அற்றைத்
திங்கள்
அவ்வெண்ணிலவில்
முற்றத்தில்
இருந்தார்
முஹம்மது
’என்னைக்
கண்டோர்
இறைவனைக்
கண்டார்’
என்னும்
ரகசியக்
கணம் அது
அகிலங்களின்
அருட்கொடை
அருகில்
அமர்ந்திருந்தார்
அனஸ்.
ஒரு கணம்
மதியை
மறு கணம்
நபியை
ஒப்பிட்டது
அவர் மனஸ்.
’நபியின்
அழகு
நித்தியம்
சத்தியம்
நிலவின்
அழகோ
நிழலழகு
மட்டும்
அஃது
எங்ஙனம்
அசல்
அழகை எட்டும்?’
தோழரின்
உள்ளத்தில்
தெளிந்தது
ஞானம்
அகவிழி
திறந்து
காணக்
காண
அண்ணலின்
அழகில்
ஒளிர்ந்தது
ஞாலம்
சூரியனின்
கண்ணாடி
இரு துண்டானது
சூரியனின்
சூரியன்
சுட்டியபோது
சூரியனும்
என்ன?
நபியின்
ஒளியில்
சுடரும் பனித்துளி!
வெளிப்பாட்டின்
சுடர்களைத்
தாளாது
வெடித்திடும்
மலையோ
வாழ்வின்
பரவசம் கண்டது
புனித
வேதம்
மனித
வடிவில்
நடந்தபோது
பரம்பொருள்
தந்த
பிரகாச
விளக்கு
பிலிற்றும்
வெளிச்சத்தில்
பிறங்குகின்றது
பிரபஞ்சம்
இல்லா
உவமையால்
அல்லாஹ்
வருணித்த
மாடவிளக்கில்
மனம்
லயிப்பதே
வீடுபேற்றின் வசந்தம்!
விண்ணிலும்
மண்ணிலும்
இறைவனின்
உவமைக்கு
உவமை
ஏதுமில்லை
என்பதில்
ஒளியின்
மேல் ஒளியை
ஓர்ந்திரு
பார்வை
அடையும்
பரவச
ஞானத்தில்
அனஸுடன்
நீயும்
சேர்ந்திரு
‘உமக்காக
உயர்த்தினோம்
உம் நினைவை’
என்பதன்
உட்பொருளை
உயிரில் திறந்திடு.
முத்திரை
ஆன
முஹம்மத்
படைப்புத்தான்
எனினும்
படைப்புக்களின்
மூலம்!
படைத்தவனின் அத்தாட்சி!
அல்லாஹ்வை
அன்றி
இறைவன்
இல்லை – இது
அல்லாஹ்வின்
புகழ்.
முஹம்மத்
இறைவனல்ல – இது
முஹம்மதின்
புகழ்!
Arumai... Viyakkiren....
ReplyDelete