Monday, June 3, 2019

மகத்தான இரவு - 4



சய்யிதினா முஹ்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரஹ்)


(அல்-குன்யா லி தாலிபி தரீக்குல் ஹக்கு என்னும் நூலிலிருந்து… ‘பஹாரே மதீனா.காம்’-இன் ஆங்கில மொழிபெயர்ப்பு வழித் தமிழாக்கம்: ரமீஸ் பிலாலி)
 













4
மகத்தான இரவின் நாள் மறைக்கப்பட்டது ஏன்?



(”லைலத்துல் கத்ரு இரவு நிகழ்வது பற்றி ஒரு குறிப்பிட்ட தேதியை அல்லாஹ் தனது அடியார்களுக்கு ஏன் அறிவிக்கவில்லை?” என்னும் வினாவுக்கான விடை.)

    

  ”ஜும்ஆ நாளின் இரவு (லைலத்துல் ஜும்ஆ) தெளிவாக அறிவித்திருப்பது போன்று லைலத்துல் கத்ரு இரவு பற்றி அல்லாஹ் தனது அடியார்களுக்கு ஒரு குறிப்பிட்ட தேதியைத் திட்டவட்டமாக அறிவிக்காதது ஏன்?” என்று யாரேனுமொருவர் கேட்டால் அதற்கு யாம் பகரும் விடை இதுதான்:
      
 ”தனது அடியார்கள் அக்குறிப்பிட்ட இரவில் தாம் போதுமான நற்காரியங்களை வணக்க வழிபாடுகளை செய்துவிட்டோம் என்று கருதி பொடுபோக்காக இருந்துவிடக் கூடாது என்பது இறைவனின் நோக்கமாக இருக்கலாம். இப்படியான ஒரு தெளிவின்மை இல்லாதிருந்தால் மக்கள் சொல்வார்கள்: ‘ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்த ஓர் இரவிலே நாங்கள் வணங்கிவிட்டோம். எனவே அல்லாஹ் எங்களுக்குப் பாவ மன்னிப்பை வழங்கிவிட்டான். எனவே இப்போது நாங்கள் அல்லாஹ்வின் பார்வையில் ஆன்மிகத்தின் மேலான நிலைகளுக்கும் சொர்க்கப் பூங்காக்களுக்கும் உரியவர்கள் ஆகிவிட்டோம்!” எனவே, அவர்கள் நற்செயல்கள் ஆற்றும் முயற்சிகளையே கைவிட்டுத் தமது சுகபோகங்களில் திளைக்கத் தொடங்கி விடுவர். அவ்வாறு நியாயமற்ற ஆதரவுக்கு இரையாகிப் போய் மறுமையில் கைசேதமான அழிவிற்கு ஆளாகிவிடுவர்.


   
   



       இதே போல் இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். ஓர் எச்சரிக்கைக்காக அல்லாஹ் தனது அடியார்களுக்கு அவர்கள் மரணிக்கும் நாளை மறைத்தே வைத்திருக்கிறான். அப்படி இல்லை எனில் (அதாவது, ஒவ்வொருவருக்கும் அவர்களின் ஆயுள் என்ன என்பது முன்பே தெரிந்துவிட்டால்) நீளமான ஆயுள் கொடுக்கப்பட்ட ஒருவர், மரண நாளுக்கு இன்னும் அதிக ஆண்டுகள் உள்ள நிலையில் சொல்வார், “நான் எனது உலக இச்சைகளைக் கட்டவிழ்த்துவிட நாடுகிறேன். இவ்வுலகம் வழங்குகின்ற எல்லா சுகங்களையும் அனுபவிக்க நாடுகிறேன். அதன் வசதிகளை எல்லாம் முழுமையாக அனுபவித்துக் களிப்பேன். எனது மரண நாள் நெருங்கி வரும்போது நான் பாவ மன்னிப்புத் தேடி வணக்க வழிபாடுகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன். அப்போது நான் ஒரு திருந்திய நல்லடியானாக இறந்துவிடுவேன்.”
    
  உண்மையில், அல்லாஹ் அவர்களின் மரண வேளைகளை மறைத்து வைத்திருப்பதால் அவர்கள் தமது மரணம் பற்றி எப்போதுமே எச்சரிக்கையுடனும் சூதானமாகவும் இருந்து வர வேண்டியிருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில் நற்செயல்கள் புரிவதற்கான நிலைத்த முனைப்பும், மனவுறுதியுடன் இறைவனின் பக்கம் திரும்பவும், தமது பண்புகளை மேம்படுத்த நிலையான முயற்சிகள் மேற்கொள்ளவும் ஏதுவாகிறது. எனவே, மரணம் அவர்களிடம் எப்போது வரினும் அவர்கள் தம்மை நல்லதோர் ஆன்மிக நிலையில் கண்டுகொள்ள முடியும். இவ்வுலகில் விதிக்கப்பட்ட சுகங்கள் மற்றும் புலனின்பங்களின் தமது பங்குகளை (அக்ஸாம்) அவர்கள் பெருவதுடன் மறுமையில் அவர்கள் இறைவனின் அருளால் (ரஹ்மத்) அவனின் தண்டனையை விட்டும் பாதுகாப்பை அடைந்தோராவர்.
       
ஓர் அறிஞரின் கருத்து இங்கே கவனத்திற்குரியது: “அல்லாஹ் ஐந்தனுள் ஐந்தை மறைத்து வைத்திருக்கிறான்: 1. வணக்க வழிபாடுகளில் (தாஅத்) அல்லாஹ் தனது இன்பங்களை மறைத்து வைத்திருக்கிறான்; 2. மாறுசெய்வதான பாவங்களில் (மஆஸி) அல்லாஹ் தனது சினத்தை மறைத்து வைத்திருக்கிறான்; 3. கடமையான பிற தொழுகைகளில் (ஸலவாத்) அல்லாஹ் நடுநிலையான தொழுகையை (அஸ்-சலாத்துல் உஸ்த்தா) மறைத்து வைத்திருக்கிறான்; 4. தனது பிற படைப்பினங்களில் அல்லாஹ் தனது நேசரை (வலீ) மறைத்து வைத்திருக்கிறான்; 5. லைலத்துல் கத்ரு என்னும் மகத்தான இரவை அல்லாஹ் ரமலான் மாதத்தினுள் மறைத்து வைத்திருக்கிறான்.”
      [குறிப்பு: ”அனைத்துத் தொழுகைகளையும் நடுத்தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்” (ஹாஃபிழூ அலஸ் ஸலவாத்தி வஸ் ஸலாத்தில் உஸ்த்தா – 2:238)]

 

(தொடரும்...)

No comments:

Post a Comment