Saturday, November 12, 2022

பனூ ச’அதின் புரோகிதி

 (இஸ்லாத்திற்கு முற்பட்ட அறபு நாட்டு மரபுக்கதை)


தனக்குப் பத்து ஆண் பிள்ளைகள் பிறந்து வளர்ந்து தன்னைச் சுற்றிலும்  ஆளாகி நிற்பதைக் காணும் பேறு பெற்றால் இறைவனுக்காக கஃ’பாவில் அவர்களில் ஒரு மகனை பலியிடுவதாக அப்துப் முத்தலிபு1 பிரதிக்ஞை செய்தார்.

            தனது மகன்கள் அனைவரும் பத்து வயதைக் கடந்த பிறகு அவர்களிடம் சொன்னார்: ”அருமை மக்களே! நான் ஒரு நேர்ச்ச செஞ்சுக்கிட்டது ஒங்க எல்லாருக்குந் தெரியும். நீங்க என்ன சொல்றீங்க?”

            ”ஒங்க இஷ்டம்ப்பா. நாங்க எல்லாரும் ஒங்க கையில,” என்று அவர்கள் பதில் சொல்லினர்.



            ”சரி. ஒவ்வொருத்தரும் ஒங்க அம்ப எடுத்து அதுல ஒங்க பேர எழுதிக் குடுங்க,” என்றார் அப்துல் முத்தலிபு.

            அவர்களும் சொன்னபடி எழுதிக் கொடுத்தனர். பின்னர் அப்துல் முத்தலிபு அம்பெறிந்து குறி சொல்லும் அகவனை வரவழைத்தார். அவனிடம் அம்புகளைக் கொடுத்து, “பாத்து மெதுவா போடுப்பா,” என்று சொன்னார். அவரின் மனம் கலங்கியிருந்தது.

            அப்துல்லாஹ் அவருக்கு மிகவும் பிரியமான மகன். அகவன் அம்புகளை வீசினான். அப்துல்லாஹ்வின் பெயரெழுதிய கணையே வந்தது. அப்துல் முத்தலிபு தன் நேர்ச்சையை நிறைவேற்ற சித்தமானார். நன்கு கூர் தீட்டப்பட்ட கத்தி ஒன்றை எடுத்துக் கொண்டு அப்துல்லாஹ்வையும் அழைத்து வந்து கஃ’பாவுக்கு அருகில் இருந்த, குறைஷியர் வழிபட்ட தெய்வங்களான இசஃப் மற்றும் நயீலா2 ஆகிய இரண்டு சிலைகளின் நடுவில் மைந்தனைச் சாய்த்தார். அவர் அப்துல்லாஹ்வை அறுக்க முனையும்போது இன்னொரு மகனான அபூ தாலிபு3 சட்டென்று குறுக்கே பாய்ந்து தன் தந்தையின் கையைப் பிடித்து நிறுத்தினான்.

            அப்துல்லாஹ்வின் தாய்மாமன்களான அபூ மஃக்ஸூம்கள் இதனைக் கேள்விப்பட்டபோது அவர்கள் அனைவரும் கடுங்கோபத்துடன் அப்துல் முத்தலிபிடம் வந்தனர்.

            ”மச்சான், எங்க மருமவன அறுக்குறதுக்கு நாங்க விடவே மாட்டோம். இம்புட்டுப் பயலுவ இருக்காணுங்கள்ல, அவனுங்கள்ல யார வேணாலும் போய் அறுத்துப் போடுங்க. எங்க மருமவன் மேல கத்தியோட நெழலு விழுந்தாலும் நடக்குறதே வேற…”

            ”நான் நேர்ந்துக்கிட்டேன். அதுபடி அப்துல்லாஹ்வோட பேருதான் வந்திருக்கு. அவன பலி கொடுத்துத்தான் ஆவணும்,” என்று அப்துல் முத்தலிபும் கத்தினார்.

            ”நடக்காது மச்சான். நாங்க உசிரோட இருக்குற வரய்க்கும் இது நடக்கவே நடக்காது! அவனக் காப்பாத்த எங்க சொத்து சொகம் உசிரு எல்லாத்தையும் எழக்கத் தயாரா இருக்கோம்.”

            அப்போது அங்கே குறைஷிக் குலத் தலைவர் வந்து அப்துல் முத்தலிபுடன் ஆலோசித்தார்:

            ”இப்பிடிக் கொடுமையான நேர்ச்ச பண்ணி வச்சிருக்கியேய்யா. ஒம் புள்ளைய அறுத்துப்புட்டு அப்புறம் நீ என்னன்னு நிம்மதியா வாழ முடியும்? பொறுமையா இரு. ச’அது கொலத்துக்கு ஒரு புரோகிதி இருக்காள்ல, அவளப் போயி பாப்போம். அவ என்னா சொல்றாளோ அப்படிச் செய்யி.”

            ”சரி, இதுக்கு நான் ஒத்துக்குறேன்,” என்றார் அப்துல் முத்தலிபு.

            எனவே அவர் பனூ மஃக்ஸூம்களுடன் அந்தப் புரோகிதியைப் பார்ப்பதற்காக திமிஷ்க் (டமஸ்கஸ்) பட்டினத்துக்குப் போனார். தன் மகனைப் பலி கொடுப்பதற்கான தனது நேர்ச்சையை அவர் சொன்னவுடன் அந்தப் புரோகிதி சன்னதத்துடன் கத்தினாள்: ”போங்க இங்கெ இருந்து இப்ப…” எனவே எல்லோரும் உடனே அங்கிருந்து நீங்கி விட்டனர்.



            மறு நாள் காலை திரும்பி வந்தனர். “ஒங்க கொலத்துல பலியாகுற ஒரு தலய்க்கு எம்புட்டுப் பணம்?” என்று அவள் கேட்டாள்.

            ”பத்து ஒட்டகம்,” என்றார்கள்.

            ”ஊருக்குப் போங்க. நேர்ச்ச பண்ணுன பையன முன்னாடி கொண்டு நிறுத்துங்க. அப்புறம் பத்து ஒட்டகத்த கொண்டு வாங்க. அப்புறம் அவன் பேர்லயும் அந்தப் பத்து ஒட்டகங்க பேர்லயும் அம்பு போட்டுப் பாருங்க. ஒட்டகத்தோட அம்பு வந்துச்சின்னா அதுகள பலி குடுங்க; ஒங்க பையனோட அம்பு வந்துச்சின்னா இன்னும் பத்து ஒட்டகங்கள சேத்து மறுக்காவும் அம்பு போட்டுப் பாருங்க. ஒட்டகத்தோட அம்பு வர்ற வரய்க்கும் பத்து பத்து ஒட்டகம் சேத்து மறுக்கா மறுக்கா அம்பு போட்டுப் பாக்கணும். எம்புட்டு ஒட்டகங்களுக்கு அம்பு வருதோ அதுதான் ஆண்டவன் பையனுக்குப் பகரமாக் கேக்குற தலப்பணம்.”

            அவள் சொன்னபடி குழு மக்காவுக்குத் திரும்பிற்று. அப்துல் முத்தலிபிடம் அவர்கள் சொல்லினர்:

            ”இபுறாஹீம்ட்ட இதுக்கு ஒரு நல்ல உதாரணம் இருக்குப் பாத்துக்க. அவரும் தன் மவன, அதான் இஸ்மாயில, பலி கொடுக்கப் பாத்தாரு. நீங்க இஸ்மாயிலோட வம்சத்துக்கு இப்பத் தலைவரா இருக்கீங்க. அதுனால ஒங்க மவனுக்குப் பகரமா எம்புட்டுப் பணம்னாலும் குடுத்துருங்க.”

            அடுத்த நாள் அதிகாலையில் அப்துல் முத்தலிபு தன் செல்ல மகன் அப்துல்லாஹ்வையும் பத்து ஒட்டகங்களையும் கொண்டு வந்து நிறுத்தினார். அப்புறம் அகவனை அழைத்துச் சொன்னார்: “யோவ் அகவா! நிதானமாப் போட்டுப் பாரு. அவசரப்படாத, என்ன?”



            அகவன் அம்புகளை வீசினான். அதிலிருந்து சாஸ்த்திரப்படி ஓர் அம்பினை எடுத்தான். பொறித்த நாமத்தை அறிகுவான் நோக்கினான். அதில் அப்துல்ல்லாஹ் என்னும் செம்மை சேர் நாமம் தன்னை கண்களின் தெரியக் கண்டான். “ஐயா, சின்ன எசமான் பேருதாங்க வந்திருக்கு…” என்று கலங்கிச் சொன்னான்.

            அப்துல் முத்தலிபு மேலும் பத்து ஒட்டகங்களை சேர்த்து இருபது ஆக்கினார். மீண்டும் பகழி எறிந்து பார்த்தபோது அப்துல்லாஹ்வின் பெயரே வந்தது. ஒட்டகங்கள் முப்பது ஆனது. அப்புறம் நாற்பது, ஐம்பது, அறுபது… ஒவ்வொரு முறையும் அப்துல்லாஹ்வின் பெயரே தேர்வானது. அப்படியாக நூறு ஒட்டகங்கள் ஆகிவிட்டது. அப்போது அம்பு எறிந்து பார்த்தபோது ஒட்டகங்களின் அம்பு வந்து சேர்ந்தது.


            
”அல்லாஹு அக்பர்!” (இறைவன் பெரியோன்) என்று அப்துல் முத்தலிபு முழங்கினார். குறைஷிக் குலத்தாரும் முழங்கினர். “ஒங்க ஆண்டவன் திருப்தி ஆயிட்டான். ஒங்க புள்ளையும் தப்பிச்சிட்டான்,” என்று அவரிடம் அவர்கள் கூறினர்.

            ”இல்ல, இல்ல,” என்று மறுத்தார் அப்துல் முத்தலிபு. “இத மூனு தடவ செஞ்சுப் பாக்கணும். அப்பத்தான் உறுதிப்படுத்த முடியும். அவசரப் படாதீங்க.”

            எனவே இரண்டாம் முறையும் அப்படிச் சோதிக்கப் பட்டபோது. ஒட்டக அம்பே வந்தது. மூன்றாம் முறையும் சோதித்துப் பார்த்தபோது வந்த அம்பு ஒட்டகத்தையே பலி கொடுக்கச் சொன்னது. எனவே அப்துல் முத்தலிபுக்கு இப்போது இறைவனின் ஏற்பு உறுதிப்பட்டது. தன் மகனை இறைவன் இரட்சித்துவிட்டான் என்று தெரிந்துகொண்டார்.

            அப்துல் முத்தலிபு தன்னிடம் இருந்த சிறந்த இனத்தைச் சேர்ந்த நூறு ஒட்டகங்களை அங்கே பலியிட்டார். பிறகு, அவற்றின் இறைச்சியை விரும்புவோர் எடுத்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்டு அங்கிருந்து நீங்கி, இறைவன் தன் மகனைத் தனக்கு உயிருடன் வழங்கிவிட்டான் என்ற உவகையுடன் வீட்டுக்குத் திரும்பினார்.

_______________________

1.       அப்துல் முத்தலிப் அவர்கள் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் தந்தைவழிப் பாட்டனார். நபிகள் நாயகத்தின் தந்தையான அப்துல்லாஹ் அவர்கள் மரித்த பின்னர் நபியை மிகப் பாசத்துடன் சில ஆண்டுகள் வளர்த்தவர் இவரே. அப்துல்லாஹ் அவர்கள் நபி (ஸல்) தாயின் கருவில் இருக்கும்போதே இறப்பெய்தினார்.

2.       இஃது, கஃ’பாவுக்கு அருகில் அஸ்-சஃபா மற்றும் மர்வா ஆகிய குன்றுகளுக்கு இடையில் பலிகள் நடத்தப்படும் இடத்திலாகும்.

3.       அபூ தாலிபு அவர்கள் அப்துல்லாஹ்வின் உடன் பிறந்த சகோதரர் (அதாவது, இருவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள். ஏனையோர் மாற்றாந்தாய் மக்கள்.) நபி (ஸல்) அவர்களின் சின்னத்தாவான இவரே அப்துல் முத்தலிபின் மறைவுக்குப் பின்னர் நபிகள் நாயகத்தை வளர்க்கும் பொறுப்பினை ஏற்று அவர்களைப் பாதுகாத்தார். நபி (ஸல்) அவர்களின் பிரியமான மகளான ஃபாத்திமா (ரலி) அவர்களை மணந்தவரும், இஸ்லாமிய அரசின் நான்காம் ஆளுநருமான (கலீஃபா – ஆட்சிக்காலம் 35 ஹி / 656 பொ.ஆ – 40 ஹி / 66 பொ.ஆ) அலீ (ரலி) அவர்கள் அபூ தாலிபின் மகனாவார்.

d

            இக்கதை, மஹ்மூது ஷுக்ரியுல் அலூசி எழுதிய ‘புலூகுல் அரப் ஃபீ மஃரிஃபத்து அஹ்வாலுல் ‘அறப்’ (அறபியரின் வாழ்வியலை அறிதலில் இலக்கை எட்டுதல்) என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இஃது, கிஸாஸுல் அறப் (அறபியரின் கதைகள்) என்னும் நூலின் ஒன்றாம் பாகத்தில் உள்ளது.


Friday, November 11, 2022

நிஜாரின் புதல்வர்கள்

 (இஸ்லாமுக்கு முந்தைய அறபு நாட்டு மரபுக்கதை)

தன் மரணம் நெருங்கிவிட்டதை உணர்ந்த நிஜார்1 தன் புதல்வர்களான முளர், இயாள், ரபீஆ மற்றும் அம்மார் ஆகியோரை அழைத்தார்.

            ”மகன்களே! இந்த செவப்புத் தோல் கூடாரம் முளருக்கு; இந்தக் கறுப்புக் குதிரையும் கறுப்புக் கம்பளிக் கூடாரமும் ரபீஆவுக்கு; இந்த (நடு வயது) சாம்பல் தல வேலைக்காரி இயாளுக்கு; இந்த வரவேற்பறை அம்மாருக்கு. அவன் இங்கெ உக்காந்துக்கிடட்டும். இப்புடிச் சொத்துப் பிரிச்சதுல ஒங்களுக்கு ஏதாச்சும் பிரச்சனன்னா நஜ்ரான்ல2 இருக்குற தலமப் பூசாரி ஜுர்ஹும் நாகரப் போய்ப் பாத்து ஆலோசன கேளுங்க.” என்று சொன்னார்.

            நிஜார் இறந்த பின்னர் நான்கு சகோதரர்களுக்கும் சொத்துத் தகராறு மூண்டு விட்டது. எனவே அவர்கள் ஜுர்ஹும் நாகரைப் பார்க்கப் போனார்கள். செல்லும் வழியில் ஓரிடத்தில் அவர்கள் சிறிது மேயப்பட்ட புல் பரப்பு ஒன்றைப் பார்த்தனர்.

            ”இங்கெ மேஞ்ச ஒட்டகத்துக்கு ஒத்தக் கண்ணு,” என்றான் முளர்.

            ”அது ஒரு நொண்டி ஒட்டகம்,” என்றான் ரபீஆ.

            ”அது ஒரு குட்ட வால் ஒட்டகம்,” என்றான் இயாள்.

            ”நிச்சயமா அது ஒரு வழி தவறின ஒட்டகந்தான்,” என்றான் அம்மார்.


            
அவர்கள் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது ஒட்டகத்தைத் தேடிக்கொண்டு ஒருத்தன் வந்தான். அவர்கள் ஏதேனும் ஒட்டகத்தைப் பார்த்தார்களா என்று விசாரித்தான்.

            ”அது ஒத்தக் கண்ணுங்களா?” என்று முளார் கேட்டான்.

            ”ஆமாம்” என்றான் அவன்.

            ”அது நொண்டியா?” என்று ரபீஆ கேட்டான்.

            ”ஆமாங்க,” என்றான் அவன்.

            ”அது குட்ட வாலிங்களா?” என்று இயாள் கேட்டான்.

            ”அதேதான் அதேதான்…” என்றான் அவன் உற்சாகமாக.

            ”அது வழி தொலைஞ்சு அலையுதோ?” என்று அம்மார் கேட்டான்.

            ”ஆமாங்க, அது என்னோட ஒட்டகந்தான். தயவு செஞ்சு அதுகிட்ட என்னைய கூட்டிக்கிட்டுப் போங்க ஐயா” என்று அவன் கெஞ்சினான்.

            ”ஆண்டவன் மேல சத்தியமா, அத நாங்க பாக்கவே இல்லே,” என்று அவர்கள் சொன்னார்கள்.

            ”அடப் பாவிகளா, இப்பத்தான் என் ஒட்டகத்தப் பத்திப் புட்டுப் புட்டு வச்சீங்க. இப்ப பாக்கவே இல்லேன்னு பொய் சொல்றீங்களே?” என்று கோபப்பட்ட அவன் அவர்களைப் பிடித்துக்கொண்டான். நஜ்ரானை அடையுமவரை அவன் அவர்களை விட்டு விலகவில்லை.

            ஊரை அடைந்து அவர்கள் அமர்ந்ததும், அவன் உரக்கக் கத்தி ஊரைக் கூட்டிவிட்டான்: “இந்த ஆளுக என் ஒட்டகத்த திருடிக்கிட்டாங்க. அதோட அடையாளத்த எங்கிட்ட விவரிச்சுட்டு அதப் பாக்கவே இல்லேன்னு பொய் சொல்றானுங்க.”

            ”நாங்க அதப் பாக்கவே இல்ல. இதுதான் உண்மை” என்று சகோதரர்கள் சொல்லினர்.

            அவர்கள் ’நஜ்ரானின் நாகம்’ ஆன ஜுர்ஹும் நாகரிடம் கொண்டு செல்லப்பட்டனர். அவர் ஒரு ஞானி என்று கருதப்பட்டவர். அறபிகளின் நீதிபதியாக இருந்தவர். எனவே அவரிடம் வழக்கு உரைக்கப்பட்டது.



            ”நீங்க அதப் பாக்கவே இல்லேன்னா அத எப்படி சரியா வருணிச்சீங்க?” என்று அவர் கேட்டார்.

            ”ஐயா, அது மந்த வெளியில ஒரு பக்கமா மேஞ்சு வச்சிருந்தத நான் கவனிச்சேன். அதுனால அதுக்கு ஒத்தக் கண்ணு குருடுன்னு முடிவு செஞ்சேன்,” என்றான் முளர்.

            ”ஐயா, தரையில அதோட மூனு காலுத் தடயம் மட்டும் அழுத்தமா இருந்துச்சுங்க. ஒரு காலோட தடயம் லேசாத்தான் இருந்துச்சு. அத வச்சு அந்த ஒட்டகத்துக்கு ஒரு காலு நொண்டின்னு நான் தெரிஞ்சிக்குட்டேன்,” என்று சொன்னான் ரபீஆ.

            ”ஐயா, அந்த ஒட்டகம் பெரிசா ஒத்தக் குவியலா சாணி போட்டிருந்துச்சுங்க. அதுக்கு நீளமான வாலு இருந்துச்சுன்னா சாணி செதறீருக்கும். அதுனால அதுக்கு வாலு குட்டன்னு தெரிஞ்சுக்கிட்டேங்க,” என்றான் இயாள்.

            ”மந்த வெளியில அது நல்லா பச்சப் பசேல்னு புல்லு வளந்து கெடக்குற எடத்துல நின்னு நெதானமா மேயலீங்க. அரகொறயா மேஞ்சுப்புட்டு வேற எடத்துக்குப் போயிருச்சுங்க. காஞ்சப் புல்லக்கூட மேஞ்சுக்கிட்டுப் போயிருந்துச்சு. அந்த இடத்துக்கு தெனமும் வர்ற கால்நடையா இருந்துச்சுன்னா அப்படி அவசரமா மேயாதுங்க. அதுனால அது வழி தப்பி வந்த ஒட்டகம்னு தெரிஞ்சுக்கிட்டேங்க,” என்று விளக்கி முடித்தான் அம்மார்.

            நஜ்ரான் நாகம் இதையெல்லாம் மனதுக்குள் யோசித்துவிட்டு ஒட்டகக்காரனிடம் திரும்பினார்: “டேய், இவுங்க ஒன் ஒட்டகத்தப் பாக்கவே இல்ல. நீ போய் ஒழுங்காத் தேடு.”

            ”நீங்கள்லாம் யாரு?” என்றூ அவர் அந்த நான்கு பேரையும் கேட்டார். அவர்கள் விவரம் சொன்னதும் அவர்களைத் தன் வீட்டுக்கு விருந்தாளிகளாக வரவேற்றார்.

            ”நீங்களே பெரிய அறிவாளிகளா இருக்கீங்க. ஒங்களுக்கு எங்கிட்ட என்ன தேவ இருக்க முடியும்?” என்று அவர் கேட்டார்.

            அப்புறம் அவர்களுக்கு அவர் விருந்து உபசரித்தார். அவர்களுக்காக ஒரு செம்மறியை அறுத்துச் சமைத்தார். திராட்சை மது கொண்டு வந்து வைத்தார். பிறகு கூடாரத்தின் மறு பகுதிக்குச் சென்று அவர்கள் பேசுவது தன் காதில் விழும்படி மறைந்து அமர்ந்துகொண்டார்.

            ”இத விட ருசியான ஆட்டுக்கறிய நான் சாப்பிட்டதே இல்ல. இந்த ஆடு நாய்ப்பால் குடிச்சுத்தான் வளர்ந்திருக்கணும்,” என்று ரபீஆ சொன்னான்.

            ”இந்த திராட்சக் கொடி ஒரு கல்லறைக்கு மேலத்தான் வளர்ந்திருக்கணும். இதவிடச் சுவையான மதுவ நான் குடிச்சதே இல்ல,” என்றான் முளர்.

            ”இன்னிக்கு நாள் வரய்க்கும் இந்த மாதிரி ஒரு நல்ல மனுஷன நான் பாத்ததே இல்ல. எப்படி உபசரிக்கிறார் பாருங்க. இந்த ஆளு தன் அப்பன்னு சொல்லிக்கிற ஆளுக்குப் பொறந்தவன் இல்ல!” என்றான் இயாள்.

            ”இப்ப நாம பேசிக்கிற வார்த்தைகள விட நமக்கு ரொம்பப் பிரயோஜனமான பேச்ச நான் இதுவரய்க்கும் கேட்டதே இல்ல,” என்று சொல்லிச் சிரித்தான் அம்மார்.

            அவர்கள் பேசியதை எல்லாம் ஜுர்ஹும் நாகர் கேட்டார். “சரியான சைத்தானுங்களா இருக்காணுங்க,” என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.

            உடனே அவர் எழுந்து போய் தனது சேவகனை அழைத்து அந்த மது எங்கிருந்து வந்தது என்று கேட்டார்.

            ”நம்ம பெரிய ஐயாவோட கல்லறத் தலமாட்டுல நான் ஒரு திராட்சக் கொடி நட்டு வச்சேங்க எசமான். அதுல வெளஞ்ச திராட்சய வச்சு இந்த மதுவ தயார்சிச்சேனுங்க, அதுனாலதான் இம்புட்டு ருசியாவும் நாக்குல தேளு கொட்டுனாப்ல சுர்ருன்னும் இருக்குதுங்க” என்று அவன் பவ்யமாகச் சொன்னான்.

            அடுத்து அவர் இடையனை அழைத்து விசாரித்தார்: “இன்னிக்கு அறுத்த ஆட்டப் பத்தி எனக்குச் சொல்லு.”



            ”எசமான், அதோட அம்மா அதப் பெத்துப் போட்டுட்டு செத்துப் போயிருச்சுங்க. குட்டிக்கு எப்படிப் பாலு ஊட்டுறதுன்னு நான் ரோசனெப் பண்ணிக்கிட்டு இருந்தப்ப, காவ நாயி அப்போன்னுப் பாத்து அதுவும் குட்டிப் போட்டிருந்துச்சு. ஆண்டவனோட கருணையப் பாருங்க, அந்த நாயி இந்தச் செம்மறிக் குட்டியத் தன்னோட குட்டியா ஏத்துக்குச்சு. அதுதாங்க இதுக்குப் பாலூட்டுச்சு. இதுவும் நாய்ப்பாலையே தாய்ப்பாலாக் குடிச்சு வளர்ந்துச்சு,” என்று விளக்கினான் முது இடையன்.

            அப்புறம் அவர் தன் அம்மாவிடம் போய் தனது அப்பா யார் என்று கேட்டார். தான் முன்பு ஒரு மன்னனுக்கு மனைவியாக இருந்ததாகவும், அவன் ஒரு பெருஞ் சொத்துக்காரன் என்றும், ஆனால் அவனொரு நபும்ஸகன் என்றும், பிள்ளை பிறக்காவிட்டால் எல்லாச் சொத்தும் அனாமத்தாகப் போய்விடுமே என்று தான் அஞ்சி தப்புச் செய்துவிட்டதாகவும் அவள் கண்ணீர் மல்கக் கூறி விம்மினாள்.

            நாகர் அந்த இளைஞர்களிடம் திரும்பி வந்தார். அவர்கள் பேசியதன் விவரங்களை எல்லாம் சொன்னார். தம் தந்தையார் தமக்குச் சொன்ன அறிவுரையை அவர்கள் அவரிடம் சொல்லினர்.

            நாகர் அவர்களுக்கு இப்படி ஆலோசனை வழங்கினார்: “செவப்பு நெறமா இருக்குறது எல்லாம் முளருக்குச் சேரும்.”

எனவே, தீனார்கள அனைத்தையும் செந்நிற ஒட்டகங்களையும் முளர் எடுத்துக் கொண்டான். அன்று முதல் அவன் ”செவ்வேள் முளர்” என்று அழைக்கப்பட்டான்.

            ”கறுங் குதிரையும் கறுப்புக் கொட்டாரமும் யாருக்குத் தரப்பட்டுச்சோ, அவனுக்குக் கறுப்பா இருக்குறதெல்லாம் சொத்து.”

            எனவே, எல்லாக் கறுங் குதிரைகளும் ரபீஆவுக்குச் சேர்ந்தது. அன்றிலிருந்து அவன் ”புரவியன் ரபீஆ” என்று அழைக்கப்பட்டான்.

             ”சாம்பத் தல வேலக்காரி மாதிரி எதெல்லாம் இருக்குதோ அதெல்லாம் இயாளுக்கு.”

            எனவே, வெண் கம்பளியும் சாம்பல் கம்பளியும் கொண்ட செம்மறியாட்டு மந்தைகளை எல்லாம் இயாள் அடைந்துகொண்டான். அன்றிலிருந்து அவன் “சாம்பலன் இயாள்” என்று பெயர் பெற்றான்.

            அனைத்து திர்ஹம்களும் மீதமிருக்கும் அனைத்துப் பொருட்களும் அம்மாருக்குரிய பாகம் என்று நாகர் தீர்ப்புரைத்தார். அன்றிலிருந்து அவனுக்கு “மிச்சப்பயல் அம்மார்” என்று பட்டப்பெயர் உண்டாகிவிட்டது.

________________

1.       நிஜார் இப்னு ரபீஆ தெற்கு அறபியரின் மூதாதையாகக் கருதப்படுகிறார். பண்டைய தென் அறேபியா தற்போது யமன் என்று அழைக்கப்படுகிறது.

 

2.       நஜ்ரான் என்பது யமனில் இருக்கும் முக்கியமான தொல் நகரங்களில் ஒன்று. ”நஜ்ரானின் நாகம்” என்பது ஞானத்தில் மேனிலை அடைந்திருப்பதன் அடையாளமாக பூசாரி ஒருவருக்கு வழங்கப்படும் பட்டம். ஏனெனில் பண்டைய அறபிகளிடம் பாம்பு என்பது ஞானத்திற்குக் குறியீடு.

 

d



”கிதாபுத் தீஜான் ஃபீ முலூக் ஹிம்யார்” (ஹிம்யார் மன்னர்கள் குறித்த மகுடங்களின் நூல்) என்பது வழி வழியாக வஹ்பிப்னு முனப்பிஹ் அவர்களிடம் இருந்து அவரின் பேரன் அபீ இத்ரீஸ் கேட்டு, அவரிடமிருந்து அஸதிப்னு மூசா அவர்கள் கேட்டு, அவரிடம் இருந்து அபூ முஹம்மதிப்னு ஹிஷாம் அவர்கள் கேட்டுப் பதிவு செய்யப்பட்ட ஒன்றாகும். அஃது, ஹிஜ்ரி 1347-இல் யமன் நாட்டின் சனா நகரில் உள்ள யமனி ஆராய்ச்சி மையத்தால் பதிப்பிக்கப்பட்டது.

(இந்நூலில் இருந்து ஆங்கிலத்தில் சில கதைகள் பெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒரு கதையையே இங்கே நான் தமிழாக்கம் செய்திருக்கிறேன். - ரமீஸ் பிலாலி.) 


Saturday, November 5, 2022

பாடுக பாட்டே!

 


            எதிர்வரும் பதினெட்டாம் தேதி எங்கள் ஊருக்கு சித்து ஸ்ரீராம் என்னும் ’பாணர்’ வருகிறார்.

             நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. சாலையில் எனக்கு முன்னால் ஓடிக் கொண்டிருந்த ஆட்டோ ஒன்றின் பின்பக்கத்தில் அந்த விளம்பரம் ஒட்டியிருந்ததைப் பார்த்தேன். நுழைவுச் சீட்டுகள் வாங்குவதற்கான இடம் குறிப்பிட்டிருந்தது.

            ஆக, பெரும் பரிசில் கிடைக்கும் என்று எதிர்பார்த்துத்தான் பாணர் வருகிறார்.

            சங்க காலத்தில் பாணர்கள் அரண்மனைக்கு வந்து பாடுவார்கள். அரசர்கள் பரிசில் (சன்மானம்) வழங்குவார்கள்.

            இது மக்களாட்சிக் காலம் அல்லவா? எனவே, மக்கள்தான் பரிசில் வழங்கியாக வேண்டும். அதற்கு நுழைவுக் கட்டணம் என்று பெயர்.

            சங்க காலத்தில் பாணர்கள் ஒரு குறிப்பிட்ட நிலத்துக்கு உரியவர்கள் அல்லர். ஊர்ச் சுற்றிகளான அவர்களுக்குத்தான் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று கணியன் பாடிய மனநிலை இயல்பாகவே இருந்திருக்க முடியும்.

            பாணர், பொருநர், பாடினி, கூத்தர், விறலியர் இவர்களைக் காட்டிலும் புலவர்களின் நிலை மேலானதாகவே இருந்திருக்கிறது. அறிவுக்குக் கிடைத்த தனி மரியாதை எனலாம். அப்படியிருந்தும், புலவர்களும் அலைந்து திரிபவர்களாகவே இருந்திருக்கின்றனர். “எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே” என்று ஔவை வீராப்புப் பேச வேண்டி இருந்தது.


            
சங்க காலத் தமிழரின் உணவு முறைகளை ஆராய்ந்து மலை / காடு / கடல் / நீர்ப்படுகை / பாலை நிலம் சார்ந்த உணாவாதாரம் என்று ஐந்து திணைகளில் வாழும் மக்களின் உணவியலைப் பேசிய பக்தவத்சல பாரதி, பாணர்களின் உணவு ஆதாரத்தை மட்டும் தனியாக எழுதியிருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். பாணர்கள் ஒரு குறிப்பிட்ட நிலத்துக்கு உரிய மக்கள் அல்லர்.

            ஆனால் நம் காலத்து நவீனப் பாணர்கள் எல்லோரும் பட்டினத்துவாசிகள்.

            சித்து ஸ்ரீராம் ஒரு திரைப்படப் பாடகர் என்பது ஒருபுறம் இருக்கட்டும். அவர் முறைப்படி செவ்வியல் இசையைக் கற்றவர். கர்நாடக சங்கீதத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு சேர்த்துப் பேணிப் பாதுகாப்பதில் பிராமண சமூகம் முனைப்புடன் ஈடுபட்டுள்ளது. கர்நாடக சங்கீதக் கலைஞர்களில் பெரும்பான்மை பிராமணர்களே. சங்கச் சொல்லாடலின்படி அவர்கள் எல்லோரும் பாணர்களே!

            ஆனால், சங்க காலத்தில் பாணர்கள் என்போர் நால் வகுப்பாருள் கீழ் வகுப்பார் அல்லவா? அந்தணர் என்னும் பிராமணர் மேல் வகுப்பார் அல்லவா?

            சித்து ஸ்ரீராம் ஒரு பிராமணர்; அதே சமயம் அவர் ஒரு பாணரும் ஆவார். எனில், நால் வகுப்பில் அவர் எதில் அமைவார்? இதெல்லாம் அர்த்தமிழந்த வெற்றுச் சொற்களாகத் தெரிகின்றன.

            என்றாலும், இதுபோல் எத்தனை எத்தனை அர்த்தமிழந்த சொற்கள் இந்த தேசத்தை, இந்த தேசத்து மக்களைப் பாடாய்ப் படுத்துகின்றன என்பதை எண்ணிப் பார்த்து ஓய்கிறேன்.

            ”பொன்வண்டு கை ஏந்துது வண்ணம் கேட்டுத்தான்

 அல்லித்தண்டு நீர் கேக்குது தாகமா…

 ரயிலு வண்டி கூட நடக்குது பேச்சுத் துணைக்குத்தான்

 குயிலு ரெண்டு கூ கூவுது ராகமா…

 உச்சியில மேகமா உப்பு மழை ஆகுமா

 கண்மூடி வாழும் மானிடா உண்மை கேளு.”

என்று இந்தக் காலத்துக் கபிலன் எழுதி கார்த்திக் ராஜா பண் அமைத்து சித்து ஸ்ரீராம் பாடிய வரிகள் காதோரம் மெல்ல கசிகிறது.

 

 

மௌனப்பால்

 


            ”தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!” என்னும் கட்டுரையில் நாஞ்சில் நாடன் சொல்கிறார்: “உ.வே.சாமிநாதையர் திருவண்ணாமலை இரமண மகரிஷியிடம் கூறியதைப் போல தமிழனுபவமே நமக்கும் இறையனுபவம்!”



            தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் மௌனத் தாத்தா ரமணரை நேரில் சந்தித்த நிகழ்வை இப்போதுதான் அறிகிறேன். அதைக் கற்பனையில் விரித்துப் பார்த்தேன். ஞானியை ஓர் அறிஞர் சந்திக்கும் நிகழ்வு ஒன்றும் புதிதல்ல. எழுத்தாளர்கள் பலருக்கும் ஞான ஆளுமைகளின் ஈர்ப்பும் தொடர்பும் உண்டு. ரமண மகரிஷியை சந்தித்து உள்ளார்ந்த தாக்கம் பெற்ற மேனாட்டு அறிஞர்கள்தாம் எத்தனை பேர் – பால் பிரண்டன், சாமர்ஸெட் மாம், ஓஸ்போர்ன், மெர்சிடிஸ் டி அகோஸ்டா. ஞானியைச் சந்திக்க மறுத்துப் பின்வாங்கியோரும் உண்டு – நவீன உளவியல் சிகரங்களில் ஒருவரான கார்ல் குஸ்தாவ் யுங் இந்தியா வந்தபோது பலரும் அவரிடம் விசாரித்த விஷயம், அவர் ரமண மகரிஷியைச் சந்தித்தாரா என்பதுதான். ஆனால் அவர் ரமணரைச் சந்திக்காமலேயே திரும்பிவிட்டார். அந்த ஞானியின் சந்திப்பு தன் மீது என்ன தாக்கத்தைச் செலுத்தும் என்பதை அவர் அஞ்சியிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

            உ.வே.சாவும் அப்படி அஞ்சியிருக்க வேண்டும் என்று அனுமானிக்கிறேன். மொழி கடந்த மௌன நிலை நோக்கி உ.வே.சா-வை ரமண மகரிஷி தள்ளியிருக்க முடியும். ஆனால் ஒருவரின் இசைவு இன்றி, வல்லடியாக அப்படி ரமணர் செய்ய மாட்டார். மொழியே காணாமல் போய்விடும் மௌன நிலையை, மொழியிலேயே தோய்ந்து ஆழ்ந்து கிடக்கும் ஒருவர் எப்படி மகிழ்ச்சியாக எதிர்கொள்வார்? எனவே உ.வே.சா அதனை மறுத்துவிட்டார் என்பதில் வியப்பேதும் இல்லை.

            ”தமிழனுபவமே நமக்கு இறையனுபவம்” என்று உ.வே.சா சொன்னதைச் சற்றே ஓர்ந்தேன்.

            மௌனம் – ஓசை (ஒலி / நாதம்) – மொழி என்னும் வரிசை வந்து நின்றது.

            இம்மூன்றுக்கும் ஓர் உவமையும் உடனே தோன்றியது: பால் – வெண்மை – பாலால் செய்யப்படும் பல்வேறு பானங்கள்.



            பால் என்னும் பொருளின் பண்பு வெண்மை. பால் ரோஸ் மில்க் ஆகும்போது ரோஸ் நிறம் கொள்கிறது; பாதாம் பால் ஆகும் போது இள மஞ்சள் நிறமாகிறது; தேநீர் அல்லது காபி ஆகும்போது அரக்கு நிறமாகிறது. இந்த நிறங்கள் எதுவுமே பாலின் சுய நிறம் அல்ல.

            பாலைப் பாலாகவே அருந்துவோர் உண்டு. சிலருக்கு அது காபியாகி வந்தால்தான் பிடிக்கும். சிலருக்கு தேநீராகி வர வேண்டும். சிலருக்கு ரோஸ் மில்க்தான் விருப்பம்.

            காபியனுபவமே பாலனுபவம் என்று சொல்வது போல்தான் ”தமிழனுபவமே நமக்கு இறையனுபவம்” என்று உ.வே.சா அவர்கள் சொல்லியிருப்பதும்.

            ஆனால், ”பசு ஐந்தும் பாலாய்ச் சொரியும்” அனுபவம் தனிதான். அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.