ஹெச்.ஜி.ரசூல்
அவர்கள் இறப்பெய்தினார் என்னும் செய்தியை இன்றைய ’இந்து’ நாளிதழில் களந்தை.பீர்
முஹம்மது எழுதியிருக்கும் நினைவுரையிலிருந்தே அறிந்தேன். அவர் இவ்வுலகை விட்டகன்று
மூன்று நாட்கள் ஆகிவிட்டது. அன்னாரின் ஆத்மா அமைதி காண அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறேன்.
ஹெச்.ஜி.ரசூல் அவர்களை நான் அறிந்தது
ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன். முஸ்லிம் சமூகத்தில் அவருக்குப் பெருஞ்சிக்கலை
உருவாக்கிய அவரின் ‘மைலாஞ்சி’ என்னும் கவிதைத் தொகுப்பின் மீதான எதிர்வினைகள் நடந்துகொண்டிருந்த காலகட்டம்
அது. ‘சிந்தனைச் சரம்’ மாத இதழில் அது வாதப் பிரதிவாதமாகத் தொடர்ந்து வந்தது. நவீனக் கவிதையின்
இயங்குமுறையை அறியாத, பொதுவாகவே கவிதையின் மீதொரு ஒவ்வாமை மனநிலை கற்பிக்கப்பட்ட
(குறிப்பாக வஹ்ஹாபிகளின் குரல் ஓங்கிய பின்) சமூகத்திடம் கண்மூடித்தனமான
எதிர்ப்பையே அவர் பெற முடிந்தது. அவரின் குடும்பத்தை ஜமாஅத் ஊரொதுக்கம் செய்த
விளைவு வரை அது அவரைத் தாக்கிற்று.
கவிதையை
உள்வாங்கும் தன்மை முஸ்லிம் சமூகத்திடம் இல்லை என்று எழுதும் அதே நேரம்
ஹெச்.ஜி.ரசூல் அவர்களின் மீதான என்னுடைய பார்வை அவரை முழுமையாக உடன்படுவதல்ல என்பதையும்
சொல்லியாக வேண்டும். ஹெச்.ஜி.ரசூல் எனக்கு யார்? அவரை நான் என்னவாகக் காண்கிறேன்?
என்னும் கேள்விகளை எழுப்பிக்கொண்டு முற்செல்ல விரும்புகிறேன்.
பத்து நாட்களுக்கு முன்புதான் அவரின் “மைலாஞ்சி”
தொகுப்பின் மறுபதிப்பினைப் புரட்டிக்கொண்டிருந்தேன். (ஒரு
முஸ்லிம் பெண்மணி கையேந்தி இறைஞ்சும் புகைப்படம் அட்டையில் உள்ள பதிப்பு). அவரது
கவிதைகளை முன்வைத்து ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று தோன்றியதால் அந்நூலை
எடுத்திருந்தேன். கைப்போக்காகப் புரட்டிய பக்கங்களில் தென்பட்ட கவிதைகளில் எதுவுமே
எனது எண்ணத்திற்கு வலுச்சேர்த்து ஊக்கவில்லை. எனவே மீண்டும் அலமாறியிலேயே
வைத்துவிட்டேன். வேறு நூலுக்கு நகர்ந்துவிட்டேன். மிகவும் சர்ச்சையான கவிதை வரி
என்று சொல்லப்படுகின்ற (5.8.2018 தி இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தி
இவ்வரியையே மேற்கோள் காட்டியிருக்கிறது என்பதொரு சான்று) “ஏன் இல்லை வாப்பா ஒரு
பெண் நபி?” என்னும் வரியும்கூட
என்னைத் தூண்டவில்லை. சிறுமியொருத்தி தனது தந்தையிடம் இக்கேள்வியைக் கேட்பதாக
அக்கவிதை அமைந்திருக்கிறது. சிறு பிராயத்தில் அவ்வாறான கேள்விகள் எழுந்து வருதல்
இயல்பு. காலப்போக்கில் கேள்விகள் தேய்ந்து மறைந்து போகின்றன. அவற்றுக்காண விடைகளை
இங்கே அறிபவர்கள் மிகச் சொற்பம். லட்சத்தில் ஒருவர் எனில் மிகையன்று.
ஹெச்.ஜி.ரசூலிடம் எனக்குள்ள போதாமை யாதெனில் அவர் கேள்வி கேட்டவர் மாத்திரமே,
விடைகளை அறிந்தவர் அல்லர் என்பதுதான். அல்லது, விடைகளை நோக்கிய சரியான திசையில்
நகராதவர், இன்னும் சொல்வதெனில் தவறான அணுகுதிசையில் நகர்ந்தவர் என்றே
அனுமானிக்கின்றேன். அவருடைய அனைத்துக் கவிதைகளிலும் இந்தப் போதாமையை நான்
காண்கிறேன். எனவே அவரின் கவிதைகள் எவ்வித அகத்திறப்பினையும் எனக்குத் தரவில்லை.
சூஃபி மகாகவி மௌலானா ஜலாலுத்தீன் ரூமி அவர்களின் ஆன்மிகப் பெருங்காவியமான
‘மஸ்னவி’யின் தமிழாக்க
வெளியீட்டு விழாவில் அவர் கலந்துகொண்டது பற்றியும் அதுவே அவருடனான தனது கடைசிச்
சந்திப்பு என்றும் களந்தை பீர் முஹம்மது எழுதியிருக்கிறார் (’இந்து’, 8.8.2017). ஒருவேளை ஹெச்.ஜி.ரசூல்
கலந்துகொண்ட இறுதிப் பொது நிகழ்வு அதுதானாக இருக்கலாம். மஸ்னவி தமிழாக்கம்
என்பதும் எந்நூல் என்று விவரம் இன்னும் தெரியவில்லை. சென்னை ஃபஹீமிய்யா டிரஸ்ட்
வெளியிட்டு வருகின்ற (மூன்று பாகங்கள் வந்துள்ளன. நான்காம் பாக வேலை முடிந்து
வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது என்று ரம்ஜானுக்கு முன்பு நண்பர். அபுதாஹிர்
ஃபஹீமி சொன்னார்.) ’மஸ்னவி ஷரீஃப்’ என்னும் தமிழாக்கம்தான்
உருப்படியான முழுமையான் பதிப்பு. நரியம்பட்டு எம்.ஏ.சலாம் அவர்கள் ஆறுபாகங்களையும்
ஃபார்சி மூலம் மற்றும் உருது மொழிபெயர்ப்புடன் சேர்த்து விளக்கக் குறிப்புக்களுடன்
தமிழாக்கம் செய்துள்ள பெரும்பணி அரும்பணி அது. அந்நூலின் நான்காம் பாகத்திற்கான
வெளியீட்டு விழாதான் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் தேர்ந்தெடுத்த, ஆங்கில வழியிலான
தோராய மொழிபெயர்ப்பு நூலொன்றின் வெளியீட்டு விழாவா? என்பதறியேன். அதற்கும்
வாய்ப்புண்டு, ‘பாரசீக்க் கவிஞானி ஜலாலுத்தீன் ரூமி கவிதைகள் கதைகள்’
என்று நாகூர் ரூமி வெளியிட்டதைப் போல, ‘ரகசிய ரோஜா’
‘ரூமியின் வைரங்கள்’
என்று அடியேன் வெளியிட்டதைப் போல. முன்னது எனில், அது ஒரு
முரண் (ஐரனி). பின்னது எனில் அதுவுமோர் அணுகு பிழை.
ஹெச்.ஜி.ரசூலின் இறப்புச் செய்தி என்னுள் விண்மீன்களைப் போல் ஒளிரச்
செய்துவிட்ட பல சிந்தனைப் புள்ளிகளை ஒன்றுடனொன்று இணைத்து ஒரு கோலமிடல் போல்
இக்கட்டுரையை நான் ‘பேசி’ச் செல்கிறேன். எனவே, இது நேரற்றதாக இருக்கலாம். தொடர்ந்து வாசிக்கவும்.
முழுக்கோலம் நேர்த்தி காணும் என்று நம்புகிறேன்.
‘அணுகு பிழை’ என்னும் சொல்லினை
மீண்டும் அழுத்தம் தந்து உச்சரிக்க விரும்புகிறேன். ஹெச்.ஜி.ரசூல் இஸ்லாம்
சார்ந்து கேட்ட, அவரது மனத்துள் எழுந்த ‘ஆழமான’
என்று விமர்சிக்கப்படுகின்ற அல்லது அவரே அப்படிக்
கருதியிருக்கக்கூடிய கேள்விகளில் பல பிற எழுத்தாளர்களும் கேட்டவைதான் என்பதை நான்
நினைவு கூராதிருக்கவியலாது. கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய, ’ஆலாபனை’ என்னும் நூலில் உள்ள
‘ராங் நம்பர்’ என்னும் கவிதையை இங்கே
சொல்ல வேண்டும். ‘எங்கள் செயல்களில் குற்றம் பிடிப்பவனே, எந்தச் சபிக்கப்பட்ட
மண்ணால் எங்களைப் படைத்தாய்?’ என்னும் கேள்வியும், ‘ஏதேன் தோட்டத்தில் விலக்கப்பட்ட கனியை ஏன் வைத்தாய்?’
என்னும் முறையீடும் காத்திரம் குறைந்தவையா? ஹெச்.ஜி.ரசூலின்
கவிதைகள் செய்யும் சமய விசாரத்தின் தன்மையை நாகூர் ரூமியின் சில கவிதைகளிலும்
காணவியலும். கவிக்கோவின் அக்கவிதை ’ராங் நம்பர் என்று தொடர்பு துண்டிக்கப்பட்டது’
என்பதாக முடியும். ஆம், தவறான அணுகுமுறைக்குக் கிடைக்கும்
முடிவு அதுவாகத்தான் இருக்கும் என்பதையே அப்துல் ரகுமான் அக்கவிதையில்
சுட்டிக்காட்டுவதாகப் புரிந்துகொள்கிறேன். ‘சரியான’ அணுகுமுறை எது என்று கண்டறிந்து அவ்வழிச் செல்லார்க்கு ஞானத்தின் கதவுகள் திறவா
என்பது உண்மை. ஹெச்.ஜி.ரசூலும், களந்தை பீர் முஹம்மதும் அவரன்ன பிறரும்
சிக்கிக்கொண்டிருப்பது இவ்விடத்தில்தான் என்று நான் காண்கிறேன்.
photo by rifat iqbal.
சிந்தனைச் சரம் இதழில் ஏறத்தாழ இருபதாண்டு காலத்துக்கு முன் அவரெழுதிய ஓர்
கட்டுரையில் அல்லாமா இக்பாலின் கவிதையை (’ராஜாளியுடன் போரிடும் வல்லமையை ஒரு சிட்டுக்குருவிக்கு வழங்கு’) மேற்கோள் காட்டி எழுதியிருந்ததை இப்போது நினைவு கூர்கிறேன். அல்லாம இக்பால்
சொல்லும் ’ஷாஹீன்’
என்னும் ஆன்மிக ராஜாளியாக ஹெச்.ஜி.ரசூல் தன்னை
உருவாக்கிக்கொள்ளவில்லை என்பது திண்ணம். அவர் சிட்டுக்குருவியாகவே தன்னை
அடையாளப்படுத்திக்கொண்டு அப்படி எழுதினார் எனில் ’வல்லமை தாராயோ?’ எனும் வேட்டல் நிறைவேறியதாகவும் தெரியவில்லை. அந்நாளில் அக்கட்டுரையை வாசித்தபோதே
எனக்கு மிகவும் விசித்திரமாக இருந்தது. அல்லாமா இக்பாலைப் பற்றியெல்லாம் இவர்
எதற்கு எழுதுகிறார் என்று நினைத்தேன். அல்லாமா இக்பாலின் கவிதைகளில் உள்ள சூஃபிய்யத்
(சூஃபித் தன்மை) இவரிடம் கிஞ்சிற்றும் இல்லையே என்பதால். இப்போது, அல்லாமா
இக்பாலின் ஆன்மிக குருவான (ரூஹானிய்யத் என்னும் ஆத்மத் தொடர்பு வழி குருவான)
மவ்லானா ரூமி தொடர்பானதொரு விழாவில் வந்து அவரின் வாழ்க்கை முடிந்திருக்கிறது.
ஆனால், ‘ரூமியின் மதுவிடுதியை நாம் மீண்டும் திறக்க வேண்டும்’
என்று மகாகவி இக்பால் எந்த சூஃபித்துவம் பற்றிப் பாடினாரோ
அந்த சூஃபி ஞானப் பாட்டையில் எதுவொன்றிலும் அனுபவத் தேடலை நிகழ்த்தாத, ’சிந்தனை வெளி சஞ்சாரம்’ எனப் பிதற்றித் தன்னையே ஏமாற்றிக்கொண்ட ஒருவராகவே ஹெச்.ஜி.ரசூலைப் பார்க்க
முடிகிறது. ஆம், பயிற்சிகளை மறுதலித்த ஒருவரால் அப்பயிற்சிகளுக்குரிய விளைவுகளை
எப்படி அடைய முடியும்? ’சிந்தனையாளர்கள்’ என்று சொல்லப்படும் பலரிடம் இப்பெருங்குறை பெரும்பிழை இருப்பதை நான்
பார்க்கிறேன்.
‘மொழிப்பழக்கம் நம்மை ஏமாற்றுகிறது’ என்று மகாகவி இக்பால் பாடிய வரியொன்று ஞாபகம் வருகிறது. ‘இவர் என்னங்க
எழுதுறார்? அது தமிழ்தானா? என்னமோ பெரிசாச் சொல்றாப்ல வளைச்சு வளைச்சு
எழுதிக்கிட்டே போறார். ஒன்னுமே புரியமாட்டேங்குது. நீங்க தமிழ் ப்ரொஃபஸ்ஸர்.
ஒங்களுக்குத்தான் இந்த நவீன வார்த்தையெல்லாம் புரியும்போல’
என்று எனது நண்பரும் வரலாற்றுப் பேராசிரியருமான ஒருவர்
ஹெச்.ஜி.ரசூலின் மொழிநடை பற்றி ஒருமுறை சொன்னார். அறிவுஜீவித்தனமான மொழிநடை என
ஒன்றை உருவாக்கிப் பழகிக் கைவரப் பெற்றபின் அது தரும் போதையில் சுயத்தை இழந்து
போகும் அபாயம் உண்டு என்பது உண்மையே. கவிஞர்களும் எழுத்தாளர்களும் எளிதில் வீழ்ந்துவிடும்
பெரும்பள்ளம் அது. ஒருவேளை இவரும் அதனுள் வீழ்ந்த ஒருவரா? அவரது நூலொன்றின்
தலைப்பு: “குர்ஆனிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்”.
இதே போல், சமரசம் அமீன் அவர்கள் எம் கல்லூரியின்
நிகழ்வொன்றில் பேசுகையில் “களமாடல்” என்னுஞ் சொல்லினைப் பயன்படுத்தினார். அண்மையில் கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும்
ஒரு பாடலில் “காதலாட” என்னும் சொல் வருகிறது. ஆக, எல்லாம் ஆட என்னும் விகுதி சேர்த்துக்கொள்வதுதான்.
வாயாட என்பது நாட்டுப்புற வழக்கு. வாயாடுபவர் வாயாடி என்பது போல், காதலாடுபவர்
காதலாடி. களமாடுபவர் களமாடி. மொழியாடுபவர் மொழியாடி. ஹெச்.ஜி.ரசூல் ஒரு நவீன
மொழியாடி என்பது உண்மைதான். ஆனால் மொழியாடல் என்பதே உண்மையை மறைக்கும்
திரைப்பின்னல் ஆகிவிடுமெனில் அதனின் கைச்சேதம் வேறென்ன?
இனி, “குர்ஆனிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்”
என்னும் தலைப்பிலேயே ஓர் ஆழ்ந்த அபத்தம் இருப்பதாக
உணர்கிறேன். மீள்வாசிப்பு என்னுஞ் சொல்லினைக் காண்கையில், அதன் மிதப்புத் தன்மையை
உணர்கையில், “எல்லாந்தான் படிச்சீங்க என்ன
செஞ்சு கிழிச்சீங்க” என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் வரி என் சிந்தையில் முன்
வந்து நிற்கிறது. உங்கள் முதல் வாசிப்பு என்னவாக இருந்தது? என்னும் கேள்வி
தவிர்க்கவியலாமல் எழுகிறது. இப்னுல் அரபி, இமாம் கஸ்ஸாலி, மவ்லானா ரூமி, அல்லாமா
இக்பால் போன்றவர்கள் நிகழ்த்திய குர்ஆனிய வாசிப்புப் பற்றிய புரிதல்களில்
இருந்தல்லவா நமது மீள்வாசிப்பு முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கான பயிற்சியும்
முனைப்பும் உம்மிடம் இருந்த்தா? இல்லையே. மார்க்க ரீதியாக ஹெச்.ஜி.ரசூல்
கொண்டிருந்த ’போதாமை’யைப் பற்றி ஏற்கனவே நான் எழுதியிருக்கிறேன், “இஸ்லாமியப் பெண்ணியம்”
என்னும் அவரது நூலை முன்வைத்து. அதுபோல் இந்நூலை வைத்தும்
விவாதிக்க இடமுள்ளது.
ஹெச்.ஜி.ரசூலை இங்கே ஒருவருடன் ஒப்பிட்டுக் கூறத் தோன்றுகிறது. ஃப்ரெட்ரிக்
நீஷே என்னுக் கிளர்ச்சியாளன். குறிப்பாக, நீஷேவைப் பற்றி கேட்கப்பட்டபோது மகாகவி
அல்லாமா இக்பால் சொன்ன கருத்தை இங்கே அவருக்குப் பொருத்தமானதாகக் காண்கிறேன்: ”அவரின் அறிவு நிராகரிப்பாளனாய் இருந்தது; ஆனால் அவரின் உள்ளமோ
நம்பிக்கையாளனாய் இருந்தது”. (இவ்வரி உமைய்யா என்னும் அறபிக்கவிஞரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறியதாகும். இக்பாலின் ஆழிய புரிதலுக்கும் இஸ்லாமிய அறிவுக்கும் இஃதொரு சான்று).
மேலும் நீஷேவின் குறையைத் தான் நிவர்த்தி செய்திருக்கவியலும் என்பதை அல்லாமா
இக்பால் இப்படிச் சொன்னார்:
“அந்த ஐரோப்பியப் பித்தன்
இக்காலத்தில் இருந்திருப்பான் எனில்
இக்பால் அவனுக்குப்
புரியவைத்திருப்பார் தெய்வீக நிலை யாதென்று”
(அகர்
ஹோத்தா ஓ மஜ்தூபே ஃபிரங்கி இஸ் ஸமானே மே(ன்)
தொ
இக்பால் உஸ்கோ சம்ஜாத்தா மகாமே கிப்ரிய்யா க்யா ஹே)
இறுதியாக, ஓர்
ஒப்புவமை. சிறுவன் ஒருவனின் கையில் சோடா பாட்டில் ஒன்று கிடைக்கிறது. உள்ளே உள்ள
பானம அவனின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கிறது. அவனுக்கோ தாகத் தவிப்பு
வேறு. அந்த புட்டியின் மூடியைத் திறப்பதற்காக அவன் விரல்களால் நெம்புகிறான். அவனது
விரல்கள் புண்ணாகி ரத்தம் ஒழுகுகிறது. வாயில் வைத்துப் பல்லால் கடிக்கிறான். அவனது
நாவிலும் உதடுகளிலும் அந்த மூடியின் விளிம்பு கீறி ரத்தம் வழிகிறது. தனது ரத்தத்தையே
அவன் சப்புக்கொட்டியபடி மேலும் தீவிரமாக முனைகிறான். அப்போது அங்கே வந்த அவனது
தந்தை அவனிடமிருந்து அந்த சோடாப் புட்டியைப் பிடுங்கி தன் பையிலிருந்து திறப்பியை
(ஓப்பனர்) எடுத்து ஒரே நொடியில் இலகுவாக மூடியைத் திறந்துவிடுகிறார்.
ஹெச்.ஜி.ரசூல்
போன்ற ஒருவர் அந்தச் சிறுவனை ஒத்தவராகவே இருப்பார். அந்தச் சிறுவனுக்குக் கிடைத்தது
போலொரு தந்தை வாய்க்க வேண்டும். ஆன்மிகத் தந்தை என்னும் குருநாதர் வாய்க்க
வேண்டும். அவர்தான் கண் திறப்பாளர் (eye opener) என்னும் நிலையில் நமது அகப்பார்வையைத் துலங்கச் செய்யவியலும்.
நீத்தார் பற்றி
நிந்தனை கூடாது என்பதொரு நயத்தகு நாகரிகம் ஒருபுறம் இருக்க, “குலில் ஹக்கு வலவ்
கான முர்ரா” – ’கசப்பாயினும் உண்மையே பேசுக’ என்பது நபிகள் நாயகத்தின் வாக்கு. இவ்விரண்டையும் பேணியே எனது சிந்தனைகளை
இங்கே வைத்திருக்கிறேன் என்று நம்புகிறேன். மீண்டுமொரு முறை ஹெச்.ஜி.ரசூல் என்னும்
பெயரேற்றுத் தோன்றி இப்புவனத்தில் வாழ்ந்தடங்கியிருக்கும் அந்த ஆன்மா அமைதி பெற இறைவனை
வழுத்தியிறைஞ்சி அமைகிறேன்.
சலாம் ரமீஸ்.அரை வாசிப்பில் எழுந்த மதிப்புரை இது.ஹெச்.ஜி.ரசூலை புரிய இன்னும் ஆழமாக வாசிக்க வேண்டும்.காதிரிய்யா தரீக்காவின் பிரபல செய்குவின் முரீதான ரசூலுக்கு இஸ்லாம் தெரியவில்லை என்று சொல்வது உங்கள் அறியாமையை வெளிச்சமிட்டு காட்டுகிறது.விமர்சனம் குறித்து எந்த வரையிலக்கணமும் இல்லாத ஒருவரின் விமர்சனமாக இது இருக்கிறது.இதில் வெறுப்பின் காழ்புணர்வு தெரிகிறது.சூபித்துவத்தை அரைகுறையாக புரிந்து கொண்டு அந்த நிலையில் இருந்து பதிவிட்டதால் ரசூலின் படைப்புகள் உங்களுக்கு புரியவில்லை.வஹ்தத்துல் உஜூத் கொள்கைக்காக அவர் நடத்திய உரையாடல் ஒன்றையும் அறியாத நீங்கள் அவரை விமர்சித்ததே தவறு.கவிதையியலை தெரியாமல் கவிதையை மதிப்பிட கூடாது.தமிழ் சூழலில் எல்லா நவீன கவிஞர்களாலும் கொண்டாடப்பட்ட ரசூல் அரைகுறையாக எழுதினார் என்று சொல்வது உங்களின் எரிச்சலை அப்பட்டமாக காட்டுகிறது.கலிமத்து தையிபா குறித்து அவர் நிகழ்த்திய உரையாடல்களை அறியாமல் அவரை முர்தத்தாக கருதும் உங்கள் பாசிச குணம் இஸ்லாத்தை விளங்கிய ஆரிப்பீன்களை சார்ந்தது அல்ல.இன்னும் விரிவாக எழுதுவேன்.
ReplyDeleteஹக்கு வேறு ஹல்கு வேறு என்ற கைரியத்தை அடிப்படையாக கொண்ட நீங்கள் சூபித்துவம் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.இதில் ரசூல் சிறுவனுக்கு ஒப்பாக இருக்கிறார் என்ற ஸ்டேட்மண்ட் வேறு.யார் சிறுவர் என்பதை உங்கள் அணுகுமுறையை வைத்தே சொல்லிவிடலாம்.ரசூலின் முகநூல் பதிவுகளை பார்த்துக்கொண்டிருக்கும் யாருமே உங்களை போன்றவர் சொல்லும் கதைகளை நம்பமாட்டார்கள்.ரசூல் மொத்தம் 18 நூல்களை எழுதியுள்ளார்.அவர் சூபித்துவம் சார்ந்து எழுதியவை ஆயிரம் பக்கங்களை தொடும்.விரைவில் அவை வெளிவரும்.நீங்கள் புரிந்துவைத்திருக்கிற சூபித்துவம் அரைகுறையானது.தரீக்காக்களில் இல்லாத கொள்கையுடையவர் நீங்கள்.ஆனால் கலீமத் ஹகீகியில் இருந்து ஹமவோஸ்த் வரை நூற்றுக்கணக்கான நூல்களை வாசித்து கொண்டு நூருல் இர்பானில் இருந்து தான் அவர் எல்லாவற்றையும் அணுகினார்.அல்லாமா இக்பாலை விட ரொம்ப தெளிவு மிக்கவர் ரசூல்.இதை பல தரீக்காவாதிகளும் ஒத்துக்கொண்டுள்ளனர்.மலேஷியாவில் பெரிய ஒரு கலிபா ரசூலை புகழ்ந்து இவரது பார்வை அசலான இஸ்லாமிய பார்வை என்று நற்சான்று கொடுத்துள்ளார்.இதைவிடவும் வேறென்ன வேண்டும்.இதை ஒன்றும் அறியாமல் பாமரத்தனமான உங்கள் விமர்சனத்தால் அசிங்கப்பட்டது நீங்களே அன்றி ரசூல் அல்ல.
ReplyDeleteரசூல் சூபித்துவ பார்வை எவ்வளவு ஆழமானது என்பதை அறிய பின்வரும் முகநூல் பதிவை பாருங்கள்..
ReplyDelete" உருவுக்குள்ளே உருவிருக்க உருவை அறியாமல் காலமெல்லாம்
வீண்காலம் போகுதே அல்லாஹு " [ தக்கலை அப்பா ]
ஆலம் மலக்கூத்தை பற்றிய விளக்கம் .
ஆலமெமலக்கூத் அல்லது ஆலமே மிதால் என்னும் சூக்கும உலகம் .
அது ஒரு புனித ஜோதி சரீரமாய் இருக்கும் .அதற்க்கு உடைத்தல் ,சேர்த்தல் ,
அழிதல் இல்லை .இரண்டு லோகங்களின் கிரிகைகள் அனைத்தும் அதை
சார்ந்ததாகவே இருக்கின்றன . நன்மை ,தீமை ,கேள்வி ,கணக்கு ,இன்பம் ,துன்பம் யாவும் அதன் மீதிலேயெ. ஆனால் ,இந்த சூக்கும உடல் நமது நாசுத்
என்னும் இந்த சடத்துவ உடலில் நிலை கொண்டுள்ளது .அதாவது ,கம்பியில்
தொனி மறைந்து இருப்பதுபோலாம். காற்றினாலோ ,வேரெவ்விதத்தாலோ
கம்பி அசைந்தால் அதில் தொனீ உண்டாகிக் கம்பியின் லச்சனத்தை
வெளிப்படுத்தி விடுவதுபோல் அந்த சூக்கும சரீரம் இந்த சடத்துவ சரீரத்தை
சம்பூர்ணமாக்கி விடுகிறது .அது ஆலமே ஜபரூத் என்னும் ஆத்தும உலகத்துக்கும் நாசூத்தென்னும் பூத உலகத்துக்கும் நடுவாகிய பர்ஜக்
என்னும் மத்திய ஸ்தானமாகும் .சிலர் விளக்கம் இன்மையால் அதையே
ஆண்டவன் என்கிறார்கள் . [ அல்லாஹ் இந்த தவறான கொள்கையை விட்டும் நம்மை காப்பானாக ! ] அவ்லியாக்களுக்கு சித்தியாகும் அக விளக்கமும் அபூர்வ நிகழ்ச்சிகளும் இந்த சூக்குமத்தின் விளக்கத்தினாலேயே உண்டாகின்றன .ஏன்னென்றால் ,சூக்கும சரீரம்
ஜடலங்கலனைத்தையும் அடைய வளைந்ததாய் இருக்கிறது .
பூத உலகம் உண்டாவதற்கு முன்பு [ ரோஸ் மிசாக் என்னும் நாளில் ] ஆத்ம
உலகில் சகல ஆத்மாக்களும் சூக்கும சரீரத்துடன் இருந்தன ,இப்போது
அந்த சூக்கும சரீரத்துக்கு இந்த பூத உடல் இருப்பிடமாய் இருக்கிறது .
அதற்க்கு தூக்கமோ ,மரணமோ கிடையாது ! ஸ்தூல சரீரம் அதற்க்கு போர்வையாய் இருக்கிறது .அதாவது ,அது பலத்தின் சுலைபோலும் ,ஸ்தூல
சரீரம் தோல் போலும் என்று உணர்வீர்களாக !
" நான் உங்கள் நாயன் அல்லவா "? என்னும் வினா அந்தச் சூக்குமத்தை
நோக்கியே கேட்கப்பட்டது .அது இந்த சடத்துவத்தில் அடைப்பட்டு இருப்பதால் தஜல்லியத் தென்னும் இறைவனின் வெளிப்பாடுகளும் ,தாசிராத்தென்னும் குணப்பாடுகளும் அதில் காணப்படுவதில்லை .இந்த பூத
சரீரத்தின் சிறையை விட்டும் வெளியேறுவதனால் " கஸ்பு " என்னும்
அகத்தெளிவு ஏற்படுகிறது .இதற்க்கு ஆத்மீக சரீரம் எனப்படும் .ஏனனில் ,அது தோற்ற தேட்ட முடையதாய் இருக்கிறது .இது தில் [ உள்ளம் ] பூஜ்
[ தீர்க்க திருஷ்டி ] என்று சொல்லப்படும் .
" மாமிசத்துண்டமாகிய ஹிருதயத்தை நீ உள்ளம் என்று எண்ணுகிறாய் .
உண்மையான உள்ளம் அகம் என்பதை நீ விளங்கிக் கொள்ளவில்லை "
[ " அகம்மிரம்மாஸ்மி "] என்று மௌலான பஹ்ரி ரஹ்மதுல்லாஹி அவர்கள் கூருகிரார்கல் .இதுவே ரூஹெ இன்சாணி என்னும் ஹக்கீகத்தே
முஹம்மதியாவின் நிழல்லாகும் . நபிபெருமான் சல்லல்லாஹு அலைஹி
வசல்லம் அவர்களின் சந்நிதியில் ஜிப்ரையில் அலைஹிவசள்ளம் அவர்கள்
இந்த சரீரத்தை கொண்டே பிரசன்னமானார்கள். தனக்கு வேண்டிய எவ்வித
ரூபத்தையும் எடுத்துக்கொள்ள இந்த சூக்கும சரீரத்துக்கு சக்திஉண்டு .
ஜீவியம் ,சுகவாழ்வு ,வியாதி முதலியன அகத்தின் மீதே ஏற்படுகிறது . இது சடலத்தை விட்டு நீங்கிவிட்டால் அதற்கு மரணம் என்று சொல்லப்படும் .ஆனாலும் ,அது "நாசூத் " என்னும் சடலத்தை விட்டும்
வேரானதன்று .உண்மையில் இவ்விரண்டும் ஒன்றே . அனால் ,அந்த சடத்துவங்களின் மாறுபாட்டில் வித்தியாசம் சொலப்படுகிறது .சடலத்தை
தவிர சூக்கும சரீரத்திக்கு வேறு இருப்பிடம்மில்லை .சடலம் வெளிரங்கமாய் இருப்பதுபோல் சூக்குமம் உல்ரங்கமாய் இருக்கிறது
வெளிப்படையாய் பார்க்கும்போது இரண்டாகத் தெரிகிறது .ஆனால் ,இரண்டும் ஒன்றே ,ஒரே வகையானது சூகுமம் .இந்த சூக்குமம் " வஹ்தத்தின் " [ நூரே முஹம்மதியாவின் ] நிழல்லாகும் .சடலம் "வாஹிதியத்தின் " அதாவது [ ஹக்கீகதே இன்சானின் ] நிழலாக இருக்கிறது
இவ்விரெண்டுக்கும் இடையில் " மூச்சு " சுவரைப் போல் இருக்கிறது .
சூக்கும சரீர அந்தஸ்தை அடைந்த நிலை "பகா " வென்னும் நித்தியானந்த
நிலையாய் இருக்கும் .இவ்வித நித்தியானந்த நிலையை பெற்றவர்களே
அவ்லியாக்களின் கூட்டத்தில் சேருவார்கள் .[ இவ்விசயம் ஹதீது குதுசி யுள்ள மறைபொருளாகும் ] முக்கியமான இரண்டே லச்சனங்களை கொண்டு அந்த அகம் வருணிக்கப் படுகிறது .அதாவது ;- பார்ப்பதும்
உணர்வதும் இவையல்லாமல் அகம் இல்லை ,இதனை நன்கு அறிந்து
உணர்வீர்களாக ! அதாவது ;-
" அவன் வெளிச்சத்துக்கு உவமை ஒரு மாடக்குழி யில் பளிங்கிக்
கண்ணாடியுள் இருக்கும் விளக்காகும் " [ அல்குரான் 24;35 ]
இன்சான் ஜாமியுல் மராத்திப் [ எல்லா அந்தஸ்துக்கும் இலக்கு ] அதாவது ,
ReplyDeleteஅஹதியத்திளிருந்து அஜ்சாம் வரையிலுள்ள ஆறு மர்தபாக்களும் ஒருங்கே
சேர்ந்த ஏழாவது மர்தபவாகிய இன்சான் இவன் .எனவே , இந்த மர்தபாக்களையும் உபமானங்களையும் இன்சானிலே தெளிந்து கொள்ள வேண்டும் ! " ஹக்கை " கல்கில் ஹக்காகக் கானாதவனால் துக்கமாம் "
இதிலுள்ள உதாரணங்களை அனைத்தும் இன்சானிலே காணவேண்டும் .
மேலே சொன்ன திருக்குர்ஆன் திவாக்கிலுள்ள " நூர் " என்பது முஅ மீனுடைய " அகஜோதி " என்று ஹழ்ரத் அபீபின் கஅப் ரலியல்லாஹு
கூறுகிறார்கள் .இன்னும் ஹழ்ரத் ஜைத் இப்னு அசலம் ரலியல்லாஹு
லவ்ஹுல் மஹபூப் [ விதிவசப்பட்டோளை ] என்று குர்ஆனில் குறிக்கப்பட்டு
இருப்பதும் மூமி னுடைய இந்த அகம்தான் என்கிறார்கள் ." அர்ஷு " "குர்ஷ்"
இன்னும் 7 வானம் ,அண்டசராசரம் அனைத்தும் உன் அகத்தின் உள்ளயே நீ
கண்டுகொல்வாயாக !!! என்று ஹதீதே குதுசியின் பொருளாகும் .!
ஆகையால் அன்பர்களே எவர் ஒருவர் அகத்தில் வாழ்வதுக்கு அறிந்து
கொள்கிறாரோ ,அவருக்கு மரணம் இல்லை !!! பாம்பு தன் சட்டையை
கழற்றி விட்டு போவதுபோல் , அகத்தில் வாழ்பவர்கள் இந்த சடத்துவ
உடலை கழற்றிவிட்டு ,மலக்கூதில் சதா காலமும் வாழ்ந்துகொண்டு
இருப்பார்கள் .அல்ஹம்துலில்லாஹ் " வல்ல அல்லாஹ் இந்த மலக்கூதில்
வாழ்வதர்க்கு நம் அனைவருக்கும் கிருபை செய்வானாக ! ஆமீன் !
சலாம் பிறவி
ReplyDeleteஎந்நிலையிலும் எனது பார்வையை மேலும் விரித்துக்கொள்ள நான் ஆயத்தமாகவே இருக்கிறேன். ஹெச்.ஜி.ரசூலைப் பற்றிய எனது புரிதல் மாறும் எனில் அதை அனுமதிக்கத் தயக்கம் காட்டமாட்டேன். நீங்கள் சொல்வது போல் அவர் ஆழமான புரிதல் கொண்ட சூஃபிதான் எனில் அவரைத் தவறவிட்டுவிட்ட வருத்தமே என்னில் ஏற்படுமே அன்றி, அவரைக் கொண்டாடத் தயங்க மாட்டேன். எப்படியாயினும், உங்களின் இந்த நீண்ட பதிலுரைக்கு மிகவும் நன்றி. உங்கள் பதிலின் முடிவிலிருக்கும் துஆவின் மீதும் எனக்கு ஆதரவு வைக்கிறேன். வஸ்ஸலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர் ரமீஜ். நீங்கள் சொன்னது போலவே அது ஃபஹீமிய்யா ட்ரஸ்ட் வெளியிட்ட மஸ்னவி ஷரீப் நான்காம் பாகம் விழா தான் அது.
ReplyDeleteநாகர்கோவிலில் கீற்று பதிப்பகத்தின் சார்பில் நடத்தப்பட்ட அறிமுக விழாவில் முற்றிலும் தமிழ் அறிஞர்கள் மட்டுமே பங்குகொண்ட அவ்விழாவில் சிறப்புரை அண்ணன் ஹெச்.ஜி. ரசூல் அவர்களே. அதுதான் அவரது கடைசி பொது நிகழ்வு ஆகும் அல்லாஹ் அவரை மன்னித்து அவனருளால் அனைத்துக் கொள்வானாக ஆமீன்.