தோழர்
பேரா.சாதிக் பாட்சா அவர்கள் நடத்திவரும் “செம்மொழித் தமிழ்” மற்றும் “நவீனத் தமிழ்”
ஆகிய இலக்கிய ஆய்விதழ்களில் அடியேன் அவ்வப்போது ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுவதுண்டு.
பக்க வரையறையில் எனக்கு மிகுந்த சுதந்திரம் அளிப்பார். ’இருபத்தைந்து பக்கங்கள் வருகிறது,
பரவாயில்லையா?’ என்று கேட்டாலும் சிரித்துக்கொண்டே வாங்கி வெளியிடுவார். கடந்த இரண்டு
வருடங்களாக அதில் ஒன்றுமே எழுதாமல் இருந்தேன். இப்போது ஒப்புக்கொண்டு ஒரு கட்டுரைக்கான
முயற்சியில் இறங்கியுள்ளேன்.
மொழியியல்
(philology) ஆய்வில் தமிழில் ஒரு சிகரம் என்று சொன்னால் நினைவில் தோன்றுபவர் “மொழிஞாயிறு”
என்று போற்றப்படும் ஞா.தேவநேயப் பாவாணர். அன்னார் எழுதிய தமிழர் மதம் என்னும் நூலினைப்
பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தேன். நீங்கள் வாசித்திருக்கலாம். அவரது
“தமிழ் வரலாறு” என்னும் நூல் தமிழ் மொழியின் வரலாற்றை வேர்ச்சொல்லியல் (etymology)
நோக்கில் சொல்கிறது. தமிழ்ச் சொற்கள் தம்முள் பொதிந்து வைத்திருக்கும் ஞானத்தை அறியுந்தோறும்
பேருவகையும் இம்மொழியை இறைவன் நமக்கு வழங்கியமைக்கான நன்றிப்பெருக்கும் உள்ளத்தில்
பொங்குகின்றன. அந்த அனுபவங்களைச் சிறு சிறு கட்டுரைகளாக உங்களுக்கு விளம்ப விழைகிறேன்.
இனி, மொழியியலுள் செல்வோம்.
வகர மெய்யெழுத்தின்
ஓசையை (”இவ்” என) நாம் உச்சரிக்கும் போது ஏற்படும் வாயின் வடிவத்தை “ஒன்றைக் கவ்வுதலையொத்த
வாய்ச்செய்கை நிலை” என்று தேவநேயப் பாவாணர் சொல்கிறார். புரியவில்லை எனில், கண்ணாடி
முன் நின்றுகொண்டு நீங்கள் தொடர்ந்து “இவ் இவ் இவ்...” என்று சொல்லிப் பார்த்தால் இதனை
விளங்கலாம். அந்த ஓசை பிறக்கும் முறையை “மேல்வாய்ப் பல் கீழுதட்டோடு பொருந்துவதே கவ்வும்
நிலையாம்” என்றும் அவர் சொல்கிறார்.
கவ்வுவது என்றால் பற்றுவது என்று பொருள். அதனடியாக, மூன்று வகையில்
பற்றுவதைக் குறிக்க மூன்று சொற்கள் தமிழில் இருக்கின்றன என்னும் விளக்கத்தையும் அவர்
தருகிறார்:
அவ்வுதல் – மனத்தினால் பற்றுதல்.
கவ்வுதல் – வாயினால் பற்றுதல்.
வவ்வுதல் – கையினால் பற்றுதல்.
இவ்விடத்தில்
தேவநேயர் தரும் சொல் விளக்கம் ஒன்று என் சிந்தனையை மிகவும் தூண்டிச் செலுத்திற்று:
”அவ்
– அவா – அவாவு – ஆவு – ஆவல்”
அவ் என்னும்
சொல்லில் இருந்து ஆசையைக் குறிக்கும் அவா மற்றும் ஆவல் ஆகிய சொற்கள் வந்திருக்கின்றன.
அவ்வுதல்
என்பது மனத்தினால் பற்றுதல் என்று கண்டோம். பற்று என்றால் ஆசை என்று ஓர் அர்த்தம் இருப்பது
அனைவரும் அறிந்ததுதான். மனத்தினால் ஒரு பொருளை எப்படிப் பற்ற முடியும்? ஆசை வைப்பதன்
வழியாகத்தானே? எனவே அவ்வுதல் என்றால் அவா (ஆசை) கொள்ளுதல் என்றுதான் பொருள்.
அ என்னும்
தமிழின் முதல் எழுத்து பிற மொழிகளில் உள்ள ஹ என்னும் எழுத்துக்கான மாற்று. குறிப்பாக
ஹ என்பது சொல்லின் முதல் எழுத்தாக வரும்போது. உதாரணமாக, ஹனுமன், ஹரி, ஹிந்து என்பன
அனுமன், அரி, இந்து என்றும், ஹல்வா என்பது அல்வா என்றும், ஹாலிவுட் என்பது ஆலிவுட்
என்றும் தமிழில் மாறும். எனவே, அகரம் முதலெழுத்தான சொற்கள் அந்த மொழிகளுக்குப் போனால்
ஓரொரு சமயம் ஹ என்னும் எழுத்தாக மாறவும் வழியுண்டு.
இந்த
அடிப்படையில், மனப்பற்றான ஆசையைக் குறிக்கத் தமிழில் உள்ள ”அவா” என்னும் சொல் அரபியில்
”ஹவா” என்னும் சொல்லுடன் ஒப்பு நோக்கற்பாலது.
அரபி
மொழியில் இரண்டு ’ஹ’கரங்கள் உண்டு. மென்மையான ஹ என்றும் வன்மையான ஹ என்றும் வைத்துக்கொள்ளலாம்.
அல்லது, மெல்லின ஹ மற்றும் வல்லின ஹ என்றும் சொல்லலாம். ஹ1 மற்றும் ஹ2 என்று கணிதக்குறி
போலும் சொல்லலாம். எல்லாம் நம் வசதிக்குத்தான்.
எவ்வொரு
மொழியிலும் ஒரே ஒலியின் இரண்டு அல்லது மூன்று மாற்றுகள் (variants) இருந்தால் அவை கால
ஓட்டத்தில் தோன்றியவையாக இருக்கும். உதாரணமாக, தமிழில் லகர ஓசைக்கு மேலும் இரண்டு மாற்றுக்கள்
இருக்கின்றன. எனவே ல, ள, ழ ஆகிய மூன்று மாற்றொலிகள் உள்ளன. ஒருகாலத்தில் ல மட்டும்
இருந்தது. பின்னர் அதிலிருந்து இன்னும் நுட்பமான ள வந்தது. பின்னர் அதனினும் நுட்பமான
ழ. முன்னதை விடவும் பின்னதை உச்சரிப்பது பலருக்கும் சிரமமாக இருக்கிறது அல்லவா? இதெல்லாம்
படித்தவர்கள் உண்டாக்கிய நுட்பங்கள் போலும். இந்த நியதியை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
எளிமையிலிருந்து நுட்பமானது பிறந்து வருகிறது. எளிதாக இயல்பாக உச்சரிக்க முடிந்த ஒலியிலிருந்து
நுட்பமாக உச்சரிக்க வேண்டிய மாற்றொலி தோன்றி வருகிறது. மொழியை அழகுபடுத்திக்கொள்வதற்காக
இதெல்லாம் செய்திருக்கிறார்கள். ல என்பதை மிக எளிதாக எல்லோரும் உச்சரிக்க முடிகிறது.
ஆனால் ள, ழ ஆகியவற்றைச் சரியாக உச்சரிக்கப் பயிற்சி தேவைப்படுகிறது. உண்மைதானே?
இந்த
நிலை எல்லா மொழிகளுக்கும் பொதுவானது. எனவே, அரபியிலும் ஹ1 என்பதிலிருந்து ஹ2 தோன்றி
வந்திருக்க வேண்டும். மேலே நாம் கண்ட ஹவா (அவா, ஆசை) என்னும் சொல் ஹ2 என்னும் வல்லின
ஹகரம் கொண்டது. ஹ1 என்னும் மெல்லின ஹகரம் கொண்ட ”ஹவா” என்னும் சொல்லும் அரபியில் இருக்கிறது.
அதன் பொருள் காற்று. அதையும் தமிழ்ப்படுத்தினால் அவா என்றுதான் ஆகும்.
காற்று:
ஹ1வா; ஆசை: அவா (தமிழ்) – ஹ2வா.
ஹ1வா
என்னும் அரபிச் சொல்லிடையில் மேலுமொரு வகர மெய் சேர்த்து இரட்டை அழுத்தம் தந்து (இதனை
அரபியில் ஷத் என்பர்) உச்சரித்தால் அது ”ஹவ்வா” என்றாகும். ஹ1வ்வா என்பது ஒரு பெண்பாற்
பெயர்ச்சொல். ஆதம் என்னும் முதல் ஆணுக்கு ஜோடியாகப் படைக்கப்பட்ட முதல் பெண்ணின் பெயர்
அது.
ஹவ்வா என்பதைத் தமிழ்ப்படுத்தினால் அவ்வா என்றாகும்.
அதுவே அவ்வை என்னும் பெண்பாற் பெயர். அவ்வை என்றால் பாட்டியின் தோற்றம் மனக்காட்சியில்
வருதல் இயல்பு. ஆனால் அது பெண்களுக்கான பொதுவான பெயர். குறிப்பாகப் பாட்டியைச் சுட்டப்
பயன்படுகிறது. சில சமூகங்களில் பாட்டியை அவ்வா என்று கூறும் வழக்குள்ளது.
ஆதம்
– ஹ1வ்வா – ஹ2வா என்னும் மூன்று சொற்களைக் கருதுவோம். அவை முறையே ஆண் – பெண் – அவா
என்று பொருட்படுகின்றன.
ஆதம்
என்னும் ஆணுக்கு இணையாக ஹவ்வா என்னும் பெண் படைக்கப்பட்டார். ஆதம் ஹவ்வாவைப் பார்த்தார்.
அதாவது, ஆண் பெண்ணைப் பார்த்தான். ஆதமுக்கு ஹவ்வா மீது ஹவா ஏற்பட்டது. அதாவது, ஆணுக்குப்
பெண் மீது அவா (ஆசை, பற்று) உண்டாயிற்று. அது முதலில் அவரின் மனத்தில் உண்டாயிற்று.
எனவே அது அவா என்னும் மனப்பற்று ஆகும்.
இது ஆணுக்கு
ஜோடியாகப் பெண்ணைப் படைத்ததன் நோக்கமாகவும் இருந்தது என்பதைக் குர்ஆனின் வசனமொன்று
காட்டுகிறது: ”அல்லாஹ்தான் உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான்; மேலும், அதிலிருந்தே
அதனுடைய துணையைப் படைத்தான்; அதனிடம் அது அமைதி பெறுவதற்காக!” (7:189). எனவே அவ்வை
என்னும் தமிழ்ப்பெயரின் பொருளாக அவாவுதற்குரியவள் என்று கொண்டால் இத்திருவசனத்தின்
கருத்தை அந்தப் பெயர்ச்சொல்லே பிரதிபலிக்கின்றதாகிறது.
இனி,
‘அவ்’ (மனப்பற்று, அவா) என்பதில் ஆணுக்குப் பெண்ணின் மீது அவா தோன்றும் நிலை இயற்கையானது
என்பதால் அதுவே பிற பற்றுக்களை விடவும் முதன்மையானது என்று சொல்ல வேண்டும். இக்கருத்தினைத்
திருக்குர்ஆனின் வசனம் ஒன்று நவிலக் காண்கிறோம்: “பெண்கள், பிள்ளைகள், பொன் மற்றும்
வெள்ளிப் பெருங்குவியல்கள், உயர் குதிரைகள், கால்நடைகள், வேளாண் நிலங்கள் ஆகியவற்றின்
மீதான இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. இவை இம்மை வாழ்வின் சுகப்பொருட்கள்.
திண்ணமாக, அல்லாஹ்விடமே அழகிய தங்குமிடம் உள்ளது. ” (3:14)
இத்துடன்,
நபி (ஸல்) அவர்கள், “உங்களின் உலகிலிருந்து பெண்களும் நறுமணமும் எனக்கு விருப்பமாக்கப்பட்டுள்ளன.
எனது கண்ணின் குளிர்ச்சி தொழுகையில் ஆக்கப்பட்டுள்ளது” (அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக்
(ரலி...); பதிவு நூல்: முஸ்தத்ரக் ஹாகிம்; மேற்கோள்: http://hadithanswers.com/three-things-beloved-to-nabi)
என்று நவில்வதையும் கவனிக்க வேண்டும்.
மேலும்,
இன்னொரு ஹதீஸும் இக்கருத்தை வலியுறுத்துகின்றது. நபி (ஸல்...) நவின்றார்கள், “இவ்வுலகம்
தற்காலிகச் சுகம் ஆகும். இம்மையின் இன்பங்களில் மிகவும் சிறந்தது ஒழுக்கமுள்ள பெண்
(மனைவி)தான்” (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி...); பதிவு நூற்கள்: சஹீஹ்
முஸ்லிம்: 1467, இப்னு மாஜா: 1855; மேற்கோள்: https://islamqa.info/en/171295) ”பெண்ணின்
பெருந்தக்க யாவுள?” என்று வள்ளுவர் வியந்து கேட்பதும் “காணும் பொருள் யாவினும் இப்பெண்மை
இனிதடா!” என்று பாரதி வியந்து சொல்வதும் ஒப்புநோக்கற்பாலன.
ஆணுக்குத்
தன் இணையான பெண் மீது உண்டாகும் பற்றை, ஆசையை, அவாவைக் காமம் என்னும் சொல்லால் குறிப்பிடலாம்
அல்லவா? கவ்வு என்னும் சொல்லில் இருந்து கிளைத்து உருவாகும் முப்பத்தொரு சொற்களை தேவநேயர்
எடுத்துக்காட்டுகிறார். அவற்றுள் காதல் மற்றும் காமம் ஆகிய சொற்களும் உண்டு.
அவ்வுதல்
என்பது மனப்பற்று. அதன் பின் கவ்வுதல் என்னும் வாய்ப்பற்று. அதன் பின் வவ்வுதல் என்னும்
கைப்பற்று என்னும் வரிசையில் காண, முதலில் அவா என்னும் மனப்பற்று உண்டானது. அது காதல்.
பின்னர் வாய்ப்பற்றான முத்தமும், அதன் பின் மெய்யுறு புணர்ச்சியும் (கை என்பது இங்கே
தொடுவுணர்ச்சிக்கான குறியீடாகிறது என்னும் நிலையில்) ஏற்படுகின்றன. அந்நிலைகள் காமம்.
அவ்-கவ்-வவ் என்பது அகரமுதலி நிரலுக்கிணங்க உள்ள வரிசைக்கிரமம் என்பதால் இதனை வரிசை
மாற்றிப் பிசகாகப் பொருள் கொள்ள முடியாது. இவ்விளக்கம் நபி (ஸல்...) அவர்கள் புணர்ச்சி
பற்றி வழிகாட்டிய ஹதீஸ் (அருள்மொழி) ஒன்றின் கருத்தைப் பிரதிபலிக்கின்றது:
“அல்லாஹ்வின்
தூதர் (ஸல்...) நவின்றார்கள்: ‘உங்களில் எவரும் தனது மனைவியிடம் விலங்கினைப் போல் தனது
(காமத்) தேவையைத் தீர்த்துக்கொள்ள வேண்டாம். உங்களுக்கிடையில் முத்தமிடுதல் மற்றும்
உரையாடுதல் ஆகிய முன்புணராட்டம் இருக்க வேண்டும்.” (அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக்
(ரலி…; பதிவு நூல்: முஸ்னத் அல்-ஃபிர்தவ்ஸ் அல்-தைலமி 2/55; மேற்கோள்: www.zawaj.com/articles/kissing-and-foreplay.html)
இவ்வாறு,
அவ்-கவ்-வவ் என்னும் (Gesticulatory Sounds) வாய்ச்செய்கை ஒலிகளுக்குத் தமிழ் தந்திருக்கும்
அர்த்தங்கள் பொது நிலையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே தோன்றும் அன்பு நிலைகளை விளக்குவதாகவும்,
குறிப்பாக ஆதம் ஹவ்வா குறித்த பழங்கதையை விளக்குதாகவும் இருக்கின்றன.
No comments:
Post a Comment