Sunday, November 11, 2012

நுஸ்ரத்




கவ்வாலி உலகின்
கம்பன் நீ!
ஆமாம்
பத்தாயிரம் உன்
கீழ் எல்லை!

சூஃபி இசையின்
சூக்குமங்களில்
நீ தொடாதது
ஏதும் இல்லை!

மனிதனுக்கு
மூச்சு நிற்கும்
சட்ஜமத்தில்
சப்பணமிட்டமர்ந்து
சஞ்சாரம் செய்வாய் நீ
சாவகாசமாய்!

உன் குரலுக்கு
முகவரி
உச்ச ஸ்தாயி;
பேசுவது போல்
எளிதுனக்கு
மிச்ச ஸ்தாயி!

பலருக்கு
முட்டுக்கட்டை போட்டு
முற்றுப்புள்ளி ஆகும்
எட்டுக்கட்டை
உனக்கு
முற்றமாய் இருந்தது!

நீ
ராகங்களின் வானில்
ராஜாளி!
ஆலாபனை
அலைகள் வீசிய
ஆழி!

மலை போல்
உன் சரீரம்
மழை போல்
உன் சாரீரம் – அதில்
இருந்தது எப்போதும்
இறை நேசத்தின்
ஈரம்!

உன் குரலில்
இருந்தது
காயத்தின் வலி – அது
திறந்தது
காயத்தைக் கடக்கும்
வழி!

நீ
ஆரோகணத்தின்
முடியையும்
அவரோகணத்தின்
அடியையும்
தரிசித்து வந்த
தவசி!

நீ பாடிய
காதல் கஸல்கள்
மனித உணர்வுகளைப்
புனித உணர்வுகளாய்ப்
புடம் போட்டன!

இசை உலகில்
புதிய தடம் போட்டன!

உன் குரல்
உண்மையைப் பாட
பெண்மையின் மென்மையும்
ஆண்மையின் திண்மையும்
இருமையற்று
ஒருமையான
இருண்மை!

நீ இசைத்த
ஒவ்வொரு துளியிலும்
இருந்தது
எல்லையற்ற கடலின்
பொருண்மை!

எத்தனையோ பேரின்
இசைகள் இங்கே
வெறும் (வி)ரசஞ்சாதம்;
உன் இசையோ
மண்ணைப் பொன்னாக்கும்
ரசவாதம்!

a

No comments:

Post a Comment