Tuesday, November 22, 2016

ரூமியின் தோட்டம் - 6

Image result for man is microcosm

அறிவியல் சொல்கிறது, மனிதன் பிரபஞ்சத்தினும் மிக மிகச் சிறியன். ஆன்மிகம் சொல்கிறது, மனிதன் பிரபஞ்சத்தினும் மிக மிகப் பெரியன். “நீயொரு சிறிய பிரபஞ்சம் என்று நினைக்கிறாய். மனிதனே! நீயே பெரிய பிரபஞ்சம் என்பதை அறி!” என்றார்கள் ஹழ்ரத் அலீ முர்தழா. மனிதப் படைப்பின் சாத்தியப் பரிமாணங்களை அடைந்து முழுமைப் பெற்றுவிட்ட மனிதனை சூஃபிகள் “இன்சானுல் காமில்” (செம்மனிதன்) என்று அழைக்கின்றனர். சூஃபி யார்? விருட்சமாய் விரிந்த விதை! பிரபஞ்சத்தில் தானொரு அங்கம் போல் மனிதவுருக் கொண்டு நடமாடும் ஞானியருக்குள் எத்தனையோ பிரபஞ்சங்கள் அடக்கம். அன்னார் பற்றி மவ்லானா ரூமி சொல்கிறார்:

இங்கிப்போது நம்முடன் இருக்கின்றனர்

ஒவ்வொரு அதிகாலையும்
ஒடியாப் புதுக்குதிரை மீதேறி
வானேழின் எல்லைகள் கடந்து செல்வோர்,

சூரியனும் நிலாவும் தலையணையாய்
இரவில் துயில் கொள்வோர்

இந்த ஒவ்வொரு மீனின் உள்ளும்
ஒரு யூனுஸ் நபி
கரிப்புக் கடலினை இனிப்பாக்கியபடி

மலைகளைப் பிசைந்து வடிவமைக்கும் திறத்தினர்
எனினும் அவர்தம் செயல்கள் எதுவும்
வரமும் அல்ல சாபமும் அல்ல

அதி நிதர்சனம் எனினும்
அதனினும் ரகசியம் அவர்

ஓடைப்புனலில் அவர்தம்
பாதப் புழுதியைக் கலந்துவிடு

அது கொண்டு கண்ணுக்கு மை எழுது

இதுவரை உன்னுள் நீ
நிந்தித்திருந்த முள்ளொன்று
ரோஜாவாய் மலர்ந்திடக் காண்பாய்

v
Image result for sufi guru
      
ஆயுள் பரியந்தம் மூளையைக் கசக்கினாலும் எவ்வொரு மேதையும் சிக்கறுக்கக் காணாத கணக்கு இவ்வாழ்க்கை. இரண்டும் மூன்றும் ஏழு என்று லகுவாகச் சொல்லிச் சிரிக்கும் குழந்தையின் பேதைமை. அது வேண்டும் நமக்கு. போரும் அமைதியும் இரவும் பகலும். மண்ணில் மட்டுமல்ல, மனதிலும். சூர்யோதயப் போதுக்கான காத்திருப்புத் துயரம் எல்லோர் வாழ்விலும் உண்டு. ஷம்ஸுத்தீன் என்னும் ஞானச் சூரியன் – குருநாதர் – வரும் வரை மை எழுதிய இருளாய்த்தான் இருந்தது மௌலானா ரூமிக்கும் கல்வியறிவு எல்லாம். குரு யார்? இதயத்திற்குள் தலையை ஊறப்போடும் கலையைச் சொல்லித் தருபவர். உன்னைத் தன் சஹ்ருதயனாய் மாற்றும் தயன். மவ்லானா ரூமி சொல்கிறார்:

நைல் நதி பாய்கிறது
குருதிச் சிவப்பாய்
நைல் நதி பாய்கிறது
ஸ்படிகத் தூய்மையாய்

காய்ந்த முட்களும் அகிலும் ஒன்றுதான்
நெருப்புத் தீண்டும் வரை

வீரனும் கோழையும் சமமாகவே நிற்பர்
சர மழை பெய்யும் வரை

வீரர்களுக்குப் போர் பிடிக்கும்
வியூகம் அறியும் நுட்ப அரிமா
இரையைத் தன்னிடம் ஓடிவரச் செய்கிறது
“என்னைக் கொல்”

இறந்த கண்கள் வெறிக்கின்றன
வாழும் கண்களை.

இது என்னவென்று தலையை உடைக்காதே

காதலின் வேலை அபத்தமாய்த் தோன்றும்
எனினும், அர்த்தம் காணும் முயற்சி
அதனை மேலும் திரையிடுகிறது.

மௌனம்.

v
Related image
     
 கலை என்பது நிஜத்தின் நிழற்படம். தத்துவம் நிழல். கிரேக்கத் தத்துவம்தான் சூஃபித்துவத்தின் பிதா என்பார் உளர். அது ஓர் உட்காய்ச்சலின் உளறல் என்பதறிக. நிழலின் விளைவாய் நிஜம் தோன்றியதில்லை இதுவரை. சூஃபித்துவம் என்பதென்ன? அது எப்போது தோன்றிற்று? இக்கணத்தில் முகம் காட்டும் விடை: ‘ஆதமுக்குள் அல்லாஹ் தன் ஜீவனிலிருந்து ஊதுவதன் அனுபவம் அது.’ இங்கே செய்வது அங்கே அனுபவிப்பதற்கான அறுவடை என்னும் நியதிக்கு மேலே தெய்வீகக் கருணையால் உயர்த்தப்பட்டவர்கள் சூஃபிகள். அவர்க்கு, இங்கும் அங்கும் அறுவடையே! ‘லஹுமுல் புஷ்ரா ஃபில் ஹயாத்தித் துன்யா வ ஃபில் ஆஃகிறா’ – ’அவர்களுக்கு இம்மை வாழ்விலும் மறுமையிலும் சுப சோபனம்’ என்கிறது குர்ஆன். இசைஞனின் மூச்சு ஊதலில் மெய்ம்மறந்து சொக்கியுள்ளது புல்லாங்குழல், வீட்டிலாயினும் காட்டிலாயினும். மவ்லானா ரூமி சொல்கிறார்:

நிலப்பறவை
ஆழ்கடலின் மீது
என்னதான் செய்யும்?

முழுப் பாழின் மதுவிடுதி
வெளித் தள்ளிய சித்தர்கள் யாம்,

கணமேனும் கவலையில்லை
லாபம் அல்லது வரதட்சணை அல்லது
எதை உடுத்துவது என்பதெல்லாம்.

பைத்தியத்திற்கு
நூறாயிரம் வருடங்களுக்கு அப்பால்
இருக்கின்றோம்.
பிளாட்டோ பேசவில்லை இது பற்றி.

ஆண் பெண்ணின் உடலழகு
இங்கொரு உருவம் அல்ல.

எவ்வளவு மரிப்பரோ
அவ்வளவே காதலரின் உயிர்ப்பு

ஷம்ஸிடம் கேட்கிறதொரு புனிதாத்மா:
“என்ன செய்கிறாய் இங்கே?”
விடை:
“அங்குதான் என்ன செய்ய?”

v
Image result for shabda kahn

     பண்பாட்டு அடையாளங்கள் ஆடைகள் எனில் அதன் விழுமியங்கள் தேகம். சத்தியம் என்பது இவற்றில் தன்னைக் காட்டிக் கொள்ளக்கூடும் எனினும் அது இவை அல்ல. எங்கே தேகத்தையே உதறிவிட வேண்டியுளதோ அங்கே ஆடை களையவும் தயங்குவோர்க்கு என்னதான் கிட்டும்? முகமூடி அணிந்து கொண்டு கண்ணாடி பார்ப்பவன் தன் முகத்தை எப்படிப் பார்க்க முடியும்? உன் சுயத்தின் முகத்தை நீ காணவொட்டாது தடுக்கும் முகமூடிகள்தான் எத்தனை, கால தேச இன மொழி மதம் சார்ந்த பண்பாடுகள் என்னும் பெயரில்? சத்தியத்தின் சந்நிதியில் முகமூடிகளுடன் வந்து நிற்போர்க்கு சத்தியத்தின் தரிசனம் ஒருபோதும் இல்லை. மவ்லானா ரூமி சொல்கிறார்:

அக்கறையான அறிவுரைகளைப் புறந்தள்ள
சரியான தருணம் இது,

பண்பாடு நம்மில் இடும் முடிச்சுக்களை
அவிழ்த்துவிட

சீக்கிரம் முடி.
புறச்செவிகள் இரண்டிலும் பஞ்சு அடை

நாணற் காட்டினுள் மீண்டும் செல்
சர்க்கரை இனிமை
மீண்டும் உன்னில் ஏறட்டும்

விதிகளோ அன்றாடக் கடமைகளோ இல்லை
மௌனத்தின் அமைதியை அவை கொண்டு வருவதில்லை

v

Image result for shabda kahn 
    
இன்னல்லாஹ ஜமீலுன் வ யுஹிப்புல் ஜமால்” – ’இறைவன் அழகன், அவன் அழகை நேசிக்கிறான்’ (ஹதீஸ் குத்ஸி). ஒவ்வொரு சிருஷ்டியும் அந்த அழகெனும் சாகரத்தின் ஓர் அலை. சௌந்தர்ய லஹரி. ஞானி யார்? ஆழிப் பேரலை! சூஃபிகளின் தியான சபை என்பதென்ன? அவன் தன் அழகைத் தனக்குக் காட்டித் தானே ரஸித்திருக்கும் நிகழ்வு. பிரபஞ்சம் முழுதும் சூஃபி சபையே. குல்ல யவ்மின் ஹுவ ஃபீ ஷஃன் – ’ஒவ்வொரு நாளும் அவன் தன் வெளிப்பாட்டில் இருக்கிறான்’ (குர்ஆன்: 55:29). அகத்தின் கண் இன்னும் திறக்காத மனிதரின் முன் இப்பிரபஞ்சம் என்பது என்ன? இசையைக் கல்லாதவன் முன் விரிக்கப்பட்ட இசைக் குறிப்பேடு! மவ்லானா ரூமி சொல்கிறார்:

ஒவ்வொரு சபையின் நோக்கமும் இதுவே
அழகைக் கண்டறிதல்
அழகை நேசித்தல்.

பசித்த யாசகரின் அளவுக்கு
அடுமனைக்காரர் அறிவதில்லை
ரொட்டியின் சுவையை

நேசன் அறிய விரும்புவதால்
அருவங்கள் உருக்கொள்கின்றன

மறைவதே படைப்பின்
மறைவான நோக்கம்.

உன் விதையைப் புதைத்துக்
காத்திரு.

v


      அறிஞனின் ஆன்மா வழங்க முடியாத கனிவை ஞானியின் தேகமே உனக்கு வழங்கிவிடும். அவரின் உள்ளும் புறமும் ஒளிமயம். அறிஞனின் தலையை விட்டுத் தப்பித்து ஞானியின் பாதத்தில் அடைக்கலம் ஆகு. உடலுக்கு உண்டாகும் நோய்களை நீக்க மூலிகைகள் பல. அகநோய் நீக்கும் மூலிகை குருவின் கை ஒன்றுதான். வேர்களைத் தான் கெட்டியாகப் பிடித்து வைத்திருப்பதான பெருமிதத்தில் கிடக்கிறது மண். நீ நீராகி வேருக்குள் நுழைந்து விடுவாய் எனில் ஒருநாள் அல்லது ஒருநாள் கொப்பின் நுனியில் சிரிக்கும் மலரில் இருப்பாய், பின் அதன் கனியில் இருப்பாய். மவ்லானா ரூமி சொல்கிறார்:

ஒவ்வொரு மூலிகையும்
ஏதேனும் நோய் நீக்கும்

ஒட்டகைகள் முட்களைத் தின்னும் பிரியமாய்
நமக்கோ உட்பருப்பு வேண்டும்
கொட்டாங்குச்சி அல்ல.

முட்டையின் உட்புறம்
பேரீத்தங்கனியின் வெளிப்புறம்
அப்புறம், உனது உள்ளும் வெளியும்?

பல அடிகள் மேலே
கிளைகள் உறிஞ்சும் நீர் போல

கடவுளிடம் உனது ஆன்மாவும்.


No comments:

Post a Comment