புனித
மாதத்தின்
கடைசி நோன்புத் திறப்பு
மதியத்திலிருந்தே
வரத்தொடங்கிவிட்டன
வாழ்த்துச் செய்திகள்
இன்னும்
ஐந்து நிமிடங்களே
இருக்கும்
நிலையில்
மேசையில்
அமர்கிறோம்
தெளிந்த முகங்களுடன்
முதல்
நாளில் எப்படி இருந்தாய்
சோர்வுடன்
இறைஞ்சியவனாக
ஒரு கும்பிடும் பூச்சியைப் போல்
போகப் போக என்னாயிற்று?
வழமை
உன்னை ஏமாற்றுகிறது
இந்தத்
தெளிவு அன்றேன் இல்லை?
அல்லது
அன்றின் சோர்வு இன்றேன் இல்லை?
மனனமிட்ட
வரிகளை ஒப்பிக்கின்றாய்
பிரார்த்தனை செய்வதாய்
உன் மனதில்
கிளர்ந்துள்ளதை மட்டும்
நீ கேட்டுவிட்டால்
எத்துனை
நேர்மையாய் இருக்கும் அது
பேரீத்தங்
கனி சுவைத்து
மண்ணில்
குளிர்ந்த நீரருந்தி
கண்களை
மூடிக்கொள்ளும்போது
நீ காண்பதுதான் என்ன?
“தாகம்
தணிந்துவிட்டது
நரம்புகள்
நனைந்துவிட்டன
அல்லாஹ்
நாடினால்
நற்கூலி
உறுதியாகிவிட்டது”
என்னும் பிரார்த்தனையை முணுமுணுக்கிறாய்
உனக்குத்
தெரிந்த ஞானச் செய்திதானே
அவனே நற்கூலி ஆகிறான் என்பது?
நோன்பு
திறத்தலின் இன்பம் என்று
நவிலப்பட்டதன் உட்பொருள் என்ன?
ஒரு மின்னல்
போல் வெளிச்சமிடுகிறது
ரூமியின்
தந்தையைப் பற்றி
கோல்மன்
பார்க்ஸ் எழுதுமொரு பத்தி,
அதிலொரு
வரி:
“தேகத்தை
போஷிப்பதே
ஆன்மாவைப் போஷிக்கிறது”
யா றப்பீ
(என் போஷகனே!)
என்று கதறுகின்றது உன் உள்மனம்
நோன்பு
திறத்தலின் இன்பம்
என்னவென்பதை
அறிவாய் நீ
முலையுண்ணுமொரு
குழந்தையின்
ஞானம் அது
நாளெல்லாம்
நோன்பிருந்து
உடலுக்கு
அப்பால்
உன் ஆன்மா
தேடித் தவித்ததை
உன் உடலில்
அடைந்துகொள்வது அது
No comments:
Post a Comment