Wednesday, September 11, 2013

கவிதைச் சதுரங்கம்


”எட்டாத உயரத்தில்
நிலவை வைத்தவன் யாரு?
கையோடு சிக்காமல்
காற்றை வைத்தவன் யாரு?
இதை எண்ணி எண்ணி
இயற்கையை வியக்கிறேன்”

வைரமுத்து எழுதிய பாடலொன்றில் வரும் இந்த வரிகளைப் பலமுறை வகுப்புக்களில் சொல்லிக் காட்டி மாணவர்களிடம் கருத்துக் கேட்டிருக்கிறேன். “இயற்கையைப் பற்றிக் கவிஞர் அற்புதமாகப் பாடியிருக்கிறார்” என்றுதான் எல்லோரும் சொக்கிப் போய் சொல்வார்கள்.

“இல்லை. இந்தக் கவிதையை நான் எழுதியிருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டேன். வைரமுத்து நாத்திகர் (முல்ஹித்). எனவே ’இயற்கையை வியக்கிறேன்’ என்று எழுதியிருக்கிறார். நான் ஏகத்துவன் (முவஹ்ஹித்). எனவே நான் எழுதியிருந்தால் ‘இதை எண்ணி எண்ணி இறைவனை வியக்கிறேன்’ என்று எழுதியிருப்பேன்” – கவிதைச் சதுரங்கத்தில் நான் நகர்த்துவது குதிரையா? ராணியா? ராஜாவா? என்று கவனிப்பார்கள் மாணவர்கள்.

“இறைவன் மனிதனுக்குத் தந்துள்ள படித்தரம் மிக உயர்வானது. நிலவை எட்டிப் பிடித்து அதில் காலடி பதித்துவிட்டான் மனிதன். காற்றைச் சிக்க வைத்து அதில் சிக்கெடுத்து ஆக்ஸிஜனை சிலிண்டருக்குள் அடைத்துவிட்டான் மனிதன். அந்த ஆக்ஸிஜன் சிலிண்டரை மாட்டிக் கொண்டுதானே காற்றில்லாத நிலவில் உலவி வந்தான்! எனவே மனிதன் இப்படிப் பாடலாம்:

எட்டாத நிலவினிலே
என்னை நடக்க வைத்தான்
சிக்காத காற்றினையும்
சிமிழில் அடைக்க வைத்தான்
இதை எண்ணி எண்ணி
இறைவனை வியக்கிறேன்”

அதே மெட்டில் என் இதயத்தின் வரிகள் இழையோடும்.

இப்படிக் கவிதைச் சதுரங்கம் ஆடுவது கவியுலகில் ஒன்றும் புதிதல்ல. எசப்பாட்டுக்கு எதிர்ப்பாட்டுப் பாடுவது எப்போதுமே வசப்பாட்டாய் இருக்க வேண்டும் என்பது நியதி அல்ல. அதில் சில நேரங்களில் அற்புதமான தரிசனங்கள் வசப்பட்டு வரலாம். உருதுக் கவியுலகில் இருந்து உதாரணம் ஒன்று தருகிறேன். அது ஐந்து பேர் விளையாடிய சதுரங்கம்!

இந்தக் கவிதைச் சதுரங்கத்தைத் தொடங்கி வைத்தவர் உருதுக் கவியுலகின் சிகரங்களில் ஒருவரான மீர்ஸா காலிப். அவர் ஆத்திகர்தான் ஆனால் மதவாதி அல்ல. பழக்கத்திலோ அவர் ஒரு மதுவாதி. அதில் மிதவாதி அல்ல! ‘மிதப்பில்’ அவர் ஒரு தத்துவக் கவிதை சொல்கிறார்:

“மஸ்ஜிதில் அமர்ந்து கொண்டு
மது அருந்த விடு
இல்லையேல் சொல் எனக்கு
இறைவன் இல்லாத இடம் எது?”
(ஷராப் பீனே தே மஸ்ஜித் மேன் பேட் கர்
யா ஓ ஜகா பதா ஜஹான் ஃகுதா நஹீன்)

இந்தக் கவிதைக்கு மகாகவி இக்பால் இப்படி பதில் சொல்கிறார்:

“மஸ்ஜித் இறைவனின் இல்லம்
குடிக்கும் இடம் அல்ல அது
நிராகரிப்பாளனின் இதயத்திற்குள் போ
அங்கே இறைவன் இல்லை”
(மஸ்ஜித் ஃகுதா கா கர் ஹே பீனே கீ ஜகா நஹீன்
காஃபிர் கெ தில் மேன் ஜா வஹான் ஃகுதா நஹீன்)

இக்பாலின் இந்தக் கவிதைக்குப் பதில் சொல்ல இன்னொரு கவிஞர் வந்தார். அவரும் காலிபைப் போலவே ஒரு மதுவாதிதான். அஹ்மத் ஃபராஸ் சொல்கிறார்:

”நிராகரிப்பாளனின் இதயத்திலிருந்து வருகின்றேன்
நான் இதைப் பார்த்துவிட்டு
அங்கும் இருக்கிறான் இறைவன்
ஆனால் அவனுக்கது தெரியவில்லை”
(காஃபிர் கெ தில் சே ஆயா ஹூன் மெய்ன் யெ தேக் கர்
ஃகுதா மவ்ஜூத் ஹே வஹான் பர் உஸே பதா நஹீன்)

ஃபராஸைத் தொடர்ந்து வந்தார் ஒரு கவிஞர்: வஸீ ஷாஹ். அவர் சொல்லும் கவிதை இக்பாலின் குரல் போல் ஒலிக்கின்றது:

“உலகில் ஒவ்வொரு இடத்திலும்
இருக்கத்தான் செய்கிறான் இறைவன்
நீ சொர்க்கத்திற்குச் செல் அங்கே
மது அருந்தத் தடை இல்லை”
(ஃகுதா தொ மவ்ஜூத் துன்யா மேன் ஹர் ஜகா
தூ ஜன்னத் மேன் ஜா வஹான் பீனா மனஃ நஹீன்)

இது முத்தாய்ப்பாக இருக்கிறதே. ஆட்டத்தை முடித்துவிடலாமே என்று நினைக்கும் போது அதிரடியாக அடுத்த கவிதையுடன் ஆஜர் ஆகிவிட்டார் சாகீ. அவர் சொல்கிறார்:

“உலகின் துன்பங்களை மறப்பதற்காகவே
மது அருந்துகின்றேன் சாகீ!
சொர்க்கத்தில் எவ்வகையான துன்பம் உள்ளது?
அங்கே அருந்துவதில் ஏதும் இன்பம் இல்லை!”
(பீதா ஹூன் கமே துன்யா புலானே கே லியே சாகீ
ஜன்னத் மேன் கோன்ஸா கம் ஹே வஹான் பீனே மேன் மஸா நஹீன்)

கவிதைச் சதுரங்கத்தில் இது ஒரு ’செக்மேட்’ நகர்வு என்றே சொல்ல வேண்டும். இந்த சாகீ என்பவர் மதுவாதிகளின் சார்பில் தெளிவான ஒரு வாதத்தை வைத்திருக்கிறார். அதற்கு அடியேன் பதில் கூற எத்தனிக்கிறேன்.

இதயம் எனது கோப்பை.
இறையொளி எனது மது.
ஞானம் எனது போதை.
இறைக் காதல் எனது பாதை.

மௌலானா ரூமி (ரஹ்) அவர்களின் சூஃபி நிலை பற்றி சுல்தான் வலத் சொன்னார், “அவர் அருந்தியது திராட்சை-மது அல்ல. இறைவனின் ஒளி-மது. அதனைக் கொண்டே அவரின் ஞான போதை அமைந்திருந்தது. சூஃபிகளின் மது அதுவே”

ஒளி மதுவே எனது பழ-மது (ஷராபெ கதீம்).

இதோ சதுரங்கத்தில் என் நகர்வுக் கவிதை:

”வேண்டாம் என்று நீ சொன்னால்
வேண்டாம் மது எனக்கு.
துன்பமே நீ தரும் கோப்பை எனில்
வேண்டும் அது எனக்கு.
நீயே எனக்கு எல்லாம்
இங்காகட்டும் அங்காகட்டும்,
மதுவாவது கோப்பையாவது
தேவை வேறு எது எனக்கு?”






3 comments:

  1. Masha Allah..! Mahaa arputhamaa irukku, unga kavithaiyai urdu vil vaasikka aasaiyaa irukke, moli peyarppu kidaikkumaa?

    ReplyDelete
  2. எட்டும் வரை
    எட்டாத இடமுண்டு
    கையுள் சிக்காதவரை
    கைக்குள் அடைபடவில்லை

    அப்புறம்
    அதே கவி சொன்னான்
    கவிதைக்கு பொய்யழகு

    ReplyDelete
  3. அற்புதம், அசத்தல்... சூபியிஸ போதையில் சொக்கி நின்றேன்.

    ReplyDelete