Thursday, November 22, 2012

ஜென்டில்மேனரிசம்ஸ் ஆஃப் இந்தியா


என் தந்தையுடன் கதைத்துக் கொண்டிருந்துவிட்டு இதை எழுதத் தொடங்குகிறேன். உரையாடல் என்றால் சரிவிகித டயலாக் அல்ல. அவரின் மனத்தில் நினைவுகளின் பிரவாகம். எனவே ’ம்’ ‘அடடே’ ‘ம், சொல்லுங்க’ ‘ஆஹா’ ‘ஆங் தெரியும் தெரியும்’ முதலிய வார்த்தைகளில் மட்டும் என் பேச்சைச் சுருக்கிக் கொண்டு அவர் பேசுவதை ரசித்துக் கொண்டிருந்தேன்.

தன் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களின் சுவாரஸ்யமான சம்பவங்கள் பலவற்றை என்த் டைம் என்னிடம் சொல்கிறார் எனினும் காதுகளைத் தீட்டிக்கொண்டு கேட்டேன். அப்படிக் கேட்க வேண்டும் என்பது இலக்கியங்கள் எனக்குக் கற்றுத் தந்த ஒன்று. தன்னுடைய காலத்தை அவர் என்னில் பாதுகாக்க நினைக்கிறார். புதிதாக ஏதாவது ஒரு நினைவு இப்போது மேலெழுந்து வந்து வெளிப்படக்கூடும். எனவே, அவரின் ஃப்ளோவைத் தடுக்காமல், ‘இதையே எத்தனை தடவதான் சொல்லுவீங்க’ என்று அலுத்துக் கொண்டு ஜெனரேஷன் கேப் என்னும் அபத்தத்தை வெளிக்காட்டாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். சங்க இலக்கியம், காப்பியங்கள் எல்லாம் படிக்கிறோமே, அதன் வழி நம்மில் வந்து சேர்வது மூதாதையரின் காலம்தான் அல்லவா? என் தந்தை தன் நினைவுகளைச் சொல்லக் கேட்டுக்கொண்டிருந்தது ஏதோ சங்க இலக்கிய வாசிப்பின் இன்பத்தை நல்கியது. எதிர்பார்த்தது போலவே புதிதாக ஒரு தகவலை இன்று சொன்னார். திட்டமிடாமல் சர்ரியலிசமாய் நினைவடுக்குகளின் அடியாழத்திலிருந்து வந்த அந்தத் துணுக்கு கவித்துவமான ஒரு ஹாஸ்யம்.

ANDY என்று ஒரு நண்பன் இருந்திருக்கிறான். (தமிழில் எழுதினால் ஆண்டி என்று வருகிறது. எனவே இப்பெயரை ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டியுள்ளது. ’நந்தவனத்தில் ஓர் ஆண்டி’ என்றும்கூட பாடிக் கலாய்த்திருப்பார்கள். என் தந்தை இதைச் சொல்லிக் கொண்டிருக்கையில் மேற்கிந்திய கிரிக்கட் வீரர் Andy Flower-ஐ நாங்கள் ’ஆண்டிப் புலவர்’ என்று சொன்னது நியாபகம் வந்தது.) அவனை எல்லோரும் AUNTY AUNTY என்று கூப்பிடவும் அவனுக்கு பேஜாராகிவிட்டது. லொள்ஸ் தாங்காமல் கெஜட்டில் கொடுத்துத் தன் பெயரை மாற்றிக்கொண்டே வந்துவிட்டானாம். சிரித்த முகத்தோடு வந்திறங்கி “இப்ப என்ன பண்ணுவீங்க? என் பெயரை மாத்திக்கிட்டேன். Now my name is Andu” என்று சொல்லியிருக்கிறான். இதைக் கேட்டு எல்லோரும் வெடித்துச் சிரித்திருக்கிறார்கள். “டேய் இங்கப்பார்றா இவன, வருஷம்னு பேரு வச்சிக்கிட்டு வந்திருக்கான்” என்று ஒருவன் சொல்ல, அது என்னவென்று புரியாமல் ‘ஆண்டு’ மண்டு போல் முழித்தானாம்.

இது போன்ற பல சம்பவங்களை என் தந்தை பேசக் கேட்டிருந்த போது என் மனத்தில் என் கல்லூரி நண்பர்களின் நியாபகம் உதித்துக் கொண்டிருந்தது. எத்தனைப் பேர்கள்! அவர்களுக்குத்தான் எத்தனைப் பட்டப்பெயர்கள்! சில வருடங்களுக்கு முன் கல்லூரி நண்பன் ஒருவனைச் சந்தித்த போது அவர்களைப் பற்றியெல்லாம் பேசிக்கொண்டோம். அந்த உரையாடல் ஏறத்தாழ பின்வருமாறு அமைந்திருந்தது:

“buffalo எப்படிடா இருக்கான்?”
“பெங்க்ளூர்லதான் இருக்கான். ஒரு பையன் அவனுக்கு”
“பால்குட்டியும் அவன்கூடதான் ஒர்க் பண்றானாமே? இப்பவும் அப்படியேதான் இருக்கானா?”
“அப்படியேவா இருப்பான். இப்ப அவன் ப்ராஜக்ட் லீடர். கல்யாணமாகி ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க”
“வருஷம் போறதே தெரியலடா”
“கம்பிச்சூபா எங்க இருக்கான்?”
“துபாய்ல ஏதோவொரு ஷாப்பிங் மால்ல இருக்கானாம். அவங்க ஃபேமிலி இப்ப இங்க இல்ல. கோயம்புத்தூர் பக்கம் போய்ட்டாங்கன்னு அவன் கசின் சொன்னான்”
“மச்சான் பெங்க்ளூர்லதானே இருக்கான்?”
“ஆமாம், கனடா போறதுக்கு வாய்ப்பிருக்குன்னு சொன்னான். மச்சக்காளையும் பிதாஜியும் காலேஜ்லதான் இருக்காங்க”
“சூப்பர்மேனோட அப்பா தவறிப்போய்ட்டாராம்ப்பா, போன மாசம்.”
“நீ போயிருந்தியா?”
“இல்லப்பா, எனக்கே லேட்டாத்தான் தகவல் கெடச்சுது, நாசர் சொன்னான். அவனும் லீவு முடிஞ்சு ஜெர்மனிக்குப் போயிட்டான்”
“சரிடா மொசேக், நேரமாச்சு. ஃப்ரீயாயிருந்தா வீட்டுக்கு வா”

சில பெயர்கள் மட்டுமே இங்கே கொடுத்திருக்கிறேன். ‘சத்யராஜ்’, ‘சீவலப்பேரி பாண்டி’, வெறிச்செல்வன், காக்றோச் என்ற பெயர்களும் இப்போது நியாபகம் வருகின்றன. அவர்களில் பலரின் இயற்பெயர்கள் இப்போது நினைவில் இல்லை. ஒவ்வொரு பட்டப்பெயருக்குப் பின்னும் ஒரு சிறு காரண நிகழ்வு இருக்கும். அவற்றையெல்லாம் மெல்ல யோசித்து எழுதினால் ஒரு நாவலாகிவிடும்
.
இப்போது அந்த நண்பர்கள் பணியாற்றும் அலுவலகங்களில் அது போல் பட்டப்பெயர்கள் அவர்களுக்கு இருக்குமா என்று யோசித்தேன். மேற்கண்ட சம்பாஷனை அலுவலகங்களில் நிகழ்கிறதா? என் தந்தை தன்னுடைய கொலீக்ஸுகளை எல்லாம் அவர்களின் இயற்பெயரை அல்லது இயற்பெயரின் சுருக்கத்தைச் சொல்லி மட்டுமே குறிப்பது கவனத்தில் வந்தது. அவர்களுக்கும் சின்ன வயதில் பட்டப்பெயர்கள் இருந்திருக்கக் கூடும். என் அசட்டுத்தனத்தைப் பார்த்தீர்களா? என் தந்தைக்கு என்ன பட்டப்பெயர் என்பதை இனிமேல்தான் நான் கேட்டறிய வேண்டும். (அல்லது பட்டப்பெயரே இல்லையா? எனக்கு ஒரு பட்டப்பெயர் இருந்ததாக நியாபகம் இல்லை. இது எனக்கென்று ஒரு தனிப்பட்ட ஆளுமை இல்லாததைக் காட்டுகிறது போலும். அட்லீஸ்ட் கோமாளித்தனமான ஓர் ஆளுமையாவது இருந்தால்தானே பட்டப்பெயர் உண்டாகும்? அதுகூட எனக்கு இருக்கவில்லை போலும்)

ஒரு இந்திய அலுவலகத்தில் உரையாடல் எப்படியிருக்கும் என்பதற்கு அடியேனின் அனுபவத்திலிருந்தே ஒரு மாதிரியை (model / example என்னும் அர்த்தத்தில் சொல்கிறேன். ஒரு மாதிரியானவர்கள் இருப்பார்கள் என்பதும் உண்மைதான்.) இங்கே கற்பனை செய்யலாம்:

“என்ன ராமநாதன் சார், காலைலேர்ந்து ஒரே டென்ஷனா உக்காந்திருக்கீங்க?”
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல சார், நேத்திலேர்ந்து ஒரு சைடா தலைல வலி உயிர் போவுது. இந்த அசைன்மண்ட் வொர்க்கெ வேற இன்னிக்கே முடிச்சாவனும்”
“சைமன் சார் என்ன திடீர்னு நாலு நாள் சியெல் போட்டிருக்காரு?”
“மாமனாரோட அண்ணன் தவறிப் போய்ட்டாராம்.”
“முதலியார்தானே அவரு? இல்ல பிள்ளைமாரா? எந்த ஊரு?”
“என்ன சார் இதுகூட தெரியாம இருக்கீங்க. அவரு சைவப் பிள்ளை சார். நான் படையாச்சி. அவருக்குப் பட்டுக்கோட்டை பக்கம் எதோ கிராமம். ஆல்பர்ட் சாருக்கும் அந்தப் பக்கம்தான் நெட்டிவ் ப்ளேஸ்”
“அப்படியா?, காஃபியும் வடையும் வாங்கிட்டு வரச்சொல்லலாம். நீங்க வேற தலை வலிக்குதுங்கறீங்க. இந்த அட்டெண்டர் பய எங்க போய்த் தொலஞ்சான்?”
“குத்தூஸ் சார் என்னமோ ஜெராக்ஸ் எடுக்க அனுப்ச்சாரு. போனவன் போனவன்தான். என்ன குத்தூஸ் சார், எப்ப வருவான்னு சொல்லிட்டுப் போனானா?”
“அர்ஜெண்ட்டான்னு கேட்டான். அப்படியே போய் ஸ்டீஃபன் சாருக்கு கரெண்ட் பில் கட்டிட்டு வர்றேன்னு...

மாதிரி போதுமென்று தோன்றுகிறது. இயற்பெயர்களின் பின்னால் சார் சேர்த்து எல்லோருக்கும் சர் பட்டம் வழங்கி கௌரவிக்கும் இந்தப் பழக்கம் பிரிட்டிஷ் ஆட்சியின் மோசமான ஒரு உளவியல் நோயாக நம்மில் வேரோடிக் கிடக்கிறது. சினிமாத் துறையின் பேட்டிகளை தொலைக்காட்சியில் காணும்போது இந்த ஒரு காரணத்துக்காகவே எரிச்சல் கிளம்புவதுண்டு. ‘சிவாஜி சார்தான் என் மானசீக குரு’ ‘மணிரத்னம் சார் சொன்னபடியே செஞ்சேன்’ ‘ரஜினி சார்னாலதான் இன்னிக்கு இந்த நெலமைல இருக்கேன்’ ‘கமல் சாரிகிட்ட கத்துக்க இன்னும் எவ்வளவோ இருக்கு’ ‘இளையராஜா சாரோட ம்யூசிக்னா எனக்கு உயிரு’ ‘அமீர் சார் அப்பவே சொன்னாரு நீ நல்லா வருவேம்மான்னு’ என்றெல்லாம் எல்லோரையும் சார் போட்டுக் குறிப்பிடுவார்கள். அவர்களெல்லாம் எலிமெண்ட்ரி ஸ்கூல் வாத்தியார்களோ என்று ஒரு பிரம்மை தட்டும்!

அல்லது ஒருவேளை இங்கே எவனுமே உயிரெழுத்தோ மெய்யெழுத்தோ கிடையாது. எல்லோருமே சார்பெழுத்துக்கள்தான், ஒருவரை ஒருவர் சார்ந்துதான் ஜீவிக்க முடியும் என்பதுதான் இப்படி சார் போட்டு சிம்பாலிக்காக உணர்த்தப் படுகிறதா? ஆக, தாய்மொழியை மிகவும் சாரமுள்ள மொழியாக்கி விட்டோம்! சார் என்று விளிப்பது கண்ணியமான ஒரு மேனரிஸம் என்றும், அப்படி விளிக்கப்படுபவர் ஒரு ஜென்ட்டில்மேன் என்றும் நம்முள் ஒரு கருத்தியல் வளர்க்கப் பட்டுள்ளது. ”வார்த்தைய அளந்து பேசுங்க சார். இல்லாட்டி பல்லப் பேத்துருவேன்” என்பது போல் ரௌத்திரம் பழகும் போதும் சர் பட்டம் வழங்கி எதிராளியைக் கௌரவப்படுத்தும் நாகரிகம் நம்முடையது. இதுதான் ஜெண்ட்டில்மேனரிசம்ஸ் ஆஃப் இந்தியா!

என் தந்தைக்கு எப்படியோ அப்படியே இந்தியாவின் அனைத்து அலுவலக நிலையிலும் தம்முடன் பணியாற்றுவோரின் ஜாதி என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். சாதீய கண்ணோட்டம் நிழலாடிக் கொண்டே இருக்கும். சில நேரங்களில் அது ஓர் ஆயுதமாகிப் பழிவாங்கும்.

இந்த நிலை கல்லூரி நாட்களில் இருந்ததில்லை என்பதை எண்ணிப் பார்க்கிறேன். என் நண்பன் கமலக்கண்ணனின் அக்காவுக்குத் திருமணம் நடந்தபோது முதல் நாள் இரவு விருந்திற்கே மண்டபத்திற்குச் சென்றுவிட்டோம். அஸ்லமும் காதரும் அடியேனும் பரிமாறும் பணியில் ஈடுபட்டுவிட்டு திருமணத்தில் வழங்குவதற்காக மஞ்சள் பைகளுக்குள் தேங்காய், வெற்றிலை + சீவல், குங்குமச் சிமிழ் முதலியவற்றை யாமம் வரை நிரப்பினோம். திருமண விருந்து வரை மறுநாள் உடனிருந்து கவனித்துக் கொண்டோம். இன்ன தேதி வரைக்கும் அவன் இந்து என்பது (பெயரால்) தெரியுமே தவிர என்ன சாதி என்பது எங்களுக்குத் தெரியாது.

இந்த மனநிலை கல்லூரிக் காலக் கட்டத்திற்குப் பின் மாறிவிடும் போலும். என்னுடைய மிக நெருங்கிய நண்பர் ஒருவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் “அவர் என்ன கேஸ்ட்?” என்று என் பெரியத்தா ஒருமுறை கேட்டார்கள். ‘தெரியாது’ என்றேன். “என்னடா இப்படிச் சொல்றே? இதெல்லாம் தெரிஞ்சு வச்சுக்க வேணாமா?” என்று அவர்கள் கேட்டது ஏன் என்று எனக்கு விளங்கவே இல்லை. “அதெல்லாம் எதுக்குத் தெரிஞ்சுக்கணும்?” என்று கேட்டேன். “தெரியணும்ப்பா. கேட்டுச் சொல்லு” என்று மட்டும் சொன்னார்கள். பிறகு விசாரித்துவிட்டுச் சொன்னேன், “அவர் சாதி பேதங்களை நாடார்.”

##########

I LIKE THIS!


No comments:

Post a Comment