Monday, November 22, 2010

மொழியின் உலகம்



சூரியன் என்பதினும்
பிரம்மாண்டமாய் உள்ளது
நிலா என்னும் சொல்.

நட்சத்திரம் என்பதும்
விண்மீன் என்பதும்
வேறு வேறு.

பாஷை
பாடை ஆகவேண்டாம்.
பழிக்குப் பழி
மொழிக்குப் பழி.

தவளைக்கு
என் மொழியில்
தவக்களை 
என்று பெயர்.

மொழியின் 
தவக்களை
கவிதை.

மழலை மொழியில் 
மழலைக்கு 
என்ன பெயர்?

மழலை
மொழியா?

தமிழுக்கு
அமுதென்று பேர்.
பிற மொழிகளுக்கும் கூட.

தாய்-சேய்
என்பதுபோல் 
உயிர்-மயிர்.

மௌனம் 
அழகான சொல்.
சப்தங்கள் அல்ல
மௌனத்திற்கு ஆபத்து
மௌனம் என்னும் சொல்.

கிணற்றுத் தவளை
மொழி அறியும்.
பழைய குளத்தின் தவளை
வழி அறியும்.

மொழி விளையாட்டில்
வெற்றி அரிது.

மொழியில்
சாத்தியம் பெரிது.
சத்தியம் அரிது.

3 comments:

  1. புரியிற மாறி இக்கிது

    ReplyDelete
  2. மொழியின்
    "தவக் - கலை"
    கவிதை.

    ReplyDelete
  3. //மொழியில்
    சாத்தியம் பெரிது.
    சத்தியம் அரிது.//

    அதற்குத்தானே மெள‌னம்?

    ReplyDelete