Monday, September 2, 2019

இன்றைய ரொட்டி!



      ”குயில் பாட்டு” என்னும் அழகிய நெடுங் கவிதையின் ஈற்றில் பாரதி சொல்கிறார்:
      ”ஆன்ற தமிழ்ப் புலவீர்! கற்பனையே ஆனாலும்
      வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க
      யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ?”

      இந்த அறைகூவல் ஒரு செய்தியைச் சொல்கிறது. அதாவது, ‘குயிற்பாட்டு’ என்பது குயிலைப் பற்றிய பாடலன்று. குயிலெனும் குறியீட்டின் உட்பொருள் என்ன என்று ஆராய்ந்து காணல் வேண்டும். அப்பணி அனைவர்க்கும் இயலுவதன்று. “அணிசெய் காவியம் ஆயிரம் கற்பினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்” என்று பாரதியே சொல்கிறார். இற்றை நாள், பாரதியின் கவிதைகளுக்குத் தெளிவுரை எளியவுரை என்றெல்லாம் எழுதப் புறப்பட்டிருக்கிறார்கள். ”கவிஞன் தானேயொரு கவிதையாய் இருத்தல் வேண்டும்” என்பார் ஜான் மில்டன். அஃதேபோல், உரைஞர் தாமேயொரு உரையாய் இருத்தல் வேண்டும் எனலாம். ‘மெல்லத் தமிழினி சாகும்’ என்றொரு பேதை உரைத்ததாக பாரதி எழுதுவார். எளிய உரை எழுதும் உரைஞர் பலரும் இக்கூற்றுக்குத் தாமே உரையாய் நிற்கக் காண்கிறோம். அது ஒரு புறம் கிடக்கட்டும். சொல்ல வந்த செய்தி வேறு.

      ஆழ்ந்திருக்கும் கவியுளம் கண்டு விரித்துப் பொருளுரைக்கும் படியாக ஆன்ற புலவர்க்கு அறைகூவல் விடுக்கும் பற்பல கவிதைகள் எல்லா மொழிகளிலும் உள்ளன. ஆங்கிலத்தில் அத்தகைய பாடல்களைக் ‘கண்ணழித்தல்’ (decoding) செய்த கட்டுரைகளும் நூற்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆங்கில இலக்கியத்தின் சிகரம் எனப் போற்றப்படும் ஷேக்ஸ்பியரின் வரிகளுக்குள் உறைந்து கிடக்கும் நுட்பப் பொருள்களை வெளிக்கொணர்வது ஒரு தனித் துறையாகவே மலர்ந்துள்ளது. அவரன்ன பெருங்கவிகள் பாடிய பனுவல்களில் மட்டுமல்ல, சிறார் இலக்கியங்களிலும்கூட பல நுட்பமான செய்திகள் மறைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் கண்ணழித்து விளக்கும் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன.


      














 அண்மையில், லிமிரிக் என்னும் அபத்தத் தொனிகொண்ட ’குறும்பா’க்களின் பிதாமகராகக் கருதப்படும் எட்வர்ட் லியர் எழுதிய ”ஆந்தையும் பூனையும்” (The Owl and the Pussy Cat) என்னும் சிறுவர் கதைப்பாடலைப் படிக்க நேர்ந்தது. அதன்கண் உறைந்துள்ள பாலியக் குறியீடுகள் மெத்த அதிர்ச்சியூட்டின. பயிற்சி இல்லார் அவற்றை உணரார். இது திட்டமிட்டுப் பன்னூறாண்டுகள் தொடர்ந்து வரும் பணி என்று குறியீட்டாளர்கள் சொல்கின்றனர். கிறித்துவச் சமயம் ஐரோப்பாவில் பரவிய காலங்களில் நிகழ்ந்த மாற்றங்களில் ஒன்று, பண்டைய இனக்குழுக்களின் பாலியற் சடங்குகள் (Sexual Rites) சார்ந்த தொல்சமயத் தொன்மங்கள் – அவை பெரிதும் வளத் தொன்மங்கள் (Fertility Myths) ஆவன – எல்லாம் குறியீட்டு வடிவம் தாங்கி கிறித்துவச் சமயத்தினுள் அடைக்கலம் புகுந்துள்ளன என்பதாம். அவற்றை இலக்கியங்களின் வழிப் பேணுநர் தொடர்ந்து வருகின்றனர் என்றும் அப்பணி ஆற்றுதற்கென்று இரகசிய அமைப்புக்கள் (Secret Societies) உள்ளன என்றும் அத்துறை வல்லுநர்கள் பரக்க எழுதியுள்ளனர்.

      
  
















அவ்வழி, இரகசிய அமைப்பு ஒன்றின் உறுப்பினராக இருந்து இலக்கியம் செய்தோரின் பட்டியலில் லூயி கரோலும் ஒருவராகக் கருதப்படுகிறார். அவர் எழுதிய “Alice in Wonderland” (“ஆலிசின் அற்புத உலகம்”) பன்மொழிகளில் பெயர்க்கப்பட்டு உலகெங்குமுள்ள சிறார்களால் சிலாகிக்கப்படும் கற்பனைக் கதையாகும். அதிலுள்ள மறைவியற் குறியீடுகளை (Occult Symbols) பலரும் விளக்கி எழுதியுள்ளனர். கரோல் எழுதிய ஒரு குறுங் கதைப் பாடல் “Walrus and the Carpenter” (கடல்யானையும் தச்சரும்) என்பதாகும். அதன் முதல் நான்கு பத்திகளைக் கீழே தருகிறேன்:  

”வலிவெலாம் கூட்டி அலைகடல் மீது
ஒளிக்கதிர் வெய்யோன் காய்ந்திருந்தனன்;
அலைகள் யாவையும் விளக்கம் உறவே
இயன்ற மட்டும் முயன்று நின்றனன்;
வேண்டாத வேலை என்க இதனை
ஏனெனில் அதுவோ நள்ளிரவு நேரம்.”
("The sun was shining on the sea, / Shining with all his might: / He did his very best to make / The billows smooth and bright —/ And this was odd, because it was / The middle of the night.)

”வெண்ணிலா அங்கே வாடி ஒளிர்ந்தது;
நாளொன்று கழிந்த நள்ளிரா தன்னில்
ஞாயிறு அங்கிருப்பது ஞாயம் இல்லை
என்று எண்ணியே தன்னுளம் நொந்தது;
“இவ்வேளை வந்து இன்பத்தைக் கெடுப்பது
கதிரோன் செய்யும் கொடுமை” என்றது.”
(The moon was shining sulkily,/ Because she thought the sun / Had got no business to be there / After the day was done —/ "It's very rude of him," she said,/ "To come and spoil the fun.")

”நெடுங்கடல் மெத்தவும் நனைந்திருந்தது
மணல்கள் சாலவும் உலர்ந்திருந்தன
வெண்முகில் எதுவும் தென்பட வில்லை
உச்சியில் மேகம் மிச்சமேதும் இல்லை
தலைமேல் சிறகுகள் நிழல்விழ வில்லை
பறப்பதற் கங்கே பறவைகள் இன்மையால்”
(The sea was wet as wet could be,/ The sands were dry as dry./ You could not see a cloud, because/ No cloud was in the sky:/ No birds were flying overhead —/ There were no birds to fly.)

”கடல்யானை தன்னொடு கைகோர்த்துத் தச்சன்
பொடிநடை உலவி வந்தனன் அங்கே;
பரவிய மணல்வெளிப் பாரம் கண்டே
இருவிழி சோர இருவரும் புலம்பினர்:
’இம்மணல் அனைத்தையும் நீக்கிட வேண்டும்
செம்மை பெற்றுச் சிறக்கும் அப்போது!’”
(The Walrus and the Carpenter / Were walking close at hand;/ They wept like anything to see/ Such quantities of sand:/ If this were only cleared away,'/ They said, it would be grand!')

            இரகசிய அமைப்புக்கள் பெருஞ்சமயங்களின் மெய்ஞ்ஞானத் துறைகளில் கற்பிக்கப்படும் செய்திகளையும் அவற்றின் குறியீடுகளையும் வரித்துக் கொண்டு மேலும் குறியீட்டாக்கம் செய்துகொள்வன. அவ்வகையில் அவற்றால் இஸ்லாமிய மெய்ஞ்ஞானத் துறையாகிய தஸவ்வுஃப் என்னும் சூஃபித்துவத்தின் செய்திகளும் குறியீடுகளும்கூட வரிக்கப்பட்டுள்ளன. தாந்தே, மில்டன், ஷேக்ஸ்பியர் முதலிய பெருங்கவிகளின் ஆக்கங்களில் சூஃபித்துவத் தாக்கம் குறித்து ஆராய்ந்து பலர் எழுதியுள்ளனர். ஐரோப்பாவில் தோன்றிய இரகசிய அமைப்புக்களில் சூஃபித்துவத்தின் தாக்கம் பெரிது என்பதை இத்ரீஸ் ஷா எழுதிய “The Sufis” என்னும் நூல் வழி அறியலாம்.


       













இத்ரீஸ் ஷா தனது அப்பெருநூலுள் இஸ்லாமிய மரபின் விகடர்களுள் ஒருவரன முல்லா நஸ்ருத்தீன் பற்றி ஒரு தனி அத்தியாயம் ஒதுக்கிப் பேசுகிறார். மட்டுமன்று, முல்லா நஸ்ருத்தீனின் விகடங்கள் உணர்த்தும் மெய்ஞ்ஞானங்களைச் சுட்டிக்காட்டும் குறிப்புக்கள் நல்கி மூன்று தனித்தனி நூற்களும் எழுதியுள்ளார். சூஃபிகள் குறித்த அவரது நூலில் முல்லா நஸ்ருத்தீனின் பின்வரும் விகடத் துணுக்கு இடம்பெற்றுள்ளது:

      ”முல்லாவை அவரது நண்பர் ஒருநாள் மகிழுலா அழைத்துச் சென்றார். பல மணிநேரம் பயணித்த பின்னர் இயற்கை எழில் தவழுமொரு இடத்தை அடைந்தனர். நீல வானில் கார் மேகங்கள் மிதக்க, குளுமை கூட்டிய தென்றல் நடக்க, தொலைவில் மலைகளின் தொடர்ச்சி தோன்ற, பசுமைப் புல்வெளி பரந்து கிடக்க, நன்னீர்க் கடலென்று நவிலத் தக்கதாய்ப் பெரிய ஏரி விரிந்து கிடக்க... அந்த இடம் ஓர் அற்புத உலகம் எனக் கண்களில் நுழைந்து நெஞ்சில் நிறைந்தது.

      முல்லாவின் நண்பர் ஆனந்தக் களிப்பில் சில கணங்கள் அமிழ்ந்து கிடந்த பின் முல்லாவை நோக்கி முறுவல் பூத்து வினவினார், ‘என்ன முல்லா, உலாவெல்லாம் எதற்கு வீண்செலவுன்னீங்களே? இப்போ சொல்லுங்க, எப்படி இருக்கு இந்தக் காட்சி?’. முல்லா, “அற்புதம் போங்க. வருணிக்க வார்த்தையே வரல. ஆனால்…” என்று சொல்லி இழுத்தார். “ஏன்? என்ன ஆச்சு? எதுக்கு ஆனான்னு இழுக்குறீங்க?” என்று பதறியபடிக் கேட்டார். கண் முன் கடல் எனக் கிடந்த ஏரியைச் சுட்டிக் காட்டி முல்லா சொன்னார், “எல்லாம் நல்லாத்தான் இருக்கு… ஆனால் இந்த இடத்துல இவ்வளவு தண்ணிய கொட்டிக் கெடுத்து வச்சிருக்கானுங்க. இது மட்டும் இல்லாம இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்?’”

      மேலே, லூயி கரோல் தனது கதைப் பாடலில் ”இம்மணல் அனைத்தையும் நீக்கிட வேண்டும்/ செம்மை பெற்றுச் சிறக்கும் அப்போது!” என்று எழுதியிருப்பதன் மூல முகவரி இந்த முல்லா விகடம்தான். இதன் அர்த்தம் என்ன? ஆன்ற தமிழ்ப்புலவீர்! ஆராய்வீர்.

      ”Such quantities of sand” என்று கடல்யானை மருண்டு கவல்வதாக கரோல் வரைந்திருக்கும் வரி கடலும் கடல் சார்ந்ததுமான “நெய்தல் திணை” பற்றித் தொல்காப்பியர் கூறுவதை நினைவூட்டுகிறது. அதன் நிலத்தைப் “பெருமணல் உலகம்” என்று குறிக்கிறார் அவர்.

      கரோலின் கதைப்பாடல் மேலும் நீண்டு செல்கிறது. கடலிலிருந்து வெளிவந்து கடல்யானை மற்றும் தச்சரின் பின்னே ஆளிச் சிப்பிகள் ஓடி வருகின்றன. தச்சன் அவற்றைக் கீறிப் பிளந்து சமைக்க அவனும் கடல்யானையும் அவற்றை ரொட்டியுடன் சேர்த்து உண்டு தீர்க்கின்றனர் என்று கதை முடிகிறது.

      பின்வரும் அடி என் கவனத்தை ஈர்த்தது:
      ”கடல்யானை சொன்னது:
      நம் தேவை எல்லாம் ஒரு ரொட்டிக் கூறுதான்”
      (A loaf of bread,' the Walrus said,
      Is what we chiefly need.)

                விவிலியத்தின் புகழ் பெற்ற இறைவேட்டல் இங்கே நினைவுக்கு வராமல் போகாது: ”நாளது ரொட்டியை அருள்வீர் எமக்கே” / “அன்றாட அப்பத்தை அருள்வீர் எமக்கே” (”Give us this day our daily bread” (Mathew:6:12); “Give us each day our daily bread” (Luke:11:4)).

      பாரசீக இலக்கியம் மற்றும் சூஃபித்துவத்தால் ஈர்க்கப்பட்ட இன்னொரு ஆங்கிலேய கவிஞர் எட்வர்ட் ஃபிர்ஜெரால்டு. உமர் ஃகய்யாம் எழுதிய ருபாயியாத் என்னும் நான்கடிப் பாடல்களிலிருந்து சிலவற்றைத் தேர்ந்து அவற்றைத் தாறுமாறாக மாற்றி மூலத்தில் இல்லாத பல குறியீடுகள் எல்லாம் பெய்து ஆங்கிலத்தில் ஐந்து முறை மறு ஆக்கங்கள் செய்து வெளியிட்டவர். எனினும், அந்த ஆங்கிலேயர் செய்த கலப்பட அத்தரில் மூல ரோஜாவின் நறுமணம் கமழவே செய்கிறது என்று சூஃபித்துவ நெறி வல்லோர் இயம்புகின்றனர். ஃபிட்ஜெரால்டு தனது கய்யாமிய ’ருபாயத்’ ஆங்கில ஆக்கம் ஒன்றில் இந்த ”ரொட்டி”யைக் கையாள்கிறார்: ”Here with a Loaf of Bread beneath the Bough” (கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் மொழிபெயர்ப்பில் வெய்யிற்கேற்ற நிழல் உண்டு, வீசும் தென்றல் காற்றுண்டு, கையில் கம்பன் கவியுண்டு, கலசம் நிறைய மதுவுண்டு. ஆனால், ரொட்டிக்கூறு இல்லை. எனவே அடியேன் அதனை மொழிபெயர்க்க வேண்டியதாகிறது)

      ”தருவின் கீழே நிழலில் இங்கே
      அருஞ்சுவை ரொட்டி ஒருகூறுண்டு
      நறுங்கள் ளுடனே நற்கவி யுண்டு
      செறிவனம் தன்னில் சேர்ந்திசை பாட
      நெருங்கி இருப்பாய் நீயெனில், சகியே!,
      செறிவனம் அன்றோ சுவனமிப் போதே!”
      (“Here with a Loaf of Bread beneath the Bough,/ A Flask of Wine, a Book of Verse - and Thou/ Beside me singing in the Wilderness -/ And Wilderness is Paradise enow.”)



           













 உமர் ஃகய்யாம் இந்தியாவில் எப்படி உள்வாங்கப் பட்டார் என்பதொரு சுவையான வரலாறு. சுவாமி கோவிந்த தீர்த்தா என்பார் உமர் ஃகய்யாமி வாழ்வையும் வாக்கையும் ஆங்கிலத்தில் “The Nectar of Grace” (’அருட்தேன்’; 1941) என்றொரு நூலாக்கியுள்ளார். ”ஒரு யோகியின் ஸ்வசரிதை” (Autobiography of a Yogi) என்னும் நூலின் வழி உலகெங்கும் அறியப்பட்ட பரமஹம்ஸ யோகானந்தா அவர்கள் உமர் ஃகய்யாம் பாடல்களுக்கு யோக நெறிப்படி விளக்கம் நல்கி “Wine of the Mystic” (’ஆத்ம ஞானியின் மது’) என்றொரு நூல் எழுதியுள்ளார். மேற்கண்ட பாடலுக்கு அவர் தந்துள்ள விளக்கம் இது:

      ”முகுதந்தண்டு என்னும் உயிர்த் தருவின் மீதும் ஆன்ம விழிப்பின் மீதும் ஓர்மை ஆகி தியானத்தின் ஆழ்ந்த மௌனத்தில் அமர்ந்து அமைதியின் நிழலில் ஆறுகின்றேன். பிராணம் எனும் உயிராற்றலின் வாழ்வளிக்கும் ’ரொட்டி’யால் வலிமை பெற்று என் ஆன்மாவின் குவளையில் நிரம்பி வழியும் தெய்வீக மயல்தரும் தொல் மதுவினை மாந்துகின்றேன். நித்திய இறைக்காதலின் கவித்துவ உதிப்புக்களை என் இதயம் இடையறாது இசைக்கின்றது. அழ்ந்த உள்-மைய அமைதியின் இந்த வனத்தில் – துடிப்புறு ஆசைகளின் துள்ளல்கள் யாவும் அழிந்தொழிந்த போது – என் உன்னதக் காதலியே! புனித இசைப் பயனே! உன்னைச் சேர்கிறேன். அவாக்கள் அனைத்தையும் அணைக்குமொரு ஞான இசையை நீயே என்னிடம் தொனிக்கின்றாய். மண்படு ஆசைகள் மற்றும் இச்சைகளின் தளைகள் அறுந்த தூய வனவெளி இஃதே! இந்த ஏகாந்தத்தில் நான் தனியே இல்லை! எனது அக அமைதியின் தனிமையில் நான் முடிவற்ற பேரின்பத்தின் சுவனத்தைக் கண்டுகொண்டேன்!”
(ஆங்கில மூலம்: “Sitting in the deep silence of meditation, with my mind concentrated on the cerebrospinal tree of life and spiritual consciousness, I rest in the shade of peace. Nourished by the life-giving ‘bread' of prana [life energy], I quaff the aged wine of divine intoxication brimming the cask of my soul. Unceasingly my heart recites the poetic inspirations of eternal divine love. In this wilderness of deepest innermost silence—whence all tumult of thronging desires has died away—I commune with Thee, my Supreme Beloved, the Singing Blessedness. Thou dost sweetly intone to me the all-desire-satisfying music of wisdom. Ah, wilderness, free from the clamor of material desires and passions! In this aloneness I am not lonely. In the solitude of my inner silence I have found the paradise of unending Joy.”)

      இதுபோதும் இப்போது. மிகுந்த நாழியாகிவிட்டது. வரைந்த எண்ண வட்டம் பாரதிக்கே மீள்கிறது: ”தனிமை கண்டதுண்டு அதில் சாரம் இருக்குதம்மா!.”

No comments:

Post a Comment