மனிதக்
காலம் தொலைத்துவிட்டது
ஞானப்பழத்தை
உலகையே
சுற்றி வந்ததில்
(நம்மை
ஐரோப்பா சுற்றியதிலும்)
தகவல்
யுகம் என்னுமிக்காலத்தில்
மிகச்
சுளுவாய் நமக்குக் கிடைக்கின்றன
ஆஸ்திரேலியாவின்
கிவிப்பழமும்
அமெரிக்கன்
திராட்சையும்
துரியனும்
அன்ன பிறவும்
இவற்றில்
எது ஞானப்பழம் என்றுரைக்க
அடியேனுக்கு ஞானம் இல்லையே?
ஏதேன்
தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும்
ச(ந்த)ர்ப்ப
வசமாய் உண்டது
ஆப்பிள்தான்
என்றும்
அதுவே
அறிவுக்கனி என்றும்
வியாக்கியானம் ஒன்றுண்டு
நவீன
வாழ்வின் சிக்கல் யாதெனில்
அதில்
எந்த வெரய்ட்டி,
பெல்ஜியம்? அமெரிக்கா? ராயல்?
கையிலொரு
கொய்யா எடுத்து
அது காயம்
பட்டிருப்பதை நோக்க
பழக்காரர்
சொல்கிறார்
‘அணிற்பிள்ளை
கடித்த பழம்
மிகவும் ருசியாய் இருக்கும்’
அவர்
சொல்லிக்கொண்டிருக்கும்போதே
நினைவில்
விரிந்த வீட்டின் கொல்லையில்
மருண்டு ஓடிற்று அணில் ஒன்று
சமதளத்தில்
ஓடியது போன்றே
நின்று
ஒருகணமும் யோசியாது
தொண்ணூறு
டிகிரி மடக்கு அங்கே இல்லாததுபோல்
செங்குத்தாகவும் ஓடிப்போனது மரத்தில்
காலத்துடன்
முப்பரிமாணங்களின்
குவி மையம் ஆன
பிள்ளைமை
ருசிக்கும் கணத்தில்
எந்தக் கனியும்
ஞானக்கனிதான்
No comments:
Post a Comment