நெகிழிக்
குழாய் கொண்டு
தோட்டத்திற்கு
நீர் பாய்ச்ச ஆயத்தமாகையில்
கண்டேன் அதை
மதிலினும்
உயரமாய் வளர்ந்துவிட்ட
சாமரப்
புல்லின் நிழலடியில்
நின்றிருந்தது அது
ஒளிவிட்டுக்
குழைத்த வண்ணத்தால்
இழுக்கப்பட்ட
சிறு கோடு போல்
சுட்டுவிரல் உயரச் சிறு பசுஞ்செடி
சிசுவின்
சருமம் போலும்
பொடித்
தளிர்களிரண்டு
அதன் உச்சியில்
இசை கேட்கும்
செடி போலும்
செவிப்பொறிகள்
மாட்டியது போல்
பிளந்த விதைப் பாதிகள் வைத்திருந்தது
இறைவா!
விதைகளைப்
பிளக்கும் நின்
கைவண்ணம் தரிசித்திருந்தேன் அதில்
மலரின்
ஸ்பரிசத்தினும்
நீரின்
சாயலினும்
குழந்தையின்
மூச்சினும்
மெல்லிய
ஞானத்தால்
அப்படிப் பிளந்திருக்கிறாய் நீ
எல்லாம்
வல்ல ஏகன் என்றும்
சர்வ
வல்லமை கொண்டோனென்றும்
நினைத்
துதிக்கும் மானுடம் எனினும்
அச்செடியை
முன்னோக்கிய தருணத்தில்
எல்லாம்
மெல்ல இறைவா!
சர்வ
மெல்லோனே!
என்றுனைத் துதித்தேன்
”அல்லாஹ்
மெல்லோன்
மென்மையை
நேசிப்போன்”
என்றார்
நபியும்
No comments:
Post a Comment