கவிஞர் வாலி குறித்து நேற்று நண்பர் மானசீகன் ஒரு குறும்பதிவு போட்டிருந்தார்.
வாலியின் பன்முகத் தன்மை மற்றும் தகவமைத் திறன் ஆகியவற்றை அவரது திரைப்பாடல் வரிகளின்
வழியே விதந்தோதிச் செல்லும் அப்பதிவில் ஓரிடம் என் கவனத்தை நிறுத்திற்று.
”ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தை (Theory of Relativity) சினிமா
பாடலில் சொன்னவரும் அவரே.
’மாதங்களும் வாரம் ஆகும் / நீயும் நானும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும் / பாதை மாறி ஓடினால்’
’நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும்
நீயென்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கல் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே’”
பதிவைப்
படித்து முடித்துவிட்டு மானசீகனுக்கு வட்ஸப்பில் செய்தி அனுப்பினேன். ’இவ்விரு படங்களுக்கு
இடையில் இன்னொரு படத்தில் இதே கருத்து ஒரு
பாடலில் வருகிறது. வாலி என்றே நினைக்கிறேன்’ என்று. உறுதி செய்துகொள்ள விக்கிப்பீடியாவில் தேடியபோது அது வைரமுத்து எழுதியது
என்று காட்டிற்று. வாணி ஜெயராம் பாடிய “எது சுகம் சுகம்…” என்று தொடங்கும் பாடல் அது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தது. வண்டிச் சோலை சின்ராசு என்னும் படத்தில் இடம் பெற்றிருந்தது.
வைரமுத்து எழுதிய வரிகள் இவை:
“கூடும் நேரம் பல யுகங்கள் கணங்கள் ஆகும்
நீங்கும்
நேரம் சில கணங்கள் யுகங்கள் ஆகும்”
இவ்வரிகளைச்
சுட்டிக் காட்டியதோடு மானசீகனுக்கு இன்னொரு செய்தியும் தெரிவித்தேன்: “ஆனால், காதலில்
இப்படியொரு உணர்வுத் தன்மை இருப்பதை யானறிய முதலில் எழுதியவர் உருது மகாகவி அல்லாமா
இக்பால்தான்”. மானசீகன் ஆச்சரியப்பட்டார் என்றே நினைக்கிறேன். “இக்பால் வரிகள் ஜி?”
என்று பதிலனுப்பினார். அவ்வரிகளைக் கேட்டார். தேடி அனுப்புவதாகச் சொன்னேன்.
மேற்சொன்ன
திரைப்பாடல் வரிகளின் மூலம் இக்பாலின் வரிகளே என்று சுட்டிக்காட்டி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்
என்று நினைவு. கடந்த ஒன்பது ஆண்டுகளாக பிரபஞ்சக்குடிலில் எழுதிப் பதிவேற்றிய கட்டுரைக்
குவியலினூடே அளைத்துத் தேடிச் சலித்துச் சோர்ந்தேன்.
எனது
சிறு நூலகத்தின் தூண்டு நூற்கணங்களிடைத் தேடியபோது கே.சி.கந்தா என்பார் தொகுத்து, உருது
மூலத்துடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட “Masterpieces of Urdu Ghazal –
From 17th to 20th Century” என்னும் நூல் கிடைத்தது. (என் கல்லூரிக்
கால நண்பன் அஸ்லம் பரிசளித்தது). அதில் அவ்வரிகளைக் கண்டு பிடித்தேன். உருதுவில் “மஹீனே
வஸ்ல் கெ கடியோன் கி சூரத் உடுத்தே ஜாதே ஹேன் / மகர் கடியான் ஜுதாயி கீ குஸர்த்தீ ஹேன்
மஹீனோன் மேன்” என்று அல்லாமா இக்பால் பாடியிருக்கிறார்.
“The months of union fly like hours
But
the hours of severance crawl like months”
என்று கே.சி.கந்தா ஆங்கிலம் ஆக்கியிருக்கிறார்.
நான் அதனை இவ்வண்ணம் தமிழ் செய்தேன்:
”கூடலில் மாதங்கள்
கணங்களைப் போல் மறையும்
பிரிவினில் கணங்களும்
மாதங்களாகி நிறையும்”.
No comments:
Post a Comment