Wednesday, September 10, 2014

யாதும் ரோஜாவின் பெயரும் - part3

”ஷைகுல் அக்பர்” (மாபெரும் ஞானகுரு) என்று சூஃபி உலகில் போற்றப்படும் முஹய்யுத்தீன் இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் இஸ்லாமிய ஆட்சியின் கீழிருந்த “ஸ்பெய்ன்” நாட்டில் மூர்சியா என்னும் ஊரில் கி.பி.1165-ல் பிறந்தார். அரபு மொழியில் வியத்தகு புலமையும் மிக ஆழமான ஆன்மிக வெளிப்பாடும் அருளப்பட்டவர். நூற்றுக்கணக்கில் நூற்கள் எழுதியிருந்தாலும் அவரின் மிக முக்கியமான நூற்களாக “ஃபுத்தூஹாத்தெ மக்கிய்யா” (The Meccan Openings, மக்கத்துத் திறப்புக்கள்) மற்றும் “ஃபுஸூசுல் ஹிகம்” (The Bezels of Wisdom, மெய்ஞ்ஞான ஒளிச்சுடர்கள்) ஆகிய இரண்டும் கருதப்படுகின்றன. இவ்விரண்டு நூற்களுடன் இன்னொரு நூலையும் அடியேன் இணைத்துக் கூற விரும்புகிறேன்: “தர்ஜுமானுல் அஷ்வாக்” (The Interpreter of Desires, ஆசைகளின் விளக்கவுரை). ஏனெனில், இந்நூல் இப்னு அரபியின் இளமைக் காலத்துடன் தொடர்புடையது. சிறு வயதிலேயே அவர் எத்தகைய இறைஞானியாக இருந்தார் என்பதற்குக் கட்டியம் கூறுவது. புரிந்து கொள்ள மிகவும் கடினமானது.
ஷைகுல் அக்பர் இப்னுல் அரபியின் தாக்கம் தாந்தேவின் மீது இருந்தது என்பது கிறித்துவ மற்றும் சூஃபி இலக்கியங்களில் பரிச்சயம் கொண்ட எவரும் உணரக்கூடிய ஒன்றே. அப்படி உணர்ந்து கொண்டவர்களுள் சிலரின் கருத்துக்களைத் தருகிறேன்.
இத்ரீஸ் ஷா: “தாந்தேவின் காவியமான ‘டிவைன் காமெடி’ போன்றவற்றின் மூலவூற்றுக்கள் சூஃபி இலக்கியங்களே என்பதை அண்மைக்கால ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. எனினும், ரசவாதிகளுக்கு அவரின் சூஃபித் தொடர்புகள் பற்றிய பரிச்சயம் எப்போதுமே இருந்திருக்கும்.” (Idries Shah, “The Sufis”, Anchor Books, New York, 1971, page228).
இஃது இறைவன் தன்னுடன் தானே ஆடிக்கொள்ளும் கண்ணாமூச்சி விளையாட்டின் ஒரு பகுதி என்று இந்து மற்றும் சூஃபி ஞானிகள் சொல்கிறார்கள். வாஸ்த்தவமாக, நம் இளம் ஞானி (இப்னுல் அரபி)யைப் போல் இதற்கொரு தத்துவத்தை உருவாக்கியவர் வரலாற்றில் வேறு எவரும் இல்லை. இறைக்காதல் பற்றிய அவரின் கோட்பாடுகள் அவரை இஸ்லாமிய உலகம் முழுவதிலும் பிரபலமாக்கியது. தாந்தேவுக்கு நூறு வருடங்கள் முன்பு பிறந்தவரான இப்னுல் அரபியின் கவிதைகளும் தத்துவங்களுமே பீட்ரிஸ் பற்றிய தாந்தேவின் கவிதைகளுக்குத் தூண்டுதலாகவும் வெளிச்சமாகவும் இருந்தன என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.” (’wings of desire (a parable)” http://www.tangdynastytimes.com, )
இப்னுல் அரபி பல நாடுகளுக்குப் பயணம் செய்தவர். ஸ்பெய்ன் நாட்டின் மூர்சியா நகரில் பிறந்த அவர் கி.பி.1240-ல் தனது எழுபத்தைந்தாம் வயதில் டமஸ்கஸ் நாட்டில் உள்ள ஜபல் காஸியூன் என்னும் ஊரில் இறந்தார். வட ஆஃப்ரிக்காவில் மொராக்கோ நாட்டில் உள்ள ’ஃபேஸ்’ என்னும் நகரில் குறிப்பிட்ட காலம் வசித்திருக்கிறார். அவ்வூரில் நடைபெறும் சூஃபி கலாச்சார விழா பற்றி எழுதும்போது ஃபிட்ஸ்ராய் மாரிஸ்ஸே சொல்கிறார்: “முதல் நாள் முழுவதும் சுற்றி அலைந்த பிறகு எங்களுக்கொன்று தெளிவானது. அதாவது நாங்கள் முன்பு நினைத்திருந்தது தவறு, இப்னுல் அரபி அவர்கள் ஃபேஸ் நகரில் அடக்கப் படவில்லை. ஆனால் இந்த ஊருடன் அவருக்கு ஆழமான தொடர்பு இருந்திருக்கிறது. இன்னும் திட்டமாகச் சொல்வதெனில், கி.பி.1195 முதல் 1199 வரை அவர் இவ்வூரில் வாழ்ந்திருந்த காலத்தில்தான் அவர் ஆன்மிக விண்ணேற்றத்தை விவரிக்கும் கிதாபல் இஸ்ராஃ என்னும் நூலினை எழுதினார். இந்நூலின் விவரணைகள் தாந்தேவின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகின்றது. அவரின் பாரிய நூற்கள் எழுதப்படும் முன்பே இந்நூல் எழுதப்பட்டுவிட்டது என்பதை அறிய ஃபேஸில் அவரிருந்த நான்கு வருடங்களும் அவரது சிந்தனையின் உருவாக்கத்தில் இன்றியமையாத இடம் வகிப்பதை எண்ணி எமது பயணம் உத்வேகம் பெற்றது.” (Fitzroy Morrissey  , “Ibnul Arabi and the Fez Festival of Sufi Culture”,  http://fezsufifestival.tumblr.com).

பீர் ஜியா இனாயத் ஃகான்: “மேற்கின் சூஃபி ஞான கிரகிப்பைத் தடம் பார்ப்பது மிகவும் கடினமானது. காரணம், மேற்கின் நூற்களில் அவற்றின் கடன் வாங்கலைப் பற்றிய குறிப்புக்கள் எதுவும் இருப்பதில்லை. ரேமன் லல் தனது ‘Book of Lover and the Beloved” என்னும் நூலுக்கு எழுதிய அறிமுகம் ஒரு விதிவிலக்கு. காதல் பற்றிய தனது அகதரிசனங்களுக்கு சூஃபிகளே உள்ளுணர்வை நல்கினார்கள் என்பதை அவர் குறிப்பிட்டிருக்கிறார். …. … … … … தாந்தே ஒரு சுவையான உதாரணம். குய்டோ காவால்காண்டி உடன் சமகாலத்தில் அவர் கொண்டு வந்த ’இனிமையான புதிய பாணி’யை தீவானெ மஜ்னூன் போன்ற அரபி இலக்கியப் பிரதிகளுடனும் பாரசீக ஆன்மிகக் காதல் பள்ளியுடனும் இப்னு ஹஸ்ம் போன்ற அந்தலூசியக் கவிஞர்கள் மற்றும் அழகியல் அறிஞர்களின் உளவியலுடனும் ஒப்பிட்டுக் காணும்போது அது புதிய ஒன்றல்ல என்பதை உணரலாம். …… ….. ……. தாந்தேவின் வானவரியல் அல்-ஃபாராபி, இப்னு சீனா, அல்-கஸ்ஸாலி மற்றும் இப்னு ருஷ்த் ஆகியோரின் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் மிகவும் தோய்ந்திருக்கிறது. டிவைன் காமெடியில் அவர் சித்தரிக்கும் விண்ணேற்றம் என்பது நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் மிஃராஜ் என்னும் விண்ணேற்றத்தை முன்மாதிரியாக வைத்து எழுதப்பட்டுள்ளது. எனவே, நரகத்தின் எட்டாவது வட்டத்தில் முஹம்மது நபி தனது நெஞ்சம் பிளக்கப்பட்ட நிலையில் இருப்பதாக தாந்தே எழுதியிருப்பது மிகவும் வஞ்சகமான முரணாகும். சூஃபி இலக்கியங்களுடனான தனது சாய்வை மறைப்பதற்காக தாந்தே இவ்வாறு எழுத வேண்டி இருந்தது என்று கூறுவது சரியல்ல. ஏனெனில் போப்பாண்டவர்களையும் நரகில் தள்ளுவதற்கான துணிச்சல் அவருக்கிருந்தது.
முஹம்மத் (ஸல்) பற்றிய தாந்தேவின் சித்தரிப்பு திருக்குர்ஆனின் 94-வது அத்தியாயத்தின் முதல் வசனத்தை வைத்துக்கொண்டு தாந்தே செய்த வஞ்சகமான கற்பனை என்று எனது நண்பர் ஓமித் சஃபி தனது புதிய நூலில் குறிப்பிட்டிருக்கிறார். ”இன்ஷிராஹ்” (விரிவாக்கம்) என்னும் அந்த அத்தியாயம் நபியின் நெஞ்சை இறைவன் திறந்து அன்னாரின் இதயத்தைப் பரிசுத்தம் செய்ததைக் குறிக்கிறது. எவ்வாறாயினும், மத்தியத் திரைக்கடல் பள்ளத்தாக்கில் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே உண்டான ஈர்ப்பு மற்றும் பகைமைக்கு தாந்தே சிறந்த உதாரணமாக இருக்கிறார்.” (http://www.sevenpillarshouse.org/article/on_prophecy_and_time).
  • இனி, ஷைகுல் அக்பர் இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் தன் வாழ்வில் நிகழ்ந்ததாக விவரிக்கும் அனுபவத்தைப் பார்ப்போம். இஸ்ஃபஹான் நகரைச் சேர்ந்த அபூ ஷஜா ழாஹிர் பின் ருஸ்தம் என்னும் சூஃபி குருநாதரின் மகளான நைஸாம் குறித்து அன்னார் கூறுகிறார்கள்: “இந்த குருவிற்கு ஒரு மகள் இருந்தாள். காண்போரின் பார்வையை ஸ்தம்பிக்க வைத்துவிடும் அழகு கொண்டவள். அவளின் இருப்பே எமது சபைக்கு அலங்காரமாகவும் ஆன்மிக ஒளிகொண்டு காணும் நபர்களை வியப்பில் ஆழ்த்துவதாகவும் இருந்தது. அவளின் பெயர் நைஸாம். “ஐனுஷ்ஷம்ஸ் வல் ஜமால்” (சூரியன் மற்றும் அழகின் கண்) என்பது அவளின் சிறப்புப் பெயர். கற்றவளாகவும் தூய குணம் கொண்டவளாகவும் ஆன்மிக அனுபவமும் பக்தி வாழ்வும் கொண்டவளாகவும் இருந்த அவள் புனித பூமி முழுவதின் தொன்மையும் நபிக்கு விசுவாசமான மாநகரின் அழகிய இளமையும் உருக்கொண்டவளாக இருந்தாள். அவளின் பார்வை, அவளது உரையாடலின் பாந்தம் ஆகியவை எத்தகைய காந்தம்! குழப்பமும் எதிர்ப்பும் செய்யும் மட்டமான மனங்கள் மட்டும் இல்லை எனில் நான் இங்கே அவளது ஆன்மாவினது போன்றே தேகத்தின் அழகுகள் பற்றியும் விளக்கிச் சொல்வேன். அது அருட்கொடைகளின் தோட்டம். அவள் எனது கவிதைகளுக்கான அகத்தூண்டுதலாக இருந்தாள். நான் அனுபவித்த மேன்மையான காதல் பற்றி, இந்த இளம்பெண்ணின் சகவாசம் என் இதயத்தில் ஏற்படுத்திய விழிப்பைப் பற்றி, என் ஆன்மா அனுபவித்த உணர்வு பற்றி எழுத இயலாதவனாக இருக்கிறேன். அவள் எனது தேடலின் பொருளாகவும் எனது நம்பிக்கையாகவும் மிகவும் தூய கன்னியாகவும் இருந்தாள்.

இந்நூலில் நான் எப்பெயர் சொல்லினும் அவளையே அது குறிக்கின்றது. எந்த வீட்டிற்கு நான் சரமம் பாடினும் அவளின் வீட்டையே எண்ணுகிறேன் நான். தெய்வீக உதிப்புக்கள், ஆன்மிகச் சந்திப்புகள், வானவருலகின் அறிவுகளுடனான இந்தப் பூவுலகின் இயைபுகள் ஆகியன பற்றிக் கூறுவதில் நான் ஒருபோதும் சுணங்குவதில்லை. இது ஏனெனில், இந்த உலகை விடவும் மறைவான உலகின் விஷயங்களே என்னை மிகவும் கவர்கின்றன. நான் எதைப் பற்றிக் கவிதை எழுதுகிறேன் என்பதை இந்த இளம்பெண் மிக நன்றாகவே அறிந்திருந்தாள்.”
இவ்வாறு இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் அறிமுகப்படுத்தும் நைஸாம் அன்னாரின் புனிதப் பயணத்தில் வேறொரு பரிமாணத்தில் அவர் முன் தோன்றுகிறாள். அவர் சொல்கிறார், “ஓர் இரவு நான் கஃபாவை இடஞ்சுற்றிக் கொண்டிருந்தேன். சட்டென்று சில கவிதை வரிகள் என் இதயத்தில் உதித்தன. கேட்கும் அளவு அவற்றை நான் சப்தமாகப் பாடினேன். அவற்றை முடிக்கும் முன், பட்டினும் மென்மையான கை ஒன்று என் தோளைத் தொடுவதை உணர்ந்தேன். திரும்பிப் பார்த்தபோது என் முன் இளம்பெண் ஒருத்தி நின்றிருக்கக் கண்டேன். ஈரானில் பிறந்தவள் அவள். கிரேக்கத்து இளவரசிகளில் ஒருத்தி அவள். புனித மக்காவில் வாழ்கிறாள். முகத்தின் அழகிலும், பேச்சின் மென்மையிலும், இதயத்தின் நுட்பத்திலும் அவளினும் மேம்பட்ட ஒரு பெண்ணை அதுவரை நான் கண்டிருக்கவில்லை.” இந்நிகழ்வு கி.பி.1201-ல் நடைபெற்றது.
இப்னுல் அரபி (ரஹ்) அவர்களின் இந்த அனுபவங்களின் உள்ளே பொதிந்து கிடக்கும் ஞானத்தைக் காண்பதற்கு முன் இந்த நிகழ்ச்சி விவரணையின் தாக்கம் கலீல் ஜிப்ரானின் மீது எவ்வாறு இருந்தது என்பதை முறிந்த சிறகுகள் நாவலின் சில பகுதிகளைப் பார்த்து உணர்ந்து கொள்ளலாம். தாந்தேவிடம் காணப்படாததும் இப்னுல் அரபியிடம் காணப்படுவதுமான இந்தச் சரித நிகழ்வின் சாயலை நாம் கலீல் ஜிப்ரானிடம் பார்க்கிறோம். இந்தத் தாக்கத்தை, அடியேன் அறிந்த அளவில், இதுகாறும் எவரும் கண்டறிந்து எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. லெபனான் நாட்டின் மகாகவியான கலீல் ஜிப்ரான் அரபி மூல மொழியிலேயே இமாம் கஸ்ஸாலி, இப்னுல் அரபி, இப்னு சீனா போன்றோரின் நூற்களைப் படித்த கிறித்துவர் என்பதை இங்கே நினைவில் வைப்போம். இனி அவரது “முறிந்த சிறகுகள்” நாவலின் சில பகுதிகள்:

“சில நாட்களில் தனிமை என்னைப் பீடித்தது. நூற்களைப் பார்த்தாலே அலுப்பாக இருந்தது. வாடகைக்கு வண்டி எடுத்துக் கொண்டு ஃபாரிஸ் எஃப்பாண்டியின் இல்லத்திற்குக் கிளம்பினேன். மக்கள் சுற்றுலாவிற்கு வருகின்ற பைன் மரங்களை அடைந்த போது வண்டியின் ஓட்டுநர் சற்றே ஓய்வெடுக்க ஒதுங்கினார். இருபுறமும் வில்லோ மரங்கள் நிழலிட்டிருந்தன. அவற்றைக் கடந்த போது பசும்புல்லின் அழகு பரந்து கிடந்தது. அப்பால் திராட்சைத் தோட்டங்களும் வசந்த கால ஆரம்பத்தின் பல வண்ண மலர்களும் காட்சி அளித்தன.
சில நிமிடங்களில், அழகிய தோட்டம் ஒன்றின் நடுவில் தனித்து நின்ற ஒரு வீட்டின் முன்னால் வண்டி நின்றது. ரோஜா மற்றும் மல்லிகையின் நறுமணம் காற்றில் நிறைந்திருந்தது. இறங்கி நான் அந்த விசாலமான தோட்டத்தில் நடந்த போது என்னை வரவேற்க ஃபாரிஸ் எஃப்பாண்டி வருவதைக் கண்டேன். இதயம் தோய்ந்த வரவேற்புடன் அவர் என்னை வீட்டினுள் அழைத்துச் சென்று என்னருகில் அமர்ந்து கொண்டார். தன் மகனைக் காணுமோர் அன்பான தந்தை போல் எனது எதிர்கால வாழ்க்கை பற்றிய திட்டங்களையும் எனது படிப்புப் பற்றியும் விசாரித்தார். என் குரலில் உற்சாகமும் தெம்பும் பொங்க நான் பதில் கூறினேன். ஏனெனில், அப்போது எனது செவிகளில் மகத்துவத்தின் கீதம் ஒலித்துக் கொண்டிருந்தது, நான் நம்பிக்கையான கனவுகளின் கடலில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போது, வெண்ணிறப் பட்டாடை அணிந்த ஓர் இளம்பெண் வெல்வெட் திரைகளின் ஊடாகத் தோன்றி என்னை நோக்கி நடந்து வந்தாள். நானும் ஃபாரிஸ் எஃப்பாண்டியும் எழுந்து நின்றோம்.
“இவள் என் மகள் சல்மா” என்று அந்த வயோதிகர் சொன்னார். என்னை அவளிடம் அறிமுகம் செய்துவைத்துச் சொன்னார், ”விதி இந்த மகனின் ரூபத்தில் எனது பழைய நண்பனை என்னிடம் மீண்டும் கொண்டு வந்துள்ளது.” சல்மா என்னை ஒருகணம் பார்த்தாள், அந்நியன் ஒருவன் தமது இல்லத்தினுள் எப்படி நுழைந்தான் என்று துணுக்குற்றது போல். அவளின் கை வெண்ணிற அல்லி மலர் போல் இருந்தது. அதை நான் தொட்டபோது ஒரு வினோத வலி என் இதயத்தைத் தைத்தது.” (”முறிந்த சிறகுகள்”, அத்தியாயம் #3: ‘ஆலயப் பிரவேசம்’).
சல்மாவின் சந்திப்பு அவரில் ஏற்படுத்திய மாற்றங்களைப் பற்றிப் பின்வரும் அத்தியாயங்களில் கலீல் ஜிப்ரான் சொல்கிறார். சில பத்திகள்:
“ஒவ்வொரு சந்திப்பும் அவளின் அழகிற்கான புதிய அர்த்தத்தை எனக்குத் தந்து அவளின் இனிய ஆன்மாவின் மீதான அகப்பார்வையை நல்கிற்று. ஒவ்வொரு பக்கத்தையும் நான் புரிந்து கொண்டு அவளின் புகழ்களைப் பாடும்படியான, ஆனால் ஒருபோதும் நான் படித்து முடிக்க இயலாததான புத்தகமாக அவள் ஆனாள். தெய்வீக ஆட்சியால் ஆன்மாவிலும் உடலிலும் அழகு நல்கப்பட்ட ஒரு பெண் சத்தியம் ஆவாள். ஏகநேரத்தில் அவள் வெளிப்பாடாகவும் ரகசியமாகவும் இருக்கிறாள். காதலால் மட்டுமே அவளை நாம் புரிந்துகொள்ள முடியும், நற்பண்பால் மட்டுமே தொட இயலும். அத்தகைய ஒரு பெண்ணை நாம் விவரிக்க முயலும் போது அவள் நீராவி போல் மறைந்து விடுகிறாள்.”
“அதிகம் பேசுவதை விடவும் சல்மா மிக ஆழமாக சிந்தனை வயப்பட்டவளாக இருந்தாள். அவளின் மௌனம் ஒருவித இசையாக இருந்தது. அது ஒருவரை கனவுகளின் உலகிற்கு அழைத்துச் சென்று தமது இதயத்தின் துடிப்பைக் கேட்க வைப்பதாகவும் அவரது எண்ண ரூபங்களையும் தன் முன்னே நின்று கண்களுக்குள் பார்க்கும் உணர்வுகளையும் காண வைப்பதாகவும் இருந்தது.
அவள் தனது வாழ்க்கை நெடுகிலும் ஆழமான துக்கத்தின் ஆடையை அணிந்திருந்தாள். அது அவளின் அபூர்வ அழகையும் கண்ணியத்தையும் கூட்டுவதாக இருந்தது. பூத்த மரம் ஒன்று வைகறைப் பனித்திரையின் ஊடாகக் காணும்போது மேலும் அழகாகத் தெரிவதைப் போல்.”

(to be continued...)