Sunday, April 30, 2017

நான் விளக்கைப் படைத்தேன் - part 2


Image result for esoteric quran

இனி, உருவகமான திருவசனங்களின் உள்ளுறை அர்த்தங்களை (தஃவீல், Interpretations) யாரறிவார் என்பதை இத்திருவசனத்தின் மூன்றாம் பகுதி சொல்கிறது: “அறிவதில்லை அதன் உட்பொருளை, அல்லாஹ் மற்றும் அறிவில் உறுதிப்பட்டோர் தவிர (வேறு எவரும்), அவர்கள் சொல்கிறார்கள் ’அதுகொண்டு நம்பினோம், அனைத்தும் எம் ரட்சகனிடமிருந்தே’. இதயத்தின் மையங்களுடையோர் அன்றி வேறெவரும் தியானிப்பதில்லை” (குர்ஆன்: 3:7)

இப்பகுதிக்கு நான் அளித்திருக்கும் மொழியாக்கம் இத்திருவசனத்தை நான் புரிந்து கொண்ட முறையில் செய்யப்பட்டதாகும். இதுவே இந்தத் திருவசனத்தில் மிகவும் சிக்கலான பகுதி. சூஃபிகளை மறுப்போர் இத்திருவசனப் பகுதியை வேறு வகையில் அர்த்தம் கொள்கிறார்கள். அது எப்படி எனில்,  

“அறிவதில்லை அதன் உட்பொருளை, அல்லாஹ்வைத் தவிர (வேறு எவரும்).  மேலும், அறிவில் உறுதிப்பட்டோர் சொல்கிறார்கள் ’அதுகொண்டு நம்பினோம், அனைத்தும் எம் ரட்சகனிடமிருந்தே’. இதயத்தின் மையங்களுடையோர் அன்றி வேறெவரும் தியானிப்பதில்லை” (குர்ஆன்: 3:7)

இருவிதத்தில் பொருள் கொள்ளப்பட்டிருக்கும் திருவசனப்பகுதி அரபி மூலத்தில் இவ்வாறு உள்ளது: ”வ மா யஃலமு தஃவீலஹூ இல்லல்லாஹு வர்ராஸிஃகூன ஃபில் இல்மி யகூலூன ஆமன்னா பிஹி குல்லும் மின் இந்தி றப்பினா”

இதனை இரண்டு விதமான தொடரியல் அமைப்பில் (syntax) அணுக இருவேறு விதமான அர்த்தங்கள் வருகின்றன.

சூஃபிகளை மறுப்போர், வஹ்ஹாபிகள் இதனை, ”வ மா யஃலமு தஃவீலஹூ இல்லல்லாஹு” என்பதில் நிறுத்திப் பொருள் கொள்கிறார்கள். எனவே அவர்களிடம், ”உருவகங்களின் உட்பொருளை யார் அறிவார்?” என்னும் கேள்விக்கு “அல்லாஹ் மட்டுமே அறிவான். வேறு யாரும் அறியமாட்டார்கள்” என்பது பதிலாகிறது. ”அப்படியானால் அறிவில் உறுதிப்பட்டோரின் நிலை என்ன?” என்னும் கேள்விக்கு “அவர்களும் அதன் உட்பொருளை அறியமாட்டார்கள், ஆனால் ’அதைக்கொண்டு நம்பினோம். அனைத்தும் எமது ரட்சகனிடமிருந்தே’ என்று கூறுகிறார்கள்” என்பதே அவர்களின் பதிலாகிறது.

இம்முறையில் இத்திருவசனத்திற்குப் பொருள் கொள்ளும்போது பல இடர்ப்பாடுகள் நேர்கின்றன. இந்த அர்த்தங்கொள்ளல் பல கேள்விகளுக்கு விடை கூறப் போதுமானதாக இல்லை. எப்படி என்று காண்போம்.

முதலாவதாக, இந்த வேதம் யாருக்கு அருளப்பட்டதோ அந்தத் திருநபி முஹம்மத் (ஸல்) அவர்களின் நிலையை இப்புரிதல் கேள்விக்குள்ளாக்குகிறது. இத்திருவசனத்தில் “அல்லாஹ்வும் அறிவில் உறுதிப்பட்டோரும்” என்றுள்ளதால் “அறிவில் உறுதிப்பட்டோர்” என்பதில்தான் முஹம்மத் (ஸல்) அவர்களின் இடம் அமைகிறது. அறிவில் உறுதிப்பட்டோர் முதஷாபிஹாத் வசனங்களின் உட்பொருளை அறியமாட்டார்கள் என்றால் முஹம்மத் (ஸல்) அவர்களும் அறியமாட்டார்கள் என்றாகிறது. எனில், குர்ஆனை முழுமையாக அவர்கள் அறியமாட்டார்கள், அதாவது குர்ஆனில் அவர்கள் அறியாத பகுதியும் உண்டு என்றாகிறது. தனக்கு அருளப்பட்ட ஒரு வேதத்தை முழுமையாக விளங்கியிருப்பதே ஓர் இறைத்தூதருக்குப் பொருத்தமானது. மாறாக, அதில் சில பகுதிகளை அவரே விளங்கிக்கொள்ள முடியாது என்று கூறுவது சரியல்ல.

மேலும், உருவகமான வசனங்களை அல்லாஹ்வை அன்றி வேறெவரும் அறியவே முடியாதெனில் அவற்றை அவன் மனிதர்களைப் பார்த்து ஏன் கூறவேண்டும்? ஒருவருமே விளங்கிக் கொள்ள முடியாத ஒன்றைப் பேசுவதில் என்ன நோக்கமிருக்க முடியும்? இக்கேள்விக்கு, “அவர்களின் ஈமான் (இறைநம்பிக்கை) அவ்விதம் சோதிக்கப்படுகிறது. அறிவில் உறுதிப்பட்டோர் அதனை விளங்காவிட்டாலும் நம்புவார்கள்” என்பது பதிலாக இருக்குமெனில், ”அது ’ராஸிஃகூன ஃபில் இல்ம்’ என்பவர்கள் செய்யும் காரியம் மட்டுமல்லவே, அறிவில் உறுதிப்படாத பாமர முஸ்லிம்களும் செய்யும் காரியம்தானே?” என்னும் கேளவி எழுகிறது. அந்நிலையில் இத்திருவசனம், “அதனைக்கொண்டு நாங்கள் நம்பினோம் என்று விசுவாசிகள் கூறுவார்கள்” என்றல்லவா இருந்திருக்கும்? குர்ஆனின் உருவகத் திருவசனங்களும் அனைவரிடமும்தானே வந்துள்ளது. இதில் தனிச்சிறப்பில் உள்ள ஒரு வகையினரைக் குறிப்பிட வேண்டியது ஏன்? 

”’உருவகமானவற்றை அல்லாஹ்வும் அறிவான் அறிஞர்களான மனிதர்களும் அறிவார்கள்” என்றால் அது இணைவைப்பு ஆகிவிடாதா?” என்னும் அசட்டுத்தனமான (கலப்பற்ற வஹ்ஹாபிய ரகமான) கேள்வியும் கேட்கப்படலாம். ”(அல்லாஹ்) ஆதமுக்கு அனைத்துப் பெயர்களையும் கற்பித்தான்” (வ அல்லம ஆதமல் அஸ்மாஅ குல்லஹா – குர் ஆன்:2:31) என்பதை நோக்குக. அல்லாஹ் தானறிந்த அனைத்துப் பெயர்களையும் ஆதமுக்குக் கற்பித்தான். கற்பித்த பின் ஆதம் அவை அனைத்தையும் வானவரிடம் சொல்லிக் காட்டினார்கள். (இதை ஏன் அல்லாஹ் நடத்தினான்? அவ்வகையில் வஹ்ஹாபிய சிந்தனைக் கோணல் வானவர்களையும் பாதித்துவிடக் கூடாது என்பதவன் திருவுளம் போலும்!) அதாவது, அல்லாஹ் அறியும் அனைத்துப் பெயர்களையும் ஆதமும் அறிவார்கள் என்றாயிற்று. இதில் ஷிர்க் என்னும் இணைவைப்பு எங்கே வந்தது? வருமெனில் அதை அல்லாஹ் நடத்தியிருக்கவே மாட்டானே? (ஒரு சிறிய ஆனால் மிகவும் அடிப்படையான புரிதல்: அல்லாஹ் சுயமாக அறிவான், ஆதம் அவன் கற்பித்து அறிவார்கள். எனவே ஷிர்க் என்னும் இணைவைப்பு நிலை உண்டாகவே மாட்டாது, அவன் அறிவதை எல்லாம் இவர்கள் அறிந்தாலும்.) அதேபோல், உருவகமான திருவசனங்களின் அர்த்தங்களை அல்லாஹ்வும் அறிவில் உறுதிப்பட்டோரும் அறிவார்கள் என்று சொல்வதால் இணைவைப்பு ஏற்படாது. ஏனெனில் அல்லாஹ் சுயமாக அறிவான், அறிஞர்கள் அவன் கற்பித்துத் தருவதால் அறிவார்கள்.

இங்கே ஒரு கேள்வி எழுகிறது: “அறிவில் உறுதிப்பட்டோர் அதனை அறிவார்கள் எனில் பிறகு ஏன் அவர்கள் ‘ஆமன்னா பிஹி’ அதனைக்கொண்டு நம்புகிறோம்’ என்று சொல்கிறார்கள்?”

நம்பிக்கை என்பதே அறியாத, விளங்காத ஒன்றின் மீது ஏற்படுவதுதான் என்னும் புரிதலில் இக்கேள்வி எழுகிறது. இந்தப் புரிதலே அடிப்படையில் தவறானது. நம்பிக்கை என்பது நாம் அறிந்த ஒன்றின் மீதும் இருக்கலாம், நாம் அறியாத ஒன்றின் மீதும் இருக்கலாம். இதைப் புரிந்து கொண்டால் மேற்காணும் கேள்வி எழ வாய்ப்பில்லை.

Related image

பொதுநிலையில் உள்ள பெருந்திரள் முஸ்லிம்கள் உருவகமான ஆயத்களின் பொருளை விளங்காத நிலையில் அவற்றின்மீது நம்பிக்கை கொள்கிறார்கள்; அறிவில் உறுதிப்பட்டோரான தேர்ந்த குழுவினர் (ஃகவாஸ்ஸ்) உருவகமான ஆயத்களின் அர்த்தங்களை அறிந்த நிலையில் அவற்றின் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். இதில் சங்கடம் என்ன?

இது ஒரு பதில். இன்னொரு பதிலும் இருக்கிறது. ”வர்ராஸிஃகூன ஃபில் இல்மி” (மேலும் அறிவில் உறுதிப்பட்டோரும்) என்னும் பகுதியானது அதன் முன்னும் பின்னும் எப்படி இருநிலைகளிலும் பொருந்திப் பொருள்தருகிறது என்று காணும்போது விரியும் விளக்கம் அது. 

அப்பகுதியை அதற்கு முன் உள்ள அல்லாஹுவுடன் சேர்த்து முதலில் பொருள் கொள்ளும்போது “அறிவதில்லை அதன் உட்பொருளை, அல்லாஹ் மற்றும் அறிவில் உறுதிப்பட்டோர் தவிர (வேறு எவரும்)” என்று அர்த்தப்படுகிறது. அல்லாஹ் சுயமாகவும் அவனால் கற்பிக்கப்பட்ட நிலையில் அறிவில் உறுதிப்பட்டோரும் (அதாவது இறைத்தூதரும் இறைநேசர்களும்) அறிந்தார்கள் என்பதாக. இந்த அர்த்தத்திற்கு இச்சொற்றொடரைத் தொடர்ந்து வரும் வார்த்தைகள் வலு சேர்க்கின்றன.

அப்பகுதியை அதற்குப் பின்னுள்ள சொற்றொடருடன் பொருத்திப் பார்க்க, “மேலும், அறிவில் உறுதிப்பட்டோர் சொல்கிறார்கள் ’அதுகொண்டு நம்பினோம், அனைத்தும் எம் ரட்சகனிடமிருந்தே’. (குர்ஆன்: 3:7).

இத்தொடரில் அதுகொண்டு (”பிஹி”) என்பதில் ஹி என்பது எதனைச் சுட்டுகிறது? இத்திருவசனம் குறிப்பிடுகின்ற இரண்டு வகை ஆயத்களில் இரண்டாவது வகையான “ஆயாத்தும் முஹஷாபிஹாத்” (உருவகமான திருவசனங்கள்) என்பதைக் குறிப்பதாகக் கொண்டால், “உருவகமான திருவசனங்களைக் கொண்டு நம்புகிறோம்” என்று பொருள்படும். ஆனால், அந்நிலைதான் முஃமின்கள் (இறைவிசுவாசிகள்) அனைவருக்கும் பொதுவானதாயிற்றே. எனவே பிஹி என்பதிலுள்ள சுட்டுவிகுதி (ளமீர்) இச்சொற்றொடரில் இதற்குச் சமீபமாயுள்ள ஒன்றையே குறித்து நிற்க வேண்டும். இந்தத் திருவசனப் பகுதி முதஷாபிஹாத்தான ஆயத்களின் “தஃவீல்” (உட்பொருள்) பற்றிப் பேசிச்செல்கிறது. எனவே “வ மா யஃலமு தஃவீலஹு...” (அதன் உட்பொருளை அறியமாட்டார்கள்...” என்னும் வசனப்பகுதியிலுள்ள தஃவீல் என்பதையே அது குறிப்பாகச் சுட்டுகிறது. (அதாவது, தஃவீலஹு என்பதில் உள்ள ஹு என்னும் விகுதி முதஷாபிஹாத் (உருவகத் திருவசனம்) என்னும் பதத்தைச் சுட்டுகிறது, அடுத்த நிலையில் ”பிஹி” என்பதில் உள்ள ஹி என்னும் விகுதி அந்த முதஷாபிஹாத்தின் தஃவீல் (உருவகத்தின் உட்பொருள்) என்பதைச் சுட்டுகிறது.) எனவே ”அது கொண்டு நம்பினோம்” என்று அறிவில் உறுதிப்பட்டோர் சொல்வதானது “உருவகத்திருவசனங்களின் உட்பொருளைக் கொண்டு நம்பினோம்” என்பதுதான். அதனை அவர்கள் இறைவனிடமிருந்து அறிந்துள்ளார்கள் என்பதையே இந்த விகுதிகளின் (ளமாஇர்) பயன்பாடு காட்டுகிறது.

”ராசிஃகூன ஃபில் இல்ம்” என்னும் பகுதியில் கவனம் செலுத்திச் சிந்திக்கவும். “அறிவில் உறுதிப்படுத்தப்பட்டோர்” என்பது இதன் பொருள். எந்த அறிவில்? எவ்வாறு? யார் படுத்தியது? எதற்காக? என்பன போன்ற கேள்விகளை இங்கே எழுப்பியாக வேண்டும். எந்த அறிவில்? என்னும் கேள்விக்கு, “இல்மெ பாத்தின்” என்னும் அந்தரங்கமான அறிவில் என்பதே விடை. ஏனெனில், இப்பகுதியானது வெளிப்படை அறிவை நல்கும் வெளிப்படையான ஆயத்கள் (முஹ்கமாத்) பற்றியல்லாது உட்பொருள் கொண்ட முதஷாபிஹாத் பற்றிப் பேசுகிறது. எனவே அதை கிரகித்துக்கொள்ள அந்தரங்கமான அறிவே பலப்படவேண்டியிருக்கிறது. (அவர்களுக்கு உட்பொருள் எதையும் கற்பிக்கப்போவதில்லை எனில் எதற்காக அவர்களை பலப்படுத்துவது?) அந்தரங்க ஞானத்தைத் தாங்க அபரிதமான ஆற்றல் வேண்டும். சாதாரண மனித மூளை அதனைத் தாங்காது. எனவே அல்லாஹ்வே அதனை அறிவில் உறுத்ப்படுத்திப் பின்னர் அதற்கு உட்பொருள் விளக்கத்தை வெளியாக்குகிறான்.

“ஆமன்னா பிஹி” என்னும் சொற்றொடரின் வெளிப்படையான பொருளில் “அதுகொண்டு நம்பினோம்” என்று மேலே கண்டோம். எனினும், அறியாதவர்களின் நம்பிக்கைக்கும் அறிந்தவர்களின் நம்பிக்கைக்கும் வேறுபாடு இருக்க வேண்டும். இங்கே நாம் உட்பொருளை அறிந்தவர்களின் நம்பிக்கையைப் பற்றியே பேசுகிறோம். அந்த நம்பிக்கையின் நிலை மேலானது. “அல்-ஈமானு ஹுவல் யகீன்” (நம்பிக்கை என்பது ஊர்ஜிதமே) என்று நபி (ஸல்) கூறியதன் அடிப்படையில், அறிவு, சத்தியம் மற்றும் தரிசனம் ஆகியவற்றின் படித்தரங்களில் அதனைக் குர்ஆன்  வகைப்படுத்துவதையும் (இல்முல் யகீன், ஹக்குல் யகீன், ஐனுல் யகீன்) நோக்க இங்கே ”உருவகத் திருவசனங்களின் உட்பொருளை அடைந்து கொள்வது” என்னும் விளக்கத்தைப் பெறலாகிறது. ஏனெனில், ஆமன்னா என்னும் சொல்லுக்கு நம்பினோம் என்பது மட்டுமல்லாது ‘அடைந்தோம்’ என்னும் பொருளும் உண்டு. ”ஈமான்” என்பதன் வேர்ச்சொல்லான அ-ம-ன என்பதிலிருந்து கிளைக்கும் சொற்களின் அர்த்தவெளியை அவதானித்தால் இவ்வசனப்பகுதியின் உட்கருத்து துலங்கிவரக் காணலாம்.

‘அமன்’ என்னும் சொல்லுக்கு பாதுகாப்பு என்று பொருள். சில மனிதர்களை ஹாஃபிழ்கள் (குர்ஆனை முழுவதும் மனனம் செய்தோர்) ஆக்கி அவர்களில் வைத்து அதனை அல்லாஹ் பாதுகாக்கிறான் என்பது போல் சில மனிதர்களை அறிவில் உறுதியாக்கி உருவகத் திருவசனங்களின் உட்பொருளை அவர்களின் வைத்து அல்லாஹ் பாதுகாக்கிறான்.

Image result for conferring sufi khilafat

’அமானத்’ என்னும் சொல்லுக்கு அடைக்கலம் என்று பொருள். நம்மிடம் அடைக்கலமாக ஒப்படைக்கப்பட்ட எப்பொருளுக்கும் அதனைப் பேணுகின்ற பொறுப்பு நம் மீது உண்டாகிவிடுகிறது. பொதுவாக முஸ்லிம்கள் அனைவரிடமும் ஈமான் (இறைநம்பிக்கை) என்னும் பொறுப்பு அடைக்கலமாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் குர்ஆன் சொல்வது பெரும்பாலும் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். (மலைகளே ஏற்க அஞ்சிய பொறுப்பை மனிதன் ஏற்றுக்கொண்டான் என்னும் கருத்துள்ள திருவசனம்) இங்கே இன்னும் கூடுதலான அடைக்கலம் பற்றிச் சொல்லப்படுகிறது. “உருவகத் திருவசனங்களின் உட்பொருள்” என்பதே அந்த அடைக்கலப் பொருள். அதனைப் பேணும் பொறுப்பு ஞானியர் மீது ஏற்படுகிறது. (”இழ்ஹாருஸ் சிர்ரி குஃப்ரு” – ரகசியத்தை வெளிப்படுத்துவது நிராகரிப்பாகும் என்று சூஃபிகள் சொல்கிறார்கள். ஏனெனில், ரகசியமாக வைத்துக்கொள் என்னும் பொறுப்புடன்தான் அந்தரங்க ஞானத்தை இறைவன் தருகிறான்.)

இந்த வெளிச்சத்தில் பார்க்கும் போது ”பிஹி” அச்சொற்றொடரின் அமைப்பில் தஃவீலஹு என்பதினும் இன்னும் அருகிலிருக்கின்ற ”அல்லாஹு” என்னும் சொல்லிற்கே மீளுகிறது. தஃவீலஹு என்பதன் பக்கம் மீள்வதாகக் கொள்ளும்போது “அதன் உட்பொருளைக் கொண்டு நம்புகிறோம்” என்றும், “அதன் உட்பொருளை அடைகிறோம்” என்றும் துலங்கும் பொருள், அல்லாஹு என்பதன் பக்கம் மீள்வதாகக் கொள்ளும்போது “அவனைக் கொண்டே அடைகிறோம்” (உருவகங்களின் உட்பொருள் விளக்கத்தை) என்பதாகப் பொருளாகிறது. இவ்விரு வகையிலுமே ”ஆமன்னா” என்பதற்கு அடைதல் என்னும் பொருள் பொருத்தமானது என்பதை இப்பகுதியைத் தொடர்ந்து வரும் சொற்றொடர் உறுதிப்படுத்துகிறது: “அனைத்தும் எம் ரட்சகனிடமிருந்தே (வந்துள்ளன)” (”குல்லும் மின் இந்தி ரப்பினா”). வருவதைத்தானே அடைய முடியும்? அறிவில் உறுதிப்படுத்தப்பட்டோர் தாமறியும் உட்பொருள் விளக்கங்கள் எல்லாம் இறைவனிடமிருந்தே வருவதைத் தெளிவாக அறிவார்கள் என்பதையும் அதில் அவர்களுக்குக் குழப்பமோ ஊசலாட்டமோ இருக்காது என்பதையும் இப்பகுதி காட்டுகிறது. நபியை மறுத்த யூதர்கள் அவர் இறைத்தூதர்தான் என்பதை அவர்களது மகன்களை அறிவது போல (அத்தனை ஊர்ஜிதமாக) அறிந்திருந்தார்கள் (’யஃரிஃபூனஹு கமா யஃரிஃபூன அப்னாஅஹும்’) என்கிறது குர்ஆன் (2:146; 6:20). பிராப்தமில்லாத ஒன்றையே ஊர்ஜிதமாக அறியத்தரும் அல்லாஹ் தான் நேசிக்கின்ற ஞானியருக்குத் தரும் விளக்கங்களை அஃது அவனிடமிருந்துதான் வருகிறது என்னும் ஊர்ஜிதம் இல்லாமல் குழம்ப விட்டுவிடுவானா?

இந்த அந்தரங்க அறிவை, உருவகத் திருவசனங்களின் உட்பொருள் விளகக்த்தை அறியும் வழிமுறை யாது என்னும் கேள்விக்கு இனி விடை காண்போம். முஹ்கமாத் என்னும் வெளிப்படை அர்த்தமுள்ள திருவசனங்கள் தரும் வெளிரங்க அறிவை (இல்மெ ழாஹிர்) அடைய நூற்களும் எழுத்துக்களும் பேச்சுக்களும் தருக்க நியதிகளும் சார்ந்த பகுத்தறிவுச் சிந்தனா முறை வகுக்கப்பட்டுள்ளது. வெளிரங்க அறிவை அடையும் அதே முறையில் அந்தரங்க அறிவை அடைய முடியாது என்பது சூஃபிகள் கண்ட தெளிவு. ஆழ்நிலை தியானமே அதற்கான வழிமுறை என்பதை அவர்கள் ஆயிரத்து நானூறு ஆண்டுகளாகச் செயல்படுத்தி வருகின்றார்கள். இத்திருவசனத்தின் இறுதிச் சொற்றொடர் இக்கருத்தின் பக்கம் வெளிச்சமிடுகிறது: ”இதயத்தின் மையங்கள் கொண்டோரே அன்றி எவரும் தியானிப்பதில்லை” (“வ மா யத்தக்கரூ இல்லா உலுல் அல்பாப்” –குர்ஆன்:3:7). இதில் இரண்டு கலைச்சொற்கள் உள்ளன. ’திக்ரு’ மற்றும் ’உலுல் அல்பாப்’.

திக்ரு என்பது நினைவுகூர்தல் (Remembrance) என்று பொருள்படும். தியானம் (Meditation) என்பதையே அப்படிச் சொல்லப்படுகிறது. பெருந்திரள் முஸ்லிம்கள் செய்யும் நாமதியானம் (தஸ்பீஹாத்) என்பதை இவ்வசனம் குறிப்பதாகச் சொல்ல முடியாது. ஏனெனில் இது சிறப்பு நிலை பெற்றவர்களான ‘உலுல் அல்பாப்’ என்போரின் தொடர்பில் சொல்லப்படுகிறது. எனவே அதன் தன்மை (Quality) அதனைச் செய்வோரை வைத்தே நிர்ணயிக்கப்பட வேண்டும். பெருந்திரள் முஸ்லிம்களின் தியானம் (திக்ரு) மேம்போக்கானதுதான், நாவுச் சேவைதான். அதிகபட்சம் அதில் அவர்களின் வாழ்க்கைச் சூழல் சார்ந்த உணர்ச்சிபாவங்கள் இருக்கலாம். (துக்கம் ஏற்பட்டுவிட்டால் அல்லாஹ் என்று கதறுவான். துக்கம் நீங்கிவிட்டால் இறைவனை மறந்துவிடுவான். காண்க குர்ஆன்:16:53,54). இங்கே ”ஆழ்நிலை தியானம்” என்பதுதான் சொல்லப்படுகிறது. ஏனெனில், செய்வோர் லுப் உடையவர்கள் என்று சுட்டப்பட்டுள்ளது. அரபியில் “லுப்” என்றால் ‘இதயத்தின் மையம்’ (Core of the heart) என்று பொருள். அதன் பன்மை அல்பாப் என்பது. உலுல் அல்பாப் இதயத்தின் மையங்கள் கொண்டோர். அதாவது இதயத்தின் மையம் வரை அவர்களின் தியானம் ஆழ்ந்திருக்கும். எனவே இவ்வசனத்தில் வரும் திக்ரு என்பது ஆழ்நிலை தியானம் என்பதைக் குறிக்கிறது.

Image result for aamir kaleemi shah noori zikr
Sayyiduna Noori Shah (rah) with his disciples of Sufism

இச்சொற்றொடரின் தொனியைப் பாருங்கள்: “உலுல் அல்பாப்களைத் தவிர வேறெவரும் தியானிப்பதே இல்லை”. அதாவது இவர்களின் ஆழ்நிலை தியானம் இறைவனுக்கு எந்த அளவுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்றால் இதர முஸ்லிம்கள் மேம்போக்காகச் செய்யும் திக்ருகளை எல்லாம் திக்ரு என்று சொல்வதற்கே தகுதி உள்ளதாக அவன் காணவில்லை! (தன் கருணையால் நமது ஓட்டை உடைசல் திக்ருகளுக்கும் நற்கூலி (ஸவாப்) தருவான் என்பது வேறு விஷயம்). எனில், உலுல் அல்பாப்களுக்கு – ஆழ்நிலை தியானிகளுக்கு அவன் என்ன தருவான்? சிறப்பாக ஏதாவது தரவேண்டுமல்லவா? அதுதானே நியாயம்? அந்தச் சன்மானம் என்ன என்பதைத்தான் இந்தத் திருவசனம் சுட்டிக்காட்டுகிறது. அதாவது, அவர்களுக்கு அவன் தன்னிலிருந்து அந்தரங்க ஞானத்தை, உருவகத் திருவசனங்களின் உட்பொருள் விளக்கத்தைத் தருகிறான்.


உலில் அல்பாப் என்பது தகுதிப்பாடாகவும் திக்ரு (ஆழ்நிலை தியானம்) என்பது வழிமுறையாகவும் ராசிஃகூன ஃபில் இல்மு (அறிவில் உறுதிப்பட்டோர்) என்பது எய்தப்பெறும் படித்தரமாகவும் தஃவீலி ஆயாத்தும் முத்தஷாபிஹாத் (உருவகமான திருவசனங்களின் உள்ளர்த்தங்கள்) என்பது அருளப்படும் சன்மானமாகவும் இருக்கிறது. எத்தனை உயர்ந்த இனிய நிலை! அதற்கென்று தான் தேர்ந்து கொள்ளும் சீதேவிகளின் கூட்டத்தில் அல்லாஹ் நம்மை ஆக்கி வைப்பானாக! ஆமீன்.

to be continued...

No comments:

Post a Comment