Friday, November 9, 2012

உன் இசை





பாடல் ஒன்று இசைத்தேன்
நீ வருவாய் என்று
வழக்கம் போல்
கண்ணீரை அனுப்பி வைத்தாய்

உன்னைத்
தழுவுவது போல்
தோன்றியது
என்னுள் இழைந்த
ஆலாபனை

கீதம் மௌனமாகிறது
சில நேரம்
உன் முத்தம் கிடைத்ததுபோல்
சில நேரம்
உன்னைப் பிரிவது போல்

உன் சுவை
ஊட்டிப்
பசி பெருக்கும்
இசை

ஸ்வர இதழ்களில்
இசைப்பூவின் தரிசனம்
மனம் கரைய இழைந்த
மணம் என்ன?
ஊன் உருக இனித்த
தேன் என்ன?

பண் செய்த புண்
ஒவ்வொன்றும் ஆகும்
உன்னைப் பார்க்கும்
கண்

இத்தனை மென்மையான
இசையை
எப்படித்தான் தாங்குகிறதோ
கருவி?

உன் இசை
மரணக் காம்பில்
சுரக்கும் பாலோ?

உன் இசை
என் வெளியே
விரிகின்ற
விருட்ச நிழல்
என் உள்ளே
எரிகின்ற
விரகத் தழல்

என் ஸ்வரங்களின்
உச்ச ஸ்தாயிகள்
உன் உதடுகளில்
முத்தமிட எத்தனிக்கும்

காலத்திற்கு வெளியே
உன்னோடு உலவி வர
கதவு திறக்கும்
இசை

இசையின்
கண்ணாமூச்சி விளையாட்டில்
நான்
உன்னுள் கண்பொத்தினேன்
நீ
என்னுள் ஒளிந்து கொண்டாய்

தீ தின்னும்
மெழுகுப் பதக் கனியானேன்
இசையால் என்னை
நீ தின்னும் பொழுதுகளில்

இசையின்
இருளறையில்
உன் மூச்சுடன்
முயங்கி வந்தேன்

a

No comments:

Post a Comment