Tuesday, May 16, 2017

துளிப்பாடு

Image result for bird drinking tap water

இன்று நாள் முச்சூடும்
அமர்ந்தாயிற்று
துளியொன்றின் தீரா வியப்பில்

இல்லை நண்பா!
சிறப்பானதென்றாக்கும்
எந்த அர்த்தப்பாடும்
அதன் மீது எண்ணற்க

புனிதத் தலமெதிலும்
ஊற்றெடுத்து வந்த
தீர்த்தத் துளி அல்ல அது

உழைப்பாளியின்
நெற்றியில் வழிந்து
புருவ ரோமத்தில் தொங்கிச் சிந்தும்
வியர்வைத் துளியுமன்று

அறப்போர்க்களமாடிய
தியாகியின் குருதித் துளியன்று

தியாகியின் ரத்தத்தினும்
வலிமையானதென்று
வருணிக்கப்பட்ட
மைத்துளியும் அன்று

இறைத்தூதரினதோ
இறைநேசரினதோ
கண்கள் வடித்த
கண்ணீர்த் துளியுமன்று

ஈன்ற குழவியின்
குருத்து வாய் உண்ணுதற்குப்
பெருங்கருணை திரவமாயிற்றென
தாயின் முலையூறும்
பால் துளியுமன்று

உடற்கொண்ட
உயிரிணைகளின்
காதற்கலவியின்
பாலும் தேனும் அல்ல

சித்தாந்த நூற்களிலும்
உணர்ச்சியூட்டும்
உரை வீச்சுக்களிலும்
நம் மீது தெளிக்கப்படும்
எவ்வொரு துளியுமல்ல அது

நண்பனே!
கவிஞர்தம்
காவியப் பேரழகி
ரோமாஞ்சலமாடிய
சிலிர்ப்பின் துளி அல்ல அது

குறைந்த பட்சம்
அமிர்தமெனக் கவிஞர் சிலாகிக்கும்
மழைத்துளி கூட அல்ல

புழக்கடையில்
உலோகக் குழாயின் விளிம்பில்
சொட்டக் காத்திருந்ததொரு
சாதாரண நீர்த்துளிதான் அது

கோடை தாளாக் குருவியொன்று
சிற்றலகால் உறிஞ்சிக் குடித்துப்
பறந்து சென்ற காட்சியில்
நீர்க்கோலம் நச்சுவதன் ஞானத்தை
ஒரு விம்மிதமாய்
தந்து சென்றது அது

க்ரௌஞ்சமும்
மூங்கிலிலைப் பனிநீரும்
ஒன்றான தருணமாய்
வாய்க்கப் பெற்றேன் அதை

எவ்வுலகின் எத்தீயும்
அதனால் அணையும் என்பதான
சாதாரண நீர்த்துளிதான் அது


No comments:

Post a Comment