சாரா ஜோசஃப் இங்கிலாந்து
நாட்டவர். நவோமி கேம்ப்பெல் போன்ற விளம்பர மாடல்களை அறிமுகம் செய்த முன்னணி
மாடலிங் ஏஜென்சி ஒன்றின் முதலாளியின் மகள். தற்போது உலகின் முதல் இஸ்லாமிய
வாழ்முறை (Lifestyle) இதழான “அமல்” (துருக்கிய உச்சரிப்பின்படி EMEL என்று
எழுதுகிறார். அரபியில், செயற்பாடு என்று பொருள்.) என்பதன் தலைமை நிர்வாகியாகவும்
ஆசிரியராகவும் இருக்கிறார். ஜோர்டானிலும் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்திலும் இயங்கி
வரும் ராயல் இஸ்லாமிக் ஸ்ட்ரேட்டஜிக் ஸ்டடீஸ் என்னும் அமைப்பால் உலகின் ஐந்நூறு
ஆற்றல்மிகு முஸ்லிம்கள் என்னும் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். சமயங்களுக்கிடையிலான
உரையாடலுக்காகவும் பெண்ணுரிமைக் குரலுக்காகவும் 2004-ஆம் ஆண்டில் இங்கிலாந்து
அரசவையின் OBE – Most Excellent Order of the British Empire என்னும் விருதினைப்
பெற்றுள்ளார். தனது பதினாறு வயதில் இஸ்லாத்தைத் தழுவிய சாரா ஜோசஃப் பின்னர் கிங்ஸ்
கல்லூரியில் இறையியல் மற்றும் சமயவியல் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றார். அவரின்
கணவர் மஹ்மூதல் ரஷீத் ஒரு மனித உரிமை வழக்கறிஞர்.
Association of Muslim Lawyers (AML) என்னும் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். அவரே அமல் இதழை
வெளியிடுகிறார். சாரா ஜோசஃப் தற்போது லண்டனில் தனது கணவர் மற்றும் மூன்று
பிள்ளைகளுடன் வசிக்கிறார்.
(அமல் இதழில் 11,
டிசம்பர் 2010-இல் வெளியான நேர்காணலின் தமிழாக்கம் இது)
உங்கள் சகோதரின் மாற்றத்தைத் தொடர்ந்து நீங்களும் உங்கள் பதினாறு
வயதில் இஸ்லாத்திற்கு மாறினீர்கள் என்று அறிகிறோம். உங்களின் சகோதரர்
இஸ்லாத்திற்கு மாறியதைப் பற்றியும் அது உங்களின் மாற்றத்தை எவ்வாறு பாதித்தது
என்பதைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள்.
நானொரு பக்தியுள்ள ரோமன் கத்தோலிக்காக இருந்தேன். என் சகோதரர் ஒரு முஸ்லிம்
பெண்ணைக் காதலித்தார். அவரைத் திருமணம் செய்துகொள்வதற்காக அவன் இஸ்லாத்திற்கு
மாறினார். அது அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை, ஆனால் எனது
வாழ்க்கையை அது மிக ஆழமாக பாதித்தது. அல்லாஹ் என்னைத் தன் பாதையில் செலுத்தினான்,
இஸ்லாத்தைப் பார்க்கச் செய்தான். எனது சகோதரரின் மனைவியின் மதத்தைப் பற்றி என்
அம்மா என்னிடம் சொன்ன முதல் விசயம், “சரிதான், உனக்குத் தெரியுமா, ஏசுவே
முஸ்லிமான ஒரு கன்னிப் பெண்ணுக்குத்தான் பிறந்தார்”. அம்மா சொன்னதை நான் அப்போது
நம்பவில்லைதான். ஆனால் பின்பொரு நூலகத்திற்குப் போனபோது அங்கே குர்ஆன் இருந்ததைக்
கண்டேன். அதன் பின்னிணைப்பில் “கன்னி மைந்தன் ஏசு” என்பதைத் தேடினேன். அதுவே
இஸ்லாத்துடன் எனது முதல் தொடர்பு. பின்னர் கத்தோலிக் திருச்சபை மீதான எனது
நம்பிக்கையை இழந்தேன். இஸ்லாத்தைப் பற்றிய என் படிப்பிற்கும் அதற்கும் எவ்விதத்
தொடர்பும் இல்லை. ஆனால் எனது பயணத்தால் அது நடந்தது. அது ஓர் ஆழமான இழப்பு, அதிக
நோவு தந்த ஒன்று. எனினும் நான் கடவுளின் மீதான நம்பிக்கையை இழந்துவிடவில்லை. அது
தொடர்ந்தது. இஸ்லாத்தைப் பற்றித் தொடர்ந்து பயின்றேன். அது மிகவும்
ஆர்வமூட்டிற்று. நான் கேள்விகள் தொடுத்திருந்தேன்; அது விடைகளைக் கொண்டுவந்தது.
நேர்மையாகச் சொல்வதெனில், நான் எப்போதுமே கடவுளுக்கு என்னைத் தந்து அர்ப்பணமாகிவிட
வேண்டும் என்றே நினைத்திருந்தேன். என் ஞாபகம் சரி எனில், ஒரு சிறுமி சஜ்தா
(சிரந்தாழ் வணக்கம்) செய்வதைப் பார்த்த ஒரு கணத்தில்தான் நான் மனதளவில் தெரிந்து
வைத்திருந்ததன் புற வெளிப்பாடு அதுவே என்றும் இஸ்லாம் என்பது இறைவனுக்குத் தன்னை
அர்ப்பணித்தலே என்றும் உணர்ந்துகொண்டேன். அத்தருணத்திலேயே இஸ்லாத்தைத் தழுவ முடிவு
செய்தேன்.
கிறித்துவத்தை அல்லது
கத்தோலிக்கத்தை விட்டும் உங்களைத் திருப்பிய குறிப்பிட்ட விசயம் எது?
எனது கத்தோலிக்க நம்பிக்கையை நான் கேள்வி கேட்கும்படிச் செய்த ஒரு
பெரிய காரணம் என்றால் அது ”போப்பின் பிழையின்மை” என்பதே. போப்பின் ஆட்சிப்பகுதிகள்
அச்சுறுத்தலுக்கு ஆளானபோதுதான் அக்கோட்பாடு உதித்தது, பத்தொன்பதாம் நூற்றாண்டில்,
1860-70-களில். பின்னர் போப் ’தப்பில் விழாத தன்மையர்’ ஆனார். அவருடைய அதிகாரம்
அச்சுறுத்தப்பட்டதை என்னால் ஏற்க முடியவில்லை. திருச்சபையில் பாவமாகிய இந்த விதி
19-ஆம் நூற்றண்டில் ஓர் அரசியல் சூழலினால் உருவாயிற்று என்பதை என்னால் ஏற்க
முடியவில்லை. அது என் நம்பிக்கையை முழுவதுமாகக் குலைத்துவிட்டது. பிற விசயங்களும்
இருந்தன, உதாரணமாக நிசியாவின் திருக்கூட்டம் (Council of Nicea) – அதில் நாற்பது
சுவிசேஷங்கள் ஒப்படைக்கப்பட்டு வெறுமனே நான்குதான் ஏற்கப்பட்டன. அது எனக்கு
ஜீரணிக்க மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால், போப் ‘தப்பில் விழாத தன்மையர்’
என்பதுதான் அதனை நொறுக்கிவிட்டது. வேறு சில உணர்தல்களும் இருந்தன என்று
அனுமானிக்கிறேன். ‘முதற்பாவம்’ என்பதை நான் ஒருபோதும் ஏற்கவில்லை. சிலுவைப்பாட்டை
அர்த்தமுள்ளதாக ஆக்குவதற்கான ஒருவித முன் யோசனையாகவே அது தேவைப்படுகிறது என்று
நான் உணர்ந்திருந்தேன். எனவே, இவை எல்லாம் ஒருசேர வந்தபோது எனது நம்பிக்கையை நான்
இழந்தேன்.
First council of Nicea.
இறைத்தூதர்கள் அல்லது
தூதுத்துவம் பற்றிக் கத்தோலிக் மற்றும் இஸ்லாத்திற்கு இடையிலான வேறுபாடுகள் என்ன?
முஸ்லிமாவதற்கான உங்களின் முடிவை அது எப்படி பாதித்தது?
முஸ்லிம்கள் ஆதம் (அலை...) முதல் நபி (ஸல்...) வரையிலான
இறைத்தூதர்களின் முழுமையான பாரம்பரியத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், பெயர்
தெரிந்த மற்றும் தெரியாத அனைத்து இறைத்தூதர்கள் மீதும். நாம் பெயரிடப்பட்ட
இருபத்தைந்து இறைத்தூதர்களை மட்டுமே அறிகிறோம், ஆனால் மொத்தம் 1,24,000
இறைத்தூதர்கள் உண்டு. அது ஓர் இடையறாத திருப்பணித் தொடர்ச்சி. எனவே அனைத்து
மக்களுக்கும் இறைத்தூதர்கள் உண்டு. இறைத்தூதர்கள் பற்றிய இஸ்லாமியப் பார்வை எப்படி
எனது முந்தைய கிறித்துவ நம்பிக்கையுடன் ஒத்துப்போகிறது என்பதல்ல, மாறாக அது
எப்படியெல்லாம் வேறுபடுகிறது என்பதே எனது ஆர்வத்தைத் தூண்டுகிறது. எனவே, ஆதம் (அலை...)
மற்றும் அவரது மனைவி ஹவ்வா ஆகியோரது கதையைப்
பார்த்தீர்கள் என்றால், வீழ்ச்சிக்கு அவ்விருவருமே பொறுப்பாளிகளாக
இருக்கிறார்கள். ஆனால் திண்ணமாக, கிறித்துவத்தில் ஏவாள் மட்டுமே பொறுப்பாளி.
இஸ்லாத்தில், அவர்கள் இறைவனால் மன்னிக்கவும் படுகிறார்கள், எனவே தந்தையரின்
பாவங்களைப் பிள்ளைகள் சுவீகரிப்பது என்பது இல்லை என்றாகிறது. அதாவது, நான் அதாம்
மற்றும் ஏவாளின் பாவத்தைச் சுவீகரிக்கவில்லை. ஏனெனில், இறைவன், அவனது கருணையால்
மன்னிக்கிறான். பாவமன்னிப்பு என்பது இறைவனின் ரஹ்மத் (கருணை) மூலமாக என்பதை இது
காட்டுகிறது.
மேலும், நூஹ் (அலை...) போன்றோரின் கதைகளும்கூட. கிறித்துவ மரபில்
அவருக்கு ஒரு குடும்பம் இருக்கிறது, அக்குடும்பமே தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஆனால்
இஸ்லாமியப் பிரதியில், அவர் போதிக்கிறார். இதில் வேறுபாடு என்னவென்றால்,
கிறித்துவப் பிரதியில் மக்கள் மூழ்கப்போகிறார்கள், துயர்படப் போகிறார்கள். ஆனால்,
இஸ்லாமியப் பிரதியில் அம்மக்களுக்கு ஒரு வாய்ப்பு அருளப்படுகிறது. “வாருங்கள்”
என்று நோவா அவர்களை அழைக்கிறார். ஆனால் கிறித்துவத்தில் அது வெறுமனே கடவுளால்
தேர்ந்தெடுக்கப்பட்டோர் மாத்திரமே, அவர்களின் தேர்வு அல்ல, ஆனால் இறைவனின் முடிவு
மட்டுமே. இறைத்தூதர்கள் மீதான முஸ்லிம் கண்ணோட்டங்களை நான் படித்துக் கேள்வி
கேட்டுக்கொண்டிருந்தபோது இந்தச் சிறு வேறுபாடுகள்தாம் என்னை மிகவும் ஆழமாக
பாதித்தன. இஸ்லாமியச் செய்தியில் இறைத்தூதர்களின் நிகழ்வுகளும் கதைகளும் மிக
ஆழமானவையும் உண்மையில் குர்ஆனின் அடிப்படைக்கு மிக அவசியமானவையும் ஆகும்.
உங்கள் அம்மாவின் மாடலிங்
ஏஜன்சியில் அவரின் அருகில் ஒரு சிறுமியாக வளர்ந்ததில், பெண்களை ஒரு
காட்சிப்பொருளாக்கும் வாழ்முறையை முன்னெடுப்பது என்பது கத்தோலிக்க நம்பிக்கைக்கு
அல்லது பொதுவாக மதத்திற்கு முரண்பட்டது என்று நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா?
அந்த வாழ்முறை ஒருபோதும் எனக்கானதல்ல என்றே நினைக்கிறேன். அது
எப்போதுமே நான் பார்த்து, அது சரியில்லை என்று எண்ணிய ஒன்றாகவே இருந்தது. அது
என்னுடைய ஃபித்ரத்தாக (சுபாவமாக), நல்லதை நோக்கிய இயற்கையான சாய்வாக இருக்கலாம்.
அந்த வாழ்முறை சரியல்ல என்பதை மிக இயல்பாகவே நான் உணர்ந்தேன். என் அன்னை தனி நபராக
ஐந்து பிள்ளைகளை வளர்த்து வந்தார். அவர் மிகவும் நடைமுறைத் தன்மை கொண்டவர்.
உண்மையில் அவர் ஒருபோதும் முழுமையான மாடலிங் வணிகத்தில் ஈடுபடவில்லை. எனவே அவரில்
மிக அதிகமாகவே இயல்புத்தன்மை இருந்ததைப் பார்த்திருக்கிறேன். எனது பாட்டியிடம்கூட
அந்தத் தன்மையை நான் கண்டிருக்கிறேன். அப்படி இருந்தும், ஏதோ ஒரு பிசகு
இருப்பதாகவே உணர்ந்தேன். குறிப்பாக, எனது எட்டாம் வயதில், அதை என்னால் முழுமையாக
விவரிக்க முடியவில்லை, எனது சின்னஞ்சிறு பிராயத்தில் இருந்தே, பெண்களைக் காட்சிப்
பொருளாக்குவது எனக்குப் பெரிதும் சங்கடமாக இருந்தது.
நீங்கள் வளர்ந்து வந்த
சூழலைக் கருத, உங்களின் இப்போதைய ஆடைத் தேர்வு ஒரு முரணாகப் பார்க்கப்படலாம்.
முக்காடு அணிவதற்கான உங்கள் முடிவை தீர்மானித்தது எது?
தொழுகை. முக்காடு அணிவது என்பது எனக்கு மிகவும் கடினமான முடிவாக
இருந்தது. ஏனெனில் என் குடும்பம் அதனை எதிர்த்தது. முக்காடு மட்டும் இல்லை எனில்
முஸ்லிம் ஆவதற்கான எனது முடிவு எளிமையானதாகவும் இலகுவானதாகவும் இருந்திருக்கும்.
ஆங்கிலேய மரபில் நீங்கள் உங்கள் மதத்தைக் கையில் அணிவதில்லை, தலை அணிவது ஒருபக்கம்
இருக்கட்டும். உங்கள் மதத்தன்மையை நீங்கள் பொதுவெளியில் காட்டுவதில்லை. மதமும்
அரசியலும் இரண்டு வேறுபட்ட விஷயங்களாகவே வைக்கப்படுகின்றன. எனவே இக்கோலத்தில்
வெளியே செல்வது என்பது எனது பாட்டியின் பார்வையிலேயே என்னை ஒரு அன்னியளாகக்
காட்டிற்று. எனது அம்மாவுக்கோ, நான் பெண் விடுதலையைத் தொலைத்து விட்டதாக இருந்தது.
நான் பின்னடைந்துவிட்டேன். எனது வாழ்க்கையை உருவாக்கும் சாத்தியமுள்ள அனைத்து
வாய்ப்புக்களையும் நான் வெட்டி எறிந்துகொண்டிருந்தேன் என்றும் நான் விலகி
ஓடிக்கொண்டிருப்பதாகவுமே அவர்கள் பார்த்தனர். பெண்ணைக் காட்சிப்பொருளாக்குவதை
ஒருவித நவீன, பகுத்தறிவுச் சார்புலத்தில் எதிர்கொள்வதற்கான எனது வழி இது என்று
நான் விளக்க நீண்ட காலம் ஆனது. ஆனால் அனைத்துக்கும் மேலாக என்னை முக்காடு அணிய
வைத்ததும் தொடர்ந்து அணிய வைப்பதும் தொழுகைதான். நான் ஓர் எல்லையில்
ஊசாடிக்கொண்டிருந்தேன், கடவுளே தயவு செய்து இந்தப் பாரத்தை என்னை விட்டு நீக்கு
என்று கேட்டுக்கொண்டிருந்தேன். நான் தொழும்போதும் குர்ஆனைத் திறக்கும்போதும்
திரையணிதல் பற்றிய வசனத்தை அவன் எனக்குக் காட்டுவான். எனவே நான் தொடர்ந்து அணிந்து
வருகிறேன்.
நீங்கள் இஸ்லாத்தைத் தழுவியது உங்கள் சகோதரரை எப்படி பாதித்தது?
அது அவரை பாதித்ததாகவே நான் காணவில்லை. அதனை ஒரு விசித்திரமான
நிகழ்வாகவே அவர் பார்க்கிறார். ஏனெனில் அவரது வாழ்வில் எவ்வித மாற்றத்தையும்
ஏற்படுத்தாத ஒன்று எனது வாழ்வையே மாற்றிவிட்டது. இப்போது அவர் தனது முஸ்லிம்
மனைவியை விவாகரத்து செய்துவிட்டு முஸ்லிமல்லாத ஜப்பானியப் பெண் ஒருவரின்
கணவராகிவிட்டார். அவர் ஜப்பானில் வசிக்கிறார், நான் இங்கிலாந்தில் வசிக்கிறேன்.
அவர் இங்கிருந்திருந்தால் நிலைமை வேறு விதமாக இருந்திருக்கலாம். ஆனால் இந்த
வருடங்களில் பெரிதாக வேறு எதுவும் எமக்குள் இல்லை.
ஹிஜாப் அணிந்த ஒரு பிரிட்டிஷ் முஸ்லிமாக இங்கிலாந்தில் எப்போதாவது
நீங்கள் செனோஃபொபியாவுக்கு (அன்னிய வெறுப்புக்கு) ஆளானதுண்டா?
நானொரு சாதாரண ஆங்கில வெள்ளைச் சிறுமி என்னும் நிலையிலிருந்து ஒரு
’பாக்கி’யாக மாறியவள். 1988-இல் நான் முதன்முதலில் முக்காடு அணியத் தொடங்கியபோது
முஸ்லிம் பெண்கள் பலரும் அதனை அணிந்திருக்கவில்லை; அது ஒரு மத அடையாளமாகவும்
பார்க்கப்படவில்லை. மக்கள் அதனை மதம் என்று புரியவில்லை. அது ஓர் இன அடையாளமாகப்
பார்க்கப்பட்டது. எனவே நானொரு ’பாக்கி’ போல் தோன்றினேன். எனவே நான் இனவாதத்தை
எதிர்கொண்டேன், மதவாதத்தை அல்ல. பதினேழு வயதுக்கு அது மிகவும் சங்கடமான அனுபவம்,
நீங்கள் ஒரு சராசரியான, அழகான, தனது கூந்தலுக்கு நேர்மறையான கவனத்தை ஈர்க்குமொரு
வெள்ளைப் பெண்ணாக இருந்ததை விட்டு திடீரென்று இனவாத எதிர்ப்புக்குரல்களைப்
பெறுபவளாக ஆவது. அது மிகவும் வலி தருவதாகவும் கடினமாகவும் இருந்தது, இக்கட்டான
நிலை என்பதைச் சொல்லத் தேவையில்லை. எனினும், நான் நேர்மையாகச் சொல்ல முடியும்,
நான் மிகவும் தன்னம்பிக்கை கொண்டவள் மற்றும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இதனை
அணிகின்றதால் எனக்கு மிகவும் குறைந்தபட்ச பிரச்சனைகளே இருந்தன. சில பிரச்சனைகளைச்
சந்தித்திருக்கிறேன், ஆமாம். இராக் போரின்போது, குறிப்பாக இராக்கின்மீது குண்டு
வீசுவதன் பதற்றம் இருந்தபோது, போதையேறிய சில வாலிபர்கள் ரயிலில் ஏறிக்கொண்டு “புஷ்
சரியாகவே சொன்னார் ஃப---ங் முஸ்லிம்ஸ், ஃப---ங் முஸ்லிம்ஸ்” என்று குதூகலமாகக்
கத்தினார்கள். அந்நிலையை அவர்கள் கையாள்வது அப்படித்தான் இருந்தது. ”நீ கொலை
செய்யப்பட வேண்டும். ஒரு குடிகாரனால் சுடப்பட வேண்டும்” என்பதையும்
கேட்டிருக்கிறேன். மக்கள் குடித்திருக்கும்போது மிகவும் கொட்டித் தீர்க்க
நினைக்கிறார்கள். துர்லபமாக, நான் இருமுறை அப்படி நடத்தப்பட்டேன், ஆனால் மக்கள்
அதை ஏற்றுக்கொள்கிறார்கள். என்ன இருந்தாலும், ப்ரிட்டன் ஒரு சுதந்திரமான,
மதச்சார்பற்ற ஜனநாயக நாடு. அதில் எப்போதுமே விசித்திரமான மக்கள் நிரம்பியிருக்கிறார்கள்.
எனவே எல்லாம் சரியாகிவிடுகிறது.
கல்கத்தாவின் அன்னை தெரசா
உங்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் என்ன? இஸ்லாத்திற்கு மாறிய பிறகு அவரைப் பற்றி
எப்படி உணர்கிறீர்கள்?
அவர் ஒரு முன்மாதிரி. அவர் அப்படியொரு அழகிய மனிதப்பிறவி.
தொண்டும் பக்தியும் மிக்க அந்த வாழ்வும் அவரது நம்பிக்கை எப்படி அவரை அத்தகைய சமூக
நீதியின் வாழ்வுக்கு இட்டுச் சென்றது என்பதுமே போதுமானது. அது சுயநலமான ஒரு
நம்பிக்கை அல்ல, எனக்கான என் வாழ்வுக்கான என் இறைதியானத்திற்கான நம்பிக்கை. அது
ஒரு தன்னலமற்ற நம்பிக்கை. அதில் அவர் தனது வாழ்வையே பிறருக்குத் தொண்டு புரிவதில்
அர்ப்பணித்தார். மதம் என்பது அமைதியையும் அழகையும் இறைநம்பிக்கையில் நிறைவையும்
நான் அனுபவிப்பது என்பதல்ல, ஆனால் அதை நான் அனுபவித்தபோதும் அது என்னை சமூக நீதி
மற்றும் சமூகச் செயல்பாட்டிற்குச் செலுத்த வேண்டும் என்ற எனது நம்பிக்கையை அவரிடம்
கண்டேன்.
”முஸ்லிம் வாழ்முறை” (Muslim Lifestyle) என்னும் கோட்பாட்டுடன்
உங்கள் இதழான ”அமல்”-ஐ நீங்கள் பதிப்பிக்க உங்களைத் தூண்டியது எது?
இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்க்கை முறை என்று காட்ட நாங்கள்
விரும்பினோம். முன்பும் காட்டப்பட்டது போலும் இப்போது காட்டப்படுவது போலும் அது
வெறுமனே அரசியல் பற்றியதோ அல்லது அத்துடன் மதச் சடங்குகள் பற்றியதோ, அத்தகைய இரு
பரிமாண வழமை பிம்பம் கொண்டதொரு நம்பிக்கையோ அல்ல என்பதை உலகிற்குக் காட்ட நாங்கள்
விரும்பினோம். மேலும், அன்றாட வாழ்வில் ஓர் அழகு உள்ளது என்பதையும். எனவே,
உதாரணமாக, அமல் இதழின் முகப்பு அட்டை பிரபலங்களின் நேர்காணலைக் காண்பிக்கிறது,
பெருஞ் செய்திகளைச் சொல்கிறது, நிஜ வாழ்வுகளை மற்றும் கல்வி உடல்நலம் வணிகம்
ஆகியவற்றைச் சொல்கிறது. மேலும் அது வாழ்முறைக் கூறுகளை – உள்வீட்டியல்,
தோட்டங்கள், ஃபேஷன் முதலியவற்றைப் பேசுகிறது. இந்தப் புலனங்கள் எல்லாம் நமது
வாழ்வின் பகுதிகள். நாம் அனைவருமே ஆடை உடுத்துகிறோம், நம் அனைவருக்குமே வீடுகள்
உள்ளன, நாம் தோட்டங்கள் வைத்திருக்கிறோம், உண்மையில் இந்த பின்னைத் தொழிற்சாலை
மயமான நவீனச் சமூகத்தில் இவையெல்லாம் நமது வாழ்வின் பெரும் பகுதிகளாகிவிட்டன. அவை
நமது வாழ்வின் செம்பாகம். எனவே நாம் அவற்றை நமது இறைதியானத்திற்கு அருகில்
கொண்டுவருவோம் எனில் நமது வாழ்வின் அனைத்து அம்சங்களையும் இறைதியானத்திற்கு
அருகில் கொண்டு வருபவர்கள் ஆவோம். உதாரணமாக, உங்களுக்கொரு தோட்டம் இருந்து, அதிலே
நீங்கள் ஒரு நீர்நிலையை வைத்தால், ஜன்னத் (சொர்க்கம்) பற்றிக் குர்ஆன் சொல்வதை
நீங்கள் ஒருவேளை ஞாபகம் செய்யக்கூடும்: ”அடியில்
நதிகள் பாய்ந்திருக்கும் தோட்டங்கள்”. அல்லது உங்கள் வீட்டில் ஓர் உணவு மேஜை வைத்திருந்தால்
அது வெறும் மேஜை மட்டுமன்று, குழுமி ஒன்றாக உண்பதை உங்களுக்கு நினைவூட்டும்
பொருளாகும். ஏனெனில் இங்கே மேற்கில் எல்லோரும் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு முன்
அமர்ந்து உண்பது பழக்கமாகியிருக்கிறது. இது ஒவ்வொருவரையும் குடும்பத்தை விட்டே
அன்னியமாக்கிவிட்டது. எனவே அது குடும்பத்தையும் சமூகத்தையும் நினைத்துக்கொள்ள
ஏதுவாகும். நேர்மறை உண்மைகள் என்றொரு கோட்பாடு வைத்திருக்கிறோம். அதன்படி ஒவ்வொரு
கட்டுரையிலும், அது எதைப் பற்றியதாக இருந்தாலும், குறைந்தது ஒரு நேர்மறை
உண்மையாவது இருக்கும். உதாரணமாக, வாசனை மெழுகுபத்திகளைப் பற்றிய கட்டுரை எனில் அது
நறுமணம் என்பது சதக்கா (தர்மம்) என்று நபி சொன்ன கருத்தை நினைவூட்டும் என்பதனால்தான்.
எனவே, அது வாழ்முறை, ஆனால் தன் பின்னணியில் சிந்தனை கொண்ட ஒரு வாழ்முறை. இந்தப்
புலனங்கள் மக்களின் வாழ்க்கையில் தாக்கம் செலுத்துகிறது என்றறிந்ததால் இப்படிச்
செய்கிறோம்.
உங்கள் அம்மாவுடன் அவருடைய
வணிகத்தில் நீங்கள் இருந்து பெற்ற அனுபவங்கள் உமது இதழின் வெற்றிக்கு
உதவியிருக்கிறதா?
பிறந்து முக்கால் மாதக் குழந்தையாக நான் இருக்கும்போதே எனது அம்மா
தனது மாடலிங் ஏஜென்சியில் தொலைப்பேசியில் வேலையாக இருந்தார் என்பதைக் கருத,
அப்படியொரு வாழ்முறையை ஏற்கின்ற, வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஒரு பெண்ணை, ஐந்து
பிள்ளைகளை வளர்த்துக்கொண்டே இதனைச் செய்ய முடிந்த ஒரு துணிச்சல்காரப் பெண்ணை எனக்கு
அது காட்டியது. அது மிக அதிகமான தன்னம்பிக்கையை எனக்கு ஊட்டியது. அவர் ஒரு
செம்மைவாதி. நானுமோர் செம்மைவாதி. விஷயங்கள் மிக நேர்த்தியாக முன்வைக்கப்பட
வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவேன். அமல் பத்திரிகையின் சிறப்புத் தன்மைகளுள்
ஒன்று அதில் ஒவ்வொரு புலனமும் மிக அழகாக வெளிப்படுத்தப் பட்டிருக்கும். மிக
உயர்ந்த தயாரிப்பு மதிப்புகள் வைத்திருக்கிறோம். எனவே சில கூறுகள் என் மீது அவரின்
தாக்கத்தால் விளைந்தவை என்பதில் ஐயமில்லை.
Introducing "Emel" to Prince Charles.
இஸ்லாமோஃபோபியா (இஸ்லாம்
குறித்த அச்சம்) பற்றி உங்கள் கருத்து என்ன? மேற்கில் உயர்ந்து வரும் இந்த
அச்சத்தைக் களைய முஸ்லிம்கள் செய்ய வேண்டிய சிறந்த அணுகுமுறை என்று எதனைக்
கூறுவீர்கள்?
அது வளர்ந்து வருகின்றதொரு பிரச்சனைதான். நாம் அதை உதாசீனப்படுத்த
முடியாது. இருந்தாலும், அதே நேரம், நாம் வன்முறைக்கு எதிரானவர்கள்
தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள் என்றெல்லாம் சொல்லி முதலில் நாம் தற்காப்பாக எதிர்வினை
ஆற்றினால், நாம் வெறுமனே “எதிர்மறை” மக்களாக ஆகிவிடுவோம் என்று நினைக்கிறேன். அது
நிஹிலிசம் (மறுப்பியல்) என்ற நிலையிலேயே நின்றுவிடும். நாம் எதற்கானவர்கள் என்பதை
நாம் சொல்லியாக வேண்டும். நாம் நீதிக்கானவர்கள், சுற்றுச்சூழலைப்
பேணுதலுக்கானவர்கள், நன்மைக்கானவர்கள், அழகிற்கானவர்கள். நமது கட்டுக்கு வெளியே
உள்ள உலகளாவிய பிரச்சனை ஒவ்வொன்றுக்கும் நாம் எதிர்வினை ஆற்றிக்கொண்டிருக்காமல்
நம்மை நாம் தெளிவாக்கிக்கொள்ள வேண்டும். ஏதோ ஓர் அசம்பாவிதம் நடக்கிறது. உடனே நாம்
எதிர்வினை ஆற்றுகிறோம். இன்னொரு அசம்பாவிதம், அதற்கும் நம் எதிர்வினை. இப்படி
யோசனை இன்றிப் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கான குற்றவுணர்வு நம்மிடம் தேய்கிறது,
ஆனால் எதிர்வினை ஆற்றுவதன் மூலம் நாம் ஒருவகையில் அதனுடன் நம்மைப்
பிணைத்துக்கொள்கிறோம். நமது திட்டம் அல்லாத ஏதோவொரு பெருந்திட்டத்திற்கு
நாமெல்லாம் பகடைகளாக அல்லது ஆட்டிவைக்கப்படும் பாவைகளாக ஆக்கப்பட்டிருக்கிறோம்
என்று நினைக்கிறேன். ”அமல்” குழுவில் நாங்கள் நான்கு “C”-க்கள் வைத்திருக்கிறோம்: தன்னம்பிக்கை
(Confidence), பங்களிப்பு (Contribution), பொதுநலம் (Common good), மற்றும்
நற்தொடர்பு (Connectivity). நாம் தன்னம்பிக்கையை முன்னெடுக்க வேண்டும். நம் மீதே
நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். ஏனெனில், நம்பிக்கையாளர்களே சமூகத்திற்குச்
சிறப்பான முறையில் பங்களிப்பாற்ற முடியும். அது பொதுநலத்திற்கான பங்களிப்பாக
அமையும். நபி (ஸல்...) அவர்கள் அகில உலகிற்குமோர் அருட்கொடையாக வந்தார்கள்,
மனிதகுலம் முழுமைக்கும், முஸ்லிம்களுக்கு மட்டும் என்றல்ல. எனவே, நற்தொடர்பு
என்பது, மக்களைக் கதைகளுடன் இணைப்பது போல, உலக நாடுகளை எல்லாம் இணைப்பது போல,
மக்களை இறைவனுடன் இணைப்பது போல. நமது அன்றாடக் கிடைமட்ட வாழ்க்கை, நமது பணி, நமது
தொழில்களும் குடும்பங்களும் ஆகியவற்றைத் தாண்டி நமக்கு ஒரு செங்குத்தான
வேர்ப்பிடிப்புத் தேவை. அது, இறைவனுடன் நமக்குள்ள உறவுதான்.
முஸ்லிமல்லாதாருக்கு நபி முஹம்மது
பற்றி நீங்கள் தரும் விவரிப்பு என்ன?
அது அந்த நபரைச் சார்ந்தது. எனக்கு அவர் மனிதகுலத்துக்கே அருளாக
வந்தவர். அவர் ஒரு கசையாகவோ அல்லது ஒரு சர்வாதிகாரியாகவோ அல்லது ஒரு பேரச்சமாகவோ
வரவில்லை. மனிதகுலம் முழுமைக்கும் அவர் ஓர் அருளாகவே வந்தார். அந்தச் செய்திதான்
நாம் வெளிப்படுத்த வேண்டியது. அனைவருக்கும் நீதி என்பதே அவரது வாழ்வும் வாக்குமாக
இருந்தது. நாம் இன்னமும் அடைய முனைகின்ற மிக முக்கியமான செய்தி அதுதான் என்று நினைக்கிறேன்.
அவர் வெறுமனே ஒரு முஸ்லிம் தீர்க்கதரிசி மட்டுமல்ல. அவர் அனைவருக்காகவும் வந்தவர்.
இன்று நீங்கள் நபி
முஹம்மதைச் சந்திக்க நேர்ந்தால், அவரிடம் என்ன கேட்பீர்கள்?
நல்லது. நான் பேச்சற்றுவிடுவேன் என்று நினைக்கிறேன். ஒருவேளை எனது கேள்வி இதுவாக இருக்கலாம்: “முஸ்லிம்களில் உள்ள வெறுப்பையும் கோபத்தையும், அவை வளர்ந்து மிக அழகற்றதாகி வருகிறதே, அவற்றை நீங்கள் எப்படி ஆற்றுவீர்கள்? தாம் உங்களை நேசிப்பதாகவும் அறிந்திருப்பதாகவும் அவர்கள் சொல்கிறார்கள். இருந்தும் அவர்கள் மிக மிக மிகக் கோபமாக இருக்கிறார்கள். அதனை நாம் ஆற்றுவது எப்படி? நாம் என்ன செய்யலாம்?”.
No comments:
Post a Comment