சில ஆண்டுகளுக்கு
முன் “அகப்பார்வை” என்னும் ஆழிய ஆன்மிக நூலினைத் தந்த நண்பர் நூருல் அமீன் ஃபைஜி அவர்களிடமிருந்து
புத்தம் புதிதாக ஒரு நூல் தூதஞ்சலில் வந்து சேர்ந்தது. உறையைப் பிரித்து நூலின் முகத்தைப்
பார்த்த மாத்திரத்தில் பரவசம்! “ஏகத்துவ இறைஞானம் – ஓர் எளிய விளக்கம்” என்பது நூலின்
பெயர். மேலும், நூலின் முன்னட்டையிலேயே இமாம் சாஅதி (ரஹ்) அவர்களின் அழகிய மேற்கோள்:
”பாதுகாப்பு வேண்டும் என்றால் கரையில் நில்
பொக்கிசம் வேண்டும் என்றால் கடலினுள் செல்”
பார்த்தவுடன் பரவசம் என்று நான் சொன்னது நூலின் நேர்த்தியான அட்டைப்பட
ஆக்கத்தை வைத்து. நீல நிறம் பிரதானமாகத் தீற்றப்பட்ட நவீன ஓவியம் அது. கடலின் குறுக்கு
வெட்டுத் தோற்றம். மேலும் கீழுமாய் தளும்பும் அலையின் மேலே படகிலிருந்து ஒருவன் கடலுக்குள்
தூண்டிலிடுகிறான். உயிர்வளி உருளையை முதுகில் மாட்டிக்கொண்டு ஒருவன் கடலுக்குள் குதித்துச்
செல்கிறான். மேற்சொன்ன இரண்டு வரிகளுக்கு மிகவும் பொருத்தமான படம்.
நீல நிறம் சட்டென்று என் மனதைக் கவரும் ஒன்று. இந்த நூலின் அட்டையைக்
கண்டவுடன் இதே போல் நீல நிறம் பிரதானமாக அமைந்த அட்டை போர்த்திய நூற்கள் நினைவில் எழுந்தன.
இந்நூல் வந்த அதே கட்டத்தில் என் கைக்கு வந்து சேர்ந்த இன்னொரு நூல், ஜெயமோகன் எழுதிய
முக்கியமான நாவல்களில் ஒன்றான பின் தொடரும் நிழலின் குரல்”. வின்செண்ட் வான் கா தீட்டிய
ஓவியம் ஒன்று அதன் அட்டைப்படம். நீல நிற வானம் இம்ப்ரஷனிஸ பாணியில் தீற்றல்களாகக் காட்சி
தரும்.
அதே போன்ற பாணியில் நீல நிற வானின் கீழே நாகூர் தர்காவின் வெண்ணிற
விதானம் காட்சி தரும் நவீனக் கணினி ஓவியம் அட்டைப்படமாக அமைந்த ஆங்கில நூல் ”THE
OCEAN OF MIRACLES: LIFE OF QADIR WALI”. நண்பர் நாகூர் ரூமி எழுதியது. இந்த நூலினை
அடியேன் நாகூர் தர்காவிலேயே வாங்கினேன். அப்போது நூருல் அமீன் அவர்களும் தர்காவிற்கு
வந்திருந்தார். இருவரும் இணைந்துதான் ”ஜியாரத்” செய்தோம். அவரிடம் விடைபெற்றுக்கொண்டு
கிளம்பும்போது இந்த நூலை ஒரு கடையில் வாங்கினேன். சற்று தூரம் சென்றபோது ஒரு வீட்டின்
வாசலில் காரிலிருந்து நாகூர் ரூமி இறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டேன்! சந்தித்து அவரிடமும்
சிறிது நேரம் பேசிவிட்டுக் கிளம்பினேன். அற்புதக் கடலிலிருந்து ஓர் அலை!
நாகூர் ரூமிக்கும் நீல நிறம் பிடிக்கும் போல. அவர்து சூஃபி வழி (கிழக்குப்
பதிப்பகம்), ஆல்ஃபா தியானம் ஆகிய நூற்களின் நீல நிற அட்டைகளை மிகவும் ரசித்திருக்கிறேன்.
சொல்லாத சொல், வரலாறு படைத்த வரலாறு ஆகிய நூற்களும் பின்னர் நீல நிற அட்டை தாங்கியே
வந்தன. செய்கு ஹஸ்ரத் ஆசாத் ரசூல் என்னும் சூஃபி குருவின் நூலினைத் தமிழாக்கம் செய்து
“இதயத்தை நோக்கித் திரும்புதல்” என்னும் தலைப்பில் வெளியிட்டார். அந்நூலுக்கும் அட்டை
நிறம் நீலம்தான்.
சென்ற ஆண்டு நான் வாங்கிய நூற்களுள் நீல நிறத்தால் கவர்ந்தது ஜெயமோகனின்
“விஷ்ணுபுரம்” (கிழக்கு). அதற்கு முன், பவ்லோ கொய்லோவின் “The Witch of
Portobello”. அவரின் இன்னொரு நூலான அலிஃப் என்பதற்கும் அழகிய நீல நிற அட்டை கொண்ட பதிப்பு
ஒன்றுண்டு. நான் அமேசானில் ஆர்டரிட்ட போது செந்நிற அட்டை கொண்ட பதிப்பின் பிரதியே வந்தடைய
ஏமாற்றத்தில் சற்று நொந்தேன்.
பீர் விலாயத் ஃகான் எழுதிய “Thinking Like the Universe” என்னும் சூஃபித்துவ
நூலினைக் கி.பி.2000-இல் சென்னை லேண்ட்மார்க்கில் வாங்கினேன். ஷெல்ஃபிலிருந்து அதனைக்
கையில் எடுத்தபோதே அதன் அட்டையின் நீல நிறத்தால் கண்களும் மனமும் குளுமை அடைந்தன. இப்போதும்
அந்த அனுபவத்தை என்னால் மனதில் மீட்டெடுக்க முடிகிறது.
இப்படியே நினைவின் அடுக்கில் பின்னோக்கி நகர்ந்து செல்லும்போது எனது
பதின்பருவத்தின் இறுதிக் காலத்தில், தஞ்சை முரசு புத்தக நிலையத்தில் வாங்கிய நூலொன்றில்
போய் நிற்கிறது. அப்போதைய வயதின் முதிர்ச்சியற்ற மனநிலையில் நான் பெரிதும் சிலாகித்த
கவிஞர் வைரமுத்துவின் “சிகரங்களை நோக்கி” (சூர்யா பதிப்பகம்). சிகரமுகடொன்றின் விளிம்பில்
கைகளை விரித்தபடி காட்டுவாசி ஒருவன் நிற்கிறான். அவன் பின்னே பிசிரற்ற நீல வானில் நிலா
ஒளிர்கிறது.
சிறு வயதில் எனக்கு ஓவியம் வரைவதில் திறனும் ஆர்வமும் இருந்தது. வரைவதை
நிறுத்திய பின்னும் ஓவியர்கள் குறித்து வாசிப்பதில் ஈடுபாடு இருந்து வருகிறது. ஓவியர்களுக்கு
நிறங்களை அவதானிப்பதில் ஒரு தனிக் கூர்மை இருக்கும். அவர்களுக்கு நீலம் என்பது மனதிற்கினிய
நிறமாதல் வேண்டும் என்றே தோன்றுகிறது. வான்கா, மோனெ ஆகியோரின் ஓவியங்கள் சான்று. மட்டுமல்ல,
பாப்லோ பிக்காஸோவின் ஓவிய வாழ்வில் நீலக் காலக்கட்டம் (Blue Period) என்றே தனிப்பகுதி
உண்டு.
நீலம் என்பது கடல். அது ஆழத்தையும் மர்மத்தையும் குறிக்கிறது.
நீலம் என்பது வானம். அது விரிவையும் உயரத்தையும் குறிக்கிறது.
நீலம் என்பது அடர்ந்து கொண்டே போய் கருமை ஆகும்போது அதுவே வானின் எல்லைக்கு
அப்பால் விரிந்துள்ள விண் வெளி ஆகிறது. அது எல்லையின்மையைக் குறிக்கிறது.
வெய்யோனின் வெளிச்சம் துலக்கிய பருவுலகின் படிமங்களுள் நீலத்தின் சாயை
கொள்ளாமல் இரவின் இருளில் சரிகின்றது ஏது?
ஜெயமோகனின் செவ்வியற் புதினமான உரைநடைக் காவியம் “கொற்றவை”யின் முதற்பகுதியின்
முதற்பத்தி நினைவு வருகிறது: “அறியமுடியாமையின் நிறம் நீலம் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள்.
நீலத்தின் எல்லையின்மை வானம். நீலத்தின் அலைகளே கடல். நீலம் ஒரு புன்னகை. கருமைக்குள்
ஒளி பரவுவதன் வண்ணம் அது. கருமையோ வெளியை முழுக்கத் தன்னுள் அடக்கிக் கொண்ட பெருவெளி.
கருமையில் இருந்தே ஒவ்வொன்றும் பரு திரட்டி வருகின்றன. கருமையை அஞ்சினார்கள். அதன்
முடிவற்ற வல்லமையை வணங்கவும் செய்தார்கள். ஆகவே அவர்களுக்கு நீலமே உகந்த நிறமாயிற்று.
புன்னகைக்கும் கருமையே நீலம்.” (ப.13; தமிழினி பதிப்பகம்; டிசம்பர் 2012).
விஷத்தின் நிறமாக நீலமே காட்டப்பட்டு வருகிறது. நச்சரவம் தீண்டிச்
சாய்ந்த தேகம் நீலமாகிறது. ஆலகாலம் என்னும் நஞ்சினை உண்டவனின் கழுத்து நீலகண்டம் என்றும்
நீலமணிமிடறு என்றும் சுட்டப்படுகிறது. எனில், நீலம் என்பது மரணத்தின் நிறம்.
மரணம் என்பது இன்னொரு வாழ்வின் தொடக்கம். அவ்வகையில் ஒருவாழ்வின் முடிவான
மரணமே மறுவாழ்வின் தொடக்கமான பிறப்பு. எனில், விஷம் என்பது அமிர்தத்தின் போலி. எனவே,
நீலம் என்பது அமிர்தத்தின் நிறம். நீலம் என்பது வாழ்வின் நிறம்!
அடியேனின் ஆடைகளில் செம்பாகம் நீல நிறமாகவே இருக்கின்றன. (சகதர்மினிக்கும்
பிள்ளைகளுக்கும்கூட அப்படித்தான் அமைகின்றது). நீல நிறத்துடன் இயைந்து பொருந்தும் பிற
நிறங்களும் பிடித்திருக்கிறன. பச்சை, மஞ்சள், ஆரஞ்சு இப்படி.
நீலத்தின்
பிரிகைகளுள் எனக்குப் பிடித்தது ஆழ்கடல் நீலம். அபூர்வமாக, கார்காலத்து வானில், அந்திக்குப்
பின்னான நேரத்தில், மக்ரிப் தொழுகையின் தொடக்கத் தருணத்தில் அந்த நீலம் காணப்படும்.
சூரியன் தலை காட்டுவதற்கு முந்தைய வைகறைத் தருணத்திலும் அந்நீலம் தென்படும். சொர்க்கத்தின்
நின்றிலங்கும் பொழுது அவ்வண்ணம்தான் கொண்டிருக்கும் என்று பல முறை எண்ணியதுண்டு.
நீல நிறத்தில்
இதுவரை உணவு எதுவும் தட்டுப்படவில்லை. மிஸ்டர் சோடாவில் ப்ளூபெரி சுவையில் நீல நிற
சோடா மட்டும் பருகியிருக்கிறேன். பச்சை நிறத்தின் மீது முஸ்லிம்களுக்கு உள்ள ஈடுபாடு
பற்றி நாகூர் ரூமி ஓர் அங்கதம் செய்திருப்பார், அது நினைவுக்கு வருகிறது: “முஸ்லிம்கள்
எப்பவும் தேநீர்தான் குடிக்கிறார்கள். இத்தனைக்கும் அது பச்சை நிறமாகக்கூட இல்லை”
(நினைவிலிருந்து எழுதுகிறேன்).
நூருல் அமீன் அவர்களின் நூல் வந்து சேர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேல்
ஆகிறது. யுவனின் “வெளியேற்றம்” நாவலை இரண்டாம் சுற்று வாசித்துக் கொண்டிருந்ததால் உடனடியாக
இதனை எடுத்து வாசிக்க முடியவில்லை. ஆனால் அவ்வப்போது அதனை எடுத்து அட்டையை ரசித்துவிட்டு
வைத்துவிடுவேன். நூலினை நேற்றுதான் வாசித்து முடித்தேன். அதன் உள்ளடக்கம் பற்றித் தனியே
எழுதுகிறேன், இன்ஷா அல்லாஹ்.
No comments:
Post a Comment