ரெனெ
கினான்
Rene Guenon a.k.a. Abdul Wahid Yahya.
நூன் என்பது அரபி மற்றும் ஹீப்ரூ
மொழிகளில் பதினான்காவது எழுத்து ஆகும். ஒலியியல் அடிப்படையில் அதன் மதிப்பு ஐம்பது.
எனினும், 22 எழுத்துக்களைக் கொண்ட ஹீப்ரூவை விடவும் 28 எழுத்துக்கள் கொண்ட அரபி அட்சர
வரிசையில் அதன் தனித்தன்மை அழுத்தமானது, ஏனெனிலது முதல் பாதியின் முடிவைக் குறிக்கிறது.
(மொ.பெ. குறிப்பு: ரெனெ கினான் சொல்வது போல்
இருக்கவேண்டும் எனில் நூன் என்பது அரபி எழுத்து வரிசையில் 15-வது எழுத்தாக இருக்க வேண்டும்.
ஆனால் அது 25-வது எழுத்தாகவே அமைந்துள்ளது. ஆனால் அவர் குறிப்பிடும் தனித்தன்மையை நீங்கள்
ஆங்கில அட்சரங்களில் காணலாம். 26 எழுத்துக்கள் கொண்ட அதில் M என்பது 13வது எழுத்தாகவும்,
அதாவது முதற்பாதியின் முடிவாகவும், N என்பது மறுபாதியின் துவக்கமாகவும் அமைந்திருக்கிறது.
ஆங்கில மொழியை உருவாக்கியவர்கள் இக்கருத்துப் பொதிய அமைத்திருப்பார்களோ என்று எண்ணத்
தோன்றுகிறது.)
குறியீட்டியல் அடிப்படையில் இவ்வெழுத்து இஸ்லாமிய மரபில் முதன்மையாக
’அல்-ஹூத்’தை (திமிங்கலத்தை)க் குறிக்கிறது. இது நூன் என்பதன் அசல் அர்த்தத்துடன் பொருந்துகிறது.
அதிலிருந்தே இவ்வெழுத்துப் பெயர் பெற்றுள்ளது. மேலும் அது மீன் என்னும் பொருள் கொண்டுள்ளது.
அதனால்தான் சய்யிதினா யூனுஸ் (Jonah) அவர்கள் ’துன்னூன்’ என்று அழைக்கப்படுகிறார்.
(மொ.பெ. இந்த இறைத்தூதர் சில காலம் ஒரு பெருமீனின், அதாவது திமிங்கலத்தின் வயிற்றில்
இருந்தார்கள். எனவே மீனுடையவர் என்று சிறப்புப்பெயர்.)
இது பொதுவாக மீன் குறியீடுகளுடனும் குறிப்பாக மீன்-மீட்பர் என்னும்
குறியீட்டுடனும், அதாவது இந்து மரபின் மத்ஸ்யாவதாரம் மற்றும் ஆரம்பக்காலக் கிறித்துவர்களின்
இச்தஸ் உடனும் பொருந்துகிறது. மேலும் இது வேறு மரபுகளில் ஓங்கில் (dolphin) பெற்றிருக்கும்
மதிப்பிடத்துடன் ஒப்பு நோக்கும் நிலையில் உள்ளது. ஓங்கில் என்பது ஓரைகளில் மகரத்தைக்
குறித்து நின்று சுக்ல பட்சத்தின், அதாவது ஏறுவழியின் வாயிற்கதவாக இருக்கின்றது.
நூன் என்னும் எழுத்தின் வடிவத்தை நோக்கும்போது, குறிப்பாக அதனை இறைத்தூதர்
யூனுஸ் அவர்களுடன் தொடர்புறுத்திக் காணும்போது அது மத்ஸ்யாவதாரத்துடன் கொண்டுள்ள பொருத்தங்கள்
மிகவும் ஆச்சரியமூட்டுகின்றன.
இதனை நன்றாக விளங்கிக்கொள்ள சில அடிப்படைகளை நாம் நினைவுகொள்ள வேண்டும்.
விஷ்ணு ஒரு மீன் (மத்ஸ்ய) வடிவம் கொண்டு எதிர்கால மனுவாகிய சத்யவ்ரதனுக்குக் கட்டளையிடுகிறான்,
எதிர்கால உலகின் விதைகளை எல்லாம் சுமக்கின்ற ஒரு பெரிய கப்பலைக் கட்டுமாறு. பிறகு,
இரண்டு மன்வந்தரங்களைப் பிரிக்கும் பெருவெள்ள நிகழ்வுக்குப் பின் அவன் அதே வடிவில்
அந்தக் கப்பலை வழிநடத்திச் செல்கிறான். இதில், சத்யவ்ரதனின் பணி சய்யிதினா நூஹ்
(Noah) அவர்களின் பணியை ஒத்திருக்கிறது. நூஹ் நபியின் கப்பலும் பிரளயத்திற்குப் பின்
புணருத்தாரணம் செய்யப்படப்போகும் எதிர்கால உலகிற்கான அனைத்துப் பொருள்களையும் வைத்திருந்தது.
இவ்விரு மரபுகளுக்கும் இடையில் சில வேறுபாடுகள் இருக்கலாம். பைபிள்
சொல்லும் பிரளயம் இந்து மரபின் மன்வந்தரத்தைக் காட்டிலும் சிறிய காலச் சுழற்சியாக இருக்கிறது,
ஒருவேளை அவை ஒரே சம்பவமாக இல்லாத பட்சத்தில், அவை ஒன்றுக்கொன்று ஒப்புடையவையாக இருக்கின்றன.
இரண்டிலுமே, உலகின் முந்தைய நிலை அழிக்கப்பட்டு ஒரு புதிய நிலை உருவாக்கப்படுகிறது.
யூனுஸ் நபியின் நிகழ்வை நோக்கினால், அதில் திமிங்கலம் என்பது வெறுமனே
கப்பலை வழிநடத்துமொரு மீனாக அன்றி அதுவே ஒருவித கப்பலாக இருக்கிறது. கப்பலில் இருக்கும்
சத்யவ்ரதன் மற்றும் நூஹ் நபி போல யூனுஸ் நபி மீனுக்குள் இருக்கிறார்கள். அக்காலம் அவருக்குமே,
வெளியுலக ரீதியில் அல்ல எனினும் அகவுலக ரீதியில், இருத்தலின் இரண்டு நிலைகளுக்கு இடையிலான
ஒரு இருளுடைய (தெளிவற்ற) காலகட்டமே. (மொ.பெ.குறிப்பு:
யூனுஸ் நபி மீனின் வயிற்றுக்குள் இருந்த நிலையை இருள் என்று குர் ஆன் கூறுவதைக் கவனிக்கவும்
: “ஃபநாதா ஃபிழ்ழுலுமாத்” – அவர் ஆழ்ந்த இருளிலிருந்து அழைத்தார் (பிரார்த்தித்தார்)
– 21:87). இவற்றுக்கிடையிலான வேறுபாடுகள் இரண்டாம் பட்சமானவையே. ஏனெனில் ஒரே குறியீட்டுருவங்கள்
அண்ட மற்றும் பிண்ட நிலைகளில் இருவித பொருள் கொள்வது இயல்பேயாகும். மேலும் மீன் வயிற்றிலிருந்து
யூனுஸ் நபி வெளிப்படுவது ‘உயிர்த்தெழுதல்’ என்பதன் குறியீடாகவே காணப்படுகிறது. அதாவது
ஆன்மா ஒரு புதிய நிலைக்குக் கடந்து போவதைக் குறிக்கிறது. ஹீப்ரூ மரபான கப்பாலாவில்
நூன் என்னும் எழுத்துடன் பிறப்பு என்னும் பொருண்மை தொடர்புறுத்தப்படுவதை கவனிக்க வேண்டும்.
அரபி எழுத்தான நூன் என்பதன் அசல் வடிவமும் இக்கருத்தினையே மேலும் தெளிவாகக்
குறிக்கக் காண்கிறோம். அதன் வடிவம் ஒரு வட்டத்தின் கீழ்ப்பாதியான அரைவட்டமும் அதன்
மையப்புள்ளியும் ஆகும். வட்டத்தின் கீழ்ப்பாதி நீரில் மிதக்கும் கப்பலைக் குறிக்கிறது.
அதன் மையப்புள்ளி அக்கப்பலினுள் வைக்கப்பட்டுள்ள விதையைக் குறிக்கிறது. அதாவது, அப்புள்ளி
“மனித இனத்தின் விதை” என்று பொருள்படும் அல்லது பிரளயத்தில் அழிந்துபோகாமல் காப்பாற்றப்படுகின்ற
உயிரினங்களின் சாரம் என்பதாகப் பொருள்படும். (மொ.பெ.
குறிப்பு: நூன் என்னும் எழுத்து இறைத்தூதர் நூஹ் (ஆங்கிலத்தில் நோவா) அவர்களின் பெயரின்
முதல் எழுத்தாக அமைந்திருப்பதும் தற்செயலாக இருக்க முடியாது. இன்னொரு சுவாரஸ்யமான விஷயம்,
சம்ஸ்க்ருதத்தில் ஓம் என்று எழுதும்போது ம் என்னும் எழுத்து அரபி அட்சரமான நூன் என்னும்
எழுத்தின் வடிவத்திலேயே எழுதப்படுகிறது. ம் மற்றும் ன் ஆகிய எழுத்துக்கள் ஒன்றினுக்கு
ஒன்று பகரமாய் அமையக்கூடியவை. அரபியில் மீம் மற்றும் நூன் ஆகிய அவ்வெழுத்துக்கள் அடுத்தடுத்து
நிற்பவை, அதாவது 24 மற்றும் 25-வது எழுத்துக்களாக. ஆங்கிலத்திலும் அவை MN என்று தொடர்ந்து
நிற்பதை முன்பே சொன்னோம். மேலும், எழுத்துக்களுக்கு உரிய சாரியைகளைக் கவனிக்க, குறிலுக்கு
கரம் மற்றும் நெடிலுக்கு காரம் ஆகிய சாரியைகள், ம் என்னும் எழுத்தைப் பேச்சில் ’மகரம்’
என்று சொல்வோம். சம்ஸ்க்ருதத்தில் மகரம் என்பது நீர்வாழ் விலங்கான முதலையைக் குறிக்கிறது
என்பதும் அரபியில் நூன் என்றால் மீன் என்பதும் எண்ணத்தகும்.)
இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில், நூன் என்னும் எழுத்தின்
கீழ்ப்பாதி வட்ட வடிவமானது கோப்பை என்பதையும் குறித்து நிற்பதாம். அவ்வகையில் அது,
விதை இன்னமும் முழுமையாய் வளர்ச்சியடையாத நிலையிலிருக்கும் கருவைத் தாங்கிய பாத்திரம்
என்பதைக் குறிக்கும். அதன் நீட்சியாக, ககன முட்டை அல்லது உலக முட்டை என்பதன் கீழ்ப்பாதியான
நிலவுலகைக் குறிக்கும். (ஆங்கிலத்தில்
MATRIX –தாய்த்தொகுதி அல்லது கரு- என்பதை சம்ஸ்க்ருதத்தில் யோனி என்பர். இக்கருத்து
கிரேக்கச் சொல்லான டெல்ஃபஸ் என்பதிலும் உள்ளது. அதே சமயம் டெல்ஃபஸ் என்பது டால்ஃபின்
என்னும் மீனையும் குறித்து நிற்கிறது.)
(மொ.பெ.குறிப்பு: ரெனே கினான் தரும் இக்குறிப்புக்கள் மேலும் ஆச்சரியத்துடன்
நிட்சி கொள்கின்றன. ’கருவைத் தாங்கிய பாத்திரம்’ என்று அவர் சொல்வதைக் கருப்பை / கர்ப்பப்பை
என்று ஒற்றைச் சொல்லில் கூறிவிடலாம். பிரளயத்தின் பின்னான உயிரினங்களின் மறு உருவாக்கம்
என்னும் பின்னணியிலேயே இக்கட்டுரை விரிவதைக் கவனிக்க, ஓம் என்னும் பிரணவ மந்திரம்
‘பீஜ மந்திரம்’ (விதை மந்திரம்) என்று சொல்லப்படுவதும், அதுவே அனைத்துப் படைப்புக்களின்
ஆதியொருமை (தாய்த்தொகுதி, உறுப்புக்கள் இன்னமும் பிரிக்கப்படாத முழுமையான கரு) என்னும்
நிலையைச் சுட்டுவதையும் காணலாம். ஆங்கிலத்தில் கருப்பையை ஓம்ப் (WOMB) என்று சொல்வதன்
ஓசைப் பொருத்தமும் இங்கே நினையத்தகும். போஷித்தல் (அரபியில் தர்பிய்யத் என்பர். அதனைச்
செய்பவனே ரப் – ரட்சகன் என்று அழைக்கப்படுகிறான்.) என்பதைக் குறிக்கும் தமிழ்ச்சொல்லான
’ஓம்புதல்’ என்பதன் ஓசைப்பொருத்தமும் நினையத்தகும். ஏனெனில் போஷிப்பில் முதல் நிலை
கருவைப் போஷித்தல்தான். இச்சொல்லின் திரிபாகவே கருவுண்டாகும் கலவிச்செயலைக் குறிக்குமான
தமிழ்ச்சொல்லும் உருவாகி இன்னாச்சொல்லாக வழங்கிவருதலாயிற்று எனலாம். ’ஆகு’ என்பதற்கான
அரபிச்சொல் ’குன்’ என்பதாகும். அதன் ஈற்றெழுத்தான் நூன் என்பது ‘விதை தாங்கிய கருப்பை’
என்பதைக் குறிக்கும் என்று காண, முதலெழுத்தான காஃப் என்பது கருவில் விதையை வைக்கும்
ஆண்பாலைக் குறிப்பதாக அர்த்தம் பெறுகிறது. குன் என்பது ஆண்-பெண் இணைவையும் கருவறைக்குள்
விதை வைக்கப்படுவதையும் குறிப்பதாகிறது. ஜோடிகளை வைத்து அபிவிருத்தி செய்வதுதானே இறைவன்
வகுத்தமைத்த நியதி? மேலும், Word Egg (உலக முட்டை) என்று ரெனெ கினான் குறிப்பிடுவது
தமிழில் இன்னும் கூர்மையாக அண்டம் என்னும் ஒற்றைச் சொல்லில் அமைந்துவிடுகிறது. அண்டம்
என்பது உலகம் என்றும் பொருட்படும், முட்டை
என்றும் பொருட்படும். மேலும், டெல்ஃபஸ் என்பது யோனி அல்லது கருவைக் குறிப்பதோடு டால்ஃபின்
என்னும் மீனையும் குறிக்கும் என்று ரெனெ கினான் சொல்கிறார். ஓம் என்னும் பிரணவம் பிரபஞ்சக்
கருவைக் குறிக்கிறது என்பதுடன் இதனை இயைந்து காண, ஓம் என்பதை ஓங்காரம் என்று தமிழில்
சொல்வதுடன் டால்ஃபின் என்பதற்குத் தமிழ்ப்பெயர் ’ஓங்கில்’ என்றிருப்பதன் ஒலிப்பொருத்தமும்
நினைத்தற்பாலது.)
இக்கோணத்தில், ஆன்மிக மாற்றத்தின் இசைவம்சமாக அல்-ஹூத் (திமிங்கல மீன்.
மொ.பெ.குறிப்பு: தமிழில் இம்மீனுக்குரிய இப்பெயரிலேயே
கப்பலைக் குறிக்கும் கலம் என்னும் சொல்லும் உள்ளடங்கியிருப்பது மேலும் வியப்பளிக்கிறது.)
தன்னுள் அமரத்தன்மையின் விதையைச் சுமந்திருக்கும் ஒவ்வொரு மனிதனையும் குறிப்பதாக அமைகிறது.
இதயம் என்னும் குறியீடு கொண்டு இது சுட்டப்படுகிறது. இதயம், கோப்பை மற்றும் உலகமுட்டை
ஆகியவற்றுக்கிடையில் உள்ள குறியீட்டுத் தொடர்புகளை இங்கே நாம் நினைவுகூர்வோம். மனிதனின்
ஆன்மா அவனது தனிநபர் நிலையிலிருந்தும் அதனைச் சூழ்ந்திருக்கும் பிரபஞ்ச நிலையிலிருந்தும்
வெளிப்படுகிறது, யூனுஸ் நபியின் ’மறுவாழ்வு’ அவர்கள் திமிங்கலத்தின் வயிற்றிலிருந்து
வெளிவந்ததாக இருந்தது போல. இது கருவறையிலிருந்து குழவி வெளிப்படுவதன் நிகராகும் எனலாம்.
மீனின் வயிறு மற்றும் கருவறையின் உட்குடைவு ஆகியவற்றை நூன் என்னும் எழுத்தின் கீழ்ப்பாதி
வட்ட வடிவம் குறிக்கின்றது.
புதிய பிறப்பு என்பது பழைய நிலையின் மரணம் ஆகும், தனிமனித நிலையிலும்
சரி உலக நிலையிலும் சரி. இறப்பும், பிறப்பு அல்லது மறுவுயிர்ப்பும் ஒன்றை விட்டு ஒன்று
பிரிந்தவை அல்ல. அவை ஒரே நிலை மாற்றத்தின் இரண்டு எதிர்முகங்கள். அரபி அட்சரங்களில்
நூன் என்னும் எழுத்து மீம் என்னும் எழுத்தைத் தொடர்கிறது. மீம் என்னும் எழுத்தின் பிரதான
பொருள்களில் ஒன்று ”மவ்த்” (மரணம்) என்பதாகும். அரபியில் மீம் என்னும் இவ்வெழுத்தின்
வடிவம் மனிதனின் தோற்ற நிலையைக் குறிக்கிறது. அதாவது முற்றிலும் ஆட்பட்ட / அடிபணிந்த ‘சஜ்தா’ என்னும் தலைவணங்கிய நிலையைக்
குறிக்கிறது. வெளித்தோற்றத்தில் இது தான் இல்லாமல் ஆகின்ற அழிவைக் குறிக்கிறது என்றாலும்,
தனது சாத்தியங்கள் அனைத்தையும் ஒரு புள்ளியில் (மொ.பெ.குறிப்பு: சஜ்தா செய்யுமிடத்தையே தொழுகையின் நிலைகளில் நோக்கியிருக்க
வேண்டும் எனும்படிக்கு), தனித்த, அழிவற்ற புள்ளியில், குவிப்பதைக் குறிக்கின்றது.
அப்புள்ளியானது அனைத்து மேனிலைகளும் வளர்வதற்கான விதையாகிறது.
இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும், திமிங்கலம் என்னும் குறியீட்டில்
ஆக்க அம்சம் அன்றி ஓர் அழிவு அம்சமும் இருக்கிறது. குறியீடுகளின் தெளிவற்ற, இருபொருட்படுகின்ற
தன்மையை வைத்து மாத்திரம் அல்ல, திமிங்கலம் என்னும் குறியீடு இறப்பு மற்றும் மறுவுயிர்ப்பு
ஆகியவற்றுடன் கொண்டுள்ள தொடர்பால் அது நியாயப்படுத்தப்படுகிறது. ஒரு நிலையில் மாற்றம்
என்பது இறப்பு மற்றும் பிறப்பால் நிகழ்கிறது. குகை (cavern) (மொ.பெ.குறிப்பு: கருவறை அல்லது மீனின் வயிறு என்பதை இச்சொல்லால் குறிக்கிறார்)
என்பது புதைக்கப்படும் இடமாகவும் இருக்கிறது, அதேசமயம் ’மறுபிறப்பு’க்கான இடமாகவும்
இருக்கிறது. யூனுஸ் நபியின் கதையில் திமிங்கலம் இவ்விரட்டைப் பணியைச் செவ்வனே ஆற்றுகிறது.
மேலும், மத்ஸ்ய அவதாரமும் தானொரு மீட்பர் என்னும் பணியை ஏற்கும் முன் பேரழிவான பிரளயத்தை
அறிவிக்கும் தீயவுருவில் தோன்றவில்லையா?
leviathan.
தனது
அழிவாம்சத்தில், திமிங்கலம் என்பது ஹீப்ரூ மரபின் லிவியாதன் (Leviathan) என்பதைக் குறிக்கின்றது.
(கடல் மிருகமான இது ஹிந்து மரபின் மகரம் ஆகும்.
ஓரையின் மகர விண்மீனுடன் தொடர்புள்ள ஆக்க அம்சங்களுடன் கிரேக்க புராணவியலின் முதலையான
டைஃபோன் என்பதன் அழிவாம்சங்களையும் ஒருசேரப் பெற்றுள்ளது.) (மொ.பெ.குறிப்பு:
லெவியத்தன் என்பது புறச்சமய பௌராணிகத் தொகுதியிலிருந்து பைபிளுக்குள் வரித்தெடுக்கப்பட்ட
அசுர விலங்கு. அது திமிங்கலமாகவும் முதலையாகவும் காட்டப்படுகிறது. ஆனால் ஹீப்ரூ மொழியில்
லிவியாதன் என்பதற்கு முறுக்கிய அல்லது திருகிய என்று பொருள். அவ்வகையில் அது பாம்பினைக்
குறிப்பதாகக் காணலாம். ”நாளை சபிக்கிறவர்களும், லிவியாதானை எழும்பப்பண்ணத் தக்கவர்களும்,
அதைச் சபிப்பார்களாக” (பழைய ஏற்பாடு: யோபு:3:8) என்னும் பைபிள் வசனத்தின் மறுவாசிப்புப்
பிரதியில் லிவியாதன் என்பது இருளுக்கு எதிரான ராட்சத சர்ப்பம் என்பதாக கீழைத்தேய பௌராணிகத்தின்படி
பொருள்கொள்ளப்படுகிறது. அதாவது, கிரகண நிகழ்வைக் குறியீடாகச் சொல்லும், ஒளியை அறிவை
விழுங்கும் அறியாமையைச் சொல்லும், கேதுவை விழுங்கும் ராகு என்னும் பெரும்பாம்பு. ”லிவியாதானைத்
தூண்டிலினால் பிடிக்கக்கூடுமோ? அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கக்கூடுமோ?
அதின் மூக்கை நார்க்கயிறு போட்டுக் கட்டக்கூடுமோ? குறட்டினால அதின் தாடையை உருவக் குத்தக்கூடுமோ?”
(பழைய ஏற்பாடு: யோபு: 41:1,2) என்பதில் அது முதலையாகக் காட்டப்படுகிறது. ”அதிலே கப்பல்கள்
ஓடும்; அதிலே விளையாடும்படி நீர் உருவாக்கின திமிங்கலங்களும் உண்டு” (”There the
ships go to and fro, and the Leviathan, which you formed to frolic there” பழைய ஏற்பாடு:
சங்கீதம்: 104:26) என்பதில் லிவியாதன் என்பது திமிங்கலமாகக் காட்டப்படுகிறது. அல்லது
அது, தன் உடலை முறுக்கியபடி இயங்கும் எவ்வொரு பெரிய விலங்கினையும், ஆழ்கடல் மிருகத்தையும்
குறிக்கலாம் என்பர். ”தேவரீர் முதலைகளின் தலைகளை நறுக்கிப் போட்டு, அதனை வனாந்தரத்தின்
ஜனங்களுக்கு உணவாகக் கொடுத்தீர்” (பழைய ஏற்பாடு: சங்கீதம்: 74:14) என்பதில் எகிப்தின்
செங்கடற்கரையில் வீழ்த்தப்பட்ட எதிரியாக அது காட்டப்படுகிறது. ”அக்காலத்திலே கர்த்தர்
லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, கடிதும்
பெரிதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் தண்டிப்பார்; சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக்
கொன்றுபோடுவார்” (பழைய ஏற்பாடு: ஏசாயா: 27:1) என்பதில் அது பெரும்பாம்பாகக் காட்டப்படுகிறது.
இரு பாம்புகளாக இங்கே சொல்லப்பட்டவை அச்சிரிய மற்றும் பாபிலோனியப் பேரரசுகளைக் குறிப்பதாகவும்
வியாக்கியானமுள்ளது.)
அரபியரின்
மரபில் இவ்வம்சம் முதன்மையாக ‘பனாத்தல் ஹூத்’ (திமிங்கலத்தின் மகள்கள்) என்பதால் குறிக்கப்படுகிறது.
இது வானியல் நோக்கில் இந்து மரபின் ராகு மற்றும் கேதுவைக் குறிப்பதாகக் காணலாம், குறிப்பாக
அவை கிரகணத்துடன் கொண்டுள்ள தொடர்பால். அது, யுகமுடிவு நாளில் பெருங்கடலைக் குடித்து
முடிக்கும். அந்நாளில் விண்மீன்கள் “மேற்கில் உதயமாகிக் கிழக்கில் சாயும்”. (மொ.பெ. குறிப்பு: உலக முடிவு நாளின் அடையாளங்களாக
நபிகள் நாயகம் சொன்னவற்றுள் ‘சூரியன் மேற்கில் உதிக்கும்’ என்று சொன்னதை இங்கே நினைவு
கூர்க.) இப்பொருண்மையை மேலும் நீட்டித்தால் நாம் எடுத்துக்கொண்ட அடிக்கருத்தை விட்டும்
விலகிச் செல்ல நேரும். எனவே, போகிற போக்கில் ஒரு குறிப்பாக நாம் சொல்வதெல்லாம், இதிலும்
நாம் யுக முடிவு மற்றும் அதனைத் தொடரும் நிலைமாற்றம் ஆகிவற்றிற்கான நேரடிக் குறிப்பைக்
காண்கிறோம். இதுவே தன்னளவிலொரு முக்கியக் குறிப்பாகவும் நாம் இதுகாறும் சொல்லிவந்தவற்றை
வலுப்படுத்துவதாகவும் அமைகிறது.
No comments:
Post a Comment