இஸ்லாமிய
வரலாற்றில் தியாகத்தின் ரத்தத்தால் எழுதப்பட்ட பக்கங்கள் எத்தனையோ இருக்கலாம். ஆனால்,
ரத்தத்தின் ஈரம் இன்னமும் காயாத ஒரு பக்கம் உண்டு என்றால் அது நபி (ஸல்) அவர்களின்
திருப்பேரரான இமாம் ஹுசைன் (ரலி) அவர்களும் அன்னாரின் பரிசுத்தக் குடும்பத்தினரும்
பகைவர்களால் – யஜீதின் படையினரால் – படுகொலை செய்யப்பட்ட “கர்பலா” நிகழ்வே ஆகும். இது
முஹர்ரம் 10, ஹிஜ்ரி 61-ஆம் அண்டில் (10 அக்டோபர் 680 பொ.ஆ) நிகழ்ந்தது.
ஆட்சியும் பதவியும் தனக்கே உரியன என்று
யஜீது கோரியபோது அதை இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் மறுத்தார்கள். உலக இச்சை மிகைத்தவனான
யஜீதின் கையில் உடன்படிக்கை செய்ய முடியாது என்று உறுதியாக நின்றார்கள். யஜீதின் படை
அவர்களைக் கொலை செய்யத் தேடியபோது முஹர்ரம் 2-ஆம் நாள் ’கர்பலா’ என்னும் பொட்டல் வெளியில்
கூடாரம் அடித்துத் தனது குடும்பத்தாருடன் தங்கினார்கள்.
யஜீதின்
படையினர் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் கூடாரங்களைச் சுற்றி வளைத்தனர். அவ்விடத்தின்
அருகில் ஃபுராத் (யூஃப்ரேட்ஸ்) நதி ஓடிக் கொண்டிருந்தது. அதன் தண்ணீர் இமாமுக்குக்
கிடைக்காமல் தடுத்துவிட்டனர். இப்படியே நாட்கள் நகர்ந்தன. ஆண்களும் பெண்களும் குழந்தைகளும்
தண்ணீர் இன்றித் தவித்தனர். பச்சிளம் குழவியைக் காட்டி நீர் கேட்டால் பாதகரின் மனம்
இரக்கம் காட்டும் என்ற நம்பிக்கையும் பொய்த்தது.
இமாம்
ஹுசைன் (ரலி) அவர்கள் மீது பகைவர்கள் தாக்குதல் நடத்தினர். அவர்கள் ஐயாயிரம் பேர் இருந்தனர்.
இமாம் அவர்களின் தரப்பில் போரிட்டு மடிந்தோரின் எண்ணிக்கை எழுபத்திரண்டு. பெண்களும்
ஒரே ஒரு குழந்தையான இமாம் ஜைனுல் ஆபிதீன் (ரலி) அவர்களும் மட்டும் உயிருடன் விடப்பட்டனர்.
இது
ஒரு நெடிய வரலாற்று நிகழ்வு. இக்கட்டுரைக்கான பின்னணியை நினைவில் நிறுத்த வேண்டி மிகச்
சுருக்கமாகத் தந்திருக்கிறேன்.
இமாம்
ஹுசைன் (ரலி) அவர்கள் இறைவனுக்காக உள்ளத்தில் உறுதியுடன் மரணத்தை வரவேற்ற மகத்தான நிகழ்வு
அது. அந்நிகழ்வுக்கு வித்திட்ட பல்வேறு தருணங்களில் சத்தியத்தின் சார்பில் நின்று,
சற்றும் சறுகாமல் இமாம் அவர்கள் சாற்றிய சொற்கள் சரித்திரத்தில் சுடர் விட்டுப் பிறங்குகின்றன.
அவற்றுள் சில:
”உண்மைக்காக மரணிப்பது என்பது எனக்கு இன்பமே
அன்றி வேறில்லை; கொடுங்கோலரின் கீழ் அடங்கி வாழ்வது நரகமே அன்றி வேறில்லை”
”இறைவனின் மீது சத்தியமாக, நான் ஒருபோதும்
இழிவடைந்த ஒருவனாக என் பகைவரிடம் சரணடைய மாட்டேன்; அடிமைகளைப் போல் ஒருபோதும் பகைவரிடம்
உடன்படிக்கை செய்ய மாட்டேன்.”
”இழிவான வாழ்க்கையை விட கண்ணியமிக்க மரணம்
மேலானது”
”மக்கள் இந்த உலகத்தின் அடிமைகளாக உள்ளனர்.
அவர்கள் சொல்வதெல்லாம் மார்க்கம் என்றாகிவிட்டது. அவர்களுக்கு வாழ்வாதாரம் தரும்வரை
மட்டுமே மார்க்கத்தைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் சோதிக்கப்படும்போது, உண்மையான
இறை நம்பிக்கையாளர்கள் வெகு சிலரே எஞ்சுகின்றனர்.”
இனி, இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் நினைவின்
நிமித்தம் உள்ளத்தை உருக்கும் கவிதை வரிகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் உயிர்த்
தியாகத்தை நினைவு கூர்ந்து பாடப்படும் இரங்கற் பாக்கள் உருது மொழியில் ஒரு தனி இலக்கிய
வகைமையாகவே உருவாகி உள்ளன. அது ”மர்ஸியா” எனப்படுகிறது. மர்ஸியா என்பது பொதுவாக ஒருவரின்
இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துப் பாடப்படும் கவிதையைக் குறிக்கிறது என்றாலும், குறிப்பாக
அது இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் இறப்பிற்காகப் பாடப்படும் இலக்கியமாகவே அடையாளம்
பெற்றுள்ளது. இந்தக் கவிதை கஜல் அல்லது கஸீதா வடிவத்தில்தான் பாடப்படுகிறது. அதன் உள்ளடக்கமே,
பாடுபொருளே அதனை மர்ஸியா ஆக்குகிறது.
இதன்
காரணத்தால், மர்ஸியா இரண்டு வகைப்படும் என்று பிரித்திருக்கிறார்கள்:
1)
ரிவாயத்தி மர்ஸியா: இது கர்பலா களத்தில்
இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் மற்றும் அன்னாரின் பரிசுத்தக் குடும்பத்தார் உற்ற உயிர்
தியாகத்தை நினைவு கூர்ந்து எழுதப்படும் இரங்கற் பாக்களைக் குறிக்கும்.
2)
ஷக்ஸி மர்ஸியா: உர்து மொழியில் ஷக்ஸ் என்றால்
நபர் என்று பொருள். எனவே யாரேனும் ஒருவரின் இறப்பிற்காகப் பாடப்படும் இரங்கற் கவிதை
ஷக்ஸி மர்சியா எனப்படுகிறது. இது பொதுவானது.
மர்ஸியாக்கள்
பெரும்பாலும் ஷி’ஆ பிரிவினரால் இயற்றப்படுகின்றன. எனினும், ’அஹ்லுல் பைத்’ என்னும்
நபிக்குடும்பத்தார் மீது நேசம் வைப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும் என்பதாலும்,
நபி (ஸல்) அவர்களை நேசிப்பதில் ’அஹ்லுல் பைத்’தின் நேசம் இன்றியமையாத ஒரு பகுதியாகும்
என்பதாலும் சுன்னத் வல் ஜமாஅத் தரப்பின் கவிஞர்களும் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின்
புகழையும், கர்பலா துயர் நிகழ்வின் இரங்கலையும் பாடியிருக்கிறார்கள்.
ஹுசைன் அரசராவார்; ஹுசைன் பேரசரர் ஆவார்;
ஹுசைன் மார்க்கம் ஆவார்; ஹுசைன் மார்க்கத்தின்
பாதுகாவல் ஆவார்;
தலையைக் கொடுத்தார்; யஜீதின் கையில் கையைக்
கொடுக்கவில்லை;
சத்தியமாக, [‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்னும்
திருக்கலிமாவில்
பொய்த் தெய்வங்களை நிராகரிக்கும் நஃபீ
என்னும் முற்பகுதியான]
’லா இலாஹ’ என்பதன் அடித்தளமாக இருக்கிறார் ஹுசைன்!
(ஷாஹஸ்த் ஹுசைன் பாத்ஷாஹஸ்த் ஹுசைன்
தீனஸ்த் ஹுசைன் தீன் பனாஹஸ்த் ஹுசைன்
சர் தாத் ந தாத் தஸ்த் தர் தஸ்த்தே யஜீத்
ஹக்கா கெ பினாயே லா இலாஹஸ்த் ஹுசைன்.)
இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் உயிர் தியாகம்
குர்’ஆனில் சுட்டப்பட்டுள்ளது என்ற அவதானமும் உண்டு. இதை அறிய இறைத்தூதர் இப்றாஹீம் (அலை) அவர்களின் சரித்திரத்தைக்
காண வேண்டும்.
இறைத்தூதர் இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு
வெகு காலமாகப் பிள்ளைப்பேறு இல்லை. அவர்களின் கனிந்த முதுமையில் அவர்களுக்கு இறைவன்
அளித்த அருட்கொடையாக இறைத்தூதர் இஸ்மாயில் (அலை) அவர்கள் பிறந்தார்கள். அவர் அழகான
ஒரு சிறுவனாக வளரந்து வந்தபோது இறைத்தூதர் இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு இறைவன் ஒரு
சோதனை வைத்தான். இளம் சிறுவரான இஸ்மாயில் (அலை) அவர்களைத் தனக்காக அறுத்துப் பலியிடச்
சொன்னான். அதற்கு இஸ்மாயில் (அலை) அவர்களும் தன்னை உடனே ஒப்படைத்தார்கள். பையனின் கழுத்தில்
கத்தியை ஓட்டியபோது அது இறை ஆணையால் அறுக்க மறுத்தது. அப்போது, இறைத்தூதர் இப்றாஹீம்
(அலை) அவர்களின் இறைபக்தியைத் தான் ஏற்றுக்கொண்டதாக இறைவனிடம் இருந்து செய்தி வந்தது.
வானவர்கோன் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் இறைவன் சொர்க்கத்தின் செம்மறியாடு ஒன்றை அனுப்பியிருந்தான்.
அதை அறுத்துப் பலியிடுமாறு இப்றாஹீம் (அலை) அவர்கள் பணிக்கப்பட்டார்கள்.
இந்தச் சரித்திரத்தைச் சொல்லும் குர்’ஆன்,
இஸ்மாயில் (அலை) அவர்களுக்கு ஒரு மாபெரும் பலியினைப் பகரமாக்கியதாகச் சொல்கிறது: “வ
ஃபதைனாஹு பி-திப்ஹின் அழீம்” – ”ஆகவே மகத்தானதொரு பலியை அவருக்குப் பகரமாக்கினோம்”
(37:107)
இந்த ”மகத்தான பலி” (திப்ஹின் அழீம்) என்பது
இமாம் ஹுசைன் (ரலி) அவர்களையே குறிக்கும் என்று விளக்கம் சொல்லப்படுவதும் உண்டு. ஏனெனில்,
நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அப்போது இஸ்மாயில் (அலை) அவர்களில் ஒளியாக இருந்தார்கள்.
அன்னாரின் சந்ததியில்தான் அவர்கள் வந்துதிப்பார்கள் என்று நிர்ணயம் ஆகியிருந்தது. எனவே
அவர்கள் சிறுவனாகக் கொல்லப்படக் கூடாது. அன்னாரின் வமிச வழி இவ்வுலகில் தொடர வேண்டியது
அவசியமானது. எனவே, இஸ்மாயில் (அலை) அவர்களுக்குப் பகரமான ’மகத்தான பலி’ நபி (ஸல்) அவர்களின்
சந்ததியில் இருந்து கொடுக்கப்பட்டது. அந்தப் பலியே இமாம் ஹுசைன் (ரலி) ஆவார்.
இக்கருத்தினைக் கவிஞர்கள் பலரும் பன்முறை
பாடியிருக்கிறார்கள். உலக மகாகவியாகத் திகழ்ந்த அல்லாமா இக்பால் (ரஹ்) அவர்கள் புதிய
வீச்சுடன் இக்கருத்தினைப் பாடினார்கள். “பாலே ஜிப்ரீல்” (வானவர் கோனின் சிறகு) என்னும்
நூலில் சொல்கிறார்கள்:
அரிதானது,
எளிமையானது, வண்ணமயமானது
ஆதி
இறையில்லத்தின் அற்புதக் கதை;
அதன்
அந்தி எல்லை ஹுசைன்,
அதன்
ஆரம்பப் புள்ளி இஸ்மாயில்!
(கரீப் ஒ ஸாதா ஒ ரங்கீன் ஹே தாஸ்த்தானே
ஹரம்
நிஹாயத் இஸ்கீ ஹுசைன் இப்திதா ஹே இஸ்மாயீல்)
இறை வேதமாம் குர்’ஆனின்
அத்தியாயங்களுக்குத் திறப்பு வாசகமாக அமைந்திருப்பது ”பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”
என்பதாகும். இதன் பொருள்: “அருளாளனும் அன்பாளனுமான அல்லாஹ்வின் திருநாமத்தால்.” இந்த
வாசகம் “பா” என்னும் எழுத்தால் தொடங்குகிறது. அது ஒரு வளை கோட்டின் கீழ் ஒரு புள்ளி
வைத்த வடிவமுடையது. அப்புள்ளி (நுக்தா) இறை வேதத்தின் ரகசியங்களை எல்லாம் தன்னுள் அடக்கியது
என்று ஞானியர் கூறுவர். மேலும், அது இறைவனிடம் முழுமையாகச் சரணாகதி அடைந்துவிட்ட நிலையைக்
குறிக்கிறது என்பர். இமாம் அலீ (ரலி) அவர்கள் அத்தகைய உன்னத நிலையை எய்தி இருந்தார்கள்.
எனவே, தன்னை பிஸ்மில்லாஹ்வின் பா என்னும் எழுத்தாக அவர்கள் குறிப்பிட்டார்கள். இக்கருத்தையும்
இணைத்து “அஸ்ராரே ஃகுதி” (சுயத்தின் ரகசியங்கள்) என்னும் நூலில் அல்லாமா இக்பால் (ரஹ்)
சொல்கிறார்கள்:
இறைவா! இறைவா! என்னே அதிசயம்!
தந்தையோ பிஸ்மில்லாஹ்வின்
’பா’ என்னும் எழுத்தாக இருக்கிறார்;
மகனோ, ’மகத்தான பலி’
என்பதன் அர்த்தமாக வந்தார்!
(அல்லாஹ் அல்லாஹ் பாயே பிஸ்மில்லாஹ் பிதர்
மஃ’னியே ழிப்ஹே அழீம் ஆமத் பிசர்)
மேலும், “ருமூஸே பேஃகுதி” (தன்னை இழத்தலின்
மர்மங்கள்) என்னும் நூலில் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களைப் பற்றி அல்லாமா இக்பால் (ரஹ்)
சொல்கிறார்கள்:
அவர்
இப்றாஹீம் மற்றும் இஸ்மாயில் ஆகிய
இறைத்தூதர்களின்
ரகசியம் ஆனார்;
அதவாது
அவ்விருவரும் சாராம்சம்
இவரோ
அதற்கு விரிவுரை!
(சிர்ரே இப்றாஹீம் ஒ இஸ்மாயீல் பூத்
யஃ’னீ ஆன் இஜ்மால் ரா தஃப்ஸீல் பூத்)
இந்த
முஹம்மதிய சமுதாயத்தில் – ’உம்மத்தே முஹம்மதிய்யா’வில் எத்தனையோ உயிர்த் தியாகியர்
வந்துள்ளனர். எத்தனையோ நல்லடியார்களும் இறைநேசர்களும் வந்துள்ளனர். ஆனால், இமாம் ஹுசைன்
(ரலி) அவர்களைப் போன்ற இன்னொருவரைச் சுட்டிக்காட்ட முடியாது. அன்னாரின் உன்னத நிலையை
உணர்த்த வந்த அல்லாமா இக்பால் (ரஹ்) மேற்சொன்ன நூலில் ஓரிடத்தில் இமாம் அவர்களை இப்படி
வருணிக்கிறார்:
இந்தச்
சமுதாயத்தின் நடுவில்
அந்தப்
பிரபஞ்ச ஆளுமை
இறைவேதத்தில்
’குல் ஹுவல்லாஹ்’
இருப்பதைப்
போன்றவர்!
(தர்மியானே உம்மத் ஆன் கைவான் ஜனாப்
ஹம்ச்சூ ஹர்ஃபே குல் ஹுவல்லாஹ் தர் கிதாப்)
இதை இதயத்தால் முழுமையாக ஒப்புக் கொள்கிறோம்.
எம் நிலையோ – “ஸும்ம ரதத்னாஹு அஸ்ஃபல சாஃபிலீன்”
– ‘இன்னும் அவனைக் கீழோரில் மிகக் கீழோன் ஆக்கினோம்’ (95:5) என்பதாக இருக்கிறது. இமாமுனா
அல்-ஹுசைன் (ரலி) அவர்களோ ஏகத்துவ முழக்கமான “குல்
ஹுவல்லாஹு அஹத்” (கூறுக: அல்லாஹ் அவன் ஏகன் – 112:1) ஆக இருக்கிறார்கள். அதைக்
கர்பலாவில் நிரூபித்துவிட்டார்கள்.
உருதுக் கவியுலகில், இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் மீது பாடப்படும் இரங்கற்பா வகையான மர்சியாவின் சிகரம் என்று போற்றப்படுபவர் மீப் பப்பர் அனீஸ். அவரின் கவிதைகளில் இருந்து சில வைர மணிகளை அள்ளித் தருகிறேன். அவர் சொல்கிறார்:
”கர்பலாவின்
பாதையில் ஒரு புழுதி ஆகி விட்டேன்;
என் மண்ணும் அப்போது ரசவாதம் ஆகிவிட்டது!”
(குபாரே ராஹே கர்பலா ஹோ கயீ
மேரீ ஃகாக் பீ கீமியா ஹோ கயீ)
மர்சியா கவிதையுலகில் இக்காலத்தில் மிகவும்
புகழ் பெற்று விளங்கும் கவிஞர் முஹ்சின் நக்வி என்பவர் ஆவார். அவரின் கவிதைகளில் இமாம்
ஹுசைன் (ரலி) மீதான காதலுடன் அன்னாரைப் படுகொலை செய்த யஜீதின் தரப்பினர் மீதான அறச்
சீற்றமும் பொங்கி வருகிறது. உதாரணங்கள் சில பார்க்கலாம்.
முஹ்சினே!
ஹுசைனை நியாபகம் ஊட்டியதும்
எவன்
எரிந்து கொதிக்கிறானோ
மனித
மொழியில் அவனைத்தான்
யஜீத்
எ(ன்று சொல்கிறார்கள்!
(திக்ரே ஹுசைன் சே ஜோ ஜல்த்தா ஹே முஹ்சின்
இன்சானியத்
கீ ஜுபான் மேன் உஸ்கோ யஜீத் கெஹ்தே ஹேன்)
இந்த இடத்தில், யஜீத் விடயத்தில் ’அஹ்லுஸ்
சுன்னத் வல் ஜமாஅத்’தின் நிலைப்பாடு பற்றி அறிந்து கொள்வது அவசியம் கருதுகிறேன். இரு
தினங்களுக்கு முன் ஊடகங்களில் இது குறித்து மவ்லானா மவ்லவி சதீதுத்தீன் பாக்கவி ஹஜ்ரத்
அவர்கள் மிகத் தெளிவான விளக்கம் தந்திருந்தார்கள். அவர்கள் சொன்ன கருத்து இது:
”நான் இங்கே சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கை
முடிவு ஒன்றைச் சொல்ல வேண்டும், கடைசியாய். ஹுசைன் (ரலி) அவர்களைக் கொன்ற அத்தனை பேரும்
நாசமாக வேண்டும், (அவர்கள் மீது) அல்லாஹ்வுடைய சாபம் உண்டாக வேண்டும்: 1. கொலை செய்தவர்கள்,
2. உடன் போனவர்கள், 3. உடந்தையாய் இருந்தவர்கள், 4. சைக்கினையால் சுட்டிக் காட்டியவர்கள்,
5. கொல்லப்பட்டுவிட்டார் ஹுசைன் (ரலி) என்று தெரிந்தபோது மனதளவிலே பொருந்தியவர்கள்,
மகிழந்தவர்கள். இத்தனை கொடூரமானவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் எல்லாக் காலங்களிலும்
உண்டாகட்டும் என்பதுதான் அஹ்லே சுன்னத் ஜமாஅத்தினுடைய தீர்க்கமான முடிவு.”
மேலும், இமாம் ஹுசைன் (ரலி) அவர்களையும்
யஜீதையும் வேறுபடுத்தித் தரம் பிரித்துக் காட்டும் உரை ஒன்றையும் நேற்று கேட்டேன்.
இமாம் அல்-ஹுசைன் (ரலி) அவர்களின் வமிச வழித்தோன்றலான இறைநேசர் சய்யிதுனா உமர் ஆமிர்
கலீமிஷாஹ் நூரீ (ரஹ்) அவர்களின் திருமகனார் அல்லாமா பஸீரி ஷாஹ் ஆமிரி (தாமத் பரக்காத்துஹு)
அவர்கள் பேசிய அந்த உரையின் ஒரு பகுதி:
”இன்று சில சபிக்கப்பட்ட யஜீதிகள் யஜீதை அமீருல் முஃமினீன் என்று சொல்கின்றனர். ஆம். அவன் அமீராக இருந்தான் என்பது உண்மைதான். அவன் அமீருல் ஃபாசிக்கீன் (பாவியரின் தலைவன்), அமீருல் காஃபிரீன் (நிராகரிப்பாளரின் தலைவன்), அமீருல் முஷ்ரிக்கீன் (இணைவைப்போரின் தலைவன்), அமீருல் முல்ஹிதீன் (இறை மறுப்பாளரின் தலைவன்), அமீருல் ஷயாத்தீன் (சாத்தான்களின் தலைவன்). என் ஹுசைன் (ரலி) அவர்களோ அமீருல் முஃமினீன் (இறை நம்பிக்கையாளரின் தலைவர்), அமீருல் முத்தகீன் (இறை பக்தர்களின் தலைவர்), அமீருல் முவஹ்ஹிதீன் (ஏகத்துவவாதிகளின் தலைவர்), அமீருஸ் ஸாலிஹீன் (நல்லடியார்களின் தலைவர்), அமீருல் அக்தாப் (குத்புமாரின் தலைவர்), அமீருல் அவ்லியா (இறை நேசர்களின் தலைவர்), அமீருல் அஃக்வாஸ் (சிறப்பானோரின் தலைவர்), அமீருல் மலாஇக்கா (வானவரின் தலைவர்). யஜீது யார்? பன்றி (ஃகின்ஸீர்). சொல்லுங்கள், அவன் ஒரு பன்றி (ஃகின்ஸீர்). யஜீது ஃபாசிக் (அசுத்தமானவன்), யஜீது ஃபாஜிர் (ஒழுக்கங்கெட்டவன்), யஜீது ஹராமி (தகாதவன்), யஜீது நாய்களின் போஷகன். ஒரு யஜீதைக் காட்டுங்கள் பார்க்கலாம். அவனின் வாரிசுகளில் ஒருவனை இன்று காட்டுங்கள் பார்க்கலாம். ‘இன்ன ஷஃ’னியக்க ஹுவல் அப்தர்’ – ’நபியே! நிச்சயமாக உம் பகைவன்தான் துண்டிக்கப்பட்டவன் (சந்ததியற்றவன்)’ (குர்’ஆன் 108:3). ‘ஹுசைனே! அவன் உங்களை வெட்ட நாடுகிறான். நான் அவனின் வமிசத்தை வெட்டிவிடுவேன்’. உம் பகைவர்கள் இல்லாமல் போனார்கள், இல்லாமல் போகிறார்கள், இல்லாமல் போவார்கள் (மிட் கயே மிட்தே ஹேன் மிட் ஜாயேங்கே அஃ’தா தேரே). யஜீது இல்லாமல் போனான. நஜ்திகள் இல்லாமல் போனார்கள், போகிறார்கள், போவார்கள். யஜீது என்னும் பெயர்கூட இன்றில்லை. யஜீது என்று பெயர் வைப்பது பாவம் என்று முஸ்லிம்கள் புரிந்து வைத்துள்ளனர். இந்தத் தெருவில் சென்று பாருங்கள். எத்தனையோ ஹுசைன்கள் கிடைப்பார்கள். தெருவுக்குத் தெரு ஹுசைன்கள் கிடைப்பார்கள். ஒரு யஜீதைக் காட்ட முடியுமா? ’இன்ன ஷஃ’னியக்க ஹுவல் அப்தர்’ ஆகிவிட்டது. ஆஹ்! ஹுசைனின் ஒரே ஒரு மகன் – ஒரே ஒரு நோய்ப்பட்ட மகன் – ‘ஆபிதே பீமார் சாஜிதே சஜ்ஜாத்’ இமாம் ஜைனுல் ஆபிதீன் (ரலி) – மட்டுமே பிழைத்தார்கள். அந்த ஒரு நோய்ப்பட்ட மகனின் நஸ்லு (ரத்த உறவு) உலகம் முழுவதும் பரவியுள்ளது. சாதாத்தே கிராம் (கண்ணியமிக்க நபி வமிசத்தார்) உலகம் முழுவதும் இருக்கிறார்கள். ஆனால், யஜீத் அரசனாக இருந்தான். அவனுக்குப் பதினான்கு மகன்கள். அந்தப் பன்றியின் ஒரு வாரிசு கூட இன்று உலகில் இல்லை. ஆனால், ஹுசைனின் நஸ்லு? இங்கே கிருஷ்ணாம்பேட்டையிலும் சாதாத்மார் இருக்கின்றனர். இந்த ஃபக்கீரின் உருவத்திலும் ஹுசைனின் குலாம் (அடியான்) அமர்ந்திருக்கிறேன். இதுதான், ‘இன்ன ஷஃனியக்க ஹுவல் அப்தர்’. பகைவர்கள் ஹுசைனை முடித்துவிட நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. அவர்கள்தாம் முடிந்து போவார்கள்.”
இது உணர்ச்சி மிகுந்த பேச்சு என்று உங்களுக்குத்
தோன்றுகிறதா? இந்த ரோஷ உணர்ச்சி ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உண்டாகும். எனில், நபியின்
வமிசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எப்படி உண்டாகாமல் போகும்? இதுவும் குர்’ஆன் வசனத்தின்
தஃப்ஸீர் (விளக்கவுரை)தான். வெறும் விளக்கம் அல்ல. உலக வரலாற்றில் உண்மையாக நடந்திருக்கும்
விளக்கம். இது இறை ஞான ஒளியின் வெளிப்பாடு. இது நபியொளியின் – நூரே முஹம்மதிய்யாவின்
– சுடர் வீச்சு.
நபி (ஸல்) அவர்களை நோக்கி ’அஃலா ஹஜ்ரத்’
அஹ்மத் ரஜா ஃகான் பரேல்வி (ரஹ்) அவர்கள் பாடுகின்ற பசுமையான புகழ்ச்சி:
நபியே!
உங்கள் பரிசுத்தமான ரத்த உறவால்
ஒவ்வொரு
குழந்தையும் ஒளிமயம்!
நீங்கள்
ஒளியின் ஊற்றாக இருக்கின்றீர்,
உம்
குடும்பம் முழுவதும் ஒளிமயம்!
(தேரீ
நஸ்லே பாக் மேன் ஹே பச்சா பச்சா நூர் கா
தூ ஹே ஐனே நூர் தேரா சப் கரானா நூர் கா)
இந்தப் பேரொளியை ஒருவன் ஊதி அணைக்க நினைத்தால்
அவனை விட வழிகேடன் யார்? அவனை விட மடையன் யார்? யஜீதின் கதி இதற்கொரு சான்று.
அவர்கள்
அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களால்
ஊதி
அணைத்துவிட நாடுகின்றனர்;
ஆனால்,
நிராகரிப்பாளர் வெறுத்தபோதிலும்
அல்லாஹ்
தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.
(யுரீதூன லி’யுத்ஃபிஊ நூரல்லாஹி பி-அஃப்வாஹிஹிம்
வல்லாஹு முதிம்மு நூரிஹி வ லவ் கரிஹல் காஃபிரூன்
– 61:8)
என்னும் திருவசனத்தின் நிதர்சனமான விளக்கத்தை வரலாற்றில் பாருங்கள். ஹுசைனை அழிக்க நினைத்த பகைவர்கள் அழிந்து போனார்கள். அல்லாஹ் தன் நபியின் வாரிசுகளை உலகமெங்கும் பரவச் செய்து பிரகாசிக்க வைத்திருக்கிறான். அஹ்லுல் பைத் என்னும் நபிக் குடும்பத்தாரில் பல்லாயிரம் பல்லாயிரம் இறைநேசர்கள் உருவாகி ஜொலிக்கிறார்கள்! உலக முடிவு நாள் வரை இந்த மகத்துவம் தொடரும்.
(தொடரும்...)
No comments:
Post a Comment