அப்படியே
மலர்தல்
மிகச்
சிறியதுதான்
இந்தச்
செடி
எனினும்...
மிகச்
சிறியவைதான்
இதன்
கிளைகள்
எனினும்...
மிகச்
சிறியவைதான்
இதன்
கொப்புகள்
எனினும்...
மிகச்
சிறியவைதான்
இதன்
பூக்கள்
எனினும்...
எத்துனை
அழகாய்
மலர்ந்துள்ளது
முழுமை
கவியெழுதுதல்
பிஞ்சிலேயே
பறித்துவிடாதே
மிக முற்றவும் விடல் வேண்டாம்
திரட்சியின்
சரியான பக்குவத்தில்
விளைச்சலை அறுவடை செய்
பெருமரக்
கனிகள் எனில்
தானாக உதிர விடு
சிதைந்ததெனினும்
ரசனையுள்ளோர்
அறிவார்
அவற்றின் அருஞ்சுவை
நின்
தோட்டத்தில் ஒருபோதும்
ரசாயனம் தெளிக்காதே
நின்
காய்கறிகளில்
புழுக்கள்
நெளிந்தபோதும்
பூச்சிகள்
துளைத்தபோதும்
சமையற்காரர்
அறிவார்
அவற்றின்
பெருஞ்சுவை
கூவி
விற்கலாகாது கண்டீர்
பிரபஞ்ச
விவசாயி தரும்
அருட்கொடைகள்தாம்
எம் இல்லத்து
அடுமனைக்கு
நாளும்
வந்து சேரும் இந்தக்
காய்களும் கனிகளும் எல்லாம்
விலையேற்றம்
பற்றி
அன்றாடம்
உரையாடல்கள்
எங்கும் போல் இங்கும்
என் சிந்தை
மொழியும்
இவர்
சந்தை மொழியும்
கிழக்கு மேற்கு
எனினும்,
சந்தர்ப்பப்
பிசகாய்
‘அநியாய
விலை சார்’ என்று
சொல்லிவைக்கிறேன்
அவ்வப்போது,
பால்பல்
விழாத பிள்ளை ஒன்று
புரியாத
கணிதச் சூத்திரமொன்றை
ஒப்பிக்கும் பாவனையில்
எல்லோரிடமும்
சொல்லத் தகுந்ததன்று
முழுமைகூட
தகுந்த விலையல்ல
எப்பகுதிக்கும்
என்பதான
பகுதிகளால்
ஆனதிந்த
முழுமை
என்னும் நற்செய்தி
தேங்கா
தக்காளி பீன்ஸு...
கீரை
வாழப்பூ உருளக்கிளங்கு...
வண்டியைத்
தள்ளியபடி
ஒவ்வொன்றின்
பெயராக
உரக்கச் சொல்லிச் செல்கிறார்
அந்த
அன்பரும்
ஒருவகையில்
அறிவார்தான் போலும்
விலை
கூவி விற்கலாகாது இவற்றை
என்னும் அறம்
ஒரு பூ
எனினும்
ஒரு காய்
எனினும்
ஒரு பழம்
எனினும்
பகரமேதும்
இல்லை
ஒருபோதும்
No comments:
Post a Comment