Monday, September 30, 2013

ரூமியின் வைரங்கள் - part 7


வைகறையின் மென்காற்று
வைத்திருக்கின்றது
உன்னிடம் சொல்ல ரகசியங்கள்
மீண்டும் உறங்கச் செல்லாதே

உண்மையில் நீ ஆசைப்படுவதை
கேட்க வேண்டிய தருணம் இது
மீண்டும் உறங்கச் செல்லாதே

இகமும் பரமும் தொட்டுக்கொள்ளும்
கதவின் விளிம்பருகே
முன்னும் பின்னும் அசைகிறார்கள் எல்லோரும்
மீண்டும் உறங்கச் செல்லாதே

அகலத் திறந்துள்ளது கதவு
மீண்டும் உறங்கச் செல்லாதே


வசதிகளை விட்டு ஓடிவிடு
பாதுகாவல் மற
எங்கிருக்க அஞ்சுவாயோ
அங்கே இரு
நற்பெயரை நசி
வசைப்பெயர் வாங்கு!காதலைத் தேடுவதல்ல உன் வேலை
அதற்கெதிராய்
உன்னுள் நீயே எழுப்பியிருக்கும்
தடைகளை எல்லாம் கண்டுபிடி


காதல் இது:
ரகசிய வானம் நோக்கிப்
பறந்து போ

ஒவ்வொரு கணமும்
நூறு திரைகளை
அப்பால் விழுந்திடச் செய்

போகும்படி விட்டுவிடு
வாழ்வை முதலில்

இறுதியில், காலடி எடுத்துவை
பாதம் இல்லாமல்


ஒளி நிழல் இரண்டுமே
காதலின் நடனம்தான்

காதலுக்குக் காரணமில்லை
தெய்வீகத்தை அளக்கும் கருவி அது

காதலனும் காதலும்
பிரிவற்ற நிரந்தரம்

காதலை விவரிக்க எவ்வளவு முயன்றாலும்
அதன் அனுபவத்தில் மௌனமாகிப் போகிறேன்

என் எழுதுகோல் உடைகின்றது
நழுவி விழுகிறது தாள்

காதலன் காதலி காதல்
ஒன்றென்று ஆன அந்த இடத்தில்

ஒவ்வொரு கணமும் பிரகாசிக்கின்றது
காதலின் ஒளியில்சிறுகச் சிறுகக் குறைத்துவிடு
மனதிற்கு நீ புகட்டும் இச்சைகளை
திறக்கத் தொடங்கும்
உன் ஆன்மாவின் கண்


மௌலானாவின் ஏழு அறிவுரைகள்
1.தாராளத்திலும் பிறருக்கு உதவுவதிலும் நதியைப் போல் இரு.
2.கருணையிலும் இரக்கத்திலும் சூரியனைப் போல் இரு.
3.பிறரின் குறைகளை மறைப்பதில் இரவைப் போல் இரு.
4.கோபத்திலும் சீற்றத்திலும் பிணத்தைப் போல் இரு.
5.பணிவிலும் அடக்கத்திலும் பூமியைப் போல் இரு
6.தாங்கிக்கொள்வதில் கடலினைப் போல் இரு.
7.என்னவாக இருக்கிறாயோ அதுவாகவே தோன்று அல்லது எப்படித் தோன்றுகிறாயோ அதுவாகவே இரு.
ரூமியின் வைரங்கள் - part 6


ஒவ்வொரு தேய்ப்பிற்கும்
எரிச்சல் அடைகிறாய் எனில்
எப்படி மெருகேறுவாய் நீ?


உண்மையின் பூ
முகை அவிழ்கிறது
முகத்தில்


ஒருபோதும் நம்பிக்கை இழக்காதே
என்னருமை இதயமே!
உன் பார்வைக்கு அப்பால்
மறைந்துள்ளன
அதிசயங்கள் ஆயிரம்!


உன் முன்னே விரிகின்ற
கதைகளைக் கொண்டு
களித்திருக்காதே
உனது தொன்மத்தின்
உட்பொருளைத் திற!


எண்ணங்களைக் கடந்து பார்
இக்கணத்தின் இன்பத்தேன்
அருந்துவாய் நீ


உன் ஒளியில் கற்கிறேன்
காதலிக்கும் கலை

உன் அழகில் கற்கிறேன்
கவிதைகள் எழுத

யாருமே உன்னைப் பார்க்காத
என் நெஞ்சினுள் ஆடுகிறாய் நீ

சில நேரம் பார்க்கிறேன் நான்
அந்தப் பார்வைதான்
இந்தக் கவிதை ஆகிறதுஇவ்வளவு மனத்துயர் ஏன்?
இவ்வளவு வேதனை ஏன்?
எக்கச்சக்க எண்ணங்களில்
சிக்கியுள்ளார்கள் எல்லோரும்


தட்டிக்கொண்டே இரு
உள்ளிருக்கும் ஆனந்தம்
ஜன்னல் திறந்து
மெதுவாய் எட்டிப் பார்க்கும்
வெளியே யாரது? என்று


பொறுமையின் செவிகளால் கேள்
கருணையின் கண்களால் பார்
காதலின் மொழியால் பேசு

எங்கு நீ நின்றாலும்
அவ்விடத்தின்
ஆன்மா ஆகு


எனது முதற் காதலின் கதையை
நான் கேட்ட நிமிடத்திலிருந்து
உன்னைத் தேடத் தொடங்கினேன்
அதுதான்
எத்தனைக் குருட்டுத்தனம்
என்பதறியாமல்

காதலர்கள்
முடிவில் எங்கோ சந்தித்துக் கொள்வதில்லை
நெடுகிலும்
இருக்கின்றார்கள் ஒருவரில் ஒருவர்


நன்மை தீமை எனும்
நினைவுகளுக்கு அப்பால்
உள்ளது ஒரு வெளி

உன்னை
அங்கே சந்திக்கிறேன்

அந்தப் புல்வெளியில்
ஆன்மா அமர்கையில்
உலகம் பற்றிப் பேச
ஏதுமின்றிப் போகிறது

மொழி, கருத்துக்கள்,
’ஒருவருக்கொருவர்’ என்பதும் கூட
அர்த்தப் படுவதில்லை அங்கே


கவலைப்படாதே!
நீ இழக்கும் எதுவும்
வேறொரு வடிவில்
வந்து சேர்கிறது உன்னை


உண்மையில் நீ நேசிப்பதன்
ஆழ்ந்த ஈர்ப்பில்
சப்தமின்றி உன் ஆன்மா
இழுக்கப்படுவதை உணர்

வழிகெடுக்காது உன்னை
ஒருபோதும் அது


ரூமியின் வைரங்கள் - part 5


வார்த்தைகளை
நிறுத்தி வை இப்போது

நெஞ்சின் நடுவில்
ஜன்னலைத் திற

உள்ளும் வெளியும்
உயிர்கள் பறந்து திரியட்டும்


ஏமாற்றத்தின் பிறகு
பல நம்பிக்கைகள் செழிக்கின்றன

இருளுக்குப் பின்
ஆயிரம் சூரியன்கள்
திறந்துகொண்டு பிரகாசிப்பது போல்

ஆளவும் மாற்றவும்
வந்துள்ளது காதல்

விழித்திரு, என் நெஞ்சே!
விழித்திரு! 


காயம்தான்
ஒளி உன்னுள்
நுழையும் வாசல்


மரிக்கின்ற ரோஜா
தன்னைத் திறந்து வீழ்கிறது
நறுமணம் தூவி

ஒவ்வொரு வீட்டிற்கும்
சாளரம் ஆவாய் நீ

ஒவ்வொரு களத்திலும்
ரோஜாத் தோட்டம்
ஆவாய் நீயே!


எத்தனை நிம்மதி
வெறுமையாய் இருத்தல்!
பிறகு
இறைவன் வாழலாம்
உன் வாழ்வை!


வார்த்தைகளைப் பயன்படுத்தாத
குரலொன்று உள்ளது,
செவி கொடு!


இங்கே அங்கே
இனம் தேசம் மதம்
புறப்படுமிடம் சேருமிடம்...
அபத்தமான பிரிவுகளை மறந்துவிடு
நீ ஆன்மா!
நீ காதல்!
ஜின் அல்ல, வானவர் அல்ல
மனிதனும் அல்ல நீ


தந்திரக்காரனாய் இருந்தேன் நேற்று
உலகை மாற்றிவிட நினைத்தேன் 
பக்குவப் பட்டுள்ளது அறிவு இன்று
என்னை மாற்றிக் கொண்டிருக்கிறேன்


பற்றியிருத்தல்
விட்டு விடுதல்
இரண்டிற்கும் இடையில்
சமநிலை கொள்வதே
வாழ்க்கை


இதயத்தில் இருந்து மட்டுமே
விண்ணைத் தொடமுடியும் நீ


மறவாதே!
புனிதத் தலத்தின் வாசல்
உன்னுள்தான் உள்ளதுசுடரேற்றப் படுவதற்குக்
காத்திருக்கிறது உன்னுள்
மெழுகுவத்தி ஒன்று

நிரப்பப்படுவதற்கு ஆயத்தமாய்
உன் ஆன்மாவில் உள்ளதொரு வெறுமை

இதை நீ உணர்கிறாய்

இல்லையா?


அரை மூச்சின் அளவே
சுருக்கமான இவ்வாழ்வில்
காதலைத் தவிர
வேறெதையும் விதைக்காதே!Sunday, September 29, 2013

ரூமியின் வைரங்கள் - part 4


நிற்சலனம் ஆகட்டும்
உன் நீர்
நிலாவும் விண்மீன்களும்
பிரதிபலிக்கக் காண்பாய்
உன்னில்


உலகிற்கு அப்பால்
உள்ள ரகசியங்கள்
யாதென்று அறிய
இவ்வுலகில் பிறந்திருக்கும் ஒரு
விருந்தினன் மட்டுமே நான்


விடையைத் தேடு
உன் வினாவின்
உள்ளேபுலனுலகம் தருவது மட்டும்
போதும் உனக்கென்றால்
நீயொரு தொழிலாளி

மறைவுலகம் வேண்டுகிறாய் எனில்
உன் ஆசையில் நீ
உண்மையாய் இல்லை

இவ்விரண்டு ஆசைகளும்
அபத்தமானவை நண்பா!

உண்மையில் உன் சுயம் வேண்டுவதெல்லாம்
காதலின் பித்தேற்றும் இன்பமே

என்பதை
மறந்துவிட்ட உன் பாவம்

மன்னிக்கப்படும் போ


கப்பலேறிப் புறப்பட்டுவிடு

எவருக்கும் நிச்சயமாய்த் தெரியாது
மூழ்கிவிடுமா அல்லது
துறைமுகம் சேருமா என்று

ஜாக்கிரதையான மனிதர்கள் சொல்வார்கள்:
‘நிச்சயமாய்த் தெரியாதவரை
எதுவும் செய்யப்போவதில்லை நான்’

வணிகர்கள் அறிவார்கள் இன்னும் நன்றாய்
எதுவும் நீ செய்யவில்லை எனில் நஷ்டம்தான்

கடலின் சவாலினை ஏற்காத
வணிகர்களில் ஒருவனாய் இருக்காதே நீ


இப்படியும் இருக்கக்கூடும்
இனியவனே!
கிளைகளில் தேடிக் கொண்டிருக்கிறாய்
வேர்களில் மட்டுமே
வெளிப்படும் ஒன்றை


காதலின் வெள்ளம் ஒன்று
உன்னை நோக்கிப் பாய்கிறது
ஒவ்வொரு கணமும் நெருங்கியபடி

நிம்மதி பெறு

அதுவே நம் முடிவு
தெரியுமா?

மகிழ்ச்சியில் மரணம்
மதம் கொண்ட இணைவு


மரித்திருந்தேன்
பின்பு உயிர்த்தெழுந்தேன்

அழுகை
பிறகு சிரிப்பு

காதலின் சக்தி என்னுள் வந்தது
அரிமா அன்ன வீரம் தந்தது

பின்பு
மென்மை ஆனேன்
மாலை வானின்
விண்மீன் போல


இந்தக் காதல்தான்
இணைத்துள்ளது ஒன்றாய்
அனைத்தையும்

அதுவேதான்
அனைத்தும் கூட!சுவர் மீது விழுந்தது
சூரிய ஒளி
சுவர் அடைந்தது
இரவல் பிரகாசம்

அப்பாவியே!
மண்ணாங்கட்டியிடம் ஏன்
மனதைப் பறிகொடுக்கிறாய்?

நித்தியமாய் ஒளிவீசும்

மூலத்தைத் தேடுகற்பனையில் எட்டாது
கற்பனைக்கு ஒருபோதும்
என்ன தருகிறாய்
எனக்கு நீ என்பது  


சிறுபிள்ளை போல்
சிணுங்குவதை நிறுத்து

பரவசத்தில் இயங்கும்
பிரபஞ்சம் நீ!


துயரமே எனது
ஆனந்தப் பொழுது

போதை கொண்ட என் மனதின்
சிதலங்களில் இருந்து
முழுமையாய் ஒரு நகரம்
எழுந்து வரும் போது

பூமியைப் போல் நான்
மௌனமாய் அசைவற்று இருக்கும்போது
என் கர்ஜனையின் முழக்கம் கேட்கிறது

பிரபஞ்ச வெளி எங்கும்


ஒளியை விட்டுப்
பிரியும் நிழலை
யாரேனும் பார்த்ததுண்டா?


நின் தந்திரம் விற்றுப்
பேரின்பம் வாங்கு


ஒவ்வொரு கணத்திலும் உள்ளது
இறைவனிடம் இருந்து
சேதிகள் நூறு

’இறைவா!’ என்னும்
ஒவ்வொரு கேவலுக்கும்
பதில் சொல்கிறான்
நூறு முறை:
‘இதோ இருக்கின்றேன்’


ஒரு பயணியாய் ஆவாயோ
காதலின் பாதையில் நீ?
முதல் நிபந்தனை கேள்:
புழுதி போல் சாம்பல் போல்
பணிவு கொள்ள வேண்டும் நீ


வைகறை வெளிச்சமிடும்போது
மெழுகுவத்தியை அணைத்துவிடு
இதோ உன் கண்களில்
வைகறை இப்போது!


இன்னமும் அறியாயோ நீ?
உன்னொளிதான்
உலகை
வெளிச்சமாக்குகிறது