Saturday, June 13, 2020

நான் ஒரு சங்கேதன்      வாட்ஸாப் ஸ்டேட்டஸை மாற்றிவிட்டேன்.

இதுகாறும் “கககபோ” என்று வைத்திருந்தேன். வாட்ஸப்பிற்குப் பொருத்தமான வாசகம்தான். அதன் அர்த்தம் என்ன என்று ஒருமுறை நாகூர் ரூமி மட்டும் கேட்டார். “கருத்துக்களைக் கச்சிதமாகக் கவ்விக்கொள்கிறாய் போ!” என்பதன் சுருக்கம் அது என்று பதில் அனுப்பினேன். 23-ஆம் புலிகேசி படத்தில் வடிவேலு சொன்னது அது.

இரண்டு நாட்களுக்கு முன் அந்த ஸ்டேட்டஸை மாற்றி, இப்போது ஆங்கிலத்தில் “I AM ANA-GRAM CIPHER” என்னும் வாசகத்தை வைத்திருக்கிறேன்.

என்னவோ எழுதி வைத்திருக்கிறான் என்று போயிருக்கலாம். ஆத்மீக நண்பர் அப்துல் காதிர் பிலாலி அவர்களால் அப்படி முடியவில்லை. சீரியஸாக எடுத்துக் கொண்டுவிட்டார். ”Anagram சிரமமாக இருக்கிறது” என்று நேற்று மதியம் எழுதியிருந்தார். “Deciphering is still difficult for me” என்று பின்மதியம் ஒரு இடுகை. “Anagram என்பதை ANA-GRAM என்று ஹைஃபன் போட்டு எழுதியிருக்கிறேனே, எதுவும் தோன்றவில்லையா?” என்று கேட்டு அமைதியாகிவிட்டேன்.

மனிதர் விடுவதாக இல்லை. இன்று காலை ஏழு மனிக்கு ஒரு தாளை ஃபோட்டோ எடுத்து அனுப்பியிருந்தார். எனது ஸ்டேட்டஸ் வாசகத்தையே ஒரு அனகிராம் என்று எண்ணி முயன்றிருக்கிறார். (அனகிராம் தெரியும்தானே? ஒரு சொல்லின் அல்லது சொற்றொடரின் எழுத்துக்களை மாற்றிப்போட்டு வேறு சொல் அல்லது சொற்றொடர் ஆக்குவது. உ-ம் MARY என்னும் சொல்லின் எழுத்துக்களை மாற்றி அமைத்தால் ARMY.) நண்பர் அப்துல் காதிர் அவர்கள் மூளையைக் கசக்கி அனுப்பியிருந்த வாசகங்கள் சில: RAMANA CIPHER, IMAAN PREACHER, AGAIN A PREACHER, AGAIN HER PEACE, MARRIAGE MANIAC, MANAGE HER PEACE. அனகிராம் முறைப்படி இவை பொருந்தி வருகின்றனவா என்றுகூட நான் சோதிக்கவில்லை. அதற்குள் இதனை எழுதத் தொடங்கிவிட்டேன். நண்பர் மேலும் சிரமப்படக் கூடாது. என்ன அர்த்தத்தில் அந்த ஸ்டேட்டஸ் வாசகம் என்று நானே சொல்லி விடுகிறேன்.

“I AM ANA-GRAM CIPHER”

தமிழில் சொல்வதெனில் “நான் ஒரு அனகிராம் சங்கேதம்”.

சைஃபர் அல்லது சங்கேதம் என்பது ரகசியக் குறியீடு. ரகசிய அல்லது அடையாள மாற்றம் கொண்ட எழுத்து முறை (a secret or disguised way of writing; a code). இதனை ஆங்கிலத்தில் crypt என்றும் குறிப்பிடுவர். இத்தகைய சங்கேதங்களை எழுதுதல் மற்றும் அவற்றில் இருந்து உண்மையான செய்தியைக் கண்டறிதல் ஆகிய அறிவுத் துறைகளை Cryptography என்றும் Cryptology என்றும் அழைக்கின்றனர்.

அனகிராம் முறையில் எழுதப்பட்ட ஒரு சங்கேதச் செய்தி நான். எழுதியது யார்? இறைவன்!

ஆங்கிலத்தில் சாத்தியமான ஆகச் சிறிய முழு வாக்கியம் எது? ”I Am” என்று சொல்கிறார்கள். “நான் இருக்கிறேன்” என்று பொருள். எனவே, நான் என்பது சிறியதாகத் தோன்றினாலும் அது முழுமையானது. அது ஒரு சிறிய பிரபஞ்சம் (Microcosm).

அறபி மொழியில் நான் என்பதைக் குறிக்கும் சொல் ‘அனா’ (ANA). “I AM ANA”

நான் (I, ANA) என்பது ஞான நெறியில் ஒரு முதன்மைச் சொல் அல்லவா?


Ramana Cipher என்று நண்பர் அனுப்பியிருந்த வாசகம் மகிழ்ச்சி அளிக்கிறது. ரமணர்தான் சொன்னார், மனிதன் தன் வாழ்க்கையில் கேட்க வேண்டிய அர்த்தமுள்ள ஒரே கேள்வி “நான் யார்?” என்பதுதான் என்று.

“I AM ANA-GRAM” என்பது இப்போது “அனா என்பது ஒரு அனகிராம்” என்று பொருட்படுகிறது.

ANA (அனா) ஒரு வித்தியாசமான அனகிராம். ANA என்பதில் முதலாம் மற்றும் இறுதி எழுத்துக்களை மாற்றி அமைத்தால் மீண்டும் ANA என்றே வருகிறது. எனவே அதன் அனகிராம் அதுவே!

ஒருவகையில் இந்த மாற்றி அமைத்தல் ANA என்பதை முன்னுக்குப் பின்னாக வாசித்ததாகிறது. அதாவது, அது ஒரு பாலிண்ட்ரோம் (Palindrome) ஆகவும் இருக்கிறது. இந்த பண்பு தமிழிலும் அறபியிலும் இருப்பதைக் காண்கிறோம். “அலிஃப் நூன் அலிஃப்” என்பது அறபியில் அனா என்பதன் எழுத்துக்கள். திருப்பி வாசித்தாலும் அதுவே. தமிழில் ஓசை கொண்டு காண “ன்+அ+அ+ன்” à நான் (ந்,ன் என்றும் ஒரே ஓசை என்று கருதவும்.) திருப்பி வாசிப்பினும் அதுவே (சிரமமாய் இருப்பின் ஆங்கிலத்தில் எழுதிப் பாருங்கள்: NAAN). ஆங்கில கேப்பிடல் ஐ (I) என்பதையும் எப்படிப் புரட்டினாலும் அதன் வடிவம் மாறாமல் அதுவாகவே நிற்கிறது!


சூஃபி ஞானி பீர் கவ்ஸி ஷாஹ் (ரஹ்) சொல்கிறார்கள்: “அனா கோ பல்டோ அனா ஹீ ஹே டூண்ட்தே க்யா ஹோ? / யஹீ ஹே சாஃப் ப(த்)தா லா இலாஹ இல்லல்லாஹ்” (’நான்’ என்பதைப் புரட்டு – அப்போதும் அது ’நான்’தான் / தெளிவான முகவரி இதுவே – லா இலாஹ இல்லல்லாஹ்).

இப்பாடல் தரும் கருத்து: நான் என்னும் தன்னுணர்வு படைப்புகளுக்கு இரவலாக வழங்கப்பட்டுள்ளது. உண்மையில் நான் என்னும் தன்னுணர்வு இறைவனுக்கே உரியது. படைப்பின் சுயத்தில் ஒரு தன்னுணர்வு இருக்கிறது. அதைப் புரட்டினால் இறைவனின் சுயத்திற்கே அது உரியது என்னும் பேருண்மை விளங்கிவிடும்.

படைப்பின் சுயம் – சூஃபித்துவப் புழக்க மொழியில் ’ஜாத்தே அதம்’ (ஒன்றுமற்ற சுயம்) என்றும், இறைவனின் சுயம் ’ஜாத்தே கிதம்’ (பூர்வீக சுயம்) என்றும் சுட்டப்படுகின்றன. Cipher என்னும் சொல்லுக்கு இன்னொரு அர்த்தம் பூஜியம் (ஜீரோ) என்பதாகும். எனவே, “I AM ANA-GRAM CIPHER” என்பதன் பொருள், நான் என்னும் தன்னுணர்வு கொண்டவனாயினும் படைப்பாகிய எனது சுயம் பூஜியம் என்பதாகும். இந்தப் பூஜியத்தில் இறைவனது நான் என்னும் தன்னுணர்வே பிரதிபலித்துக் காட்டுகிறது. கண்ணதாசன் “பூஜியத்திற்குள்ளே ஒரு ராஜியத்தை ஆண்டுக் கொண்டு புரியாமல் இருப்பான் ஒருவன் / அவனைப் புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்” என்று பாடியதை நினைவு கூர்க.

இறைவன் தனது உள்ளமையில் கோடானு கோடி படைப்புக்களை வெளிப்படுத்திக் கொண்டு வந்திருக்கிறான். ஒவ்வொரு படைப்பும் ஒரு பூஜ்ய சுயம் – ஜாத்தே அதம். ஒவ்வொன்றுக்கும் ஒரு வரையறை இருக்கிறது. வரையறை நிர்ணயிப்பை அறபியில் “தக்தீர்” என்று சொல்லப்படும். கத்ரு என்னும் மூலச் சொல்லில் இருந்து அது வருகிறது. கத்ரு என்றால் மதிப்பு என்று பொருள். ஆங்கிலத்தில் weightage என்று சொல்கிறோமே அந்தத் தொனியிலும் அச்சொல் புழங்கும். “அவர் ரொம்ப வெய்ட்டான ஆளு” என்றால் அவர் மதிப்புள்ளவர் என்று பொருட்படுகிறது. வெய்ட் என்றால் எடை அல்லது நிறை என்றும் பொருள். அதன் அலகு ஆங்கிலத்தில் Gram எனப்படும். (அதனால்தான் மொழியில் உள்ள எழுத்து சொல் ஆகியவற்றின் நிர்ணயிப்புக்களை வரையறைகளை Grammar என்கிறோம்.) எனவே, “I AM ANA-GRAM CIPHER” என்றால் ”நான் ஒரு வரையறுக்கப்பட்ட பூஜிய சுயம்” என்று பொருளாகிறது.

Anagram என்பதன் பன்மை Anagrams. இதற்கு ஒரு அற்புதமான அனகிராம் தருகிறார்கள் லத்தீன் மொழியில்: “ARS MAGNA”. இதன் பொருள் “The Great Art” (உன்னதமான கலை).

உண்மைதான். தன்னை அறியும் கலையே அனைத்துக் கலைகளிலும் உயர்வானது என்று ஞானிகள் சொல்கின்றனர். “மன் அரஃப நஃப்சஹு ஃபகத் அரஃப றப்பஹு - தன்னை அறிந்தவன் இறைவனை அறிவான். தன்னை அறியும் கலை – தற்கலை! (தமிழகத்து சூஃபி ஞானி பீர் முஹம்மது அப்பா அவர்கள் அடங்கியிருக்கும் ஊர் தக்கலை எனப்படுகிறது. தற்கலை என்பதே மருவித் தக்கலை ஆகியுள்ளது. அப்பெயர் பீரப்பா அவர்களே வைத்த பெயராதல் வேண்டும்.)

படைப்பாளனாகிய இறைவனே பெருங்கலைஞன். அவன் தனது படைப்புக்கு நான் என்னும் தன்னுணர்வை அருளியதே ஆகப் பெரிய கலை. எனவே, I AM ANA-GRAM CIPHER எனபதன் இன்னொரு அர்த்தம் ‘நான் ஓர் உயரிய கலைப்பொருள்” என்பதாகும்.

இனி, ANAGRAM என்பதை ANA-GRAM என்று இடைக்கோடு இட்டு எழுதியதில் ஓர் அர்த்தமுண்டு. அக்குறிக்கு ஆங்கிலத்தில் hyphen (ஹைஃபன்) என்று பெயர். ”ஹை” என்றால் அறபி மொழியில் ”உயிருள்ளவன்” என்று பொருள். ”ஃபன்” என்றால் கலை என்று பொருள். எனவே ஹை-ஃபன் என்பது உயிருடன் இருக்கும் கலை அல்லது “வாழும் கலை” என்று பொருட்படும். தன்னை அறிந்து தன் இறைவனை அறிபவனே உயிருடன் வாழ்பவன் ஆகிறான். அஃது அல்லாதார் உயிர் இருந்தும் செத்தாரைப் போன்றார். (ars magna – உயர்வான கலை – high fann என்றாலும் அமையும்.)

இனி, சூஃபிகளுக்கே பிரத்தியேகமாக உள்ள, அறபி மொழியினடியான, ”அப்ஜத்” என்னும் சங்கேதக் குறியீட்டு முறைமையின்படி ”அனா” (நான்) என்னும் சொல் என்ன பொருள் கொண்டுள்ளது என்று நோக்கலாம்.

இந்த முறையின்படி ஒவ்வோர் எழுத்துக்கும் ஒரு நிறை எண் (நிறை = கத்ரு = gram) வழங்கப்பட்டுள்ளது (அறபி அகர வரிசைப்படி அல்ல. அந்த எழுத்து வரிசையையே சூஃபிகள் மாற்றி அமைத்திருக்கிறார்கள். அதற்கு ஒரு ஃபார்முலாவும் – சூத்திரமும் உள்ளது.)  அதன்படி, அலிஃப் = 1, நூன் = 50. எனவே, அனா (அலிஃப்+நூன்+அலிஃப்) என்பதன் நிறை 1+50+1 = 52. இனி இதனை சதம தசம ஏக இலக்க முறைப்படி (units of hundreds tens and ones) பிரிக்க வேண்டும். ஆக, 52 = 50+2. 50 என்னும் எண்ணுக்குரிய எழுத்து ”நூன்” (N). 2 என்னும் எண்ணுக்குரிய எழுத்து பே. நமக்குக் கிடைப்பது நூன்-பே (NB) என்னும் ஈரெழுத்து வேர்.


பொதுவாக அறபி மொழிச் சொற்கள் அனைத்திற்கும் மூவெழுத்து வேர்தான் இருக்கும். மிகச் சில சொற்களுக்கு மட்டுமே ஈரெழுத்து வேர் உண்டு. உதாரணம் சொல்லலாம் என்று நினைக்கிறேன். இந்த அப்ஜத் முறையை “The Sufis” என்னும் நூலில்தான் கற்றுக்கொண்டேன். அதனை எழுதிய இத்ரீஸ் ஷாஹ் அல்-ஹாஷிமி அவர்கள் சூஃபி ஞானியரின் பெயர்கள் மற்றும் நூற்களை அப்ஜத் முறையிலேயே விளக்கம் அளித்திருக்கிறார். சூஃபி என்னும் சொல்லையே அவர் அப்ஜத் முறைப்படி “decode” – “decipher” – கண்ணழித்து இப்படி விளக்கம் தருகிறார்: ஸாத்-வாவ்-ஃபே-யா ஆகிய எழுத்துக்களின் நிறை முறையே 90+6+80+10 = 186. இத்தொகையை இலக்கங்களாகப் பிரித்தால் 100+80+6 என்று வருகிறது. 100-80-6 என்னும் இந்த மூன்று எண்களுக்குரிய அறபி எழுத்துக்கள் காஃப் – ஃபே – வாவ் ஆகியவை. இவற்றிலிருந்து மூன்றெழுத்து வேர் combinations எடுக்கலாம்: காஃப்-ஃபே-வாவ்; காஃப்-வாவ்-ஃபே; ஃபே-காஃப்-வாவ்; ஃபே-வாவ்-காஃப்; வாவ்-ஃபே-காஃப்; வாவ்-காஃப்-ஃபே. இந்த வேர்களில் இருந்து பெறப்படும் கிளைச்சொற்கள் சூஃபித்துவத்தை விளக்கும் என்கிறார் இத்ரீஸ் ஷாஹ். உதாரணமாக, ஃபே-வாவ்-காஃப் – ஃபவ்க என்னும் சொல் “மேலே” அல்லது “அப்பால்” என்று பொருட்படும். எனவே, சூஃபித்துவம் என்பது ஓர் Transcendent Philosophy என்று அவர் சொல்கிறார். மனிதனை மேலே உயர்த்தும் ஞான நெறி என்று சொல்லலாம்.

இனி, “அனா” என்பதை அப்ஜத் முறைப்படி கண்ணழிக்க நமக்குக் கிடைத்திருப்பது நூன்-பே என்னும் ஈரெழுத்து வேர். அன்னனம் ஈரெழுத்தாக அமைகையில் அதன் இரண்டாம் எழுத்தை இரட்டிக்கப்படும் (நூன்–பே-பே) அல்லது மூன்றாம் எழுத்தாக அலிஃப் இடப்படும் (நூன்–பே-அலிஃப்).

நூன்–பே-அலிஃப் என்னும் வேர்ச்சொற்கள் நபஅ என்னும் சொல்லினைத் தருகின்றன. அதற்குரிய அர்த்தங்களில் ஒன்று ’உயர்வு’ என்பதாகும். இன்னொரு அர்த்தம் ”நுபுவ்வத்” (இறைத் தூதுத்துவம்) என்பதாகும். நப-அ என்பதில் மூன்றாம் எழுத்தை மெய்யெழுத்தாக நிறுத்தி உச்சரித்தால் (நபஃ) அதன் பொருள் (இறைச்) செய்திகள், அறிவிப்புக்கள் (News, Tidings) என்பதாகும். இவை அனைத்தின் ரகசியமும் நான் என்னும் தன்னுணர்வில் – ”அனா”வில் அடங்கியுள்ளது.

‘நான்’ என்னும் தன்னுணர்வை இறைவன் முதன் முதலில் தனது முதற்படைப்பான முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு, அதாவது நபிக்கு அருளினான். இறைவனுடைய தன்னுணர்வைப் பிரதிபலிக்கும் முதல் கண்ணாடியாக நபிதான் இருந்தார்கள், இருக்கின்றார்கள். கண்ணாடியில் பிம்பம் புரண்டுதான் விழுந்திருக்கும். (நாம் வலது கையைத் தூக்கினால் அது இடது கையைத் தூக்குவதாகத் தெரியும்). “அனா கோ பல்டோ” – அனாவைப் புரட்டு என்று பீர் கவ்ஸி ஷாஹ் (ரஹ்) அவர்கள் சொன்னதை நினைவு கூர்க. ”இறைவனுக்கு நீ கண்ணாடி ஆகிவிடு” என்றும் அதற்குப் பொருள் கூறலாம். ANA என்பது புரட்டப்பட்டபோதும், பிம்பமாக விழுந்த போதும், ANA-வாகவே காட்சி அளிக்கிறது. நபியிலிருந்தே பிற உயிரினங்கள் அனைத்திற்கும் அனா என்னும் சுயாதீனம் கிடைத்திருக்கிறது.

எனவே, தன்னை அறிந்தவன்தான் நபியை அறிவான், நபியை அறிந்தவன்தான் இறைவனை அறிவான். அல்லாஹ், நபி, ஆதம் (மனிதன்) என்று மூன்று ’நான்’கள் இருப்பதாகத் ’தெரிகிறது’. ஆனால் எதார்த்தத்தில் ஒரே ’நான்’தான் இருக்கிறது. அது இறைவனின் பூர்வீகமான ’நான்’ மட்டுமே. “பல விடயங்கள் மூன்றாகத் தோற்றம் அளிக்கின்றன; ஆனால் எதார்த்தத்தில் ஒன்று மட்டுமே உள்ளது” என்கிறார் ஷைஃகுல் அக்பர் இப்னுல் அரபி (ரஹ்).

நப-அ என்று எழுதினால் அதில் முதலிரு எழுத்துக்களான நூன்-பே என்பது நபியைக் குறிக்கிறது. மூன்றாம் எழுத்தான அலிஃப் அல்லாஹ்வைக் குறிக்கிறது. நபியில் அல்லாஹ் ”ஐனாக” (பொருத்தமாக) இருப்பதை இது காட்டுகிறது இது ஐனிய்யத் எனப்படும். (நபி(ஸல்) அவர்கள் முதற் படைப்பாக இருந்தாலும் படைப்பு என்னும் அடிப்படையில் அவர்களது சுயமும் ”ஜாத்தே அதம்”-தான். அவ்வகையில் நபி(ஸல்) அவர்கள் உட்பட அனைத்துப் படைப்பும் இறைவனுக்கு ”வேறானது” (கைர் – ghayr) என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது கைரிய்யத் (ghairiyyath) எனப்படும்.

”மெய்யறிவு என்னும் வானில் பறக்க
ஐனிய்யத் கைரிய்யத் என்னும்
இரண்டு சிறகுகள் வேண்டும்”
(“மஃரிஃபத் கீ ஹவா மே(ன்) உட்னே கோ /
ஐனிய்யத் கைரிய்யத் தோ பர் ஹோனா”)
என்று பாடினார்கள் சூஃபி ஞானி ஷாஹ் கமால் (ரஹ்).

அந்த நப-அ என்பதுதான் தன்னில் ’அனா’-வாக இருக்கிறது என்பதை அறிபவனே தன்னை அறிகிறான். அதாவது, அல்லாஹ்வும் நபியும் தன்னில் இருக்கிறார்கள் என்பதை அறிகிறான். இந்த மெய்யறிவு நெறியில் அல்லாஹ்வின் பேரருள் நம் அனைவரையும் செலுத்தி உய்விக்கட்டும்.