தோழனே!
பசுங்கிளைகள்
தரித்தும்
நெடுமரங்கள்
சாய்த்தும்
பாதை
சமைத்தேகும் நின்னுடன்
வருவதெங்கே,
கானகத்துள்
ஓடி மறைந்தொரு
விலங்கென
வாழ்ந்துவிடத் தவிக்கும்
மனத்துடன் நான்?
பெருநீர்ப்பரப்பெங்கும்
அலை கிழித்துச்
செல்லும்
கப்பலில்
நின்னுடன்
வருவதெங்கே
கருநீல
நீருலகில் ஒரு சிறு மீனாகி
நீந்தியிருக்கத்
தவிக்கும்
மனத்துடன் நான்?
எவ்வித்
தரைவிட்டெழுந்து
மேகங்களுக்கும்
அப்பாலுயர்ந்து
பறக்கும்
விமானத்தில் நின்னுடன்
வருவதெங்கே
தழைநிழலில்
சிறுகூடும்
கிளையமரும்
ஓய்வும் பெற்றுச்
சின்னஞ்சிறு
பறவையாகிச்
சிறகடிக்கத்
தவிக்கும்
மனத்துடன் நான்?
நண்பனே!
கல்லானாலும்
இப்பூமியில் எங்கென்றாலும் ஆகு
மரமானாலும்
இப்பூமியில் எங்கென்றாலும் ஆகு
புள்ளானாலும்
இப்பூமியில் எங்கென்றாலும் ஆகு
புல்லானாலும்
இப்பூமியில் எங்கென்றாலும் ஆகு
நீரானாலும்
இப்பூமியில் எங்கென்றாலும் ஆகு
வளியானாலும் இப்பூமியில் எங்கென்றாலும் ஆகு
நானற்று
யாதானாலும்
புனிதமாவாய்
மனிதனாய
நீ!
அருமை!!!
ReplyDeleteவாழ்த்துக்கள்!!! :)