சூஃபிச் செடி நவின்றது
வெகுநாளாயிற்று
சூஃபிக்
கவிதையொன்று சொல்லேன்
’என்
வேர்கள் ஸ்திரம்கொள்ளும்
மண்ணும் நீயே
என் கிளைகள்
ஓங்கி விரியும்
விண்ணும் நீயே
தீராக்
கனிகளின்
தீஞ்சுவையும் நீயே’
என்று
நெஞ்சுருக உரையாடி நிற்கின்றது...
எண்ணற்ற
உலகங்களில்
தானும் ஒன்றானதொரு உலகில்
எண்ணற்ற
காடுகளில்
தானும் ஒன்றானதொரு காட்டில்
எண்ணற்ற
மரங்களில்
தானும் ஒன்றானதொரு மரத்தின் கீழே
முளைத்து
நிற்கும் செடிகள் பலவற்றில்
தானும்
ஒன்றான சிறிய செடி.
மிச்சில்
மதிய
மழைத்தூறலின் துளிகள்
ஒவ்வொரு
இலையிலும்
ஒவ்வொரு
நீல மொக்கிலும்
மினுங்க
நிற்கிறது
வீடளவுயர்ந்து நிற்கும் எருக்கஞ்செடி
மேற்கு
வானத்து
மேக விளிம்பெல்லாம்
வெள்ளியெனச்
சுடரும் தண்ணொளி
சூரியனே நிலாவாகிவிட்டது போல்
நீர்
வார்த்த வானம்
தருக்களுக்கெல்லாம்
ஒளியினைப் பரிந்தூட்டுகின்றது
தேனால்
செய்தன போலுமாய்க்
காலத்தின் அடையில் இத்தருணங்கள்
பெருநதிகள்
மட்டும் பெருகின்ற பேறு
சாலைக் குழிநீரும் காணும் கருணை
ஆமாம்
அன்பர்களே!
சவியுறத்
தெளிந்து
சான்றோர்
எழுதிய
கவியெனக்
கிடக்கின்றதைப் பாருங்கள்
இளைத்தோடும்
நாயொன்று
பருகிச்
செல்லுமிந்த மிச்சில் நீர்.
No comments:
Post a Comment