Tuesday, January 10, 2023

அங்கதன் ஜுஹா

 (அறபு நாட்டு மரபுக் கதை )

[ஜுஹாவின் பாத்திரம் இங்கே பொதுவான எளிய சமூகப் பகடிக்கு மட்டுமன்றி உயர் பதவிகளில் இருந்த குறிப்பிட்ட வரலாற்று ஆளுமைகளையும் பகடி செய்ய வழி கோலுகிறது.]

ஒருநாள், தைமூர்லங்1 தனது நகர ஆளுநர் நிதியில் இருந்து பெருந் தொகைகளைக் கையாடல் பண்ணி விட்டார் என்று அபாண்டமாக ஊழல் குற்றம் சுமத்தி அவரின் உடைமைகளை எல்லாம் ஜப்தி செய்ய உத்தரவிட்டான். உண்மை என்னவென்றால், அந்த ஆண்டு வானம் பொய்த்துப் போனது. மழையே பெய்யவில்லை. போதாத குறையாக புயல் வேறு வீசியது. இதனால் பயிர் பச்சைகளும் பழங்களும் பாதிக்கப்பட்டுப் பாழாகிவிட்டன. முந்தைய ஆண்டின் விளைச்சல் அமோகமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு பூமி தந்த விளைச்சலை வைத்து மக்கள் உயிர் வாழ முடியுமா என்பதே கேள்விக்குறியாகிவிட்டது. ஆளுநர் தன்னால் முடிந்த எல்லா நடவடிக்கைகளையும் செய்தார். தன் அதிகாரத்தைக் கொண்டு மக்களின் சேகரத்தில் இருந்து எவ்வளவு அதிகமாகத் திரட்ட முடியுமோ அவ்வளவு வாங்கியிருந்தார்.



ஆளுநர் தன் கணக்குப் பதிவேடுகளை நாளது வரையில் முறையாகக் கொண்டு வந்து வைத்தார் – அதையெல்லாம் தைமூர்லங் கிழித்து வீசுவதை மட்டுமே அவர் பார்க்க முடிந்தது. அப்புறம் அவன் தன் சிப்பாய்களுக்கு ஆணையிட்டு அவருக்குச் சவுக்கடி கொடுத்தான். அப்புறம், அவர் அந்த கிழிந்த தாள்களைத் தின்னும்படிச் செய்தான். அதன் பின், ஆளுநரின் சொத்துக்களை எல்லாம் தைமூர்லங் பறிமுதல் செய்தான். அவரை வெறுங்கையராக விட்டுவிட்டான்.

அப்புறம் அவன் ஜுஹாவை வரவழைத்தான். அவர் மிகவும் நேர்மையானவர் என்று பெயர் வாங்கியிருந்தார். எனவே, நகரக் கருவூலத்தின் மேற்பார்வையாளர் பதவியை அவருக்கு வழங்கினான். அந்த அப்பாவிக் கிழவன் எப்படியாவது அந்தப் பதவியில் சிக்காமல் தப்பிக்க வேண்டும் என்று சாக்குப் போக்குகள் சொன்னார். “ஐயா எனக்கு ஒடம்புக்கு ரொம்ப முடியலீங்க… நித்திய கண்டம் பூரண ஆயுசுன்னு ஓடிக்கிட்டிருக்கு. கண்ணுஞ் சரியாத் தெரிய மாட்டேங்குது, காதும் கேக்கல. நரம்புத் தளர்ச்சி… கையி கால்லாம் நடுங்குது.” ஒரு காரணமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

மாதக் கடைசியில், தைமூர்லங் கணக்குப் பதிவேடுகளைக் கொண்டு வரச் சொன்னான். ஜுஹா அவற்றை மெல்லிசான ரொட்டிகளில் எழுதியிருந்தார். அவர் கொண்டு வந்து காட்டுவது என்ன என்று அவரிடம் தைமூர்லங் கேட்டான்.

ஜுஹா சொன்னார்: “ஐயா! கடசீல இது எப்பிடி முடியும்னு எனக்குத் தெரியும். இதையெல்லாம் நான் திங்கனும்னு உத்தரவு போடுவீங்க. நான் வயசாளி. எனக்கு மின்னாடி இருந்தவன் மாட்டம் நான் ஒன்னும் பேரு பெத்த ஆளோ ஓங்குன கையோ இல்ல. உண்மையச் சொல்லணும்னா, இந்த ரொட்டியக் கூட என் வவுறு செமிக்கிறது கொஞ்சம் செரமந்தான்!”



ஒருநாள், தற்போதைய ஆளுநர்2  நகரத் தெருக்களைச் சோதித்தபடி வலம் வந்துகொண்டிருந்தான். அடுமனை ஒன்றிலிருந்து காற்றில் மிதந்து வந்த கதகதப்பான நறுமணம் அவன் மூக்கைத் துளைத்து நாக்கில் எச்சில் ஊற வைத்தது. அடுமனைக்காரனை உடனே அழைத்தான். சில நிமிடங்களில் வாய்த் தகராறு ஆகிவிட்டது. அதன் முடிவில், அடுமனையில் சுட்டுக் கொண்டிருந்த வாத்தை அடுமனைக்காரன் தன் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று ஆளுநர் ஆணையிட்டான். பறவைக்கு உடைமைக்காரன் வந்து கேட்டால் சுட்ட வாத்து பறந்து போய்விட்டது என்று சொல்லுமாறு கூறினான்.

”வாத்துக்காரன் ஒத்துக்கலன்னு வைய்யி, நேரா எங்கிட்ட வந்து சொல்லு. ஒங்க ரெண்டு பேத்துக்கிடையில நான் தீர்ப்புச் சொல்றேன். அவனெ நான் பாத்துக்குறேன், நீ கவலப் படாத.”

வேறு வழியின்றி அடுமனைக்காரன் ஆளுநரிடம் மடங்கிவிட்டான். சுட்ட வாத்தை அவரின் வீட்டுக்கு அனுப்பி வைத்தான். வாத்தின் உடைமைக்காரன் வந்து வாத்தைக் கேட்டபோது, அது பறந்து விட்டது என்று அடுமனைக்காரன் சொன்னான். வாத்துக்காரனுக்குக் கோபம் தலைக்கேறிவிட்டது. இருவருக்கும் காரசாரமான வாய்த் தகராறு. சுற்றி நின்ற மக்கள் வாத்துக்காரனையே ஆதரித்தனர். அடுமனைக்காரனைத் திருட்டுப்பயல் என்று திட்டினர். அவர்கள் தொடர்ந்து அவனை ஏசிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் அவன் வெறுத்துப் போய், அஞ்சி நடுங்கி, ஒரு கிறுக்கனைப் போல் ஓடிவிட்டான். ஓடும்போது அவன் கைக்கு எட்டிய முதல் மனிதனின் மூஞ்சியில் ஓங்கி ஒரு குத்துவிட்டதில் அந்த ஆளின் ஒரு பல் தெரித்து வெளியே விழுந்தது.

கும்பலின் மனநிலை தாறுமாறாகிவிட்டது. ஆனால், பேஜாரான அடுமனைக்காரன் ஒருவழியாகச் சமாளித்துக்கொண்டு பக்கத்துச் சந்து ஒன்றினுள் தாவி ஓடினான். குறுகலான அந்தச் சந்தில் தன் கணவனுடன் வரும் கர்ப்பினி ஒருத்தி எதிரில் அடைத்துக்கொண்டு நின்றாள். ஓடும் வேகத்தில் அடுமனைக்காரன் விட்ட உதையில் அவளின் கர்ப்பம் கலைந்துவிட்டது. கும்பலின் கோபம் உச்சத்தை அடைந்தது. அவர்கள் அவனைத் துரத்தினர். ஆனால் அவன் வில்லில் இருந்து விடுபட்ட கணை போல் கடுகி ஓடினான். அருகிலிருந்த ஒரு மஸ்ஜிதுக்குள் நுழைந்து அதன் ஸ்தூபியின் உச்சிக்கு ஏறிவிட்டான். 



கும்பல் இன்னமும் அவனை அரக்கப் பரக்கத் தேடிக் கொண்டிருந்தது. எனவே அவன் தன்னைத் தேடும் கும்பலில் இருந்த ஒருத்தன் மீது ஸ்தூபியின் உச்சியிலிருந்து குதித்தான். அந்த ஆள் அதே இடத்தில் செத்துப்போக அடுமனைக்காரன் பிழைத்துக்கொண்டான். கும்பலின் ஆத்திரம் எல்லை மீறியது. எனவே, அடுமனைக்காரன் ஒரு கசாப்புக்காரனின் கடைக்குள் பாய்ந்தான். அங்கே ஒரு கத்தியைக் கையில் எடுத்துக்கொண்டு பைத்தியம் போல் பாவனை காட்டினான்.

அங்கே அருகில் ஜுஹாவின் கழுதை நின்று கொண்டிருந்தது. அடுமனைக்காரன் ஆவேசமாகக் கசாப்புக் கத்தியை வீசியபோது அது அந்தக் கழுதையின் வாலை வெட்டிவிட்டது. அடுத்து அவன் ஆளுநர் கமீஷின் வீட்டுக்கு ஓடினான். கும்பலும் அவனைத் துரத்திக்கொண்டு ஓடியது. இறுதியாக, எல்லோரும் ஆளுநரின் முன்னால் நின்றனர்.

அடுமனைக்காரனைத் தனக்குத் தெரியவே தெரியாது என்பது போல் கமீஷும் தன் பங்குக்கு பாவனை செய்தான். முகத்தில் வியப்பைக் காட்டினான். அப்புறம், நடந்த கதையை முழுசாகக் கேட்டுவிட்டு, தான் அடுமனைக்காரனின் பேச்சை நம்புவதாக எல்லோரிடமும் கூறினாரன்: ”அழியில் வைத்துச் சுட்ட பின்னர் வாத்து பறந்துவிட்டது! இது இறைவன் எல்லாம் வல்லவன் என்பதைக் காட்டுகிறது! எல்லாப் புகழும் இறைவனுக்கே!” இதைக்கேட்டு வாத்துக்காரனுக்குக் கோபம் பொத்துக்கொண்டது. ஆனால் ஆளுநர் கமீஷ், அவனே ஊரின் நீதிபதியும் ஆதலால், வாத்துக்காரன் ஒரு மதத்துரோகி என்றும் இறைவனின் ஆற்றல் மீது நம்பிக்கை இல்லாதவன் என்றும் குற்றம் சாட்டி அதற்காக அவனுக்குப் பத்து தீனார்கள் அபராதம் விதித்த்தான்.

ஆளுநர் அடுத்து இரண்டாம் வாதியின் பக்கம் திரும்பினான். அவன் அடுமனைக்காரனின் மூஞ்சியில் ஒரு குத்து விடலாம் என்றும், சரியாக அதே பல்தான் உடைபட வேண்டும் என்றும், இதில் தவறும் பட்சத்தில் அவனுக்குத் தண்டனை கிடைக்கும் என்றும் சொன்னான். நீதிபதி ஓரவஞ்சனை பண்ணுகிறான் என்று தெரிந்து கொண்ட அந்த ஆள் வழக்கைத் திருப்பிக்கொண்டான். நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக அவருக்குப் பத்து தீனார்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

அடுத்து மூன்றாம் வாதியின் முறை. “செத்துப் போன ஒன் அண்ணென் மேலதாம்ப்பா தப்பு,” என்றான் கமீஷ். “இவுரு குதிக்கிற நேரம் பாத்து அவுரு ஏன் மினாராவுக்குக் கீழ நடந்தாரு? இருந்தாலும் நியாயம் தர்மம்னு ஒன்னு இருக்குல்ல? அத நான் நெறவேத்தித்தான் ஆவணும். நீ என்ன பண்ற, மினாரா உச்சிக்கு ஏறிப்போய் அங்கேருந்து இந்த அடுமனைக்காரன் மேல குதிச்சு, ஒன் அண்ணென இவென் கொன்ன மாதிரி நீயும் இவனெ கொன்னுடு.” நீதிபதியின் கோட்டித்தனம் தன் உயிரைக் காவு வாங்கிவிடும் என்றும் அவனிடம் நீதி கிடைப்பதற்கு வாய்ப்பே கிடையாது என்றும் உணர்ந்துகொண்ட அவன் தன் வழக்கைத் திருப்பிக்கொண்டான். நீதிமன்றத்தின் கட்டளையைச் செயல்படுத்த மறுத்ததற்காக அவனுக்குப் பத்து தீனார்கள் அபராதம் போடப்பட்டது.

இப்போது, கர்ப்பம் கலைந்த காரிகையின் முறை. ஒருவன் வேகமாக ஓடிவரும்போது அவ்வளவு குறுகலான சந்தில் அவள் வந்ததே தவறு என்று நீதிபதி அவளைக் கண்டித்தான். என்றாலும், தவறு உண்மையில் அவளின் கணவனிடம்தான் உள்ளது. அவன்தான் அப்படிப்பட்ட குறுகலான சந்தில் அவளைக் குடி வைத்திருக்கிறான். எது எப்படி இருந்தாலும் நீதிமன்றம் தன் கடமையைச் செய்தாக வேண்டும். எனவே ஆளுநரும் நீதிபதியுமான கமீஷ் சொன்னான்: “அவளோட கர்ப்பத்த எவன் கலைச்சானோ அதுக்குப் பிராயச்சித்தமா அவனே அவள கர்ப்பமாக்கித் தரணும்!” இதைக்கேட்டு கணவனும் மனைவியும் அதிர்ச்சியாகி நின்றனர். அவள் தன் வழக்கைத் திரும்பப் பெற்றாள். நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணாக்கியதால் அவளுக்குப் பத்து தீனார்கள் அபராதம் விதிக்கப்பட்டது.



ஈவு இரக்கமற்ற ஆளுநரின் தாறுமாறான தீர்ப்புகளைப் பார்த்த ஜுஹா தான் தப்பித்தால் போதும் என்பதை மட்டும் கவனித்துத் தன் கழுதையுடன் அங்கிருந்து பறந்துவிட்டார். ஆனால், அவர் தப்பிப்பதைப் பார்த்த ஆளுநர் கமீஷ் அவரைத் தடுத்து நிறுத்தினான். இறைவன் தன் கழுதையை வாலும் மூளையும் இல்லாததாகப் படைத்திருக்கிறான் என்று ஜுஹா கூவினார். அடுமனைக்காரனால் உசுப்பேற்றப்பட்ட ஆளுநர் இதை ஏற்க மறுத்தான். அவனிடம் விவாதித்துப் பயனில்லை என்பதை அறிந்த ஜுஹா ஆளுநரைப் பார்த்துச் சொன்னார்:

“ஆளுநர் ஐயா!  அது அப்படித்தான். இறைவன் என் கழுதைய வாலும் மூளையும் இல்லாத கழுதையாத்தான் படைச்சிருக்கான். நீங்க இறைவனோட வல்லமைய மறுக்குறீங்களா? அவென் ஆற்றல்ல ஒங்களுக்குச் சந்தேகமா இருக்கா? அவனால எல்லாம் முடியுங்கறத ஏத்துக்க ஒங்களுக்குச் சிரமமா இருக்கா?”

தனது தர்க்க வாதம் தன் மீதே தூக்கி வீசப்படுவதைப் பார்த்த ஆளுநர் வாயடைத்துப் போனான். அவனால் பதில் சொல்ல முடியவில்லை.

 

_________________________

1.கொடுங்கோலன் தைமூர்லங் (1336-1405)-உடன் ஜுஹா இருப்பது போன்று பல கதைகள் உள்ளன. அவற்றுள் இதுவும் ஒன்று.

2. இவன் பெயர் கமீஷ். அவன் காலத்தில் நீதியும் மற்றும் சட்ட ஒழுங்கின் சீரழிவுக்கான மனித வடிவமாகத் திகழ்ந்தான். ஆனால் அவன் தந்திரசாலி. கற்பூர புத்தி உள்ளவன். பேராசையும் பகைமையுமே அவனை இயக்கின. குறுக்கு வழிகளில் காரியம் சாதிப்பதிலும், உலகிலேயே மிக முட்டாளும் அசடனும் கூட கற்பனை செய்ய முடியாத சால்ஜாப்புகளைப் புனைவதில் இவனுக்குக் கிஞ்சிற்றும் நாணமோ தயக்கமோ இருந்ததில்லை.