ரெனெ
கினான்
நூன்
என்னும் எழுத்தின் வடிவத்திற்குத் திரும்ப, தொல்மொழிகள் பலவற்றின் எழுத்துக்களுக்கு
இடையிலான உறவுநிலைகளின் கோணத்தில் இன்னும் சுவையான அவதானங்களை நாம் சொல்வோம். சம்ஸ்க்ருத
எழுத்துக்களில், நூன் என்பதற்கான எழுத்தான ன் என்பது அதன் சுருக்க வடிவில் ஓர் அரைவட்டமும்
மையப்புள்ளியும் கொண்டதாகவே இருக்கிறது. ஆனால் இங்கே அந்த வளைவு மேலே திரும்பியதாக
உள்ளது. அதாவது வட்டத்தின் மேல்பாதியால் ஆனதாக இருக்கிறது, அரபியின் நூன் போல் கீழ்ப்பாதியால்
ஆனதாக அல்ல. (மொ.பெ.குறிப்பு: ரெனெ கினான் இதனை
எந்த அடிப்படையில் சொல்கிறார் என்று தெரியவில்லை. ஓம் என்பதை சம்ஸ்க்ருதத்தில் எழுதுகையில்
அரபி நூன் வடிவில்தான் எழுதப்படுவதைக் காண்கிறோம்.) இவ்வாறு, அதே வடிவம் தலைகீழாக
நமக்குக் கிடைக்கிறது. அல்லது, இணைநிறைவாகும் இரண்டு பாதிகளை நாம் பெறுகிறோம். அவற்றை
ஒன்றிணைத்தால், இரு மையப்புள்ளிகளும் கலந்து ஒன்றாகி, மையப்புள்ளியுடன் கூடிய ஒரு முழுவட்டத்தைத்
தருகின்றன. அவ்வடிவம் முழுமையான யுக சுழற்சியையும் வானியலில் சூரியனின் குறியீட்டையும்
ரசவாதத்தில் தங்கத்தின் குறியீட்டையும் தருகின்றது. (ஆன்மிகச் சூரியன் மற்றும் பொற்கரு
/ தங்கக் கரு (ஹிரண்யகர்ப்பம்) என்று ஹிந்து மரபில் சொல்லப்படுபவற்றை இங்கே நினைவுகூரலாம்.
மேலும், சில குறியீடுகளின்படி அரபியின் நூன் என்னும் எழுத்து சூரியனைக் குறிக்கும்
வானியல் எழுத்தாகும்.)
hiranyagarbha
வட்டத்தின்
கீழ்ப்பாதி என்பது கப்பலைக் குறிக்கிறது எனில் (மொ.பெ.குறிப்பு: கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் சுட்டிக்காட்டியதைப் போல,
நூஹ் -à நோவா
--à நாவாய் என்பதும் எண்ணத்தகும். நாவாய் என்றால்
கப்பல் என்று பொருள்.), வட்டத்தின் மேற்பாதி வானவில்லைக் குறிக்கிறது.
ஆங்கிலத்தில் Ark என்பதன் கராரான பொருள் கப்பல் என்பதுடன் வானவில் என்பதுமாம். (மொ.பெ. குறிப்பு: அதனையே arch என்று எழுதலாயிற்று.
இக்கருத்து, மேல்வட்டமும் கீழ்வட்டமும் வேறுவேறு அல்ல என்னும் பார்வைக்கு, கிரேக்க
தத்துவஞானியான ஹெர்மிஸ் திரிமெஜிஸ்டஸுக்கு அவரின் ஆசான் பைமாந்திரஸ் சொல்லித்தரும்
பிரபஞ்ச ரகசியமான “எவ்வாறு மேலோ அவ்வாறே கீழும்” (ஒபோஸ் பரபானோ எத்ஸி காய் பரகாதோ)
என்னும் தத்துவப் பார்வைக்கு, நம்மை இட்டுச் செல்கிறது.) ஒப்புமைகள் தலைகீழாய்
இருப்பது இயல்பே.
இவ்விரு
அரைவட்டங்களும் உலக முட்டையின் இரு பாதிகளாகும். ஒருபாதி நிலத்தில், கீழ் நீர்களில்
இருக்கிறது; மறுபாதி விண்ணில் மேல் நீர்களில் இருக்கிறது. இவ்விரு பாதிகளும் பிரியும்
முன் இருந்த ஆதி நிலையின் முழு வட்ட வடிவம் மீண்டும் யுக முடிவில் உண்டாக்கப்பட வேண்டும்.
எனவே, இரு வடிவங்களின் இணைவு என்பது, யுகத்தின் நோக்கத்தைக் குறிக்கிறது, அவ்வட்டத்தின்
ஆரம்பத்துடன் அதன் முடிவை இணைப்பதைக் குறிக்கிறது. சூரியக் குறியீட்டியலின்படி இதனைக்
காணும்போது மிகவும் தெளிவடைகிறது, அதாவது சம்ஸ்கிருத ‘ன்’ என்பதன் வடிவம் சூரிய உதயத்தையும்
அரபியின் நூன் என்பதன் வடிவம் சூரிய அஸ்தமனத்தையும் குறிக்கின்றன.
இன்னொரு
பக்கம் முழு வட்டம் என்பது பத்து என்னும் எண்ணின் வடிவம் ஆகும். அதன் மையம் ஒன்றையும்
அதன் சுற்றுவட்டம் ஒன்பதையும் குறிக்கும். ஆனால் இங்கே அது இரண்டு நூன்களின் இணைவால்
கிடைப்பதால் அதன் மதிப்பு 2X50=102 , என்றாகிறது. ஓர் இடையுலகில் (மொ.பெ.குறிப்பு: திரையுலகம். ஆலமுல் பர்ஸஃக்,
World of Isthmus) இவ்விரு வடிவங்களின் இணைவு செய்யப்படவேண்டும் என்பதை இது குறிக்கிறது.
பகுப்பு மற்றும் பிரிப்புகளின் மண்டலமான கீழுலகில் இவ்விணைவு சாத்தியமன்று. அது சாஸ்வத
இருத்தல் மற்றும் மாற்றமில்லா நிலைமை ஆகிய நோக்குகளில் உணரப்படும் மேலுலகில்தான் இவ்விணைவு
நிகழ்த்தப்பட முடியும். (மொ.பெ.குறிப்பு: எழுத்துக்களுக்கு
எண் மதிப்பு வழங்கப்படும் அப்ஜத் என்னும் முறையின்படி நூன் என்னும் எழுத்தின் மதிப்பு
ஐம்பது ஆகும். உலகளாவிய தொல்மரபுகளில் நூறு என்பது முழுமையைக் குறிக்கும் எண்ணாக இருக்கின்றது.)
இந்த
நீண்ட விளக்கங்களுடன் ஒரேயொரு விஷயத்தை நாம் மேலும் சொல்வோம். நாம் பார்த்து வந்த படிக்கு,
யுக நிறைவு என்பதற்கு, வரலாற்று நோக்கில், ஒரு தொடர்ச்சி இருந்தாக வேண்டும். அதாவது
அதன் தொடக்கம் மற்றும் முடிவுகளைக் குறிக்கும் மரபு வடிவங்களுக்கு இடையே ஓர் இணைவு
இருந்தாக வேண்டும். அந்த தொடக்கமும் முடிவும் தமது புனித மொழிகளாக சம்ஸ்க்ருதம் மற்றும்
அரபி ஆகியவற்றைக் கொண்டுள்ளன. ஒருபக்கம், ஹிந்து மரபு என்பது ஆதி மரபின் நேரடியான பாரம்பரியத்தைக்
குறிக்கின்றது, மற்றொரு பக்கம் “இறைத்தூதின் முத்திரை”யாக இருக்கின்ற இஸ்லாமிய மரபு
தற்கால யுகத்திற்கான தொல்மரபின் உன்னத வடிவமாக இருக்கின்றது.
(மொ.பெ.குறிப்பு: ரெனே கினானின் இந்த முடிவின் மீது
மேலதிகமான ஆய்வுகளை நாம் நிகழ்த்திச் சில மாற்றங்களை உரைக்க முடியும். ஆனால், அவர்
தந்திருக்கும் முடிவின் மிக நல்ல அம்சம் யாதெனில் ஹிந்து மரபு மற்றும் இஸ்லாமிய மரபு
ஆகியவற்றுக்கிடையிலான ஆழ்ந்த தொடர்பைத் துலக்குகிறார் என்பதே. இந்து மரபைச் சனாதன தர்மம்
என்று சொல்வதன் பொருளை இங்கே அவர் அதனை ஆதி மரபின் நேரடியான பாரம்பரியம் என்று சுட்டுவதில்
காணலாம். இஸ்லாம் மேனோக்கிச் செல்லும்போது அடையுமிடமாக அதனைக் குறிப்பிடலாம், அதன்
மொழிபுகளைச் சரியான நோக்கில் முஸ்லிம்கள் புரிந்துகொண்டால். அதே சமயம், இந்து மதம்
குறிப்பிடும் கல்கி அவதாரத்தை நோக்கிச் செல்லும்போது அடையுமிடம் இஸ்லாமாகவே இருக்கும்,
இஸ்லாத்தின் மொழிபுகளைச் சரியான நோக்கில் இந்துக்கள் புரிந்துகொண்டால். இதனை இக்கட்டுரையின்
கடைசி வரியில் ரெனெ கினான் சொல்லியிருப்பது காட்டுகிறது. சம்ஸ்க்ருதம் மற்றும் அரபி
என்று ரெனே கினான் பகுப்பதில் ஒரு சிறு மாற்றம் அவசியம் என்று நான் கருதுகிறேன். யாதெனில்,
சம்ஸ்க்ருதம் என்னுமிடத்தில் தமிழ் இருக்கவேண்டும் அல்லது சம்ஸ்க்ருதத்துடன் தமிழ்
இருக்கவேண்டும், அது சிவனின் உடுக்கையின் இருபக்கங்களின் மொழிகள் என்னும் சமன்வாத நோக்கில்.
தமிழின்றி மானுடத்தின் ஆதி நிலைகளை விளங்குதல் முழுமை பெறாது. இக்கட்டுரை நுவலும் பொருண்மைக்கு
சம்ஸ்க்ருதத்துடன் தமிழ் மேலதிகமான விளக்கங்களைக் கொடுக்க முடியும் என்பதை எனது குறிப்புக்கள்
காட்டியுள்ளன என்று நம்புகிறேன். அவற்றுடன் மேலும் சில சொல்லியாக வேண்டும்.
adam's peak, sri lanka.
உலகின் முதல் மனிதரான ஆதம் என்னும் பெயர் தமிழில்
ஆதன் என்றாகிறது. அவர் சிரந்தீவு என்னும் இலங்கையில் இறக்கப்பட்டார் என்றொரு ஹதீஸ்
தெரிவிக்கிறது. இலங்கையில் இப்போதும் சிவனடிபாதம் என்னும் ஆதம் மலை இருக்கிறது. (சிவனும்
ஆதமும் ஒன்றுதான் என்னும் ஆய்வு உண்டு. வெளிவராத அந்த ஆழமான ஆய்வு திருச்சி கே.கே நகரில்
இருபது ஆண்டுகளுக்கு முன் இருந்த, ஓய்வு பெற்ற மின்வாரியப் பொறியாளர் ஒருவரால் நிகழ்த்தப்பட்டது.
அதன் கைப்பிரதியை நான் வாசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. அது நூலாக்கம் பெற்றதா என்றறியேன்.
அவரையும் இப்போது காணவில்லை.) நூஹ் என்னும் பெயரே நாவாய் என்னும் கப்பலுக்கு ஆனது நோக்க
அவரும் தமிழரே என்னும் கருதுகோள் உள்ளது. அவர் வயிற்று வலியுடன் பிறந்தார் என்னும்
குறிப்புண்டு. எனவே வலி என்று பொருள்படுமாறு அவரின் பெற்றோர் அவருக்குப் பெயர் சூட்டினார்களாம்.
வலி என்பதைக் குறிக்க நோவு என்னும் சொல் தமிழில்தான் இருக்கிறது. (புறப்பொருள் வெண்பாமாலையில்
ஐயனாரிதனார் எழுதிய ஒரு பாடல் நுவலும் ”வையகம் போர்த்த வயங்கொலி நீர் / கையகலக் கல்தோன்றி
மண் தோன்றாக் காலத்தே” என்னும் வரிகள் நூஹ் நபி சந்தித்த பிரளயத்தைச் சுட்டும் என்று
கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்கிறார். அதன் விளக்கத்தை அவரெழுதிய “முன் தோன்றிய மூத்த
குடி” என்னும் கட்டுரையில் காணலாம். நூல்: எம்மொழி செம்மொழி; வெளியீடு: நேஷனல் பப்ளிஷர்ஸ்,
சென்னை.)
மேலும், பாண்டியர்களின் சின்னம் மீன் என்பதை
இக்கட்டுரையின் பொருண்மயுடன் இயைத்துப் பார்க்க இடமுண்டு. முத்தமிழரசருள் அவர்களே தொன்மையர்.
எனவேதான், பாண்டி என்னும் பெயர் பண்டு என்பதிலிருந்து வந்துள்ளது. தொன்மையானவர்கள்,
பழையவர்கள் என்று பொருள். அவர்களின் நிலம் ‘பஃறுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்து” என்று
சொல்லப்படும் தென்குமரிக் கண்டமாக, லெமூரியக் கண்டமாக இருந்ததும் பின்னர் அது கடல்கொள்ளப்பட்டதும்
பிரளயத்துடன் ஒப்புநோக்கற்பாலன. ‘நிலந்தரு திருவிற்பாண்டியன்’ என்னும் மன்னனின் பெயர்
நூஹ் நபியின் பணியை நினைவூட்டுவதாக உள்ளது. நிலந்தருதல் என்பது பிரளயத்திற்குப் பின்
நிலம் கண்டறிந்ததைச் சுட்டுவதாகச் சொல்லலாம் என்னும் கருத்தும் ஆய்வுலகில் உண்டு. ரெனெ
கினான் தமிழறியாமல் போனது அவர் இயங்கிய சமயத்துறைக்கு மட்டுமல்லாது அவருக்குமே தனிப்பட்ட
முறையில் இழப்பாகத்தான் இருக்கும். இந்திய மரபு என்பதை சம்ஸ்க்ருதம் என்பதாக அர்த்தப்படுத்திக்கொண்டு
தமிழை ஏறெடுத்தும் பாராதிருந்துவிடும் நிலை இன்னமும் நீடிக்கத்தான் செய்கிறது. அதனால்
நிகழும் அறிவிழப்பு சாலப் பெரிது.)
the end.
No comments:
Post a Comment