Thursday, August 24, 2017

பூழ்தி செய்திடடா! - 1



      மூன்று நாட்களுக்கு முன் ஆவணப்படம் ஒன்று கண்டேன். இற்றை நாள் தமிழகத்தில் வாழ்ந்து வரும் ஓர் அதிசய அறிஞரைப் பற்றியது அப்படம். பத்து நாட்களுக்கு முன் சோழ வளநாட்டுப் பகுதியில் மேற்கொண்டிருந்த பயணத்தின் தாக்கத்தால் அடியேன் வளர்ந்த ஐயாற்று மண்ணை, நெஞ்சை அள்ளும் தஞ்சையை மனம் அசை போட்டுக்கொண்டிருந்ததில் அவ் அறிவரின் நினைவு முகிழ்த்தது. அவரைப் பற்றி ஓர் ஆவணப்படம் வெளிவந்திருப்பதை முன்பொரு முறை தி-ஹிந்து நாளிதழில் வாசித்த நினைவுமெழ அஃது யூட்யூபில் கிடைக்குமா என்று தேடினேன். கிடைத்துவிட்டது.
 Image result for t n ramachandran 

      அந்த மேதை “TNR” என்று பெயரின் முதலெழுத்துக்களால் அழைக்கப்படும் திருநெய்த்தானம் நடராஜன் இராமச்சந்திரன். (திருநெய்த்தானம் என்னும் சிற்றூர், சிவஸ்தலம், திருவையாற்றிலிருந்து சற்றுத் தொலைவில், மூன்று நான்கு கி.மீ இருக்கலாம், அமைந்துள்ளது. தில்லஸ்தானம் என்பது மக்கள் நாவின் நாடக வழக்கு. TNR தற்போது தஞ்சையம்பதியில் வசிக்கிறார்.

      அப்படி என்ன இவரது ஆளுமையின் தனித்தன்மை என்று கேட்பார்க்கு, ‘வழி வழி பாரதி’ என்னும் இவரது நூலின் பின்னட்டையில் இவரைப் பற்றிய அறிமுகக் குறிப்பில் உள்ள சொற்றொடர் ஒன்றினை விடையாக மொழிந்தால் போதுமானது என்று எண்ணுகிறேன். ஊன்றி கவனிக்கவும்.

      ”தமிழ், ஆங்கிலம் நன்கு அறிந்தவர்”

      வேண்டுமெனில் மீண்டும் ஒரு முறை வாசித்துக்கொள்ளவும். அவர் தமிழும் ஆங்கிலமும் நன்கு அறிந்தவர். இருமொழி அறிஞர்.

      சுய விளம்பரப் பெருக்கத்தால் சீரழிந்து கிடக்கும் குமுகாயச் சூழலில் இவ்வரி மிக எளிய ஒன்றாக, சிறப்பற்றதாகத் தோன்றக்கூடும். என்ன செய்ய? நாம்தான் நாளும் நாளும் எத்தனை எத்தனை ’வாழும் வள்ளுவர்’களை’, ‘கலிகாலக் கபிலர்’களை, (ஐந்தையும் அவித்துவிட்ட) ‘ஐந்தமிழ் அறிஞர்’களை, (’பூமிப்பந்தைப் புரட்ட வல்ல’) புரட்சியாளர்களை, ’சிந்தனைச் சிப்பி’களை, தமிழகத்து சே குவாராக்களை (சேக்குவாரா?), ’பன்மொழி வித்தவர்’களை எல்லாம் கண்டு வருகின்றோம்.

      ஆம், ஒரு மொழிகூட சரிவரத் தெரியாதவர்கள் எல்லாம் பன்மொழி வித்தகர்கள் / அறிஞர்கள் என்று பட்டம் சூடித் தருக்கித் திரியும் தாழ்நிலை கடுத்த பாழ்நிலம் ஆகிவிட்டது தமிழகம். அத்தகு சூழலில், ஒருவர் தன்னைப் பற்றிய குறிப்பாக ’இருமொழி நன்கு அறிந்தவர்’ என்று தனது “கரிக்குலம் விட்டே”வில் குறிப்பிடுதல் காணின் நரிக்குலம் அவரை நகாதோ?

      ஆனால் அந்த எளிய குறிப்பு சத்தியம். அதன் எழுத்து ஒவ்வொன்றும் உண்மை. வெறும் புகழ்ச்சி இல்லை. தி.ந.இராமச்சந்திரன் அவர்கள் தமிழும் ஆங்கிலமும் நன்கு அறிந்தவர். அதனை அவரின் நூற்கள் வழி அடியேன் அறிந்துளேன். அதனாற்றான், தமிழ் ஆங்கிலம் உருது அரபி ஃபார்சி ஆகிய ஐந்து மொழிகளில், முதலிரண்டு மொழிகளில் தேவலாம் எனுமளவும் இதர மூன்று மொழிகளில் சொற்ப அளவும் அறிவு பெற்றுள்ள எனை நோக்கி என் நண்பர் குழாம் “பன்மொழி அறிஞன்” என்று ஏத்துகையில் நான் நாணத்தால் நெளிகின்றேன். காரணம், தி.ந.இராமச்சந்திரன் போன்ற அறிஞர்களை நான் அறிந்திருக்கிறேன்.
Image result for t n ramachandran
      தி.ந.இரா அவர்களின் சாதனை மொழிபெயர்ப்புத்தான். குறிப்பாக, சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளை ஆங்கிலமாக்கியுள்ளார். அப்பணி முடிக்க “IISSR – International Institute of Saiva SIddhantha Research” என்பதன் இயக்குநராக அமர்த்தப்பட்டிருந்தார். மகாகவி பாரதியாரின் பாடல்களையும் ஆங்கிலமாக்கியுள்ளார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் இவரைப் பதிப்பாசிரியராக அமர்த்தி அவற்றை வெளியிட்டது. 

 Image result for t n ramachandran
      தி.ந.இரா அவர்களின் இன்னொரு தனித்தன்மை, அரிய நூற்கள் பலவற்றை உள்ளடக்கிய ஒரு பெரும் நூலகத்தையே தனது வீட்டில் வைத்துப் பேணி வருகிறார் என்பது. ஐம்பதாயிரம் நூற்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவற்றுள் அவரது தனிப்பட்ட சேகரமே செம்பாகம் படும். அந்நூலகத்தினைச் சார்ந்தே வெளியீட்டுப் பணிகளும் செய்துள்ளார். ”டி.ஆர்.நடராஜ அய்யர் மெமோரியல் லைப்ரரி & பப்ளிகேஷன்ஸ், மதுர பவனம், 14-ஏ செல்வம் நகர், தஞ்சாவூர்” என்னும் முகவரியை அவ்வெளியீட்டில் காண்கிறோம். எனவே அவரது தந்தையார் சேகரித்த நூற்றொகுதிகளிலிருந்து தொடங்கி தி.ந.இரா வளர்த்தெடுத்த நூலகமாக இருத்தல் வேண்டும். தி.ந.இராமச்சந்திரன் அவர்களைச் சந்தித்தது உண்டா? என்றொரு கேள்வியை அண்மையில் ஜெயமோகன் அவர்களிடம் கேட்டிருந்தேன். அதற்கான விடையில் தி.ந.இரா அவர்களின் நூலகத்தை அவர் மிகவும் போற்றி ”தமிழின் தொன்மையான நூல்கள், அரியநூல்களின் பெரும் சேகரம் டி.என்.ஆர் அவர்களிடமுள்ளது என அறிவேன். தமிழின் இரு மகத்தான தனியார் நூலகங்களில் ஒன்று அது. இன்னொன்று புதுக்கோட்டை கிருஷ்ணமூர்த்தி – டோரதி கிருஷ்ணமூர்த்தியின் சேகரிப்பு. அவற்றை அமைப்புரீதியாக முறையாக பாதுகாக்க [ரோஜா முத்தையாச் செட்டியார் நூலகம் போல] ஏதேனும் வெளிநாட்டுப் பல்கலைகள் முயலவேண்டும்.” என்று சொல்லியிருந்தார். (’சேக்கிழார் அடிப்பொடி’, www.jeyamohan.in., 23 ஆகஸ்ட் 2017).

      தி.ந.இரா அவர்களின் ஆங்கிலம் செவ்வியல் தன்மை வாய்ந்தது. சராசரியான ஆங்கில அறிவு கொண்டோர் அதனைப் படித்துச் சுவைத்தல் கடினம்தான். ஆனால், தன்னை மழுக்கிக்கொண்டு எழுத அவர் ஒருபோதும் இசையார். தமிழ்ச் செவ்வியற் பனுவல்களை ஆங்கிலமாக்கினால் அந்த ஆங்கிலமும் செவ்வியற் தன்மையுடன்தான் இருந்தாக வேண்டும் என்பது அவர்தம் இலக்கியக் கொள்கை. அப்போதுதான் அதில் மூல மொழியின் சுவையும் உணர்வும் இருக்கும் என்பது விளக்கம். 

Image result for t n ramachandran

      ஆங்கில இலக்கியங்களில் ஆழ்ந்து கவியுளம் கண்டவர் தி.ந.இரா. அதனால்தான் ‘மாமுனி மில்டன்’ என்று அவரால் சொல்ல முடிகிறது. அவருடன் பழகுகின்றவர்கள் அவரது நியாபக சக்தியை மிகவும் வியந்துரைக்கின்றார்கள். சகஜமாக பேசிக்கொண்டிருக்கும் நிலையிலேயே பொருத்தமான கவிதை வரிகளை அவ்வப்போது மேற்கோளாகச் சிந்துவார். அவரது எழுத்தும் அப்படியே. ஷேக்ஸ்பியர், மில்டன், ஷெல்லி, டென்னிசன், பைரன், எமர்சன், விட்மன், வொர்ட்ஸ்வொர்த், சரோஜினி தேவி, ரபீந்திரநாத் தாகூர், இக்பால், மௌலானா ரூமி, கலீல் ஜிப்ரான் என்றெல்லாம் அவர் ஒப்பிட்டு மேற்கோள் சொல்வதைக் காணக் காண கண்கள் வியப்பில் விரியும். “பாஞ்சாலி சபதம்” பற்றி எழுதுகின்றபோது அவர் தரும் குறிப்பினைப் பாருங்கள்: “ஷேக்ஸ்பியர் ‘பெரிக்ளீ’ஸ் என்ற நாடகத்தை “New joy wait on you! Here our play has ending” என்று முடித்தது போலவே ‘நாமுங் கதையை முடித்தோம் – இந்த / நானில முற்றும் நல்லின்பத்தில் வாழ்க” என்று நிறைவு செய்திருக்கிறார்.”

      தி.ந.இரா அவர்களின் தமிழ் மொழி நடை நான் மிகவும் ரசித்துச் சுவைத்து அனுபவித்த ஒன்று. அதன் தாக்கம் எனது நடையில் தெரிதல் வியப்பன்று. அது தெளிவும் செறிவும் கொண்ட நடை. சொன்னயம் மிக்க நடை. அவரது நூலினைப் புரட்டிக்கொண்டிருக்கையில் ஒரு சிறு பத்தியில் என் புத்தி நின்றது. பதினைந்து ஆண்டுகட்கு முன்பு அந்நூலினை வாசித்தபோது பெரிதும் உவந்த அதே வரிகள். பாரதியைப் பற்றி தி.ந.இரா சொல்கிறார், “பாரதியார் சொல் உராய்ந்து எழுந்த தீயின் சுடர் எழக் கனிந்த நாவுடையவர்; பாரதியார் மண்மாசு அகன்ற வான்படு சொற்கள் கொண்டு, மந்திரப் பாடல்கள் பாடி வேதம் புதுமை செய்தவர்”. அளவினால் சிறிதாகவும் கருத்தினால் பெரிதாகவும் உள்ள உயர்ந்த நூல் என்பதைக் குறிப்பிட “சிறு மா நூல்” என்று சுருங்கக் கூறுவார். இதனை ஓர் ’இடியம்’ போன்று, சொலவடை போன்று நானும் பயன்படுத்தி வருகிறேன். இத்தகு வரிகள் பலவற்றை அவர் பாரதியிடமிருந்து எடுத்தாள்வார். அவரின் எழுத்திலும் நாம் அத்தகு வரிகள் பலவற்றை எடுத்தாள இயலும்.
      
 தி.ந.இரா அவர்களை அவரின் இள வயதிலேயே பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அதிசயக் கவிஞர் ஒருவர் ஓர் இலக்கியப் பனுவல் யாத்துள்ளார் என்று கண்டறிந்த போது மிகவும் வியப்பாக இருந்தது, என்னவெல்லாம் நடந்திருக்கிறது என்பது போல். அப்பனுவலின் பெயர் “சித்திரகவிமாலை”. அந்நூலாசிரியர் திருவையாறு பி.வி.அப்துல் கபூர் சாஹிப் என்னும் ஆசுகவி. இறைவன் நாடினால், அவரைப் பற்றிப் பின்னர் விரிவாக கட்டுரை ஒன்று எழுதுகிறேன். அந்தப் புலவர் தனது நூலில் தி.ந.இராமச்சந்திரன் அவர்களை ’வேதியர் குல வள்ளல்’ என்று போற்றுவதுடன் தனக்கு இன்னின்னது தர வேண்டும் என்றெல்லாம் உரிமையுடன் கேட்கிறார். குறிப்பாக, பதினாறாவது சித்திரகவியான தேர்ப்பந்தம் என்பதினுள் அமைந்த இரண்டாம் இன்னிசை வெண்பாவின் இடையே “போற்றவே பூமனை” என்று பாடி, தனக்கொரு வீடு வேண்டும் என்று கேட்கிறார். அதையும் தி.ந.இராமச்சந்திரன் நிறைவேற்றினார்! (புலவர் பி.வி.அப்துல் கபூர் சாஹிப் அவர்களுக்கு தி.ந.இரா பத்திரமெழுதிப் பரிசில் தந்த வீடு இந்நாளில் கிடக்கும் கதியை, தான் உருவாக்கிய ஆவணப்படத்தில் ரவிசுப்பிரமணியம் காட்டியிருக்கிறார்).

      தி.ந.இரா அவர்களின் எழுத்துக்களில் நான் கண்ட இன்னொரு வியப்பான விஷயம், மௌலானா ரூமியைக் குறிப்பிட்டு அவர் எழுதியிருக்கிறார் என்பது. என்னைப் பெரிதும் கவர்ந்த சூஃபி மகான் அவரையும் கவர்ந்திருக்கிறார் என்பது அறிந்து மெத்த மகிழ்ந்திருக்கிறேன், “யாமறிந்த புலவரிலே, ரூமி என்ற ஒரு புலவரது வாக்குத்தான் பாரதி வாக்குப் போல் இருக்கின்றது” என்றெல்லாம் அவர் எழுதும் கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும்கூட.

      ரெனால்டு நிக்கல்சன் செய்த ஆங்கில மொழிபெயர்ப்புக்களின் வழியே அவர் மௌலானா ரூமியின் மஸ்னவி ஷரீஃபை வாசித்திருக்கிறார். 1993-இல் அவர் வெளியிட்ட காரைக்கால் அம்மையார் துதிப்பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலின் முன்னுரையில், “According to Jalaluddin Rumi, Love is the Highpriest who mediates between God and soul.” என்று எழுதிவிட்டு மஸ்னவி ஷரீஃப் முதற்பாகத்தின் 109 – 111, 115 – 116 ஆகிய ஐந்து கண்ணிகளின் ஆங்கில மொழிபெயர்ப்பினை எடுத்துக்காட்டியிருக்கிறார். இந்நூலுக்குப் பின்னர் ஏழாண்டுகள் கழித்து 2000-இல் வெளிவந்த “வழி வழி பாரதி” என்னும் நூலில் ஒரு கட்டுரை வரைகிறார், “பாரதியும் ரூமியும்” என்று. அதில், மேற்சொன்ன ஐந்து கண்ணிகளை, மௌலானா ஜலாலுத்தீன் ரூமியின் கவிதை வரிகளை அவர் செந்தமிழாக்கித் தந்திருக்கும் விதம் வெகு இதம்:

      ”இதயத்துறு நோய் காதலன் வெறியைக்
      கதுமெனக் காட்டும்;
      இது போல் ஒரு நோய் யாண்டு மிலதே
      காதல் என்பது ஒரு தனி நோயே;
      இது தான்,
      அகத்தே கரந்து ஆழ்ந்தே கிடக்கும்
      தெய்வத் திருவை அளக்கும் கருவி;
      மண்ணார் காதலோ, விண்படு காதலோ,
      முடிவில் அப்பாலைக் கிஃதே உய்க்கும்; உறுதி
      ஏதுக்கள் இதனைச் சோதிக்கலாகா;
      ஏதுவும் காட்டும் சேற்றில் கழுதையே;
      தன்னைத் தானே காட்டும் பரிதிபோல்
      அன்பை விளக்கும் அதுவும் அன்பே;
      காண்பாய் இதனைக் கருத்தினை ஊன்றி;
      நிறுவத் தேடிய ருசுவெலாம் இங்கே
      நேர்பட நிற்பன கண்டு கொள்வாய்.”
      
Image result for astrolabe

 ஒரு குறிப்பு: “தெய்வத் திருவை அளக்கும் கருவி” என்னும் வரி ஆர்.ஏ.நிக்கல்சனின் ஆங்கிலத்தில் “And astrolabe of mysterious Divine” என்றுள்ளது. மௌலனா ரூமியின் ஃபார்சி மூலத்தில் இவ்வரி “இஷ்க் அஸ்துர்லாபெ அஸ்ராரெ ஃகுதாஸ்த்” என்றுள்ளது. (”Love is the astrolabe of the secrets of God” என்று இப்றாஹீம் கமார்து செய்துள்ள ஆங்கிலப் பெயர்ப்பு மூலக்கருத்துடன் மேலும் சரியாகப் பிரதிபலிக்கிறது.) அஸ்துர்லாப் என்பதொரு வானியற் கருவி. நிக்கல்சன் இக்கருவி குறித்து தனது மொழிபெயர்ப்பின் அடிக்குறிப்பில் “அது விண்மீன்களின் உயர்நிலையை அளப்பதற்கும் கோள வானியலின் சிக்கல்களைத் தீர்ப்பதற்குமானதொரு கருவி” என்று எழுதிகிறார். அஸ்துர்லாப் என்னும் பார்சிச் சொல்லே பின்னாளில் ஆங்கிலத்தில் ஆஸ்ட்ரொலேப் என்றாகியது.
      இவ்வளவு பெற்றி அமைந்த, தமிழறிவும் ஆங்கிலப் புலமையும் சைவத் தத்துவ அறிவும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற மேதை தி.ந.இராச்சந்திரன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று ஏழு ஆண்டுகட்கு முன் தோன்றி ஏதோ காரணம் பற்றி அத்திட்டத்தைக் கிடப்பில் சாய்த்தேன். அதற்கான் நேரம் இப்போதுதான் வர வேண்டும் என்பது இறைவன் திருவருள் போலும். அக்கடிதம் ஒரு தமிழ்ச்சொல் பற்றி அமைந்தது. “பூழ்தி” என்பது அச்சொல்.

      நுண்ணிய நூற்பல கற்று நுண்மான் நுழைபுலத்தில் நிலைத்தவரே ஆயினும், அரம் போலும் கூர்த்த மதி கொண்டு தூண்டு நூற்கனங்கள் துளைத்தவரே ஆயினும், ஏற்றமிகு எண்ணங்கள் பிறங்கும் ஏடுகள் பலவற்றை எழுத்தெண்ணிப் படித்தவரே ஆயினும், செய்யுள் நாடகம் ஆகிய இருவழக்கு ஆய்ந்தளந்து வார்த்தை வங்கி என வளர்ந்தவரே ஆயினும், ஒரு மொழியினுள் அமைந்த அனைத்துச் சொற்களையும் அறிந்திருத்தல் அரிதினும் அரிது. தி.ந.இரா அவர்கள் எழுதியிருக்கும் ஒரு செய்தியை மேலாய்ந்து இவ்வுண்மையை நான் உணர்ந்து கொண்டேன். அதனையே அவருக்குக் கடிதத்தில் தெரிவிக்க நாடினேன். “பூழ்தி” என்னுஞ் சொல்லினைப் பற்றிய ஒரு சேதி அது.

to be conluded in next part.

1 comment: