யாத்திரை
மேலும்
கீழுமாய்
அசையும்
மாதுளங் கொப்பின்
பவழப்
பூவில்
முன்னும்
பின்னுமாய்
ஓடிக்கொண்டிருக்கிறது
கட்டெறும்பு
அவ்விரு
திசைப்பரிமாணங்களின்
யாத்திரையில்
எங்கே போகிறதோ?
இத்தனை
வலஞ்சுற்றியும்
ஒருபோதும்
பூவின் சந்நிதிக்குள்
அது நுழையாதிருப்பதும்
ஏன்?
நகர்ந்து
போயின மேகங்கள்
திரவ
வைரங்கள் என
மழைத்துளிகள்
விழுதல் கண்டு
தோட்டத்தில் ஓடி நின்றேன்
கவிழந்த
பெருங்கடலாய்
வானைப்
பார்க்கும்
பால்ய
காலத்துக் கற்பனையைக்
கிளர்த்திக்கொண்டு
உச்சி
நோக்கி நின்றேன்
கருந்திரள்
மேகங்களினடியில்
பசுஞ்சிறு செடியைப் போல
நறும்புனல்
நயந்த
விழிகளை
விரிய வைத்து
முகிலுதிர்க்கும்
தண் துளிகள்
முகத்தில்
வந்து மோதுமின்பம்
அருளின் அருஞ்சுவை
அடடாவும்
ஆகாவும்
அவ்வப்போது...
மழைக்கோர் இசை உண்டல்லவா?
தோளில்
மோதின ஓரிரு துளிகள்
எதிர்பாரா முத்தம் போல்
சட்டென்று
உதட்டில்
வீழ்ந்து வழிந்தது ஒன்று
சுவைக்கத்
தூண்டும் ஆசை அறுத்து
நோன்பு காத்தேன்
மழையின்
இளைத்த பிரதியாய்
மண்குடுவை நீருண்டு
உணவு மேசையின் மீதில்
எனினும்
மண் தீண்டா
மழைத்துளியின்
மின்சுவைக்
குளிர்மை
வேறு
பொருள் எது தரும்
இவ்வையத்தில்?
மிக இயல்பாய்
எப்போதும்
போலாய்
நிகழ்ந்திருக்கும்
பெருங்காட்சி அல்லவா இது?
ரசிகனுக்கும்
என்றிலாத
தூய கலைஞனைப்
போல்
தியானத்தில் இருப்பதல்லவா இயற்கை?
தீவில்
ஒதுங்கிய ஒருவன்
காணக்
காண
நகர்ந்து
போகுமொரு கப்பலைப் போல
போயிற்றே
மேகத்திரள்
அழைப்பொலி
அழைப்பொலி
கேட்கவும்
துயில் களைந்தெழுந்தேன்
கிறக்கம்
நீங்கா நிலையில்
காற்றோடு
போகும் இலைபோல் நடந்து
வெளியே
பார்க்க
யாருமில்லை
அவதானித்ததில்
நிஜமாகவே ஒரு பறவையின் ஒலிதான்
விதவிதமான
பறவை ஒலிகளினிடையே
ஒரு ரிதமான
ஒலிப்பாய் இருந்தது அது
என் வீட்டின் அழைப்புமணி ஓசையைப் போன்றே
இன்னமும்
மூடப்படாத துயிலின் கதவு வழி
மிக இயல்பாய்
நுழையும் ட்வீட்டொலிகளை
அனுபவித்தபடி அமர்ந்திருந்தேன்
அவனொருவனின்
அழைப்புதான்
இந்தப்
புள்ளினங்களின் ஆர்ப்பொலிகள் எல்லாம்
என்னும்
உணர்வில்
சிறகு
விரித்தபடி பறந்திருந்தேன்
No comments:
Post a Comment