ஆகு பெயர்
பள்ளி
வளாகத்தின் மரநிழலில்
நின்றிருந்த
இம்மாலையில்
அருளாய்
எழுந்ததொரு உணர்வு
அபூபக்கர்
சித்தீக்கின் வார்த்தைகளாய்
“நானொரு
குருவியாய்ப் பிறந்திருக்கக்கூடாதா?”
அப்படியே
எவ்வி
எழுந்தொரு மேகமாய்
மிதந்திருக்கலாகாதா?
அப்படியே
கிளைவிரித்துப்
படர்ந்தொரு மரமாகி
நின்றுவிடக்கூடாதா?
அப்படியே
கல்லாய்ச்
சமைந்துக்
கிடந்திருக்கலாகாதா?
அப்படியே
காற்றாய்
உருமாறிக்
களித்தலைய
மாட்டோமா?
அப்படியே
நீராலானதெலாம்
மீண்டும் நீர் ஆகாதா?
ஆகுமானதெலாம்
ஆகிவிடும்
’ஆகு’ என்னும்
ஆணை மந்திரமாய்
ஆகிடவும் வாய்க்காதா?
பின்னும்
ஏதுமாகாமல்
ஆகென்னும்
மந்திரமும்
அதுவாய்
இருக்காதா?
05.06.2017
கிளைகளெல்லாம்
கவிஞர்கள்
பூக்களும் கனிகளுமாய்
பறவைகலெல்லாம்
தீங்குரல்
இசைக்கும்
பாடகர்கள்
ரசிகனாய்
இருப்பதினும்
மனிதன்
பெரும் பேறு
வேறுண்டோ?
பித்தன்
மகன்
முன்பொரு
நாள்
மழையில்
நனையாதிருக்கப்
பள்ளிக்கூடத்தில்
ஒதுங்கினான்
(அப்துல்
ரகுமானின்)
பித்தன்.
வகுப்பறைக்குள்
எட்டிப்பார்த்து
அவன்
சொன்னான்:
“புத்தகங்களே!
சமர்த்தாய்
இருங்கள்
குழந்தைகளைக்
கிழித்துவிடாதீர்கள்”
அப்போது
அவ்வழியே
மழையில்
களித்தபடி வந்தான்
பித்தனின் மகன் சித்தன்
பித்தனைக்
கண்டதும்
“Come ya, let’s play!” என்றழைத்தான்
பித்தன்
தயங்கி அங்கேயே நிற்கவும்
அருகில் வந்து அவனும் நின்றான்
வகுப்பறைக்குள்
எட்டிப்பார்த்தவன்,
“குழந்தைகளே!
நீர்த்துப்போயிருக்கும்
உங்கள்
பாடநூற்களை
ஈரமாக்குங்கள்!”
என்றான்.
photo by Loren Webster.
அழகியற் காட்சிகள்
(டோர் டெலிவரி)
வெய்யில்
நன்றாக ஏறிவிட்டது
கண்கள் கூசும்படி
புங்க
மர நிழலில்
படுத்துக்கிடக்கின்றன
பசுக்களும்
காளைகளும்
அவசரமாய்
அள்ளித் திணித்ததை
அசைபோட்டுக்கொண்டு
வள்ளல்
பெரும்பசுக்களின்
வாரிசுகள்
என்னும் முகபாவம்
திண்ணையில்
அமர்ந்து
வெற்றிலை
மெல்லும்
பேரிளம் பெண்களைப் போல
நான்கு
எட்டுக்கள்கூட
நகர முடியாது
நிழலுக்கு வெளியே
இருப்பினும்,
மேய்ந்தபடியுள்ளன
காலி
மனைகளில்
காளைகள் சில
ஒவ்வொன்றின்
அருகிலும்
ஓரிரு
உண்ணிக்கொக்குகள்
அருகே
வந்தபடியும்
எத்தி
நகர்ந்தபடியும்
சமயம்
பார்த்து மாடுகளைக்
கொத்திக்கொண்டும்
தத்தியபடி
அருகில்
சில மைனாக்களும்
வற்றிய
வாய்க்கால்கள்
சாக்கடையாகித்
தேங்கிக்கிடக்கும்
’டெவலப்பிங்
ஏரியா’வில்
தவளை
கிடைப்பதே பெரும்பாடு
இதில்
கயலுகளும் கனவுகள்
அபத்தம் அல்லவா?
எதார்த்த
வாழ்வியலுக்கு
அவை பழகிக்கொண்டுவிட்டன
ரியல்
எஸ்டேட் ஆக்கிய நாம்
எமது
முற்றத்தில் நின்று ரசிக்கிறோம்,
அழகியல்
உணர்வு பொங்க
சுட்டிக்காட்டிச்
சொல்கிறோம்
’அந்தக்
கொக்குகள்தாம்
எத்தனை
வெண்மை பாருங்கள்
பால்
போல பஞ்சு போல!
அதன்
கண்ணிலொரு பளிச் மஞ்சள்
கொன்றை
போல ஆவாரம் போல!’
13.06.2017
’அண்ணா!
இங்கே கவனியுங்கள்
கடன்
அன்பை முறிக்கும்’
என்கிறது சலூன்
அன்பு
கடனை மன்னிக்கும்
என்கிறது குர்ஆன்
என்னதான்
அகத்தின்
அழகு
முகத்தில்
தெரியும் என்றாலும்
முகத்திருத்தம்
செய்வதற்கும்
அகத்திருத்தம்
செய்வதற்கும்
நியதிகள்
வேறு
வேறுதான் அல்லவா?
No comments:
Post a Comment