அவகாசம்
எஃகாலானதன்று
இத்தேகம்
மூங்கிற்பாலம்
எனினும்,
அந்தியிருளுதற்குச்
சற்று முன்வரை
அவகாசமுண்டு
கீழோடும்
நீரோடை தனில் லயிக்க
ஓடைக்குள்
நீந்துகின்ற மீன்கள் ரஸிக்க
தோற்றம்
5:30 – மறைவு 5:35
நூற்பிடித்த
நேர்த்தியான கோடுகளின்
வரைவுகள்
கொண்டொரு கச்சிதமான
கனச்சதுரமாய்
மனிதன்
கட்டிய அந்தப் பெரிய வீட்டின்
மேல்
முனை விளிம்பில் வந்தமர்ந்தது
அங்கை அளவே ஆன கரிய குருவி ஒன்று
வெண்ணிறச்
சாயமடித்த அக்கட்டடத்தில்
அதன்
உருத்தோற்றம்
ஏதுமே
எழுதப்படாத தாளில்
எழுதுதற்கு
ஒன்றுமே இலாது வைக்கப்பட்ட
முற்றுப்புள்ளி போல் இருந்தது
மேலும்
கீழுமாய்த் தனது வாலாட்டிக்கொண்டு
இரண்டு மூன்று முறை கூவிற்று
கிளைகளும்
கொப்புகளும்
இலைகளும்
மொக்குகளும்
இல்லாத
அக்கட்டடம் விட்டு
எவ்விப்
பாய்ந்து போயொரு
மரச்செறிவினுள்
மறைந்தது
ஓர் உதிர்
மலர் போல்
அந்தி
நெருங்கும் வேளையில்
எப்படித்தான்
என் வீட்டைத்
தன் இலக்காக்கி
வந்து
சேர்ந்ததோ
தன் வாழ்வின்
இறுதிக் கணங்களில்
அந்த வண்ணத்துப் பூச்சி
காற்றின்
போக்கில்தான்
வந்து விழுந்திருக்க வேண்டும்
இச்சைகள்
சலித்த ஒருவன்
முதுமையில்
துறவு கொண்டது போல்
பூக்களேதுமற்ற
புற்களும்
கற்களுமேயான
எனது
ஜென் தோட்டத்தில்
ஓர் உதிர்
மலர் போல்
வீழ்ந்துவிட்டது அது
அடிபட்டிருக்கிறதோ?
என்றாள் அவள்
அதன்
சிறகுகள் பிய்ந்திருக்கவில்லை
விரிந்தும்
குவிந்தும்
மீண்டும்
மீண்டும்
மெதுவாக அசைந்திருந்தன
மரணத்தைச்
சுவைக்கும் அத்தருணத்திலும்
தேனுண்ட
நினைவுகளில்
லயித்திருந்தது போலும்
அதன்
உயிர் அல்லது ஆன்மா
வெளியேறியதை
யாமொருவரும்
கண்டிருக்கவில்லை
அப்படியே
கிடந்த அது
அப்படியே கிடந்தது
லாசருஸை
உயிர்த்தெழச் செய்த
ஏசுநாதரைப்
போலவோ
காற்றுக்
கிழித்த பறவையை
மீண்டும்
உயிர்ப்பித்த
முகைதீன்
ஜீலானீயைப் போலவோ
ஆற்றல் பெற்றவன் அல்லன் நான்
என்னால்
முடிந்ததெல்லாம்
செத்துக்கொண்டிருந்த
அதனுடன்
சேர்ந்து
கொஞ்சம்
நானும்
செத்தது மட்டுமே.
No comments:
Post a Comment