”ஒவ்வொரு ஆத்மாவும்
மரணத்தைச் சுவைப்பதே ஆகும். பின்னர் நீங்கள் நம்மிடமே மீட்கப்படுவீர்கள்” (குர்ஆன்:
29:57)
கவிக்கோ அப்துல் ரகுமான் மரணத்தைச் சுவைத்துவிட்டார். நேற்று காலை
ஒன்பது மணியளவில் ஆம்பூரிலிருந்து நண்பர் பேராசிரியர்.மீரான் எனக்குத் தகவல் சொன்னார்.
’முடிந்தால் கிளம்பி வாருங்கள்ஜி’ என்றும் சொன்னார். அவரும், நண்பர்கள் ரஃபீக் மற்றும்
ரஹீம் ஆகியோரும் சென்றிருப்பார்கள் என்று நம்புகிறேன். அப்பட்டியலில் அடியேன் மட்டும்
மிச்சம். 2002-இல் நாங்கள் நால்வரும் முதுகலை மாணவர்களாய் இருந்தபோது திருச்சிக்கு,
எம் கல்லூரிக்கு வந்திருந்தார். அதுவே அவருடனான முதல் சந்திப்பு. மாலை சில மணிநேரங்கள்
சங்கம் ஹோட்டல் அறையில் எம் நால்வருடனும் கவிதை பற்றி மிக உற்சாகமான உரையாடினார். எங்களின்
முகவரிகளைப் பெற்றுக்கொண்டு ரயிலேறினார்.
நேற்று (2.5.20017) நாள் முழுதும் அவரைப்பற்றிய நினைவுகள் வந்துகொண்டிருந்தன,
ஆரவாரமற்ற பெருங்கடல் ஒன்றிலிருந்து லாவகமாய் வந்து செல்லும் அலைகளைப் போல.
அவரை நான் முதன்முதலில் அறிந்தது பள்ளிப்பருவத்தில். பாரதிதாசன்
சிந்தனைப் பள்ளியின் தமிழுணர்வில், மரபுக் கவிதை மயக்கத்தில் மூழ்கியிருந்த எனக்குப்
புதுக்கவிதையை நண்பர் கரிகாலன் அறிமுகப்படுத்தினார், அப்துல் ரகுமானின் “நேயர் விருப்பம்”
நூல் வழியாக. அதனை அடுத்து, தான் பரிசுப் பெற்று வந்த “சலவை மொட்டு” என்னும் கட்டுரை
நூலையும் அறிமுகப்படுத்தினார். வாசிக்க வாசிக்க ஒரு ரசவாதம் என்னை மாற்றி அமைத்தது.
உரைநடை வரிகளும்கூட இப்படிச் செதுக்கப்பட்ட கவியழகுடன் இருக்க முடியுமா என்று வியக்க
வைத்த உரைநடை அதில் இருந்தது.
தஞ்சையில் தூய பேதுரு மேனிலைப்பள்ளியில் அப்போது படித்துக் கொண்டிருந்தேன்
(திருவையாற்றில் வீடு). பண்டாரவாடையிலிருந்து வரும் நண்பன் நூர் முஹம்மதின் பையில்
எப்போதும் ”பாக்யா” இருக்கும். விடலைப்பருவப் பையன்களின் மத்தியில் அதன் அட்டைப்படத்திற்காகவே
பிரபலமாகியிருந்தது. அதனை ஒருவன் பையில் வைத்திருக்கிறான் என்பதே அவன் மீது ஒரு தனிப்பார்வையை
அனைவரிடமும் உண்டாக்கிவிடும். அப்போது நூரிடம் கேட்டபோது ”அப்துல் ரகுமான் இதில் ஆலாபனை
என்றொரு கவிதைத் தொடர் எழுதுகிறார். அதனை வாசிக்கவே வாங்குகிறேன்” என்று சொன்னான்.
அதுவரை வெளிவந்திருந்த கவிதைப் பக்கங்களைக் கத்தரித்து இணைத்துக் கொண்டு வந்தான். பள்ளி
மைதானத்தில் மரத்தடியில் அமர்ந்து தினமும் படித்தோம். அதே ’ஆலாபனை’யைப் பின்னர் நான்
எம்.சி.ஏ படித்தபோது கல்லூரியின் தோட்டத்தில் ஒரு கலிக்கிமரத்தின் நிழலில் அமர்ந்து
வாசித்திருக்கிறேன். அதன்பின் முதுகலைத் தமிழும் பயின்றபின், எம்.ஃபில் ஆய்வுக்கு அதே
ஆலாபனையைத்தான் தேர்ந்தேன்.
கல்லூரிப்படிப்பிற்காகத் திருச்சிக்கு வந்துவிட்டேன் என்றாலும் திருவையாறு
செல்லும்போதெல்லாம் தஞ்சாவூர்ப் பேருந்து நிலையத்தினருகில் இருந்த ”முரசு நூல் நிலையம்”
என்னும் கடையில் நூற்களும் இசை நாடாக்களும் வாங்கும் பழக்கம் இருந்தது. அங்கேதான் அப்துல்
ரகுமான், கலீல் ஜிப்ரான் மற்றும் ஓஷோ ஆகியோரின் நூற்களை அதிகமும் வாங்கினேன். கல்லூரியில்
சேர்ந்தமைக்காக 21.06.1994 அன்று நண்பர் கரிகாலன் “அவளுக்கு நிலா என்று பெயர்” வாங்கித்
தந்தார். கவிக்கோவின் நூற்கள் ஒவ்வொன்றாய் அதிலிருந்தே என்னிடம் சேரத் தொடங்கின. (முட்டை
வாசிகள், கரைகளே நதியாவதில்லை, சொந்தச் சிறைகள் என்று தொடர்ந்த அந்த மெல்லிய நூற்களில்
எல்லாம் அட்டைப்படங்களில் மணியம் செல்வனின் ஓவியங்களும் கிறங்கடித்தது. அந்த முதற்பதிப்புக்களைத்
திருமகள் நிலையம் செய்திருந்தது. இப்போதைய பதிப்புக்களில் அந்த அழகு இல்லை. பின்னர்,
ஆலாபனையில் கவிதைக்கு ஒன்றாக ம.செ. வரைந்த சித்திரங்கள் சிலிர்க்கச் செய்தன.)
கல்லூரியில் கிடைத்த ஆப்த நண்பன் அஸ்லமிடம் கவிக்கோவை அறிமுகம் செய்தேன்.
அவனுக்குத் தாய்மொழி உருது. கஜல் பிரியன். ஜக்ஜீத் சிங் பாடிய கஜல்களின் இசைநாடாக்கள்
மூன்று டஜன் கணக்கில் அவன் வீட்டில் இருந்தன. புகைப்படத்தில் அப்துல் ரகுமானைப் பார்த்துவிட்டு
‘அடடே ஜக்ஜீத் மாதிரியே இருக்கிறாரே!’ என்று வியந்தான். அவன் வீட்டின் முற்றத்தில்
அமர்ந்தபடி ஆலாபனையிலிருந்து ஒவ்வொரு கவிதையாய் நான் வாசித்துக்காட்டவும் அவன் கேட்கவுமாக
அமைந்த நட்புப் பொழுதுகளும் இப்போது நினைவில் எழுகின்றன.
இப்படியாக என் மனத்தில் ஒரு தனியிடம் பெற்றிருந்த கவிக்கோவை நான்
நேரில் சந்திப்பேன் என்றெல்லாம் எண்ணியிருக்காத நிலையில் கல்லூரி விழாவுக்கு வந்தார்.
ஆரம்பத்தில் நான் சொன்னபடி நாங்கள் நால்வர் அவரைச் சந்தித்தோம். புறப்பட அவர் தயாரானபோது
எனது எளிய அன்பளிப்பை அவரிடம் நீட்டினேன். ஜக்ஜீத் சிங்கின் “ஃபேஸ் டூ ஃபேஸ்” என்னும்
கஜல் கேசட். வாங்கிப் பார்த்தவர் “அட, நம்மாளு” என்றார். அவருக்குப் பிடிக்கும் என்பதை
நான் மானசீகமாக உணர்ந்திருந்தே எடுத்துச் சென்றிருந்தேன். ஒருபக்கம் புருவத்தை உயர்த்தி
உதட்டை லேசாக இழுத்து மலரும் அவரின் சிக்னேச்சர் முகபாவத்தை மீண்டும் மீண்டும் ரசிக்கக்
கிடைத்த அனுபவம் அது.
அதன் பின் கவிக்கோவை நான் சந்தித்தது அவரது இல்லத்தில். திருவான்மியூரில்
கடல்வழிச் சாலையில் அப்போது இருந்தார். எனது எம்.ஃபில் ஆய்வேட்டின் ஒரு பிரதியை அவருக்குக்
கொடுக்க நானும் நண்பர் மீரானும் போயிருந்தோம். வீட்டின் மாடி அவரது தனிப்பட்ட பகுதியாய்
இருந்தது. நூலகமும் சோஃபாக்களும் இசைப் பேழைகளும் அங்கிருந்தன. சோஃபாவில் அமர்ந்தவுடன்
ஆய்வேட்டை வாங்கிப் பார்த்தார். “சூஃபித்துவப் பார்வையில் அப்துல் ரகுமானின் ஆலாபனை”
என்னும் தலைப்பே அவரைக் கவர்ந்துவிட்டதாகத் தெரிந்தது. பேசத்தொடங்கினார். இடையில்,
மூன்று ‘ச்சாயா’க்களுக்கு ஆணை பிறப்பித்தார். அவரின் மனைவியே படியேறி வந்து வழங்கிச்
சென்றார்கள். அருமையான தேநீரைப் பருகியபடி அவரது நூலக அலமாறியை நோட்டம் விட்டேன். ஓஷோவின்
நூற்களும் அதில் இருந்தன. ரெபல் பதிப்பக வெளியீடாக வந்த நேரடி நூற்கள். அவற்றில் ஓஷோவின்
அரிதான புகைப்படங்கள் இருக்கும். தற்போது வரும் பதிப்புக்களில் அவை இருப்பதில்லை. குறிப்பாக,
ஹைகூ கவிதைகள் பற்றிய “Signatures on water” என் கண்ணைக் கவர்ந்தது. ஒருவித சந்தோஷம்
என மனத்தில் தோன்றியது. ஏனெனில், ’கவிக்கோவின்
ஆளுமையில் மவ்லானா ரூமி, அல்லாமா இக்பால் மற்றும் ஓஷோ ஆகியோரின் தாக்கம் இருக்கிறது’
என்பதே எனது எம்ஃபில் ஆய்வின் முடிவில் கண்டடைந்து எழுதியிருந்தேன். அதனை அங்கேயே சுட்டிக்காட்டினேன்.
அவரும் அது சரிதான் என ஒப்புக்கொண்டார். “ஓஷோ மிகப்பெரிய அறிவாளி. ஆனால், மவ்லனா ரூமிதான்
எனது மானசீக குரு” என்றார்.
அது ஒரு வெள்ளிக்கிழமை. இருந்து மதியம் சாப்பிட்டுவிட்டுத்தான் போகவேண்டும்
என்று சொல்லிவிட்டார். அவருடனேயே தொழுகைக்குச் சென்றோம். கீழே முற்றத்தில் கார் நின்றிருந்தது.
அவரோ வீதிக்கு வந்து ஓர் ஆட்டோவை மறித்தார். “டிரைவர் வரவில்லை. ஆட்டோவில் போய்விடுவோம்”
என்றார். மீன் குழம்பும் வறுவலுமாகச் சாப்பாடு. மேஜையில் அமரவைத்து அவருமே பரிமாறியபடி
உடனருந்தினார். மீண்டும் மாடிக்கு ஏறியவர்கள் மாலை வரை பேசிக்கொண்டிருந்தோம். அப்போது
நான் நிர்வாக ஊதிய அடிப்படையில் விரிவுரையாளர் பணியில் இருந்தேன். மீரான் எம்.ஃபில்
செய்துகொண்டிருந்தார். “தம்பீ, இலக்கியச் சேவையெல்லாம் அப்புறம் பார்க்கலாம். முதலில்,
பொருளாதாரத் தன்னிறைவை அடையணும். அது ரொம்ப முக்கியம். அது இல்லாம இலக்கியச் சேவைன்னு
எறங்குனவன் பல பேரு அட்ரஸே தெரியாமப் போயிட்டானுங்க” என்று எதார்த்த நிலையை எடுத்துச்
சொன்னார். (அவருடைய நண்பர் கவிஞர் மீரா அவர்களை நினைத்துக்கொண்டு சொன்னாரோ என்று நினைக்கத்
தோன்றுகிறது.) எனது தொலைப்பேசி எண்ணை வாங்கிக்கொண்டார். ஆய்வேட்டைப் படித்துவிட்டுப்
பேசுகிறேன் என்றார். இரண்டே நாட்களில் அழைத்தார். “உங்க ஆய்வேட்டைப் படித்துவிட்டேன்
தம்பீ. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.” என்று பாராட்டினார். அத்துடன், “இது ஆய்வேட்டின்
நடையில் இருக்கு தம்பீ. இத நீங்க உடச்சு சின்னச் சின்னக் கட்டுரைகளா எழுதுங்க. பொது
மக்கள் படிக்கிறாப்ல இருக்கணும். ஷாஜஹான்ட்ட சொல்லி நூலாகக் கொண்டு வர்றேன்” என்றும்
சொன்னார்.
அதுவே நான் கவிக்கோவை நேரில் சந்தித்த கடைசி முறை. அதன் பின் சில
முறை அலைப்பேசியில் உரையாடியிருக்கிறோம். கும்பகோணத்தில் அகில உலக இஸ்லாமிய இலக்கிய
எட்டாம் மாநாடு அவரின் தலைமையில் நடந்தது. அதில் எந்தவொரு குழுவிலும் நான் இல்லை. நேரில்
கலந்துகொள்ளவும் இல்லை. ஆனாலும் ஒரு தனிச்சிறப்பு அதில் அடியேனுக்குக் கொடுத்தார்.
எப்படி என்று சொல்கிறேன். அந்த மாநாட்டிற்கு அவர் தேர்ந்திருந்த பொருண்மை “இஸ்லாமிய
இசை” என்பதாகும். மார்க்க அறிஞர்கள் மற்றும் அரைவேக்காடுகளினிடையே பெரும் சலசலப்பை
ஏற்படுத்தி அம்மாநாடு நடந்தது. அதன் சிறப்பு மலரில் முதல் கட்டுரை அவருடையது. இரண்டாவது
இடத்தை அடியேனின் கட்டுரைக்குத் தந்திருந்தார். பின்னர் நேரில் அழைத்தும் பேசினார்.
“என் கட்டுரை இரண்டாமிடத்திலா?” என்று வியந்து கேட்டேன். “தரம் இருக்குல்ல தம்பீ. நீங்க
நல்லா எழுதியிருக்கீங்க. அதுக்கான இடத்த தந்திருக்கேன்” என்று சொன்னார். எம்ஃபில் ஆய்வேட்டை
நூலாக்கும் பணி பற்றிக் கேட்டார். அப்போது நான் அவரது கஜல் கவிதைகளை வைத்து “இஸ்மி”
என்னும் இதழில் (அவர் பின்னர் தலைவராக இருந்த தமிழ்நாடு வக்ஃபு வாரிய மாத இதழ். அதன்
ஆசிரியர் தத்துவக் கவிஞர் இ.பதுருத்தீன் அவர்கள்) “பட்டாம்பூச்சிக் காலம்” என்னும்
தலைப்பில் கட்டுரைகள் எழுதி வந்தேன். ஒரு டஜன் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு என் ஆய்வேட்டின்
அமைப்பை மாற்றாமலேயே அதனிடையில் இணைத்து “சூஃபித்துவப் பார்வையில் கவிக்கோ” என்னும்
தலைப்பில் பேராசிரியர் முனைவர். மு.சாதிக் பாட்சா அதனை நூலாக வெளியிட்டார். இதுவரை
அது கவிக்கோ அவர்களுக்குத் தெரியாது. (இப்போது தெரிந்திருக்குமோ என்னவோ?).
மீண்டுமொரு தருணத்தில் நூலாக்கம் பற்றி அவர் கேட்டபோது ‘ஐயா, இப்போதுதான்
வீடு கட்டிக்கொண்டிருக்கிறேன். அதனால் எதுவும் எழுதவில்லை” என்று சொன்னேன். பெரிதும்
மகிழ்ந்து வாழ்த்தினார். பொருளாதாரத் தன்னிறைவின் இன்றியமையாமை பற்றி அப்போதும் வலியுறுத்தினார்.
கவிஞன் அல்லது எழுத்தாளன் அல்லது தமிழாசிரியன் வறுமைப்படக் கூடாது என்னும் கருத்து
அவரில் எப்போதும் வலுவாக இருந்திருக்கும் போலும். (தமிழாசிரியனுக்குத் தமிழ் தெரிந்திருக்க
வேண்டும் என்னும் கருத்து இப்போது என்னில் பிரதானமாய் இருக்கிறது. இது காலநிலை மாற்றத்தின்
அடையாளமாய் இருக்கக்கூடும்.)
”பிலாலி மன்ஜில்” என்னும் எனது இல்லத்தின் புகுவிழாவை முடித்துவிட்டு
அவருடன் பேசினேன். மகிழ்வுடன் வாழ்த்தினார். ஆய்வேட்டை சிறு கட்டுரைகளாக உடைத்து மறு
ஆக்கம் செய்யுமாறும் அதனை யுனிவர்சல் பதிப்பகத்தின் வாயிலாக நூலாகக் கொண்டுவரலாம் என்றும்
அப்போதும் சொன்னார், 2015-ல். அக்காரியத்தை ஏனொ இன்றுவரை நான் செய்யவில்லை. அவர் வெளிக்கொண்டு
வர விரும்பிய நூல் என்னும் தகுதியில் இப்போதும் அது கனவாகவே இருக்கிறது.
பின்னர் அவருக்குப் பவழவிழா ஏற்பாடுகள் நடந்தது. எக்குழுவிலும் நான்
கிடையாது. (அதாவது நண்பர்கள் மீரான், ரஃபீக் மற்றும் ரஹீமைப் போல் நேரில் சென்று இடம்
தேடிக்கொள்ள ஏனோ எனது மனநிலை எப்போதும் உடன்பட்டதில்லை. கவிக்கோவே ஆனாலும் சரி என்றிருந்துவிட்டேன்.)
அலைப்பேசியில் அழைத்தார். தனது லேட்டஸ்ட் நூற்களைப் படித்திருக்கிறேனா என்று விசாரித்தார்.
“பறவையின் பாதை” வரை வாசித்திருப்பதாகச் சொன்னேன். ”அதுக்கப்புறம் ரெண்டு மூனு வந்திருச்சே.
சரி, ஷாஜகான்ட்ட சொல்லி அனுப்பச் சொல்றேன். பவழ விழா மலருக்கு ஒரு கட்டுரை எழுதுங்க”
என்று சொன்னார். “கவிக்கோ கவிதைகள்” என்னும் தலைப்பில் அவரின் பதினொரு கவிதை நூற்கள்
ஒன்றாகத் தொகுக்கப்பட்ட நூலொன்று வந்து சேர்ந்தது. ”ஞானம் கனிந்த கவி” என்னும் தலைப்பில்
கட்டுரையொன்று எழுதி அனுப்பி மலரிலும் இடம்பெற்றது. ஆனால் விழாவுக்கு நான் செல்லவில்லை.
சிறிது நாட்கள் கழித்து அவரே பேசினார். “என்னைச் சரியாகப் புரிந்துகொண்ட சிலரில் நீங்களும்
ஒருவர்” என்று சொன்னார். பள்ளி மாணவப்பருவத்தில் அவரின் கவிதையை முதன் முதலில் வாசித்த
அந்தக் கணத்திலேயே அது எனக்குத் தெரிந்திருந்தது, அவரும் நானும் ஒரே அகவுலகப் பிரஜைகள்
என்று. அப்போதுதான் அவரும் தனது பயணத்தை ஆன்மிக திசையில் வேகமெடுக்கச் செய்திருந்தார்.
அடியேனின் மனமும் அரசியல் திசை விட்டு ஆன்மிக திசை நோக்கித் திரும்பியிருந்த காலக்கட்டமும்
அதுதான். கவிக்கோ சொன்ன அந்த ஆத்மார்த்தமான ஒற்றை வரியே அவருக்கும் எனக்குமான உறவுக்கு
நான் பெற்ற சான்று என்று வாழ்க்கை முழுதும் வைத்துக்கொள்வேன். அது போதும்.
’ஆலிம் கவிஞர்’ தேங்கை ஷரபுத்தீன் மிஸ்பாஹி அவர்களின் வழியாக அந்தப்
பவழவிழா மலர் என் கைக்கு வந்து சேர்ந்தது. என் கட்டுரையைக் குறிப்பிட்டுக் காட்டித்
தனக்கு நிறைவு தந்த கட்டுரை என்று கவிக்கோ சொன்னதை அவர் என்னிடம் எத்திவைத்தார். அக்கட்டுரையில் அவரது கவியாளுமையின் பரிணாமத்தை நான் அலசியிருந்தேன்.
’கி.மு., கி.பி. என்று பிரிப்பது போல் அப்துல் ரகுமானை ஆ.மு., ஆ.பி என்று பார்க்கலாம்’
என்று ’ஆலாபனை’ நூலை வைத்தே அவரைப் பகுத்திருந்தேன். ஆலாபனைக்கு முன் சென்ற காலங்களில்
அவரின் கவிதைகள் எல்லாம் பரிசோதனைகள், வார்த்தை விளையாட்டுக்கள், வெளிநாட்டு வடிவங்களைத்
தமிழுக்கு அறிமுகஞ்ச் செய்தல் முதலிய நிலைகளில் வெளிப்பட்டவை. ஆலாபனையே அவரின் திருப்புமுனை
என்பது என் பார்வை. அதன் பின் அவரொரு சூஃபிக் கவியாகவே தன்னைப் பெரிதும் வெளிப்படுத்தினார்.
அவரே நான் அடைந்துகொண்ட கவிக்கோ, அசல் கவிக்கோ. ஆனால், இன்றளவும் அவரைச் சிலாகிப்பவர்கள்
பலரும் ஆ.மு காலக்கட்ட ’கவிதை’களுக்காகவே அவரை நேசிக்கிறார்கள். அவர்கள் எவருமே கவிக்கோவை
“அறிந்த”வர்கள் அல்லர், இன்று.
பல அஞ்சலிகள்
இப்போது அவருக்கு ஊடக வடிவங்கள் அனைத்திலும் இடம்பெற்றிருக்கும். ரஃபீக் (கவிஞர் மானசீகன்)
வாட்ஸ்-அப்பில் குறுஞ்செய்தி போலொரு அஞ்சலி செலுத்தியிருந்தார். “மரணம் முற்றுப்புள்ளி
அல்ல” என்று கவிக்கோ எழுதியதையே அவரது மரணம் தரும் செய்தியாய் பாவித்திருந்தார். பிறகு
நான் ஜெயமோகனின் தளம் சென்று கண்டேன். சிறியதொரு அஞ்சலிச் செய்தி இருந்தது, பின்வரும்
கராரான மதிப்பீட்டுடன்: “கவிதை பற்றிய அவருடைய கொள்கை நான் எண்ணுவதற்கு முற்றிலும் மாறுபட்டது. கவிதையை அவர் சொல்வீச்சாக, மேடை நிகழ்வாகவே பார்த்தார். அவை மௌனவாசிப்பில் மிகையாகவே எஞ்சின.” (”அப்துல் ரகுமான்: அஞ்சலி”, ஜூன்2, 2017). கவிக்கோவின்
ஆரம்பக்காலக் கவிதைகளை வேண்டுமானால் இப்படி மதிப்பிடலாம். ஆலாபனையைத் தொடர்ந்து வந்த
கவிதைகள் அப்படியானவை அல்ல என்பதே என் அவதானம்.
”தேவகானம்” என்னும் நூலின் முன்னுரையில் அவர் இப்படி எழுதுகிறார்,
”சந்தையில்
சாமான்கள் வாங்கிக் கொண்டிருந்த காலத்திலேயே எங்கிருந்தோ ஒரு புல்லாங்குழல் இசை என்னை
அழைத்துக் கொண்டே இருந்தது. சந்தையும் சாமான்களும் தேவைப்படாத காலம் வந்ததும், அந்தப்
புல்லாங்குழல் இசை உரத்து ஒலித்தது.”
ஆனால்,
சீக்குப்பிடித்த உலகியலின் எதார்த்தங்களில் ஒன்றென, அந்தச் சந்தைக் கடைக்காரர்களும்கூட
அந்த வேய்ங்குழல் நாதத்தை அறிந்தவர்கள் போல் காட்டிக்கொண்டு பொழிப்புரை வழங்குகின்ற
கண்ணறாவிக் காட்சிகளை எல்லாம் காணலாகிறது.
அந்த
வேய்ங்குழல் இசை என்பது ஆன்மிகம். சூஃபித்துவம் என்று அதனை இஸ்லாம் சார்ந்து பெயரிட்டுக்கொண்டாலும்
சத்திய தரிசனத்தை எந்த எல்லைகளுக்குள்ளும் குறுக்கிகொண்டவர் அல்லர் கவிக்கோ. ஜென்னும்
தாவோவும் இந்து ஞான மரபும் கிறித்துவ விவிலிய ஞான வாக்கியப் புரிதலும் கொண்டே அவரின்
ஆன்மிகம் ஆல் போல் தழைத்துப் பரவியிருந்தது.
“ஏகத்துவ
உள்ளமை” (வஹ்தத்துல் உஜூது) என்னும் சத்திய தரிசனத்தை, இஸ்லாத்தின் மூலமந்திரமான திருக்கலிமா
வழங்கும் ஆழிய ஞானத்தை அவர் புரிந்து கிரகித்திருந்தார், அல்லாமா இக்பாலைப் போலவே.
“இறைவன் ஒருவனே என்பது பாமரர்களின் நம்பிக்கை. எல்லாம் இறைவனே என்பதே உண்மையான ஏகத்துவம்”
என்றொரு பேட்டியில் ஒளிவு மறைவின்றிச் சொன்னார். கிண்டர் கார்டன் முஸ்லிம்களும் அரைவேக்காடுகளான
வஹ்ஹாபிக் கொடுங் கோட்பாட்டாளர்களும் அவர் சொன்னதைப் புரிந்து கொள்ளாது எதிர்வினை ஆற்றுவார்கள்
என்பதை அறிந்திருந்தும் அவர் அப்படிச் சொன்னதில் ஓர் ஆன்மிக மறவுணர்வு இருப்பதைக் காண்கிறேன்.
அத்தகைய கிணற்றுத் தவளைகள் கூச்சலிடும் ஃபத்வாக்களுக்கு அவர் அஞ்சாதிருந்தது அவரின்
ஆளுமையை இன்னும் மேலோங்கச் செய்கிறது. அவரது வீட்டில் நான் உரையாடியிருந்த போது “நெல்லிக்குப்பம்
அப்துற் ரஹ்மான் அவர்கள் எழுதிய முஸ்லிம் அத்வைத மூல மந்திரம் என்னும் நூலைப் படித்ததுண்டா?”
என்று கேட்டார். இல்லை என்றேன். “படியுங்கள். மிக ஆழமான நூல். நீங்கள் படிக்க வேண்டும்”
என்று பரிந்துரைத்தார்.
அவரை நேரில் சென்று காண நான் ஆர்வப்படாமைக்கு வேறு சில காரணங்களும்
உண்டு. ஒரு காலக்கட்டம் வரையில் அவரே எனது ஆதர்சக் கவிஞராய் இருந்தார். பின்னர் ஜெயமோகனின்
வழியாக தேவதேவனை வந்தடைந்தபோது நிலை மாறிற்று. என் மனத்துக்கினிய கவி என்று இன்று தேவதேவனையே
எண்ண முடிகிறது. மேலும், வண்ணதாசன் போன்றோரின் கவிதைகளில் உள்ள உணர்வழகியலே கவிதையின்
இயற்கை நறுமணமாய்த் தெரிகிறது. கவிதை ரோஜா அத்தர் புட்டியாய் இருக்கலாகாது, அஃதொரு
ரோஜாச் செடியாய் இருக்கவேண்டும் என்னும் மனநிலைக்கு நான் நகர்ந்திருக்கிறேன். (இப்போதும்
அவருடைய பாணியில் ‘சூஃபிக் கவிதை’ என்று சொல்லத்தக்க தனித்தனிக் கனச்சிந்தனைகளைக் கோர்த்த,
ஒவ்வொரு வாக்கியமும் ஒவ்வொரு தனிக்கவிதையாய் பாவிக்கத்தக்க கட்டமைப்புக் கொண்ட கவிதைகளை
அவ்வப்போது எழுதத்தான் செய்கிறேன் எனினும் அப்படி எழுதுவது குறைந்து வருகிறது.)
இன்னொரு காரணம், சென்னைக்குச் செல்வதெனில் எனது ஆன்மிக குருநாதரை
(முர்ஷித்-ஐ)ப் பார்க்கவே சென்று வருவது வழக்கமாகிவிட்டது. என் குருநாதரை அவர் அறிவார்.
“உங்க முர்ஷித் என் மீது பிரியமுள்ளவர்” என்று ஒருமுறை அலைப்பேசி உரையாடலில் குறிப்பிட்டிருக்கிறார்.
அது ஒரு பெரும் ஆறுதலாய் எனக்கு இருந்தது.
பத்து நாட்களுக்கு முன், கம்பம் டிஸ்கோ டீ ஸ்டாலில் நண்பன் ரஃபீக்குடன்
உரையாடும்போதுகூட மேற்சொன்ன கருத்தைப் பகிர்ந்தேன். “ஐயாவின் கவிதையில் எப்போதும் ஒரு
பேராசிரியர் எட்டிப் பார்த்துக்கொண்டே இருப்பார்” என்றான். “அவர் தன் கவிதைகளில் ஓர்
அறிஞராகவே காட்சி தருகிறார். ஒரு கணவனாக, தந்தையாக, தோழனாக மகனாக அவர் கவிதை எழுதியது
கிடையாது. இது பெருத்த ஏமாற்றத்தைத் தருகிறது. அதனால்தான் நான் தேவதேவனிடம் நகர்ந்துவிட்டேன்
போலும்” என்றேன். “சரிதான் ஜி. வைரமுத்துவிடம்கூட அந்த தனிமனிதத் தன்மையைப் பார்க்க
முடியும். கவிக்கோ ஐயாவிடம் அது இல்லை” என்று சொன்னான். இத்தகைய மதிப்பீடுகளை அவரின்
ரசிக மாணவர்களான நாங்களே செய்கிறோம் என்பதை ஒருவேளை அவர் அறிந்திருந்தாலும் அதற்காக
வருத்தப்பட்டிருக்க மாட்டார், எங்களின் ’வளர்ச்சி’ கண்டு மகிழ்ந்திருப்பார் என்றே நான்
உணர்கிறேன்.
நேற்று மாலை நோன்பு திறந்து அரைமணி நேர வாக்கில் சையது இப்றாஹீம்
பிலாலி அழைத்தார். ”கவிக்கோ ஒரு சூஃபி” என்றார். ஆமோதித்தேன். நீங்கள் வருவதெனில் நேரில்
செல்லலாம் என்றார். அரசியல்வாதிகளும் சந்தைக்கடைக்காரர்களுமே பெரும்பான்மையாக இருக்கப்போகும்
ஓர் இரங்கல் கூட்டத்திற்குச் செல்ல என் மனம் ஒப்பவில்லை என்றேன். சிறிது நேரம் அலைப்பேசியிலேயே
கவிக்கோவைப் பற்றி அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். “இதுவே அவருக்கு ஒரு நல்ல அஞ்சலி
ஆயிற்று” என்றார். உண்மை! ”அஞ்சலி” என்னும் சொல் இதயத்தின் மையத்தை (அரபியில் லுப்
என்ப), கூம்பிடும் நிலையில் உள்ளங்கைகளின் நடுவில் இருக்கும் வெற்றிடத்தை, நின்றெரியும்
விளக்குச் சுடரின் திரியுள இடத்தில் திரளும் வெற்றிடத்தைக் குறிக்கும் என்கிறது இந்து
ஞான மரபு. அது இன்னொருவருக்குத் திறந்து கொடுப்பதே “ஃபாத்திஹா” என்னும் திறப்பு. தனது
இதயத்தின் ஆழம் வரை சென்ற ஒருவர் அதே நிலையில் இருக்கும் சஹ்ருதயராக யாரைக் காண்கிறாரோ அவரை ஆதமார்த்தமாக உணர்ந்துகொள்வதே
அஞ்சலி என்பதன் அர்த்தம். அந்நிலை அறியார் அஞ்சலி செலுத்தவே முடியாது.
கவிக்கோவைப் பற்றி நாளெல்லாம்
வந்த சிந்தனைகளில் ஆலாபனை நூலின் முகவுரையில் அவர் எழுதிய இவ்வரிகள் மீண்டும் மீண்டும்
நினைவு வந்தன:
“எனக்குள் இருவர்
இருக்கின்றனர்.
ஒருவன் பாடகன்
மற்றொருவன் பித்தன்.”
அவ்விரண்டுமே அவரது ஆளுமையின் பரிமாணங்கள். அதில் பாடகனே நமக்குக்
கவிதைகள் தந்தான். பித்தன் பேராசிரிய வேடமிட்டுக்கொண்டு தத்துவங்களைக் கட்டுரைகள் ஆக்கினான்.
அவரால் நேரடியாகப் பாடகன் ஆக முடியவில்லை. எனவே கவிஞன் ஆனார். அவரால் தனது (ஞானப்)
பித்தனை வெளிப்படையாகக் காட்ட இயலவில்லை. அல்லது அதற்கான காலம் கனியத் தொடங்கியிருந்த
நிலையில் புறப்பட்டுவிட்டார்.
”நான் இசையைத்தான் காதலித்தேன். அவள் கிடைக்காததால் அவளின் தங்கையான
கவிதையைக் கைப்பிடித்தேன்” என்று அவர் ஒருமுறை இளையராஜாவிடம் சொன்னாராம். அந்த இசைஞானியின்
பிறந்த நாளில் நம் கவிஞானி இறந்திருப்பது அவரே விரும்பிய முரண் அணி போன்ற முத்தாய்ப்பாகிவிட்டது.
இரவு உறங்கச் செல்லும் முன், “பாடகன், பித்தன். இந்த இருவருக்கும்
இனி இறப்பில்லை” என்று சொல்லிக்கொண்டேன்.
எழுத்தாளாக தாங்கள் வளர துவங்கிய பாதையில் கவிக்கோவின் அரவணைப்பில் பிலாலியின் ஃபைஜான் மெய்சிலிர்க்க வைக்கிறது.
ReplyDeleteகவிக்கோவின் ஆ.மு கவிதை, கட்டுரைகள் தான் படித்திருக்கின்றேன். உங்கள் கட்டுரையை படித்ததும் பிந்திய கவிதைகள் படிக்கும் ஆர்வத்தை தூண்டுகின்றது.
சிறந்ததொரு அஞ்சலி உங்கள் கட்டுரை.