அதாவது முழுமையான உள்ளமையைக் (வஹ்தத்துல் உஜூது) குறிக்கும். முழுமையை விட்டும் மலம் எங்கே வெளியேறும்? அதுவும் முழுமையின் ஒரு பகுதியே! இக்கியு சோஜுனின் கவிதை இந்த உண்மையைத்தான் பேசுகிறது.

ஆனால், இஸ்லாத்தில் இப்படியெல்லாம் பேசுவது முடியவே முடியாது. படையல் என்னும் கோட்பாடெல்லாம் இஸ்லாத்தில் இல்லை. இறைவன் உண்ணுதல் பருகுதல் ஆகியவற்றின் தேவைகள் அற்றவன். அவனுக்கு உணவை நீங்கள் படைக்க முடியாது. அவன்தான் நமக்கு உணவைப் படைக்கிறான்! (மட்டுமல்ல, அவனே ஊட்டுகிறான்!) எனில், இறைவனுக்கு மலம் ஏது? (அசூயையான (நஜீஸ்) பொருட்களை அவனுடன் தொடர்புப் படுத்திப் பேச முடியாது. அவை மனிதர்களாகிய நமக்குத்தான் நஜீஸ். இறைவனுக்கு நஜீஸ் என்று எது இருக்க முடியும்? ஆனால், நமது சாமானிய மனிதர்களின் மனநிலையைக் கவனித்தே இறை வழிபாடும் பிரார்த்தனைகளும் இஸ்லாத்தில் வகுக்கப் பட்டுள்ளன.) எனினும், மனிதர்களில் இருந்து மலத்தை வெளியேற்றுபவன் அவனே! இது ஒரு ஞான தரிசனம். (மல ஜலத்தை எவரும் தன் தானே சுயமாக வெளியேற்றிக் கொள்ள முடியாது. ஏனெனில் நமக்குச் சுயசக்தி கிடையாது. அவனேதான் நம்மிலிருந்து அதை வெளியேற்ற வேண்டும்.) மல ஜலம் கழித்து முடித்து கழிப்பறையை விட்டு வெளிவரும்போது முஸ்லிம்கள் ஓதும் பிரார்த்தனையின் பொருள்: “இறைவா! உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே! அவன் எத்தகையோன் எனில், அவனே என்னை விட்டும் அசுத்தத்தை வெளியேற்றி நீக்கினான்!” இந்த விளக்கத்தைக் கஸன்கான் சொல்லி முடித்தான். எல்லோரும் சூஃபி எதாவது சொல்வாரா என்று நோக்கினார்கள்.

“அவன்தான் மலத்தை வெளியேற்றுகிறான்.
எனினும், என்னிலிருந்துதான்
அவனிலிருந்து அல்ல”

என்றார் சூஃபி.

(தொடரும்...) 

No comments:

Post a Comment