Monday, June 3, 2019

மகத்தான இரவு - 2


சய்யிதினா முஹ்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரஹ்)



(அல்-குன்யா லி தாலிபி தரீக்குல் ஹக்கு என்னும் நூலிலிருந்து… ‘பஹாரே மதீனா.காம்’-இன் ஆங்கில மொழிபெயர்ப்பு வழித் தமிழாக்கம்: ரமீஸ் பிலாலி)
 




















2
ரமலான் மாதத்தின் இறுதி பத்தில் மகத்தான இரவைத் தேடுதல்

      மகத்தான இரவு (லைலத்துல் கத்ரு) ரமலான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் தேடப்பட வேண்டும். பெரும்பாலும் அது இருபத்தேழாம் இரவில் நிகழ்கிறது.

      எனினும், இமாம் மாலிகிப்னு அனஸ் (ரஹ்) அவர்களின் கோட்பாடு யாதெனில், இறுதிப் பத்து நாட்களுமே சமமான வேட்பாளிகளே. அவற்றுள் ஒன்றைக் காண ஒன்றை முக்கியத்துவப் படுத்துவதற்கு இடமில்லை.

      இமாம் ஷாஃபீஃ (ரஹ்) அவர்களின் கோட்பாடு யாதெனில் இருபத்தோராம் இரவே லைலத்துல் கத்ரு நிகழ்வதற்கான அதிகச் சாத்தியமுள்ள நாளாகும்.

      சிலர் பத்தொன்பதாம் இரவை முன் வைத்துள்ளனர். அது அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் கோட்பாடாகும்.

      ”அது இருபத்து மூன்றாம் இரவாகும்” என்று அபூ புர்தா அல்-அஸ்லமி அவர்கள் சொன்னதாகச் அறியப்படுகிறது.

      ”அது இருபத்து ஐந்தாம் நாளிரவு” என்று அபூதர் கிஃப்பாரி (ரலி) மற்றும் அல்-ஹசன் (ரலி) ஆகியோர் குறிப்பிடுகின்றார்கள்.

      சய்யிதுனா பிலால் (ரலி) அவர்களின் வழியாக அறிவிக்கப்படும் ஒரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை, “அது இருபத்து நான்காம் இரவு” என்று சொன்னதாகக்  குறிப்பிடப்படுகிறது.

      இப்னு அப்பாஸ் (ரலி) மற்றும் உபையிப்னு கஅப் (ரலி) ஆகியோர் ”அது இருபத்தேழாம் இரவு” என்று சொன்னதாக அறியப்பட்டுள்ளது.

      இருபத்தேழாம் இரவே லைலத்துல் கத்ரு நிகழ்வதற்கான அதிகச் சாத்தியமுள்ள இரவு என்பதற்கான வலுவான ஆதாரம் இமாம் அஹ்மதிப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களால் வழங்கப்பட்டுள்ளது (அல்லாஹ்வே நன்கு அறிவான் – வல்லாஹு அஃலம்).

      உறுதியான அறிவிப்பாளர் தொடருடன் (இஸ்னாத்), சய்யிதினா இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னதாக அவர்கள் அறிவிக்கிறார்கள்: “மக்கள் தம் கனவுகளில் லைலத்துல் கத்ரு இரவு எது என்பதைப் பார்த்ததாக நபி (ஸல்) அவர்களிடம் வந்து சொல்லிக் கொண்டிருப்பது ஓயாது போல் இருந்தது. எனவே, நபி (ஸல்) அவர்கள் முடிவாக அறிவித்தார்கள் ‘நீங்கள் உங்கள் கனவுகளை அறிவித்ததில் நான் ஒன்றைக் கவனிக்கிறேன். அதாவது, லைலத்துல் கத்ரு இறுதிப் பத்து நாட்களில் ஒற்றைப் படையில் வருகிறது என்பதாகும். யாரேனும் மேலும் கூர்ந்து தேடுவதற்கு ஆசைப்பட்டால் அவர் இறுதிப் பத்தின் ஏழாம் இரவில் ஆராய்ந்து தேடட்டும்.”

      சய்யிதினா உமர் இப்னுல் ஃகத்தாப் (ரலி) அவர்களிடம் சய்யிதினா இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னதாகப் பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது: “நான் ஒற்றைப்படை (அஃப்ராத்) எண்களை எல்லாம் கூர்ந்து ஆராய்ந்து தேடினேன். ஏழு (அஸ்-சபஅ) என்பதுதான் மிகவும் சாத்தியமுள்ளதாகப் படுகிறது.”

      ஏழு என்னும் எண்ணின் சிறப்புக்களைப் புலப்படுத்த அது குறித்து மார்க்க மேதையொருவரின் கருத்துக்களை நான் வழிமொழிகின்றேன்:

      ”ஏழு வானங்கள் உள்ளன; ஏழு பூமிகள் உள்ளன.”

      ”வாரம் ஒன்றில் ஏழு இரவுகள் உள்ளன.”



   



”ஏழு வான மண்டலங்கள் (அஃப்லாக்) உள்ளன; ஏழு ஓரைகள் (நுஜூம்) உள்ளன”

      ”சஃபா மற்றும் மர்வா ஆகிய குன்றுகளிடையே தொங்கோட்டம் (சயீ) என்பது ஏழு முறை நிகழ்த்தப்பட வேண்டும்.”

      ”அல்லாஹ்வின் வீட்டை (கஃபாவை) இடஞ்சுற்றுதல் (தவாஃப்) என்பது ஏழு முறை ஆகும்.

      ”மனித உடலமைப்பின் அடிப்படையான கலவைப் பொருட்கள் ஏழு. அவனது உணவின் அடிப்படையான கலவைப் பொருட்களும் ஏழு. மேலும், மனித முகத்தில் ஏழு திறப்புக்கள் உள்ளன.”

      ”ஏழு முத்திரைகள் (ஃகவாத்திம்) உள்ளன.” (அதாவது, குர்ஆனை ஒரு வாரத்தில் முழுமையாக ஓதி முடிப்பதற்குத் தோதுவாக அஃது ஏழு மனாஸில் (மன்ஸில்கள்) என்னும் பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கும்.)

      ”சூரத்துல் ஹம்து என்னும் புகழ்ச்சி அத்தியாயத்தில் ஏழு ஆயாத் (திருவசனங்கள்) உள்ளன.”  (குர் ஆனின் திறப்பு அத்தியாயமான (அதாவது, முதல் அத்தியாயமான) சூரத்துல் ஃபாத்திஹாவுக்கு வழங்கப்படும் பிற பெயர்களுள் இதுவும் ஒன்று. அதன் முதல் திருவசனமான ‘அல்ஹம்து லில்லாஹி றப்பில் ஆலமீன்’ (புகழனைத்தும் அகிலங்களின் ரட்சகனான அல்லாஹ்வுக்கே) என்பதிலிருந்து இப்பெயர் வந்துள்ளது.)

      ”குர்ஆனை ஓதுவதற்கு ஏழு வகைத் தொனிப்புக்கள் (அஹ்ருஃப்) உள்ளன.” (நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது: ‘குர்ஆன் ஏழு வித வட்டார வழக்குகள் மீது அருளப்பட்டுள்ளது’ (நஸலல் குர்ஆனு அலா சப்-அ(த்)தி அஹ்ருஃப்). இஃது, ஏழு விதத் தொனிப்பு (கிராஅத்) முறைகள் என்பதாக அர்த்தம் கொள்ளப்பட்டுள்ளது).

      ”மீண்டும் மீண்டும் ஓதப்படும் திருவசனங்கள் ஏழு (அஸ்-சப்உல் மஸானி)” [”(நபியே!) நாமுமக்கு திரும்பத் திரும்ப ஓதப்படக்கூடிய ஏழு வசனங்களையும் மகத்துவமான குர் ஆனையும் வழங்கியுள்ளோம்” (வ லகத் ஆ(த்)தைனாக்க சப்-அம் மினல் மஸானீ வல் குர் ஆனல் அழீம் – 15:87) என்று குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். மார்க்க அறிஞர்களில் ஒரு சாராரின் கருத்துப்படி இந்த ‘மீண்டும் மீண்டும் ஓதப்படும் ஏழு திருவசனங்கள்’ என்பதும் ஃபாத்திஹா அத்தியாயத்தின் ஏழு வசனங்களைக் குறிப்பவையே ஆகும். இன்னொரு சாராரின் கருத்துப்படி சப்உல் மஸானீ என்பது சூறத்துல் பகராவில் (எண்:2) தொடங்கி சூறத்துல் அஃ-ராஃப் (எண்:8) வரையுள்ள நெடிய ஏழு அத்தியாயங்களைக் குறிக்கும்]


      



”தொழுகையில் செய்யப்படும் சிரம் பணிதலில் (அஸ்-சுஜூது) உடலில் ஏழு பகுதிகள் பூமியில் தொடுகின்றன.”

      ”நரகத்தின் (ஜஹன்னம்) வாசல்கள் ஏழு. அதன் ஏழு இறங்குமுக அடுக்குகளுக்கு (தரகாத்) ஏற்ப நரகத்திற்கு ஏழு பெயர்கள் உள்ளன.” (அவற்றின் பெயர்களாவன: 1. ஜஹன்னம், 2. லஸா, 3. அல்-ஹுதமா, 4. சயீர், 5. ச(க்)கர், 6. அல்-ஜஹீம், 7. ஹாவியா. இவை எல்லாம் குர் ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், இவற்றின் வரிசை முறை பற்றி விரிவுரையாளர்கள் (முஃபஸ்ஸிரீன்) கருத்து வேறுபடுகின்றனர்.)

      ”அஸ்ஹாபுல் கஹ்ஃப் (குகைத் தோழர்கள்) ஏழு பேர்.” (குறிப்பு: குகைக்குள் இருந்த தோழர்கள் எத்தனை பேர் என்பது பற்றி அக்காலத்தில் அவ்வூரின் மனிதர்கள் மூன்று ஐந்து ஏழு என்று ஊகித்துப் பலவாறாகப் பேசிக்கொண்டதைக் குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிட்டு “(நபியே!) கூறுக: அவர்களின் எண்ணிக்கையை என் இறைவன்தான் நன்கறிவான்; சிலரைத் தவிர மற்றெவரும் அதனை அறியமாட்டார்கள்” (குல் றப்பீ அஃலமு பி அத்த(த்)திஹிம் மா யஃலமுஹும் இல்லா கலீலுன் – 18:22) என்று கூறுகின்றான். இதனால், இறைத்தூதர் (ஸல்) அவர்களும் மெய்ஞ்ஞானம் பெற்ற இறைநேசர்களும் அவர்களின் எண்ணிக்கையை அறிவார்கள் என்பது பெறப்படுகின்றது. அப்படிப்பட்ட அறிவிப்புக்களிலிருந்து கவ்ஸுல் அஃழம் (றஹ்) அவர்கள் இதனைச் சொல்லியிருக்கக் கூடும். – மொ.பெ-ர்)

      ”ஆது சமுதாயம் சூறைக் காற்றால் அழிக்கப்பட்டது தொடர்ச்சியான ஏழு இரவுகளில் ஆகும்.” (இறைத்தூதர் ஹூது (அலை) அவர்களும் மற்றும் அவர்களை நம்பிக்கை கொண்டு பின்பற்றிய சிலருமே அதில் பிழைத்தார்கள்.)

       ”இறைத்தூதர் யூசுஃப் (அலை) அவர்கள் ஏழாண்டுகள் சிறையில் இருந்தார்கள்.”

      ”சூறா யூசுஃப்-இல் அல்லாஹ் குறிப்பிடுகின்ற அரசனின் கனவில் ஏழு பசுக்கள் (பகராத்) கொண்ட் இரண்டு அணிகள் வருகின்றன: “(ஒருநாள்) அரசன் கூறினான், நானொரு கனவு கண்டேன். ஏழு கொழுத்த பசுக்களை ஏழு மெலிந்த பசுக்கள் தின்று கொண்டிருந்தன.” (வ காலல் மலிக்கு இன்னீ அரா சப்அ பகராத்தின் சிமானின்(ய்) யஃகுலுஹுன்ன சப்உன் இஜாஃபுன் – 12:43). ஏழு ஆண்டுகள் செழிப்பான விளைச்சல் இருக்குமென்றும் அதன் பின் ஏழாண்டுகள் கடும் வறட்சி ஏற்படும் என்றும் இக்கனவிற்கு யூசுஃப் நபி அவர்கள் விளக்கம் சொன்னார்கள் (காண்க: 12:47,48).

      (குறிப்பு: அரசனின் கனவில் இன்னொரு பகுதியும் உள்ளது. அதிலும் ஏழு வருகின்றது: “மேலும் பசுமையான ஏழு தானியக் கதிர்களையும் ஏழு காய்ந்த கதிர்களையும் நான் கண்டேன்” (வ சப்அ சும்புலாத்தின் ஃகுள்ரின்(வ்) வ உஃகர யாபிஸாத்தின் – 12:43) – மொ.பெ-ர்)

      ”ஒரு நாளின் ஐவேளைத் தொழுகைகளில் (அஸ்-ஸலவாத்) ஃபர்ள் என்னும் கட்டாயக் கடமையான விடுத்தங்களின் (ரகஆத்) கூட்டுத் தொகை பதினேழு.”

      ”பின்வரும் இறைவசனத்தில் ஏழு என்னும் எண் குறிப்பிடப்படுகின்றது: “பலிப்பிராணி கிடைக்கப் பெறாதவர் ஹஜ் காலத்தில் மூன்று நாட்களும் (வீடு) திரும்பியபின் ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும்” (ஃப மன்(ல்) லம் யஜித் ஃப ஸியாமு ஸலாஸத்தி அய்யாமின் ஃபில் ஹஜ்ஜி வ சப்அ(த்)தின் இதா ரஜஃ(த்)தும் -   குர்ஆன் 2:196)

      ”திருமணம் முடிக்கத் தடை செய்யப்பட்ட இரத்த உறவுகள் (நசப்) ஏழு விதம்.” (அவ்வுறவுகளாவன: உங்களுக்குத் தடை செய்யப்பட்டவர்கள் உங்கள் அன்னையர்கள், உங்கள் புதல்விகள், உங்கள் சகோதரிகள், உங்கள் தாயுடன் பிறந்த பெண்கள், உங்கள் தந்தையுடன் பிறந்த பெண்கள், உங்கள் சகோதரரின் புதல்விகள் மற்றும் உங்கள் சகோதரிகளின் புதல்விகள் (ஹுர்ரிமத் அலைக்கும் உம்மஹாத்து(க்)கும் வ பனாத்துக்(கு)ம் வ அஃவாத்து(க்)கும் வ அம்மாத்து(க்)கும் வ ஃகாலாத்து(க்)கும் வ பனாத்துல் அஃகி வ பனாத்துல் உஃக்தி - குர்ஆன் 4:23)).

      ”அதேபோல், (ரிதா) என்னும் அடிப்படையிலும் திருமண வழி உறவு (சிஹ்ர்) என்னும் அடிப்படையிலும் திருமணம் முடிக்கத் தடை செய்யப்பட்ட உறவு முறைகள் ஏழு.” (இவ்வகையில் ஓர் ஆண் மணமுடிக்கத் தடை செய்யப்பட்ட ஏழு உறவுகளாவன: 1. செவிலித் தாய், 2. செவிலிச் சகோதரி, 3. மாமியார், 4. மருமகள், 5. வளர்ப்பு மகள், 6. (திருமண பந்தம் முறியாத நிலையில் நடைமுறையில் இருக்கும்) மனைவியின் சகோதரி, 7. தந்தை விவாகரத்துச் செய்த அல்லது தந்தை இறந்ததால் விதவையான மாற்றாந்தாய்).

      ”நாய் வாய் வைத்த பாத்திரத்தை மனிதர்கள் பயன்படுத்தும் முன் ஏழு முறை கழுவ வேண்டும், அதில் ஒருமுறை மண்ணால் தேய்த்துக் கழுவுதலாக. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கட்டமைத்த சட்டம் அப்படித்தான்.

      ”சூறத்துல் கத்ரு என்னும் ‘மகத்தான இரவு’ அத்தியாயத்தில், இன்னா என்பதில் தொடங்கி அம்ரின் என்னும் சொல் வரை (திருவசனங்கள் ஒன்று முதல் நான்கு வரை, அதாவது ஐந்தாம் திருவசனமான ’சலாமுன் ஹிய ஹத்தா மத்லஇல் ஃபஜ்ரி’ என்பது நீங்கலாக) இருபத்தேழு அறபிச் சொற்கள் (ஹுரூஃப்) இருக்கின்றன.”

       ”இறைத்தூதர் அய்யூப் (அலை) அனுபவித்த சோதனையும் வேதனையும் ஏழு ஆண்டுகள்.”

      ”ஆயிஷா (ரலி) அவர்கள் ஒருமுறை சொன்னார்கள்: ‘எனக்கு ஏழு வயதாக இருக்கும்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் திருமணம் முடித்தார்கள்’.”

      ”’முதுகிழவி நாட்கள் (அய்யாமுல் அஜூஸ்), அதாவது அழிக்கும் கொடுங்காற்று (ஹுசூம்) நாட்கள், ஏழு ஆகும். ஷுபாத்தில் (ஃபிப்ரவரியில்) மூன்றும், ஆதாரில் (மார்ச்சில்) நான்கும்.”

      ”இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒருமுறை சொன்னார்கள்: ‘எனது சமுதாயத்தின் உயிர்த் தியாகிகள் ஏழு பேர்கள்: 1. அல்லாஹ்விற்கான அறப்போரில் வெட்டப்பட்டு உயிர் துறப்போர் (அல்-க(த்)தீல் ஃபீ சபீலில்லாஹ்); 2. கொள்ளை நோயில் இறப்பவர் (அல்-மத்ஊன்); 3. காச நோயால் மரணிப்பவர் (அல்-மஸ்லூல்); 4. நீருக்குள் மூழ்கி இறப்பவர் (அல்-கரீக்); 5. நெருப்புக்குள் சிக்கிக் கொண்டு எரிந்து மரணிப்பவர் (அல்-ஹரீக்); 6. வயிற்று அல்லது குடல் வியாதியால் மரணிப்பவர் (அல்-மப்தூன்); 7. பிரவசத்தில் இறந்துபோகும் பெண் (அந்-நஃப்சாஃ).”

      ”சூரத்துல் ஷம்ஸ் என்னும் ‘சூரியன்’ அத்தியாயத்தின் முதல் ஏழு திருவசனங்களில் அல்லாஹ் சத்தியம் செய்திருக்கிறான்:

      ’சூரியன் மீதும் அதன் பிர்காசத்தின் மீதும் சத்தியமாக! (வஷ்ஷம்ஸி வள்ளுஹாஹா); அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் (வல்கமரி இதா தலாஹா); சூரியன் பிரகாசிக்கும்போதான பகலின் மீதும் (வன்-னஹாரி இதா ஜல்லாஹா); அதனை மூடிக்கொள்ளும்போதான இரவின் மீதும் (வல்-லைலி இதா கஷ்ஷாஹா); மேலும், வானத்தின் மீதும் அதனை அமைத்தவன் மீதும் (வஸ்-சமாஇ வமா பனாஹா); பூமியின் மீதும், அதை விரித்தவன் மீதும் (வல் அர்ளி வமா தஹாஹா); ஆத்மாவின் மீதும் அதனைச் செம்மையாக்கியவன் மீதும் (வ நஃப்ஸின்(வ்) வமா சவ்வாஹா).’ (91:1-7).”

      ”மூசா (அலை) அவர்கள் ஏழு முழ உயரம் இருந்தார்கள்; அவர்களின் கைத்தடியும் ஏழு முழம் இருந்தது.”

      ”இன்னனம் உறுதியாகிறது, மார்க்கத்தின் முக்கியமான பல விடயங்கள் ஏழு என்பதுடன் தொடர்பு கொண்டுள்ளன. இதன் பொருள் என்னவெனில், இருபத்தேழாம் இரவே லைலத்துல் கத்ரு என்பதை “”வைகறை விடியல் வரை அது பேரமைதியாகும்” (சலாமுன் ஹிய ஹத்தா மத்லஇல் ஃபஜ்ரி) என்னும் திருவசனத்தின் கண்ணியத்தால் அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்குக் குறிப்பாக உணர்த்தியுள்ளான்.”

      இவ்வாறு, ரமலான் மாதத்தின் இருபத்தேழாம் இரவே லைலத்துல் கத்ரு என்னும் மகத்தான இரவு என்று நாம் விளங்கிக் கொள்வதற்கான வாயில்களை அல்லாஹ் வைத்திருக்கிறான். 

(தொடரும்...)

No comments:

Post a Comment