ஃப்ரிட்ஜாஃப்
ஷுவான்
பாலியல் போன்றதொரு அடிப்படையான
அம்சத்தை விட்டுவிடுதல் ஆன்மிக வாழ்வு தனக்கே இயலாத ஒன்றாகும். காமம் என்பது மனிதனின்
ஓர் அம்சம். மேற்குலகின் மரபு அகஸ்டீனிய இறையியற் பார்வையில் வளர்ந்து வந்துள்ளது.
அப்பார்வை, பாலியலின் உள்ளார்ந்த யதார்த்தத்தை மறுதலித்துவிட்டு ஏறத்தாழ பயன்பாட்டு
நோக்கிலேயே திருமணவுறவை விளக்குகின்றது. அப்பார்வையின்படி பாலியல் உறவு என்பதே பாவம்;
அதன் தொடர்ச்சியாய், குழந்தை பாவத்தில் பிறக்கிறது. ஆனால், திருச்சபை பிராயச்சித்தம்
தருகிறது. அல்லது, இப்பாவத்திற்கு அது பிராயச்சித்தம் என்பதினும் மேலான நன்மையைத் தருகிறது:
ஞானஸ்நானம், நம்பிக்கை, புனித வாழ்க்கை.
இன்னொரு
பக்கம், எதார்த்தங்களின் உள்ளார்ந்த இயல்புகளின் அடிப்படையில் உருவான ஆதியியற் பார்வையின்
நோக்கில், பாலுறவு என்பது “இயற்கையான இயற்கையிகந்த” புனிதச் செயலாகும். ஆதி மனிதனில்
காமத்தின் இன்பம் ஆன்மிக இன்பத்துடன் நேர்ப்படுகிறது; ஆன்மிக இணைவின் அனுபவம் ஒன்றினை
அவனுக்குத் தெரிவிக்கிறது; மனிதக்காதல் என்பது எதன் தொலைதூரப் பிரதிபலிப்பாக இருக்கின்றதோ
அந்த இறைகாதலின் ஒரு ”நினைவூட்டல்” அது. எனினும், அந்தப் பிரதிபலிப்பு தெளிவற்றது.
ஏனெனில், அந்த அனுபவ பிம்பம் ஒரே நேரத்தில் போதுமானதாகவும் தலைகீழானதாகவும் இருக்கிறது.
இத்தெளிவின்மையில்தான் முழுச் சிக்கலும் உள்ளது.
தொன்மையான,
புறச்சமய, கிரேக்க-ஹிந்து கண்ணோட்டம் – இது கிறித்துவத்தின் சார்புலத்தில் அகமியக்
கண்ணோட்டம் – அப்பிம்பத்தின் போதுமையை அடிப்படையாகக் கொண்டது. நீரில் பிரதிபலிக்கும்
மரம் மரமேதான், வேறொன்று அல்ல. கிறித்துவ, கடுந்தவ, துறவற மற்றும் புறவயக் கண்ணோட்டம்
என்பது அதற்கு மாறாக அப்பிம்பத்தின் தலைகீழ்மையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஒரு மரத்தின்
கிளைகள் மேலேதான் இருக்குமே அன்றிக் கீழே அல்ல. எனவே பிரதிபலிப்பு ஒருபோதும் மரம் அல்ல.
ஆனால்,
இவ்விரு பார்வைகளுக்கு இடையே பெரிய வேற்றுமை உள்ளது. முன்னது, பின்னதன் சார்பியல்
மற்றும் கட்டுறுத்தும் நேர்மையை ஏற்கும் நிலையில், அதற்குப் பதிலாக முன்னதன் இயற்கையான
ஆதியான பங்காற்றும் கண்ணோட்டத்தின் உரிமையை ஏற்க இயலவில்லை. அகஸ்டீனியன் சார்புலத்தில்
பின்னதான கண்ணோட்டம் ‘அகமியமாக’ இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கான காரணம் இதுவேதான்.
எனினும் அது தன்னளவில் ஒரு புறவயக் கண்ணோட்டத்திற்குள் ஒருங்கிணைக்கப்பட முடியும் என்பதற்கான
நிரூபணமாக இஸ்லாம் இருக்கிறது. (இந்நோக்கில், இஸ்லாம் யூதமதத்தை விடவும் வெளிப்படையானது).
கிறித்துவச்
சூழலில், பாலியல் என்பது, ஒவ்வொரு திரிபுப் பின்னணியை விட்டும் பிரித்தெடுக்கப்படும்
முயற்சியில், ஒருவித மிருகப்புணர்வின் மானக்கேடாகக் கருதப்படும் நிலைக்காகிறது. ஆனால்,
உண்மையில் மனிதத்தன்மையான எதுவும் அதன் இயல்பில் மிருகமன்று. அதனால்தான் நாம் மனிதர்களாய்
இருக்கிறோம், விலங்குகளாய் அல்ல. எனினும், விலங்கியலை (animality) விட்டும் நாம் தப்ப
வேண்டுமெனில் நமது கண்ணோட்டங்கள் மனிதத்தன்மை கெழுமியதாய், நமது தெய்வாம்ச வடிவமைப்பு
நம் மீது இட்டிருக்கும் நியதிக்குப் பொருந்துவதாய் இருக்கவேண்டும். அவை நம் உள்ளத்தையும் உயிரையும்
தழுவ வேண்டும். வேறு விதத்தில் சொல்வதெனில், அவற்றில் பக்தியும் உண்மையும் இருக்கவேண்டும்.
எனவே, இழிந்தோரின் குருட்டு இச்சைதான் மிருகத்தனமே அன்றி விலங்குகளின் கள்ளங்கபடற்ற
காமம் அப்படியல்ல. மனிதன் மிருக நிலைக்குத் தாழும்போது அவன் விலங்குகளை விடவும் கீழானவன்
ஆகிறான். ஏனெனில், அவை யாருக்கும் துரோகம் செய்வதில்லை, எந்த நியதியையும் உடைப்பதில்லை.
விலங்கு என்பது மாசற்ற படைப்பினமாய் இருக்கக்கூடும். மனித அறத்தின் தடைகளையும் வெறுப்புக்களையும்
அதன் மேல் திணிக்கக்கூடாது.
கிறித்துவ
மற்றும் கடுந்தவக் கண்ணோட்டங்கள் கொள்வது போல், பாலுறவு என்பது தன்னளவில் ஒரு பாவமாய்
இருக்குமெனில் அந்த இயல்பு அதனில் உருவாகும் குழந்தைக்குக் கடத்தப்பட்டிருக்கும்.
(இக்கண்ணோட்டம் முற்றிலும் கிறித்துவத்திற்கே உரியது அல்ல என்றாலும் இங்கே நாம் அதன்
சிறந்த வடிவைக் குறிப்பிட விரும்புகிறோம்). இதற்கு மாற்றமாய், பாலுறவு என்பது தனது
ஆழ்ந்த ஆன்மிக இயல்பால் ஒரு புனிதப்படுத்துகின்ற நற்காரியமாய் (ஒருசில மரபுகளில் இளவரசனின்
பாலுறவு என்பது ஒரு பெண்ணின் வழியே அத்தேசத்தின் மண்ணைக் கருவுறச்செய்து மக்களுக்குச்
செழிப்பை உண்டாக்கும் என்று நம்பப்படுவது போல்), அல்லது விதிக்கப்பட்ட நியதிகளின்படி
நிகழும்போது இறையனுபவத்தைத் தூண்டி அடையவைப்பதான ஆதியியற் புனித காரியமாய் இருக்குமெனில்,
இவ்வியல்பில் கருவுறும் குழந்தை, மரபு வழியில், ஆன்மிக இணைவுக்குத் தகுதியுள்ளதாகும்.
முன்னைய மாற்று நோக்கில் அது பாவத்திற்கே தகுதி பெறும். யதார்த்தத்தில் அல்லாது (சமயச்)
சட்டப்படிதான் என்றாலும்கூட, பாலுறவு தன்னளவிலொரு புனிதச்செயல் எனும்போது, பிறக்கும்
குழந்தை அக்காரியத்தின் ஒரே இலக்கு அல்ல, ஆனால் அது ஓர் அன்பளிப்பு என்றாகிறது. (பாலுறவு
என்பது, இருமுனை கூரான கத்தியாக, அதன் புறவய மற்றும் அகவய நிலைகள் சார்ந்து முற்றிலும்
எதிரான மறுமைக்கால விளைவுகளை உண்டாக்கும் என்று கொண்டால், விதிக்கப்பட்ட நியதிகளை மீறும்
நிலையில் இப்புனிதக் காரியத்திலிருந்து கருணைக்குப் பதிலாகச் சாபமே விளையும் என்பதை
மனம்கொள்ள வேண்டும்).
மனித
இனவிருத்தி என்னும் நோக்கில் திருச்சபை திருமணத்தை ஆசீர்வதிக்கிறது. அவர்களைக் கொண்டு
அது விசுவாசிகளை உருவாக்கும். அவ்வாறு ஆசீர்வதிப்பதில் தவிர்க்கவியலாமல் “மாம்சத்தின்
பாவம்” என்பதை அது மீட்குக்கொள்கிறது. இங்கே அது கிறித்துவை விடவும் தூய பவுலுக்கே
நெருக்கமாக உள்ளது என்று சொல்லத் தூண்டப்படுகிறோம்.
இன்னொரு விதத்தில் சொல்வதெனில், தான் புதிதாக எதனையும் உண்டாக்காத போதிலும், அதற்கு
இடமும் இல்லை, தேவையில்லாத ஒரு விசயத்தை தூய பவுல் தனது கண்ணோட்டத்தில் பெரிதுபடுத்தியிருக்கிறார்.
கிறிஸ்து துறவை வலியுறுத்தினார் என்பதில் ஐயமில்லை; ஆனால், அதனைக் கொண்டு பாலுறவு என்பது
இயல்பிலேயே பாவமான ஒன்று என்று அர்த்தப்படுத்த முடியாது. மாறாக, பாவிகள் அதனைக் கிழ்மை
செய்கின்றனர் என்று காணலாம். ஏனெனில், பாவிகள் பாலுறவில் கடவுளுக்கான இடத்தை நீக்கிவிடுகின்றனர்.
இக்கோணத்தில் நோக்க, ஆதம் செய்த பாவம் என்பது துய்த்தலை முற்றிலும் தன்னுடைமை ஆக்க
முனைந்ததில் உள்ளது. துய்ப்பைத் தனக்குரிய ஒன்றாக அவர் கண்டதில் தவறு என்பது களவில்
மட்டுமன்றி கணிசமாக தெய்வாம்சமான சுகம் தரும் அக்களவுப் பொருளைத் தனது உடைமை என்று
சிந்தித்ததிலும் இருக்கிறது. கடவுளின் கட்டளையை மீறியதில், தொடக்கத்தில் மனிதன் பங்கெடுத்திருந்த
தெய்வ அகமியத்திலிருந்து ஒரு பிசகு உண்டாயிற்று. அச்செயல், தெய்வ அகமியத்தில் பங்கெடுப்பதை
நிறுத்திக்கொண்டு தன்னையே தனித்தொரு அகமியமாய் உருவாக்க முனைந்ததாயிற்று. தன்னையொரு
தோராயக் கடவுளாய் ஆக்குவதில் மனிதம் தனது பேரின்ப நோக்கின் நிலையைக் குறுக்கித் தாழ்த்தி
முழுப் பிரபஞ்ச சுற்றுச்சூழலிலும் ஒரு பிசகை உண்டாக்கிவிடுகிறது.
இயற்கையானதும்
ஆதியானதுமான புனிதச்செயலைக் கீழ்மையாக்கும் விருப்பம் எதுவும் கிறிஸ்த்துவின் நோக்கமாக
இருக்க முடியாது என்பது உறுதி. அனைத்துக்கும் மேலாக, பாலியற் கூறுகளின் தெளிவின்மையை
கருத்தில் கொள்ள, துறவுக்கு இயைந்ததான ஓர் ஆன்மிக வழிமுறையை அவர் வழங்கியிருக்க வேண்டும்.
ஏனெனில் தூய கற்பு நிலை என்பது எந்த வழிமுறைக்கும் நியதியாகும். கானாவில் (Cana; கலீலி அல்லது லெபனானில் உள்ள ஒரு சிற்றூர்;
காண்க: புதிய ஏற்பாடு: யோவான்: அதிகாரம் 2: 1-11 –மொ.பெ.) கிறிஸ்து திருமணத்தை
ஆசீர்வதித்தார் அல்லது புனிதப்படுத்தினார். அவர் அதனை அகஸ்தீனியக் கோணத்தில் செய்தாரா
அல்லது பவுலியக் கோணத்தில் செய்தாரா என்பதை நாம் சொல்லமுடியாது. அப்போது அவர் நீரை
மதுவாக்கினார். அது ஓர் ஆழிய குறியீடு. இறையியலாளர்கள் சொல்லும் அற மற்றும் சமூகச்
சந்தர்ப்பவியலாக அல்லாமல் அது மாம்சமும் ஆன்மிகமுமாய் இருக்கின்றதொரு இணைவைக் குறிக்கிறது
என்பதே மிகவும் பொருத்தமானது. அஃது வெறுமனே சதையுறவாக மட்டுமே இருக்குமெனில் அது மனிதமாக
இருந்திராது. (குறிப்பு: மேரியின் பிறப்புக்
குறித்து அவர் “பாவம் ஏதுமின்றிப் பெறப்பட்டார்” என்று திருச்சபை சொல்வதன் அர்த்தம்
அவருடைய ஆன்மாவானது மூலப் பாவத்தின் கறை இன்றிப் படைக்கப்பட்டது என்பதேயாம். ஆனால்
அறியாத பெரும்பான்மை விசுவாசிகள் நினைப்பது என்னவெனில், அவரது பெற்றோர்கள் உடலுறவு
கொள்ளாமலேயே அல்லது குறைந்தபட்சம் உறவில் இன்பமேதும் துய்க்காமலேயே, அவர்களில் காம
இச்சை இல்லாத நிலையில் அவர் கருத்தரிக்கப்பட்டார் என்பதாம். இது இறையியல் விளக்கம்
இல்லை எனில் கருத்தில் கொள்ளவேண்டிய ஒன்றல்ல. ஏனெனில், இதுபோன்ற பாவனைகள் கிறித்துவக்
கண்ணோட்டத்தில் வழமையாய் நிகழ்வதுதான்.)
மேலும்,
இனவிருத்தி என்பது அத்தனை முக்கியமான ஒன்றெனில், அதன் நியதியான ஒரு செயற்பாடு வருத்தப்பட
வேண்டிய ஒன்றாய் இருக்க முடியாது. அதற்கு மாறாக, இனவிருத்தியின் இன்றியமையாமையின் விகிதத்திற்கேற்ப
அது புனிதத்தன்மையைப் பெற்றிருக்கும் நிலையும் உண்டாகி இருக்காது. இறையியலாளர் செய்வது
போல் இனவிருத்திக்கு முக்கியத்துவம் அளித்து அதனைப் பாலுறவை விட்டும் பிரித்தெடுக்க
முடியும் எனில், அதேபோல் இனவிருத்தியை விட்டும் பாலுறவைத் தனித்தெடுத்து அதன் இயற்கை
மற்றும் உடனடி சார்புலத்திற்கு இயைந்து மேம்படுத்திக்கொள்ளவும் முடியும். அதன் இறையியல்
மற்றும் ஆன்மிகக் குறியீட்டியல் உறுதிப்படுத்தும் நோக்கில் காதல் என்பது அதன் உயிரியல்
மற்றும் சமூக அம்சங்களை விட்டும் தூய்மைபெறும் பண்பினைக் கொண்டுள்ளது என்றும் சொல்ல
வேண்டியதாகிறது.
காதலின்றி
ஒருவர் இனவிருத்திச் செய்யவும் முடியும்; இனவிருத்தி இன்றி ஒருவர் காதலிக்கவும் முடியும்.
ராகேல் நெடுங்காலம் மலடாய் இருந்தது அவள் மீது யாக்கோபு கொண்டிருந்த காதலைக் குறைத்துவிடவில்லை,
எவ்விதமான இடவியல் விளக்கங்களும் தந்து ’சாலமோன் பாடின உன்னதப்பாட்டு’ தன்னை நியாயப்படுத்திக்கொள்ள
வேண்டிய அவசியமில்லை.
q q q q q q
கிறிஸ்து
திருமணத்திற்கு எதிரானவர் அல்லர், அவர் பலதாரமணத்தையும் எதிர்க்கவில்லை என்பதில் ஐயத்திற்கு
இடமில்லை. பத்துக் கன்னிகைகள் பற்றிய நீதிக்கதை (மத்தேயு:25) இதற்கான சான்றாகும்.
(அதில், விளக்கும் முகமாக ‘மேலும் மணமகளும்’ என்று சேர்க்கப்படுவதால் அக்கதை தனது அர்த்தத்தை
இழக்கவில்லை என்றபோதும் தன் வலுவை இழந்துவிடுகிறது). கிறித்துவ உலகில், விசுவாசிகள்
அனைவருக்கும் அல்ல எனினும் அரசகுமாரர்களுக்குப் பலதாரமணம் அனுமதிக்கப்பட்டிருந்தது.
அதனால் பல போர்களும் திருச்சபை மீதான அரசதிகார அழுத்தமும் தவிர்க்கப்படும் அத்துடன்
ஆங்கிலேயக் கருத்துபேதமும் தவிரும். விவாகரத்தைக் கண்டித்து கிறிஸ்து சொன்னார், “தேவன்
இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்” (மாற்கு:10:9). ஆனால் அரசகுமாரர்களின் திருமணஙளெல்லாம்
பெரும்பாலும் அரசியல் பேரங்களின் விளைவாகவே இருந்தன. அவற்றுக்குக் கடவுளுடனோ காதலுடனோ
எந்த அக்கறையும் இல்லை.
ஒருதார
மணத்தைப் போன்றே பலதார மணமும் இயற்கைக் காரணிகளால் அமைந்தது. முதல் திருமணம் ஒருதார
நிலையாகத்தான் இருக்கும் என்பதாலும் ஆண்மையைப் போன்றே இதில் பெண்மையும் முழுதும் ஒரே
நபரிடம் இருக்கும் என்பதாலும் ஒருதாரமணம் என்பது இயற்கையானது என்று சொன்னால், பலதாரமணம்
என்பது உயிரியல் தகவல்கள் மற்றும் சமூக அல்லது அரசியல் சார்புகள் கொண்டு விளக்கப்படுகிறது.
இன்னொரு பக்கம், பெண்மை குறிக்கும் முடிவற்ற தன்மை பல்வேறு அம்சங்களை அனுமதிக்கிறது.
விடுதலை நல்கும் விளிம்பு நோக்கி ஆண் நீண்டு செல்கிறான்; பாதுகாப்பளிக்கும் மையப்புள்ளியில்
பெண் வேர் கொள்கிறாள். (மாறாக, பலபதிமணம் (polyandry) என்பதை ஆதரிக்கும் தரவுகள் இயற்கையில்
இல்லை; அல்லது மிகவும் அபூர்வம், அது மிகவும் பிரத்யேகமான பொருளாதாரக் காரணங்கள் கொண்டோ
அல்லது மாந்திரீகக் கோட்பாடுகளைக் கொண்டோதான் விளக்கப்படுகிறது. ”புனித விபச்சாரம்”
என்று கூறப்படும் மரபுகளும் உள்ளன: ஹிடாய்ரா (கிரேக்கப் பரத்தை), ஹிய்ரோடியூல் (கிரேக்க
தேவதாசி), தேவததாசிகள், கீஷா (ஜப்பானியப் பரத்தை) – இவற்றில் பெண் என்பவள் மையப்புள்ளியாகிறாள்,
ஏனெனில் அவள் தன்னைப் பல ஆண்களுக்குத் தருகிறாள். தொல் மரபுகளின் கட்டமைப்பில் இவை
போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருந்தன என்று சொல்லலாம். ஆனால் பிற்காலச் சமயங்களில் எல்லாம்
இவ்வம்சம் நீக்கப்பட்டுள்ளது. சில விதிவிலக்குகள் உண்டு. அவை வெளிப்படுத்திச் சொல்லும்
அளவுக்குப் போதுமானவை அல்ல).
இத்துடன்
மேலும் சொல்லலாம், ஏறத்தாழ நார்டிக் மக்கள் (வட ஐரோப்பியர்) ஒருதாரநிலையை ஆதரிப்பவர்களாக
இருக்கின்றனர். அவர்களது பருவநிலை சார்ந்த மனப்பாங்கு அதற்கான காரணமாகும். ஆனால் பெரும்பான்மையான
தெற்கு மக்கள் பலதார நிலையை ஆதரிக்கும் இயல்பைப் பெற்றுள்ளனர், அது எப்படி எவ்வளவாயினும்
சரி. அது அப்படி இருக்க, மேற்கின் கண்டம் முழுவதன் மீதும் பாதிரிகளுக்கான ஒழுக்கவியலைச்
சுமத்துவது பிழையாகும். அந்த ஒழுக்கவியல் தனது செய்முறைப் பின்னணியால் சட்டபூர்வமானதாய்
இருப்பினும், சமூகம் முழுமைக்குமாக அதனை நீட்டுதலைக் கருத, காமம் என்பது ஒருவித தீமை
என்றும் அது குறைந்தபட்சத்திற்கு ஆக்கப்படவேண்டியது என்றும் அதன் சாராம்சங்கள் அனைத்தையும்
நீக்கிவிடுமொரு அணுகுமுறையில் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் பார்க்கின்ற
பிழைபட்ட கருத்தின் மீது நிறுவப்பட்டுள்ளதாகும்.
பல பெண்கள்
தமது சுயத்தைத் தக்க வைத்துக்கொள்கின்ற பலதார நிலையையும் பெண்களின் பெருந்திரள் ஒன்று
தமது சுய அடையாளங்கள் மழுங்கிய நிலையில் “பெண்மையை” பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துதாரநிலை
(pantogamy) என்னும் அரச அந்தப்புற அமைப்பையும் நாம் பிரித்துப் பார்க்க வேண்டும்.
அனைத்துத்தார நிலை என்பது, அதன் குறிப்பிட்ட மணவாளன் மனிதகுலத்தின் சிகரத்தில் இருப்பவனாய்
இல்லாத நிலையில் அப்பெண்களுக்கு ஒருவித கண்ணியக் குறைவையே உண்டாக்குகிறது. கிருஷ்ணன்
விஷ்ணு என்பதால், தாவீதும் சாலமோனும் இறைத்தூதர்கள் என்பதால், சுல்தான் (மாமன்னர்)
”இம்மண்ணில் அல்லாஹ்வின் நிழல்” என்பதால் அனைத்துத்தாரநிலை சாத்தியமாகிறது. எண்ணிக்கை
அற்றதும் நிழலானதுமான ”ஹரம்” (அந்தப்புறம்) நவரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்டதொரு
ஏகாதிபத்திய சிம்மாசனத்தை ஒத்த செயல்பாட்டினைக் கொண்டுள்ளது. ‘ஒத்த’ செயல்பாடே அன்றிச்
சமமானதல்ல. ஏனெனில், ஹரம் என்பது மனிதப்பொருளால் உண்டான சிம்மாசனமாகும். அது மேலும்
நேரடியான மேலும் ஸ்தூலமான நிலையில் ஒரு பேரரசனின் உண்மையான அல்லது வரிக்கப்பட்ட தெய்வாம்சத்தைக்
குறிக்கிறது (ழில்லுல்லாஹ் – அல்லாஹ்வின் நிழல்
என்னும்படி. ‘முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப் படும்’
என்னும் திருக்குறள் (388) இங்கே நினையத்தகும் – மொ.பெ).
கீழான
நிலையில், இந்த அனைத்துத்தாரநிலை சாத்தியமில்லை. ஒரு குறிப்பிட்ட வழக்கில், இது சட்டபூர்வமானதா
அல்லது சகித்துக்கொள்ளத்தக்கதா என்பது சாதாரணத் தனிமனிதனுடன், மனித அலங்கோலத்தையும்
மனமாயைகளையும் தூண்டவல்ல இச்செயல்பாட்டினை வேறுபடுத்தி நோக்கி பதில் காணவேண்டிய கேள்வியாகும்.
யாம்
இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கும், நடைமுறையில் இருக்கும் செயற்பாடுகளை விளக்கி வருகின்றோமே
அல்லாது எதனையும் முற்படுத்துவது நோக்கமன்று; இங்கே எமது தனிப்பட்ட விருப்பு ஒரு பிரச்சனை
அல்ல. அல்லது ஏதேனுமொரு குறிப்பிட்ட மரபுசார் சமூக அமைப்புக்கு எமது தனிப்பட்ட நோக்கு
எதிராக இருக்கக்கூடும். அதனை யாம் ஒரு குறிப்பிட்ட பார்வைக் கோணத்தில் அல்லது குறிப்பிட
சார்புலத்தில் வைத்து நிரூபித்திருக்கவும் முடியும்.
q q q q q q
இங்கே
மிகவும் முக்கியமானதொரு சாத்தியக்கூறினைக் கருதுகிறோம். அது, இல்லறக் கட்டமைப்புக்குள்
துறவறம் என்பதாகும். பாலியலைப் புனிதப்படுத்துவதற்க்கான இன்றியமையா நியதிகளான பற்றின்மை
மற்றும் தாராளம் ஆகிய இரண்டும் இதில் இணைந்தியங்கும் நிலை உண்டாகிறது. திருமண உறவுகளின்
தளத்தில் வல்லாதிக்கமும் துச்சமும் போன்று புனிதத்திற்கு எதிராகும் காரணிகள் வேறில்லை.
தவிர்தல், வழமைகளை உடைத்தல் மற்றும் ஆன்மாவின் புத்துணர்வு ஆகியன எவ்வொரு புனிதப் பாலியலுக்கும்
இன்றியமையாத கூறுகளாகும். இரு உள்ளங்களின் நித்திய இணைவில், சமநிலை ஆக்கும் இரண்டு
திறப்புக்கள் வேண்டும், ஒன்று விண்ணின் பக்கமும், மற்றொன்று மண்ணின் பக்கமுமாக. அதாவது,
இணைகளுக்கு மேலாக மூன்றாவதாயிருக்கும் கடவுளிடம் ஒரு திறப்பு இருக்க வேண்டும். அத்திறப்பு இன்றேல் இருமை என்பது பகைமை ஆகிவிடும்.
மேலும், சாளரம் போன்றதான ஒரு திறப்பு அல்லது வெறுமை இங்கே மனிதத் தளத்தில் இருக்க வேண்டும்.
தவிர்தலே அந்தத் திறப்பாகும். அது இறைவனுக்கு ஒரு காணிக்கையாகவும் இணைநபருக்குச் செலுத்தப்படும்
மரியாதை மற்றும் நன்றியறிதலாகவும் இருக்கும். ஏனெனில், கணவன் அல்லது மனைவியின் மனித
மற்றும் ஆன்மிகக் கண்ணியம் என்பது அவர்களொரு பழக்கமாய் உறவாடப்படக் கூடாது என்பதையும்
கற்பனையும் புத்துணர்வும் அற்ற முறையில் உறவாடப்படக் கூடாது என்பதையும், அவன் அல்லது
அவளின் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் கோருகிறது. இந்த நியதி தவிர்தலை
மட்டுமன்றி பண்பின் மேன்மையையும் மிகவும் முக்கியமாகக் கோருகிறது. ஏனெனில், புனிதவுணர்வில்
அல்லது பக்திநிலையில் நாம் இறுதி முடிவாக நற்பண்பையே நாம் காண்கிறோம்.
பக்தி
என்பது ஒருபுறம் தனித்திருப்பதன் மதிப்பையும் மற்றொரு புறம் பங்கேற்பதன் நெருக்கத்தையும்
கேட்கிறது. ஒருவர் தன்னை இல்லாமலாக்கி ’ஏழை’யாய் இருப்பது ஒருபக்கம் இருக்க, இன்னொரு
பக்கம் பொங்கிப்பெருகி வழங்குபவராய் இருக்கவும் வேண்டும். இது, தவிர்தல் மற்றும் தாரளம்
ஆகியவற்றின் சகநிறைவாகும். இச்சார்புலத்தில் நோக்க, கணவன் அல்லது மனைவியின் உடலியல்
சார்ந்த பொறுமை மற்றும் தாராளமான ஏற்புநிலை என்பது மனித கண்ணியத்தின் நியதி மட்டுமல்லாது
திருமணவுறவின் ஆன்மிக மதிப்பின் நியதியுமாகும். கால இடைவெளியிலான தவிர்தல் என்பது இந்த
ஏற்புநிலை அல்லது பொறைநிலையின் அடையாளமேயாகும். (செவ்விந்தியர்கள், இந்தத் தவிர்தல்
முறை, அது அவர்களின் நடைமுறைக் காரணங்களால் இருப்பினும், தம்மைப் பலப்படுத்திக் காலப்போக்கில்
தமது வீரியத்தை மிகச்செய்வதாகக் கண்டனர்).
எந்தச்
சாத்தியத்தையும் விட்டுவிடக்கூடாது என்னும் நோக்கில், மிக மிக அபூர்வமானதும் ஆனால்
தன்னளவில் தீமையற்றதுமான ஒரு வழக்கத்தையும் இங்கே நாம் பேசவேண்டும். அதில் (தாம்பத்ய
உறவு) தவிர்தல் என்பது நிலையானதாகவும் தூயகற்பு நிலையுடன் ஒரு சகோதரச் சகோதரி உறவுநிலை
பேணப்படுவதாகவும் அமைகிறது. (இவ்வகை உறவுக்கொரு சிறந்த உதாரணமாக ராமகிருஷ்ணரின் இல்லறம்
இருக்கிறது. பரமஹம்சர் தனது மனைவியைத் தொடாமல் வழிபட்டார். அவரை வழிபடாது தொடுவதைக்
காட்டிலும் இது நிச்சயம் மேலான ஒரு நிலையே ஆகும்). அத்தகையதொரு நிலையில், தவிர்தல்
என்பது ஒரு பகட்டு அல்லது துன்புறுத்தும் ஒழுக்கவியலாக இராமல், புனிதப் பிள்ளைத்தனம் கொண்டதாயிருக்கும். நிச்சயமாக, காமமற்ற இல்லறம்
என்பது தனித்தன்மையான தகுதிகளைக் கோரும் அதே வேளை இத்தகு உறவுநிலையை ஆதரிக்குமொரு ஆன்மிகக்
கண்ணோட்டமாக, ஆதியாகமம் சொல்லும் பின்வரும் வாக்கியத்தை உறுதிப்படுத்துகிறது: “மனுஷன்
தனிமையாய் இருப்பது நல்லதல்ல; ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்”. (இது “அவனுக்குப்
பொருத்தமான துணையை” என்றும் “அவனுக்குத் தகுதியான துணையை” என்றும் மொழிபெயர்க்கப்படுவதுண்டு.
இதனை ஒருவர் புரிந்துகொள்ள முடிந்தால், அதுவே சில விரிவுரைஞர்கள் முன்வைக்கும் பெண்வெறுப்பை
நீக்கப் போதுமானதாகும்.)
to be continued...
No comments:
Post a Comment