Thursday, April 27, 2017

இஸ்லாத்தில் பெண்ணியக் குறியீடுகள்

மஹ்மூது முஸ்தஃபா
Image result for islamic feminine symbols
(இக்கட்டுரையில் இடம்பெறும் இரண்டு கலைச்சொற்களான ஆண்மையம் (Masculine) மற்றும் பெண்மையம் (Feminine) ஆகியவற்றை இக்கட்டுரையின் பொருண்மையான சமயவியல் / ஆன்மிகம் சார்ந்து குறியீடாக விளங்கவேண்டுமே அல்லாது மருத்துவ நோக்கில் விளங்கப்படுவது போன்று பாலினக் கோணத்தில் விளங்கலாகாது. – மொ.பெ.)
இஸ்லாமும் புனிதப் பெண்மையுமா? ஆம். சாத்தியமற்றதாகத் தெரிகிறது என்றாலும், உண்மைதான். நமது காலத்தில், ஆண் ஆதிக்கம் பெற்ற, அதிகாரம் கொண்ட, அடக்குமுறையான வடிவில் முன்வைக்கப்பட்ட இஸ்லாமியப் பிரதிக்கே மிகவும் பழக்கப்பட்டுப் போயிருக்கிறோம். அது நமது ஆன்மிக வாழ்விலிருந்து பெண்மைப் பரிமாணத்தை பெரிதும் நீக்கி நம் வாழ்வில், நம் சமூகங்களில் மற்றும் நம் உலகில் தீவிரமான சீர்குலைவை விளைத்துள்ளது.
      ஆனால் அது இப்படி இருந்த ஒன்றல்ல. இஸ்லாம் அதன் அசல் வெளிப்பாட்டிலும் உருவேற்பிலும் மனிதனைச் சமனமாக்கி நமது ஆண்மை மற்றும் பெண்மை அம்சங்களை ஒருமையானதொரு முழுமை நிலைக்கு ஒருங்கிணைக்கும் வழிமுறையாக இருந்தது, இருக்கிறது. இஸ்லாமியச் சொல்லியலில் இதுவே ”நஃப்ஸுல் முத்மஇன்னாஹ்” – அமைதியுற்ற ஆத்மா என்னும் நிலை. அதில் நம் அந்தரங்க பிணக்குகளும் முரண்பாடுகளும் தீர்க்கப்பட்டு, இதயம் காயங்கள் ஆற்றப்பட்டு, முழுமையில் படைப்புக்கள் எல்லாம் இறையேகத்துவத்தைப் பிரதிபலிப்பதை நாம் அனுபவக்கும் நிலை அது. இதுவே தவ்ஹீத் என்னும் ஒருமைப்பாடு.
      இஸ்லாத்தின் மையமாய் இருக்கும் தவ்ஹீத் என்னும் இக்கோட்பாடு இறைவன் ஒருவன் என்று சொல்வதோடு அமையும் வெறும் இறையியற் கோட்பாடு அல்ல. உண்மையில், அது ஒரு வினைச்சொல் என்பதால், ஒன்றுபடுத்தல் என்னும் அர்த்தத்தைத் தருவது. அதாவது, ஒருங்கிணைத்தல் (to integrate), துண்டமானதை ஒருங்கிணைவுக்குக் கொண்டு வருதல் என்பதாகும். மனிதத் தளத்தில் அது இறைவனின் ஏகநிலையை நம்மில் உணர்ந்துகொள்ளும் வினையாகும்.
      வாழ்வின் பெண்மை அம்சம் நம்மிலும் சமுதாயத்திலும் முறையாக ஒருங்கிணையவும் மதிக்கவும் படவில்லை எனில் அத்தகையதொரு நிலை அடையப்பட முடியாது. இறைவனைப் பற்றிய நமது பார்வையின் அடிப்படை பெரிதும் ஆண்மையக் குறியீடுகளிலும் மொழியிலும் அர்த்தங்களிலும் வேர்க் கொண்டிருக்கும் வரை இந்த ஒருங்கிணைவு சாத்தியமில்லை. பாலினம் எதுவும் இல்லாதபோதும், தனது திருப்பண்புகள் ஆண்மை மற்றும் பெண்மையின் சகவுறவுச் சமனமாய் (symbiotic balance) இருத்தலில் வெளிப்பட்டுள்ள இறைவனை நாம் அறிவதற்குத் துணையாக தெய்வீகத்தின் பெண்மையம்சத்தை வெளிக்கொணரும் குறியீடுகளால் இஸ்லாம் தனது தூய வடிவில் நிரம்பியுள்ளது.
Related image
      எனில், இஸ்லாத்தில் புனிதப் பெண்மைக்கான உதாரணங்கள் யாவை? ஆக அடிப்படையானதும் நன்கு தெரிந்ததுமான ரஹ்மத் (கருணை) என்னும் கோட்பாட்டில் நாம் தொடங்கலாம். நியதியற்ற பேரன்பான அதுவே முதன்மையான இறைப்பண்பு என்று உலகளாவிய முஸ்லிம்கள் ஏற்றுள்ளனர். முஸ்லிம்களிடம் சிறப்பாக அறியப்பட்டதும் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதுமான இறை நாமம் ரஹ்மான் என்பதாகும். இது ர்-ஹ்-ம் (R-H-M) என்னும் வேரிலிருந்து வருகிறது. அதற்கு கர்ப்பப்பை / கருவறை (ரஹ்மு) என்னும் அர்த்தமுள்ளது. இது தனித்தன்மையான பெண்மைப் பண்பாகும். இறைவன் அனைத்துப் பொருள்களையும் வளைத்தடக்கியுள்ள தெய்வீகக் கருவறையாக இருக்கிறான். அவனிலிருந்தே உள்ளன அனைத்தும் வருகின்றன.
      இறைவனை ’அவன்’ என்று ஆண்பாலாகச் சுட்டும் நமது வழமையான பார்வையை மாற்றி அமைப்பது நமக்குக் கடினமே. குறிப்பாக, பாலினத் தீர்மாணமற்றதை ஆண்பாலாகக் குறிக்கும் நியதி கொண்ட இலக்கணக் கட்டுள்ள அரபி போன்றதொரு மொழியில் இது மிகக் கடினம். எனினும், ஏற்பு, நயம், அர்ப்பணம், பேரிரக்கம், மென்மை, சாந்தம், சொஸ்தம், பகிர்வு, பாய்மம், சமாதானம், பிரியம், மிருது, மன்னிப்பு, போஷிப்பு, பொறுமை, மூலம் மற்றும் புதிர்மை ஆகிய பண்புக்ளைப் பெண்மை உள்ளடக்கியது என்பதை நாம் நினைவு கொண்டால் இவற்றுடன் ஒப்புமையாகவுள்ள, இயல்பில் பெண்மையாய் உள்ள தெய்வீகப் பண்புகள் பல இருப்பதைக் காணலாம்: அமைதி (சலாம்), நம்பி (முஃமின்), படைப்பாளி (ஃகாலிக்), நுட்பமான் (லத்தீஃப்), மென்மையாளி (ஹலீம், ரஊஃப்), அறிவாளி (ஹகீம்), அந்தரங்கம் (பாத்தின்), ஜீவி (ஹய்ய்), கொடையாளி (வஹ்ஹாப்), உள்ளன்பாளி (வதூத்), மன்னிப்பாளி (ghகஃபூர்) மற்றும் பலவுமாம். 
      நம்முள் ஆழமாக விதைக்கப்பட்டுள்ள பாலினச் சார்பு இல்லாது நாம் இறைநாமங்களை தியானித்துச் சிந்தித்தால் அல்லாஹ்வின் தெய்வீகப் பண்புகள் பலவற்றின் பெண்மையக் குறியீட்டு அம்சங்களைப் புரிந்துகொள்ள முடியும்.
      நமது ஆன்மிக வளர்ச்சிக்கும் ஆன்மாக்களின் ஒருங்கிணைவிற்கும் வழிகாட்டியுதவ பெண்மைக் குறியீடுகள் எவ்வாறு தரப்படுகின்றன என்று காண குர்ஆனில் உள்ள குறியீடுகள் சிலவற்றை நாம் பார்க்கலாம்.  இதோ இரண்டு உதாரணங்கள்:
      ’நூலின் தாய்’ (உம்முல் கிதாப்): ஆழமான இந்த ஆன்மிகச் சொல்லாடலை இறைவனின் அறியமுடியாத சுயத்திற்கு (தாத்) நெருங்கியதான தெய்வீக அறிவின் மூலத்தைக் குறிப்பதற்கு குர்ஆன் பயன்படுத்துகிறது. இறைத்தூதர்களின் இதயங்களுக்கு வெளிப்பாடுகள் அனைத்தும் நேரடியாக உதயமாகும் மூலம் அது. இந்த மீப்பொருளியற் கோட்பாட்டை விளக்குதற்குத் தாய்மை, பிறப்பித்தல், போஷித்தல் மற்றும் அரவணைப்பு ஆகிய படிமங்களைப் பயன்படுத்துவது அழகும் நுட்பமுமாகும். தெய்வீக வழிகாட்டல் என்பது அதன் நியதியற்ற அன்பில், ஆன்மாக்களைப் போஷிப்பதில், நமது குறைபாடுகளை ஏற்பதில், அருளும் மன்னிப்பும் தந்து நம்மைத் தழுவிக்கொள்வதில் தாய்மையானது என்னும் ஆழ்ந்த புரிதலுக்கு இது நம்மை இட்டுச் செல்கிறது.
      சுவனக் கன்னியர் (ஹூருல் ஈன்): இச்சொல்லாடல் விசுவாசிகளான ஆண்களுக்காக சொர்க்கத்தில் காத்திருக்கும் அழகிய கன்னியரைக் குறிப்பதாகவே பொதுவாகக் கொள்ளப்படுகிறது. இச்சொல்லாடல் மறுமை வாழ்வு பற்றிய ஆணின நோக்கின் பாலியல் கற்பனையின் அம்சமாக அவ்வப்போது குழப்பிக்கொள்ளப் படுகிறது. ஹூஃப் என்னும் சொல் ஹ்-வ்-ர் (H-W-R) என்னும் வேரிலிருந்து வருகிறது. அதன் முதன்மையான அர்த்தம் திரும்புதல் அல்லது மாறுதல் என்பதாகும். அதாவது உரு/தன்மை மாற்றம் (Transformation). கண்களின் பிரகாசம் அல்லது சுடர்ந்து மின்னும் கண்கள் (சுடர் சுட்டும் விழிகள்) என்னும் பொருளுமுண்டு. இறைத்தூதர்களின் தோழமையைப் பெருவதற்காக அனைத்துக் குறைகளினின்றும் தூய்மையடைதல் என்னும் பொருளும் அதற்கு உள்ளது! ஈன் என்னும் சொல் கண்ணைக் குறிக்கும் ‘ஐன் என்னும் சொல்லிலிருந்து வருகிறது. ஐன் என்பதற்கு சாராம்சம் அல்லது ஒன்றின் மூலம் என்பதாகவும் அர்த்தமுள்ளது. ஒரு முழுமை உண்டாகுமாறு இரு பாதிகளை ஒன்றாக்குதல் என்னும் கருத்தில் ஆன்மாக்களை இணைக்கும் சூழலில் இச்சொல் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திருவசனங்களை ஆழ்ந்து சிந்தித்தால், நமது முழு மனிதத்தன்மை பற்றிய அனுபவத்திற்கு அது நம்மை இட்டுச் செல்லும். அது, நமது ஆண்மைய மற்றும் பெண்மையப் பரிமாணங்களை நாம் இணைக்கும்போது (pairing), அதாவது நமது ஸ்தூல இயங்கு சுயம் (ஆண்மையம்) திறந்து நமது அந்தரங்க  நுட்ப சுயத்துடன் (பெண்மையம்) இணைந்து, அந்நிலையானது துண்டமாதல், துயரம் மற்றும் பிணக்கு (நரகம்) ஆகியவற்றிலிருந்து இணைவின் அமைதி மற்றும் ஆனந்தத்திற்கு (சொர்க்கம்) நம்மை உருமாற்றி நாம் முழுமையாகும்போது ஏறப்டுவதாகும்.
      இறைத்தூதர் முஹம்மதின் குறியீட்டிலேயே நாம் புனிதப் பெண்மையைப் பார்க்கவியலும். அவர்கள் குர்ஆனில் இருவழிகளில் பெயரிடப்பட்டுள்ளார்கள். மேலும், அவர்களின் அன்பர்களிடையே அதிகமும் அவ்விரு வழிகளில்தான் பொதுவாக அறியப்படுகிறார்கள். ஒன்று, ”அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடை” (ரஹ்மத்துல்லில் ஆலமீன்) என்பது. கருவறை போன்ற இப்பண்பு இறைத்தூதரது இயற்கையின் பண்பாகவும், முன்பே நாம் சுட்டியபடி பெண்மையப் பண்பாகவும் இருக்கிறது. இரண்டாவது, தாய்மைத் திருநபி (நபிய்யுல் உம்மிய்) என்பதாகும். பொதுவாக இச்சொல்லாடல் எழுதப்படிக்கத் தெரியாதவர் என்னும் பொருளில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால் உம்மிய் என்பது சொல்லிலக்கணப்படி தாய்மையுள்ள என்று பொருள்படும். அவர்கள் ஞானத்தையும் வழிகாட்டுதலையும் நேரடியாக மூலத்திலிருந்தே பெற்றார்கள், நூற்களிலிருந்தோ பிற மனிதர்களிடமிருந்தோ அல்ல என்னும் உண்மையை இது குறிக்கிறது.
Image result for mihrab
      இறுதியாக, நாம் பள்ளிவாசலின் மற்றுமதன் தனித்தன்மையான கட்டட வடிவமைப்பின் குறியீட்டியலைப் பார்ப்போம். மரபான பள்ளிவாசல்களின் அகவெளி இரு விஷயங்களால் வரையறுக்கப்படுகிறது, விதானம் (குப்பா, dome) மற்றும் தொழுகை மாடம் (மிஹ்ராப், niche).  மிஹ்ராப் என்பது பள்ளியின் மிகவும் முக்கியமான அம்சமாகும். அதுவே தொழுகையாளிகளை மக்கா நகரின் (கஃபா ஆலயத்தின்) திசை (கிப்லா) நோக்கி நிலைநிறுத்துகிறது. ஆனால், மிஹ்ராப் ஆழமான பெண்மையக் குறியீட்டை வைத்திருக்கிறது. அருள்பெற்ற கன்னி மேரி (மர்யம்) அவர்கள் மிஹ்ராபில் தனிமையாய் இருப்பார்கள் என்று குர்ஆனில் நமக்குச் சொல்லப்படுகிறது. மிஹ்ராபில் அவர்கள் தனித்திருந்தபோதுதான் வானவர்கோன் ஜிப்ரீல் அவர்களிடம் தோன்றி, அவர்கள் ஏசு(இறைத்தூதர் ஈசா)வைக் கருவுற்றுத் தாங்கிப் பெற்றெடுப்பார்கள் என்னும் நன்மாராயம் சொன்னார்கள். தெய்வீக ஒளிச்சுடருக்குத் திறந்துகொடுத்துப் புனித ஆன்மாவை இவ்வுலகிற்குக் கொண்டுவரும் ஏற்புத்தன்மையின் பெண்மைய ஆற்றலை மர்யம் குறிக்கிறார்கள். இறைவனின் மேல் முழுப்பொறுப்பு வைத்துச் சரணடைந்துள்ள அர்ப்பணமான மனித இதயத்தின் மூலப்படிவமாக மர்யம் இருக்கிறார்கள். இறைவனை அழைத்து உதவி கோருவது எப்படி என்பதயும் தனது ஐயங்களைத் தாண்டி இறைக்கருணையின் மீது எப்படி நம்பிக்கை வைப்பது என்பதையும் நபி ஜகரிய்யா அவர்கள் மர்யமின் பக்தியிடமிருந்து கற்றுக்கொள்வதாக குர்ஆன் காட்டுகிறது. அவ்வழியில் அவர் இறையருளின் தனது பங்கினை அடைந்துகொண்டார்.
      பல நூற்றாண்டுகளாக மர்யம் பற்றிய இந்தத் திருவசனம் பள்ளிவாசல்களின் மிஹ்ராப் விளிம்பை அலங்கரிப்பது மரபாக இருந்தது. மர்யமின் படித்தரம் (மகாமுல் மர்யம்) என்பதாக மிஹ்ராப் அழைக்கப்பட்டது. மிஹ்ராப் என்னும் படித்தரத்தரம் மர்யமுக்கு உரியது என்னும் நிலையில் பள்ளிவாசலில் ஒவ்வொரு தொழுகையாளிக்கும் முன்னதாக அவர்களின் ஆன்மா நின்றிருக்கும். அதாவது, ஒவ்வொரு பள்ளியிலும் அந்தரங்க இமாம் அவர்களே. தொழுகை வெளியை வளைத்திருக்கும் விதானம் மர்யம் அவர்களின் கருவறையைக் குறிக்கிறது; இறைவார்த்தையான ஈசா நபி (என்னும் ஏசுநாதர்) இந்தப் பருவுலகிற்குப் பிறந்து வருகின்ற வழியினை, கருவறை வாசலை மிஹ்ராப் குறிக்கிறது. (மொ.பெ.குறிப்பு: தமிழில் ’பள்ளி வாசல்’ என்னும் சொற்றொடர் இத்தத்துவத்தை முழுமையாகச் சுட்டிவிடக் காண்கிறோம். பள்ளி என்னும் சொல் சமணர்களிடமிருந்து பெறப்பட்ட ஒன்றாகச் சொல்லப்படுவது ஒருபுறமிருக்க, ’பள்ளி வாசல்’ என்னும் சொற்றொடராக அதனை உருவாக்கியதன் பின்னணியில் இத்தத்துவப் பார்வை இருந்திருக்க வேண்டும் என்று கருதலாம். தாயின் கருவறையில் குழந்தை இருந்த ஓய்வு நிலை – பள்ளி நிலை, ஏனெனில் பள்ளிகொள்வது என்றால் துயில்வது என்று பொருள், ‘திருப்பாற்கடலில் பள்ளி கொண்டான்’ என்று திருமாலைக் குறிக்கும் வைணவச் சொல்லாடலை ஒப்பு நோக்குக, யோக நெறியில் அஃது அறிதுயில் என்னும் துரிய துரியாதீத நிலைகளாகும் – அந்த ஓய்வு நிலைக்கு இணையான ஒரு நிலையை இவ்வுலகில் யாரும் அடைய முடியுமா? எக்கவலையும் மனதில் இல்லாது இறைவனின் தியானத்தில் லயித்துவிடுகிற அந்த இத்மினான் (முழுநிம்மதி) நிலையை உண்டாக்கும் இடமே பள்ளி எனப்பட்டது. வாசல் என்பது மிஹ்ராபைக் குறிக்கும்.) நாம் பள்ளிவாசலுக்குள் இருக்கும்போது ரஹ்மான் என்பதன் பிரதிபலிப்பான மர்யமின் கருவறைக்குள் வைக்கப்படுகிறோம். நம் உள்ளங்கள் முறையாக மிஹ்ராபை முன்னோக்குகையில் இறைவார்த்தையை (குறியீடாகச் சொல்வதெனில் ஈசாவை) நம் இதயங்களில் பெற்றுக்கொள்வதற்கு ஆயத்தமாகிறோம். இவ்வாறு, தெய்வீக அருள் நமது சுயத்தின் அந்தரங்கமான நுட்பமான பெண்மையப் பரிமாணத்தின் வழியே பாய்ந்து பருவுலகென்னும் செயல்படு ஆண்மையப் பரிமாணத்தில் வெளிப்படுகின்ற ரகசியத்தின் குறியீடாகப் பள்ளிவாசல்கள் இருக்கின்றன.
      தவ்ஹீத் என்னும் ஏகத்துவச் சத்தியத்தின் சுவையை நல்கும் சரியான விகிதத்திலும் சமனத்திலும் நமது ஆண்மைய மற்றும் பெண்மையப் பரிமாணங்கள் இருப்பதான ஒருமைப்பாட்டின் உறுதியான நிலைக்கு நாம் ஆற்றுப்படுத்தப் படுவோமாக.         

No comments:

Post a Comment