இருந்தாற்போல் இருந்து என்னதான்
ஞானோதயம் வந்து சேர்ந்ததோ, அண்டை வீட்டுக்காரர் தினமும் வானொலி நிகழ்வுகளை தெருவுக்கே
விளம்பத் தொடங்கிவிட்டார். பிரத்யேகமாக ஏதேனும் ஒலிபெருக்கிகள் வைத்துச் செய்கிறாரா
என்னவென்று தெரியவில்லை. முந்தாநாள் அந்திக்குச் சற்றுமுன், பாரதியாரியற்றிய பாடல்
ஒலித்தது, அவரது வாழ்க்கையைப் படமாக்கிய ’பாரதி’யிலிருந்து.
நிற்பதுவே
நடப்பதுவே பறப்பதுவே – நீங்களெல்லாம்
சொப்பனம்தானோ? வெறும் தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே – நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
இருத்தலியற் சிந்தனையில் எழுதப்பட்ட இப்பாடலை நாம் வெறுமனே அச்செழுத்துக்களாக
ஏட்டில் வாசித்தால் அப்பாடல் ஒரு வரட்டுத் தத்துவ விசாரம் என்னும்படிக்கு வாசித்து
’படித்தவன் பாட்டைக் கெடுத்தான்’ என்னும் முதுமொழிக்குப் புதுப்பொருள் தந்துவிடுவோம்.
ஆனால் இப்பாடலுக்கு இசைஞானி இளையராஜா அமைத்திருக்கும் மெட்டு, எந்த மனநிலையில் பாரதி
இவ்வரிகளை யாத்திருப்பானோ அந்த மனவுணர்வுகளை நம்முள் நிச்சயமாகக் கிளர்த்துகின்றது
என்றே கருதுகின்றேன். மாயத் திரையினை விலக்கி உண்மையின் முகத்தை தரிசித்துவிடத் தவிக்குமோர்
ஏக்கம் அதிலிருக்கிறது. இதனை அடுத்தூறும் வரிகளில் மெட்டு மேலெழுந்து உயரும்போது நெஞ்சுக்குள்
அந்த ஏக்கம் கரைத்துக்கொண்டு அலையாய் எழும்.
வானகமே
இளவெயிலே மறச்செறிவே – நீங்களிலெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
இவ்வரிகளே மெட்டின் உச்சம். இதனைத் தொடரும் வரிகளில் அதனைக் கீழே இறக்கிக்கொண்டு
வந்து வேகத்தைக் குறைத்து மண்ணில் உலவும் பாவனையில் விட்டுவிடுகிறார். “நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?”
என்னும் ஆழமான முக்கியமான கேள்விகளுடன் அச்சரணம் முடியும்.
என் மீது அவள் சாய்ந்து உரையாடிக்கொண்டிருக்கும் பல நேரங்களில் அனிச்சையாக
ஏதாவது பாடலைத் தொடங்கிவிடுவது என் பழக்கம். காதற் ததும்பும் பாடலெனில் பிழையன்று,
‘உடையாத வெண்ணிலா, உறங்காத பூங்குயில், நனைகின்ற
புல்வெளி, நனையாத பூவனம்...’ என்பது போல. ஆனால் ஒருமுறை இப்பாடல் கிளம்பிற்று.
’வானகமே இளவெயிலே மரச்செறிவே...’ என்று பாடும்போது அந்த மெட்டில் தொனிக்கும் ஏக்கத்தில்
எனக்குப் புருவங்கள் உயர்ந்து மூக்கு மலர்ந்துவிடும். கேவல் பாவம் கூடிவிடும். தருணம்
நோக்காது தத்துவப் பாடலா என்றவள் ஊட வாய்ப்புள்ளது. எனவே நான் அதன் வேகத்தை வேறொரு
விதத்தில் குறைத்துவிட்டேன். அது பாரதியோ இளையராஜாவோ அறியாதது. அது எனக்கொரு கைவந்த
உத்தி. அப்படியே பாடலின் வரிகளை மட்டும் மாற்றி, ஆனால் மெட்டுக்குள் வருமாறு பாடுவேன்.
“நீந்துவதே ஊருவதே ஓடுவதே – நீங்களெல்லாம்...”
என்று தொடங்கினேன். “ம்க்கும்” என்றாள் அவள்.
பாரதியாரின் பாடல்கள் பலவும் திரைப்படங்களில் வந்துள்ளன. அவற்றிலெல்லாம்
இப்பாடல் எனக்கு மிகவும் உன்னதமான மெட்டினைப் பெற்றுவிட்ட ஒன்றாகப் படுகிறது. இளம்
பாடகர் கார்த்தி இதனைப் பாடினார். அவருக்கு அதுவே முதற்பாடல் என்று நினைக்கிறேன். திரைத்துறைக்குள்
அவர் நுழையும் முன், 1999-இன் இறுதி அல்லது 2000-இன் தொடக்க காலத்தில் அவரை நான் நேரில்
பார்த்திருக்கிறேன். இப்போது மெல்ல பிரபலமடைந்து வரும் இசையமைப்பாளர் ஜிப்ரான் அப்போது
ஸ்டார்.டாட்.ஸ்டார் என்னும் நிறுவனத்தில் இசைஞராகப் பணியாற்றி வந்தார். குழந்தைகளுக்கான
கதைகள் மற்றும் பாடல்களை அனிமேஷன் காட்சிகளுடன் குறுவட்டுக்களாக அந்நிறுவனம் தயாரித்துக்
கொண்டிருந்தது. மூன்று வருடங்களாகத் தேங்கிக் கிடந்த தமிழ்ப்பணியை முடித்துத் தர அங்கே
பகுதி நேர எழுத்தாளனாக நான்கைந்து மாதங்கள் வேலை செய்தேன். அப்போது பாடற்பதிவுக்காக
ஜிப்ரான் அங்கே கார்த்தியை அழைத்திருந்தார். அடியேன் இயற்றிய குழந்தைப் பாடல் ஒன்றினைக் கார்த்தி பாடித்தந்தார்.
ஏறத்தாழ அதே காலகட்டத்தில் “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” படத்தின்
இசைப்பேழை வந்திருந்தது. எனது சின்னமாவின் மகனுக்கு அதனையும் எனக்கு ’பாரதி’யையும்
வாங்கினேன். க.க-வில் ’சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா’ என்னும் பாரதிப்பாடல் இடம்பெற்றிருந்தது.
பத்திரிகை ஒன்று “இத இதத்தான் எதிர்பார்த்தோம் என்று ஏ.ஆர்.ரகுமானின் பேட்டி ஒன்றில்
புளகித்து எழுதியிருந்தது நினைவு. ஆனால் அப்பாடலின் மெட்டு தூங்கலோசையாகவே பட்டது.
பாரதிக்கு அந்த மெட்டு நியாயம் செய்யவில்லை என்று முதலில் கேட்டதுமே தோன்றிவிட்டது.
இளையராஜா அளவுக்கு பாரதியை ஏ.ஆர்.ரகுமான் ஆத்மார்த்தமாக உள்வாங்கவில்லை என்று கருதினேன்.
(இந்தத் தரவினைச் சரி காண இப்போது கூகிளில் உலவினேன். ராக்ட்யூன்.காம் என்னும் இணையத்தளம்
இப்படிச் செப்புகிறது: பாரதியார் என்பவர் ஒரு
பிரபலமான தமிழ்ப் பாடகர். அவரது சமீபத்திய ஆல்பமான ’பாரதியார் பாடல்கள்’ என்பதற்காக
அவர் மிகவும் பிரபலமாகியிருக்கிறார். (Bharathiar is a famous Tamil Singer
and popular for his recent album Bharathiyar Paadalgal.) ஆமாம், ஏ.ஆர்.ரகுமான் இல்லை
எனில் தமிழ்நாட்டில் பாரதியாரை யாருக்குத் தெரியப் போகிறது? அடப்பாவிகளா! ஒங்க அறிவுல
தர்ப்பய போட்டுக் கொளுத்த!
திரைப்படங்களில் இலக்கியப் பாடல்கள் இடம்பெறுதல் என்பதை மாணவப் பருவத்திலிருந்தே
என்னையுமறியாமல் கவனித்து வந்திருக்கிறேன் என்று தெரிகிறது. அதற்குக் காரணம் தமிழ்.
தூய வடிவில் அல்லது செவ்வியற் பண்பு பிறங்கும் வரிகள் கொண்டு எழுதப்படும் பாடல்கள்
என்னை எப்போதுமே ஈர்த்து வந்துள்ளன. அவை இலக்கியப் பனுவல்களில் இருந்து எடுக்கப்பட்டவையாக
இருக்கும் பட்சத்தில் தனிக்கவனம் பெற்றுள்ளன. திரைப்படங்களின் தரமுயர அஃதொரு வழி என்று
நான் அப்போது எண்ணியிருந்தேன் போலும்.
என் பதின்ம வயதுகளின்போது சிலப்பதிகாரத்தைத் திரைக்காவியமாக்கிய ‘பூம்புகார்’
கண்டேன். அப்போதெல்லாம் மனோகரா, பராசக்தி என்று கலைஞரின் கைவண்ணத்தில் உருவான திரைப்படங்களைத்
தேடிப்பிடித்துப் பார்த்த காலம். அந்த வண்ணத்தில் ஓர் ஈர்ப்பு அப்போது இருந்தது. பூம்புகாரில்
ஓர் பாடல். இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரக் காப்பியத்தின்படி பதினாறு வயது கோவலனும்
பன்னிரு வயது கண்ணகியும் மனையறம் தொடங்கும் முதலிரவில் அவன் அவளிடம் பாடுவதாக வரும்
நலம் பாராட்டுதல் அது. திரையில் பதினாறு வயது(?) எஸ்.எஸ்.ராஜேந்திரனும் பன்னிரு வயது(?)
விஜயகுமாரியும் தோன்றுவார்கள். அக்காட்சிக்கு சிலப்பதிகார வரிகளையே பல்லவியாக எடுத்தாண்டிருந்தார்கள்:
”மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசறு விரையே! கரும்பே! தேனே!”
வரலாறுரைக்கும் திரைப்படங்களாகவே பார்த்திருந்த அக்காலகட்டத்தில் அனைத்து
வரலாற்றுப் பாத்திரங்களாகவும் சிவாஜி கணேசனே தோன்றியிருந்ததான மனக்காட்சி இப்போது வருகிறது.
கப்பலோட்டிய தமிழனில் பாடற்காட்சியில் மட்டும் அவர் பாரதியாராக வருவார். அது போன்ற
படங்களில் பாரதியாரின் பாடல்கள் இடம்பெற்றமை வியப்பல்ல. எழுதிய பாடல்களுக்கு இசைவாணர்கள்
மெட்டமைத்த காலமது. எனவே இசையமைவு ஒருவித கட்டுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும். அதன் பெயரே
மெட்டுக் கட்டுதல் அல்லவா? ’சிந்துநதியின் மிசை நிலவினிலே…” “வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்…”
போன்ற பாடல்கள் இசைரீதியாக என்னில் ஏதும் வியப்புணர்வைக் கிளர்த்தவில்லை.
பாரதியின் பாடலொன்றைத் திரையில் கேட்டு மனவெழுச்சி உண்டானது என்று
சொன்னால் அது எல்.வைத்தியநாதனின் இசையில் ஏழாவது மனிதனில் “காக்கைச் சிறகினிலே நந்தலாலா”
என்னும் பாடல்தான். இன்றுவரை அதன் இசையழகு தாக்கம் குறையாதிருக்கிறது. “தீக்குள் விரலை
வைத்தால்…” என்னும் வரியில் அம்மெட்டு கொள்ளும் ஆரோகணத்தில் அப்படியே ஏக்கமெழுந்து
மூக்கு மலர்ந்துவிடும். அதுவே அப்பாடலின் ஆத்மார்த்தத் திறப்புக் கணம்.
அடியேன் பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கையில் வந்தது “தளபதி”.
அப்போது தமிழ்ப்பாடத்தில் இடம்பெற்றிருந்த செய்யுட்களுள் ஒன்று “குனித்த புருவமும்
கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்” எனத் தொடங்கும் அப்பர் தேவாரப் பாடல் (நான்காம்
திருமுறை: 783). வத்தலும் தொத்தலுமான ஒரு தமிழாசிரியர் அவ்வாண்டில்தான் பணிக்கு வந்திருந்தார்.
கிறித்துவர் (அஃதொரு கிறித்துவப் பள்ளிக்கூடம்). சோம்பரில் திளைக்கும் மாணவர்களைச்
சேம்பரில் வைத்துப் பேயோட்டிப் புகழ் பெற்றிருந்தார். எப்பாடலாயினும் ‘இப்பாடல் ஆதி
ராகத்தில் பாடப்பெற்றது” என்று சொல்லி பாடவதியாகப் பாடிப் பாடிப் பாடம் நடத்துவார்.
ஆதி என்பது ராகம் அல்ல, அஃதொரு தாளம் என்று மறுப்போர் முதுகில் தாளக்கட்டுகளும் வாசித்துக்
காட்டுவார். ஆதி தாளத்தில் “குனித்த புருவமும்...” என்றவர் இழுத்துத் தொடங்கியதை ரஜினி
ரசிகர்களாய் இருந்த இரண்டு மாணவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. “ஐயா நீங்கள் பாடுவது
தவறு” என்று பொங்கி எழுந்துவிட்டார்கள். “நீங்கள்தான் சரியாகப் பாடுங்களேன்” என்று
மன்னர் தோரணையில் ஆணையிட்டார். ஏனெனில் அந்த மாணவர்கள் சொன்னது சரிதான் என்று எல்லாருமே
ஆதரவு உரைத்தோம். இசைஞானி அந்த விருத்தப் பாடலுக்கு அமைத்த மெட்டில் வருத்தப்படாமல்
அவ்விருவரும் பாடினார்கள். “இது என்ன ராகம்?” என்று ஆசிரியர் கேட்டார். பாடிய மாணவர்கள்
“தளபதி ராகம்” என்று தயங்காமல் சொல்லிவிட்டார்கள். பொதுத்தேர்விலும் அப்பாடல் கேட்கப்பட்டது.
மனதுக்குள் இசைஞானியின் மெட்டொலிக்கவேதான் எழுதி வைத்தேன்.
இப்போது சிந்திக்கையில் அப்பாடலின் விரிவு வியப்பூட்டுகிறது. அதுவே
பின்னாளில் ”திருவாசகம்” என்னும் நல்லிசைப் பேழையின் உருவாக்கத்திற்கான முன்னோடி என்று
சொல்லலாம். மேற்கத்திய செவ்வியலிசையான சிம்ஃபொனியைத் தமிழ் மரபிசையுடன் தேனும் பாலுமெனக்
கலந்து தெவிட்டா இன்னிசையாக்கிய பணி எளிய சாதனை அல்ல. குறிப்பாக, “முத்து நற்றாழம்
பூமாலை தூக்கி முளைக்குடந் தூபம்நற் தீபம் வைம்மின்” என்னும் பாடலினைத் தனிமையிற் கேட்டபோது
சுண்ணமிடித்தபடி அடியார் குழாமொன்று ஆனந்தக் களிப்புற்றுச் சுழன்றாடுவதான மனச்சித்திரம்
எழுந்துவந்தது. மாணிக்கவாசகர் காலத்துத் தமிழ்-சிம்ஃபொனியுடன் கூடிய ஒபெராவை இளையராஜா
வழங்கியிருக்கிறார். (ஏ.ஆர்.ரஹ்மான் இதுபோல் சூஃபி-சிம்ஃபனி ஒன்றினை உருவாக்க முனையலாம்.
மேற்கத்திய சிம்ஃபனியுடன் பழந்தமிழிசையை இளையராஜா கலந்தது போல் மேற்கத்திய செவ்வியலிசையுடன்
கவ்வாலி இசையைக் கலந்து சூஃபிப் பாடல் வரிகளை, குறிப்பாக மௌலானா ரூமி அவர்களின் பாடல்
வரிகளை ஏ.ஆர்.ரஹ்மான் தந்தால் அஃது இசை மற்றும் ஆன்மிக உலகங்களில் அரும்பணியாய் நிற்கும்).
செந்தமிழ் நடைகொண்ட இலக்கியப் பாடல்களைப் போலவே எழுதி ஏதோ பழம்பாடல்
போலும் என்பது போன்ற மயக்கத்தை ஊட்டுகின்ற வாய்ப்பினைக் கவிஞர் வாலி மிக நன்றாகவே பயன்படுத்திக்
கொண்டிருக்கிறார். அதற்கவர் பெற்றிருந்த இலக்கியத் தோய்வு, குறிப்பாக வைணவ பக்திப்
பாசுரங்களான நாலாயிர திவ்ய பிரபந்த வாசிப்பு மிகவும் உறுதுணையாயிற்று எனலாம். ‘மாசறு
பொன்னே வருக...’ (படம்: தேவர் மகன்) என்பது தேவாரப் பாடல் போன்றே ஒலிக்கின்றது. ’குணா’
என்னும் திரைப்படம் அபிராமி அந்தாதியின் உந்துதல் கொண்டதொரு கதை. பௌர்ணமி என்னுங் குறியீடும்,
இடையிடையே தொன்மப் பொருள் தொனிக்கும் வசனங்களும் (எழுதியவர் பாலகுமாரன்), ’அபிராமி’
என்று நாயகிக்குப் பெயர் வைத்திருப்பதும் இதனைச் சுட்டும். அபிராமியை குணா முதன்முதலில்
பார்க்கும் காட்சிக்கு இளையராஜா இசையமைத்த பாடல் முப்பகுதிகள் கொண்டது. அதன் முதற்பகுதியும்
மூன்றாம் பகுதியும் முறையே அபிராமி அந்தாதியின் ’நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி...’ (50) மற்றும் ‘இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி...’(42) ஆகிய இரண்டு பாடல்களையும்
கொண்டமைக்கப்பட்டுள்ளது. அதன் நடுப்பகுதி அபிராமி அந்தாதிப் விருத்தப்பாக்களின் சாயலிலேயே
எழுதப்பட்டுள்ளது. அதனை எழுதியவர் கவிஞர்.வாலி:
”பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க
ஊனுருக உயிருருக தேன் தரும் தடாகமே
மதி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே”
இப்பாடலின் இறுதி இரண்டடிகளில் எதுகைத் தொடை பயிலவில்லை என்பதனைத்
தமிழுக்குச் செவியுள்ளார் நன்கறிவர். முதன் முதலில் கேட்டபோதே எனக்கிது உறுத்திற்று.
இப்பாடல் அபிராமி பட்டர் எழுதியதல்ல என்று ஐயுற்றேன். எனினும், பொதுமக்களில் யாருக்கும்
வேறுபாடு தெரியா வண்ணம் எழுதியமைக்காக வாலியை வாழ்த்தினேன்.
’இசைப்புயல்’ என்னும் பொருந்தாக் கிளவியால் விளிக்கப்பெறும் ஏ.ஆர்.ரஹ்மான்
புதுமழைக் காற்றெனப் புகுந்து வீசிக்கொண்டிருந்த காலம். ’காதலன்’ என்னும் படத்தினது
பாடற்பேழையை இ.புயலின் தீவிர விசிறியான என் தம்பி வாங்கி வந்தான். பிரமிட் என்னும்
நிறுவனம் அப்போது இசைப்பேழைகளை வெளியிட்டுக்கொண்டிருந்தது. குறுவட்டுக்கள் வராத காலகட்டம்.
அப்பேழையின் பின்புறம் கொடுக்கப்பட்டிருந்த பாடற் தகவல்களை வாசித்தபோது வியப்பொன்று
காத்திருந்தது. அதிலொரு பாடலை எழுதியவரென்று “திரிகூடராசப்பக் கவிராயர்” என்னும் பெயர்
அச்சிடப்பட்டிருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருக்குற்றாலக் குறவஞ்சி
என்னும் தமிழ்ப்பனுவல் தந்தவர். அதிலுள்ள ‘வசந்தவல்லி பந்தடித்தல்’ என்னும் பகுதியின்
நான்காம் பாடலான “இந்திரையோ இவள் சுந்தரியோ...” என்னும் பாடலினை மட்டுமெடுத்து அற்புதமான
மெட்டெடுத்து அலங்கரித்திருந்தார் ஏ.ஆர்.ரகுமான். இலக்கியக் குறிப்புப்படி இப்பாடல்
பைரவி ராகத்தில் சாப்புத் தாளம் கொண்டு பாடப்பெறல் வேண்டும். ஆனால் இ.புயல் இதனைக்
’கேதாரம்’ என்னும் ராகத்தில் தவழவிட்டிருப்பார். இதே மெட்டினைக் கொண்டு மேலும் சரணங்கள்
சேர்த்து “என்னவளே அடி என்னவளே” என்னும் பாடலும் நல்கினார்.
ஏ.ஆர்.ரகுமான் என்றால் நவீன இசை என்றே அடையாளம் அமைந்துபோனது. அப்போதும்
அவரிடமிருந்து திடீரென்று ஏதேனுமொரு பாடல் நற்றமிழ் வரிகளைச் சுமந்து வந்து என் செவிகளில்
குறிஞ்சித் தேன் பாய்ச்சும். நான்கைந்து நாட்களுக்கு முன் இளநிலை வகுப்பொன்றில் கலிங்கத்துப்
பரணி நடத்திய போது பாடத்தின் ஊடாக ஒரு பாடலை நினைவு கூர்ந்து சொன்னேன். ’இருவர்’ என்னும்
அப்படத்தைப் பற்றி ஒரு மாணவன்கூட அறிந்திருக்கவில்லை. ”நாங்கள் பிறக்கும் முன் வந்ததெல்லாம்
எப்படி சார் எங்களுக்குத் தெரியும்?” என்று கேட்டார்கள். கிடக்கட்டும். பாடல் வரிகளை
அவர்களிடம் சொன்னேன். தூய தமிழில் எழுதும்படிப் பணிக்கப்பட்டு வைரமுத்து மிகுந்த உற்சாகத்துடன்
எழுதியதாம். “நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய் / செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்”
என்று தொடங்கும் பாடல் அது. ஏறத்தாழ அதே காலகட்டத்தில் வெளிவந்த ஒரு படத்தில் ஒரு பாடலின்
ஆரம்பத்தில் பெண்குரல் ஒன்று ’உயவுநோய்’ கொண்ட தன்மையில் வெள்ளிவீதியாரின் “கன்றும்
உண்ணாது கலத்தினும் படாது” என்னும் குறுந்தொகைப் பாடலைப் பேசுவது போல் இ.புயல் பயன்படுத்தியிருந்தார்.
அப்பாடலுக்கு ஏற்ற உணர்ச்சி அதுதானா என்பது ஆராயற்பாற்று.
இறையடியார்களின் வரலாறு நுவலும் கதைகள் கொண்ட படங்களில் பழம்பனுவல்களின்
பாடல்கள் இடம்பெறுவது இயல்பு. ஆனால், நவீன வாழ்விற்கு அத்தகு பாடல்கள் பின்னணியாக ஒலிப்பது
போல் காட்டுவது நிச்சயம் புதுமுயற்சிதான். அத்தகு முயற்சியை ‘ராமானுஜன்’ (2014) காட்டிற்று.
இருபதாம் நூற்றாண்டு கண்ட ஒப்பாரும் மிக்காருமற்ற கணித மேதையின் வாழ்க்கை வரலாற்றுப்
படம் அது. ராமானுஜத்தின் சரிதத்தை 1991-இல் எழுதிய ராபர்ட் கனிகல் தனது நூலுக்கு
“The Man Who Knew Infinity” (முடிவிலியை அறிந்த மனிதன்) என்று பெயரிட்டார். அந்நூல்
அதே பெயரில் பின்னர் 2015-இல் ஹாலிவுட்டில் திரைப்படமாக ஆக்கம் பெற்றது. அதற்கு ஓராண்டுக்கு
முன்பே ஞானராஜசேகரன் இங்கே தமிழில் ’நம்’ கணிதமேதையின் வரலாற்றினைத் திரைப்படம் ஆக்கிவிட்டார்.
இரண்டு படங்களையுமே நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் ஆங்கிலப் படத்திலில்லாத ஓர்
ஆதமார்த்தக்கூறு நிச்சயமாக தமிழ்ப்பிரதியில் இருக்கின்றது என்பேன். அது ஓர் பாடல்.
ராமானுஜத்துக்குக் கணிதமே கடவுளை அடையும் வழி. அஃது அவரின் ஆன்மிக நெறி. ஆனால், எண்களின்
முடிவிலியை அறிந்த அவரது மூளைக்குக்கூட இறைவன் எட்டாக் கனியாகவே நிற்கின்றான். அதை
அவரின் ஆன்மா ஆழமாக உணர்கிறது. அந்த மனநிலையில் ஏக்கத்தை வெளிப்படுத்த ஏற்றதொரு பாடல்
இசைக்கப்பட வேண்டிய இடத்தில் மெல்ல அலையெழுந்து தெளிந்த குரலில் ஒலிக்கிறது திருமழிசை
ஆழ்வார் இயற்றிய திருச்சந்த விருத்தப் பாடல்கள்:
விண்கடந்த சோதியாய் விளங்குஞான மூர்த்தியாய்
பண்கடந்த தேசம் மேவு பாவநாச நாதனே
எண்கடந்த யோகினோடு இரந்துசென்று மாணியாய்
மண்கடந்த வண்ணம் நின்னை யார்மதிக்க வல்லரே (27)
ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊரொடோசை ஆய ஐந்தும் ஆய ஆய மாயனே (2)
பூ நிலாய ஐந்துமாய் புணர்ந்து நின்ற நான்குமாய்
தீ நிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
மீ நிலாய தொன்றுமாகி வேறு வேறு தன்மையாய்
நீ நிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லரே (1)
வயொலின் பியானோ மற்றும் குழல் மேற்கத்திய சிம்ஃபொனி பாணியில் இழைய
இழைய, ”அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே” (மதுரகவியாழ்வார்) என்பது போல் உன்னிக்கிருஷ்ணனின்
கேட்கிறது. உயிரோட்டமுள்ள இசையைத் தந்திருக்கிறார் ரமேஷ் விநாயகம். இதே பாணியில் திருச்சந்த
விருத்தம் முழுமைக்கும் இசையமைத்து வழங்குவாரெனில் தனித்த சாதனையாய் நிற்கும்.
ஆனைக்கும் அடி சறுக்கும். பாரதியாரின் பாடலை இளையராஜா தேர்கிறார் எனில்
அற்புதமொன்றனையே எதிர்பார்ப்போம். ஏமாற்றமே கிடைத்தது என்றால் என்செய? ஏ.ஆர்.ரகுமானிடம்
பாரதியாரின் ’சுட்டும் விழிச்சுடர்’ சற்றே மங்கிவிட்டது போன்றுதான் இளையராஜாவிடம்
‘ஆசை முகம் மறந்து போச்சே’ (டூரிங் டாக்கீஸ், 2015) என்னும் அதி அழகிய கவிதையும் சோபிக்கவில்லை.
ஷங்கர் டுக்கர் இதே பாடலைத் தனது சாக்ஸஃபோன் இசை கொண்டு அலங்கரித்து வித்யா வாக்ஸ்
மற்றும் வந்தனா ஐயர் ஆகிய இரு இளஞிகளைப் பாட வைத்த பிரதி இனிமையாக இருக்கின்றது. கர்நாடக
வித்வான்கள் தமிழ்ப்பாடல்களைப் பாடுங்கால் இடம்பெறும் ஒரு டஜன் பாடல்களில் இப்பாடலும்
தவறாது இருக்கும் எனலாம். இதே பாடலைக் கார்த்தி, சுசித்ரா கார்த்தி முதலியோர் நவீன
தொழில்நுட்பக் கூடங்களி வைத்துப் பாடிப் பதிவு செய்திருப்பதும் யூட்யூபில் கிடைக்கின்றது.
சங்கீத வித்வான் ஓ.எஸ்.அருண் இப்பாடலைத் தனது தனித்த சேஷ்டைகளால் ஹாஸ்யமாக்கிவிடுகிறார்.
அதனை என் மகனுக்குக் காட்டியபோது அவரது சேஷ்டைகளைப் பார்த்துச் சிரித்து ரசித்துவிட்டு
ஒரு விமரிசனம் சொன்னானே பார்க்கலாம், “அத்தா, பாட வரலீன்னா இந்த ஆளு வேற தொழிலு பாக்கலாம்ல?”
என்றான். (’பாப் பாடகர்கள் எல்லாம் என்ன பாட்டா படிக்கிறான்கள்? அடித்தொண்டையில் கதறுகிறான்கள்’
என்று சொல்லப்படுவதில்லையா? ‘என்னடா பெரிய ஒங்க டிஸ்கோ?’ என்று சங்கராபரணத்தில் சோமயாஜுலு
கேட்கவில்லையா? பாப் மார்லி ஒரு குப்பை என்று இளையராஜாவே சொல்லவில்லையா? எனது சிற்றப்பா
ஒருவர் சொல்வார், கர்நாடக இசைஞர்களைப் பற்றி, “வயிற்று வலி வந்த மாதிரி முகத்த வச்சுக்கிட்டு
இவனுங்க கத்துறது இருக்கே...” என்பார். எல்லாம் ஒரு சார்பு கோடலின் குறைபட்ட பார்வைகள்தாம்
அல்லவா?)
’மெலொடி’ என்றால் நத்தை வேகத்தில் நகரும் இசையும் மெட்டுமாக இருக்க
வேண்டும் என்று பொதுப்புத்தியில் ஓர் எண்ணம் இருப்பது போலவே விளங்கி வைத்திருக்கும்
என் மகன் அப்படித் தன்மை கொண்ட பாடலொன்றை எனக்கு அறிமுகஞ் செய்து ’இதைக் கேளுங்க உங்களுக்கு
நிச்சயம் பிடிக்கும்” என்றான். ’அச்சம் என்பது மடமையடா’ (2016) என்னும் படத்திலுள்ள
பாடலாமது. அப்பாடல் என்னைக் கவரவில்லை. ஆனால் அதே படத்திலிருந்தான வேறொரு பாடல் சட்டென்று
மனதை ஈர்த்தது. “அவளும் நானும்...” என்று தொடங்கும் அப்பாடலை முதன்முதலில் கேட்டபோதே
அதன் வரிகளை எங்கோ வாசித்திருக்கிறோமே என்று மண்டைக்குள் குடைந்தது. யார் எழுதியது
என்று உசாவியபோது “பாவேந்தர் பாரதிதாசன்” என்று பதில் கிடைத்தது. ’போச்சுடா, ஏ.ஆர்.ரகுமான்
இப்போது பாரதிதாசனையும் ஃபேமஸ் ஆக்காமல் விடமாட்டார் போலிருக்கே?’ என்று நினைத்துக்கொண்டேன்.
இப்பாடல் குறித்து எனது (ஒன்றுவிட்ட) தம்பியிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவனொரு மென்பொறிஞன்.
தமிழிலக்கியங்கள் ஏதும் வாசித்தறியான். பாரதி பாரதிதாசனாரெல்லாம் அவனுக்கு பாடலாசிரியர்கள்
மாத்திரமே. அவன் சொன்னான், “ஐயோ செம பாட்டு. அந்த ஆளு அசால்ட்டா எழுதீருப்பாரு”. அருமையான
வரிகளுக்கு மிக அழகாக இசையமைத்து மீண்டுமொரு இலக்கிய இசையின்பத்தை ஏ.ஆர்.ரகுமான் நல்கியிருக்கிறார்.
அவரது தலைப்பாகையில் இன்னொரு சிறகு!
”அவளும் நானும் அமுதும் தமிழும்
அவளும் நானும் அலையும் கடலும்
அவளும் நானும் தவமும் அருளும்
அவளும் நானும் வேரும் மரமும்
ஆலும் நிழலும் அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும் அவளும் நானும்
அவையும் துணிவும் உழைப்பும் தழைப்பும்
அளித்தலும் புகழும் அவளும் நானும்
மீனும் புனலும் விண்ணும் விரிவும்
வெற்பும் தோற்றமும் வேலும் கூரும்
ஆறும் கரையும் அம்பும் வில்லும்
பாட்டும் உரையும் நானும் அவளும்
நானும் அவளும் உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும் பூவும் மணமும்
அவளும் நானும் தேனும் இனிப்பும்
அவளும் நானும் சிரிப்பும் மகிழ்வும்
அவளும் நானும் திங்களும் குளிரும்
அவளும் நானும் கதிரும் ஒளியும்”
குடும்பவிளக்கில் கணவனும் மனைவியும் பேசிக்கொள்வதாக பாரதிதாசன் இயற்றியிருக்கும்
கவிதைகளைத் தழுவி ”சாதி மல்லிப் பூச்சரமே! சங்கத் தமிழ்ப் பாச்சரமே!” என்னும் பாடலொன்றைப்
புலமைப்பித்தன் எழுதி மரகதமணி இசையாக்கியிருந்தார் (’அழகன்’, 1991). இப்பாடலைக் கேட்டபோது
அப்பாடலையும் நினைவு கூர்ந்தேன். எனினும் பாரதிதாசனாரின் வரிகள் குறிஞ்சித் தேன் போல்
இனிக்கின்றன.
நிற்பதுவே நடப்பதுவே - இந்த பாடலை பாடியவர் ஹரிஸ் ராகவேந்தர்.
ReplyDelete