Thursday, August 24, 2017

பூழ்தி செய்திடடா! - 2



Related image

       ”வில்லினை எடடா – கையில்
 வில்லினை எடடா - அந்தப்
       புல்லியர்க் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா!”
என்று ஒரு மகாகவி பாரதி வரிகள் புனைந்துள்ளார் (’வேலன் பாட்டு’: 23). பூழ்தி என்பது புழுதியைக் குறிக்கும் சொல். மக்கட் பேச்சில் புழுதி என்பதல்லால் பூழ்தி என்னும் சொல் வழங்கி வராமையால் இப்பாடலைப் படிக்கும் பலருக்கும் இச்சொல் பாரதி புதிதாகப் புனைந்துகொண்ட சொல் என்றும் தமிழுக்கு அவன் அருளிய கொடை என்றும் தோன்றும். அப்படித் தோன்றிய கருத்தினையே உண்மை எனப் பிழைபட ஓர்ந்து தமது “பாரதி தமிழ்” (1987) என்னும் நூலில் முனைவர்.கே.கருணாகரன் மற்றும் வி.ஜெயா ஆகியோர் எழுதிவிட்டனர். தி.ந.இராமச்சந்திரன் அதனைச் சுட்டிக்காட்டிப் பின்வருமாறு எழுதுகிறார் (தமிழாக்கம் எனது):
“’பாரதி தமிழ்’-இன் ஆசிரியர்கள் மகாகவி பாரதி ‘பூழ்தி’ என்னுஞ் சொல்லினைப் புனைந்தார் என்று ஊன்றியெழுதுகின்றார்கள். இஃதொரு பிழை. அவர்கள் தமிழ் அகராதியை அணுகியிருந்தால் அச்சொல் திருக்கேதாரம் பற்றித் திருஞானசம்பந்தர் பாடிய தோத்திரப்பா ஒன்றில் இருப்பதைக் கண்டிருப்பார்கள். ’கேழல் பூழ்தி கிளைக்கும்” என்பது அந்த ஞானப்பிள்ளையின் அவதானம். [’கேழல் பூழ்தி கிளைக்க மணி சிந்தும் கேதாரமே’ (பாடல் எண் 2707) என்று நூலில் உள்ளது – ரமீஸ் பிலாலி].
“இவ்வரியைத் தமிழ் அகராதி கிரகித்துக்கொண்ட போதும், அதற்கு முன்பே அச்சொல் (பூழ்தி) புனிதப் பேயாரால் பயன்படுத்தப்பட்டுள்ளதை அவ்வகராதியின் தொகுப்பாளர்கள் அறிந்திருக்கவில்லை. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தின் இரண்டாம் பாடல் பூழ்தி என்னும் சொல்லினைக் குறிப்பிடுகிறது. பூழ்தி என்னும் சொல்லின் பொருட்படுகின்ற, மேலும் அதிகப் புழக்கம் கொண்ட ‘புழுதி’ என்னுஞ் சொல்லினையும் அப்பதிகம் பயன்படுத்துகின்றது.”

இந்தப் பத்தியைப் படித்ததால் எழுந்த சிந்தனையே அவருக்கொரு கடிதம் வரைய எனை உந்திற்று. இன்று நான் அஞ்சல் செய்த அக்கடிதம் பின்வருமாறு:

சேக்கிழார் அடிப்பொடி’ அவர்களுக்கு,

பிஸ்மில்லாஹி தஆலா.

நமஸ்காரம்.
      அடியேனைப் பற்றி ஒரு சிறு அறிமுகம். ஜமால் முஹம்மது கல்லூரியின் நிறுவனர்களுள் ஒருவரான வள்ளல் ஃகாஜாமியான் ராவுத்தர் அவர்களின் பேத்தியின் பேரன் நான். மூன்று வயது முதல் பதினாறு வயது வரை திருவையாற்றில் வளர்ந்தேன். பாரதி இயக்கத்தில் சிறிது தொடர்பும் இருந்தது. தியாகராஜர் காலனியில் ‘இலக்கியச் சோலை’ என்னும் அமைப்பை மூன்றாண்டுகள் நடத்தி வந்தேன் (’திருப்பழனம் மகாலிங்கையர் நிலையம்’ என்னும் இல்லத்தை நீங்கள் அறிந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன். அதற்கு எதிர்வீட்டில் பதின்மூன்று ஆண்டுகள் வசித்திருந்தோம். அப்படி வளர்கையில், தில்லைஸ்தானம் திரு.ராமகிருஷ்ணன் மற்றும் திருமதி.புவனேஸ்வரி ராமகிருஷ்ணன் ஆகியோரது நட்பு சில நண்பர்கள் வழி வாய்த்தது. “சுகந்த பாரதி” இல்லத்திற்கு நான் சில முறை சென்று வந்ததுண்டு. அப்போது தங்கள் அக்காள் அவர்களையும் கண்டிருக்கிறேன். நான் வரைந்த சில கரிக்கோல் சித்திரங்களை அவர்கள் பெரிதும் பாராட்டினார்கள். அவ்வில்லத்துக் கொழுந்துகளான ஸ்வர்ணா மற்றும் பரத் ஆகியோருடன் பல விஷயங்கள் பற்றி உரையாடியிருந்த அனுபவங்கள் இனிய நினைவுகளாய் இருக்கின்றன. கல்லூரிப் படிப்பிற்கென்று திருச்சிக்கு வந்த பின் அத்தொடர்பு மங்கிற்று. ஜமால் முகம்மது கல்லூரியிலேயே கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழ்ப் பேராசிரியராகப் பணிசெய்து வருகிறேன். 

      கவிஞர் திருலோக சீதாராம் அவர்களின் நூற்றாண்டு விழா என்று நினைவு. திருவையாற்றில் பாரதி இயக்கத்தின் சார்பில் நடந்த அவ்விழாவில் அடியேனும் ஐந்து நிமிடங்கள் பேசினேன். அந்திக்குப் பிறகான அமர்வில் நீங்கள் பேசினீர்கள். இன்னொரு நிகழ்வில், தஞ்சை பெசண்ட் ஹாலில் உங்களின் உரையை கேட்டிருக்கிறேன். நிகழ்ச்சி தொடங்கும் முன்னதாக திரு.வி.எஸ்.ஆர் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த ஞாபகம். அப்போதே, என் மாணவப் பருவத்தில், தங்களின் மொழியாக்க நூற்கள் சிலவற்றை வாங்கி வாசித்திருக்கிறேன், குறிப்பாக மகாகவி பாரதி பாடல்களின் மொழிபெயர்ப்புக்கள். மேலும், திரு.தி.சா.ராஜு அவர்களின் சில நூற்களையும் படித்திருக்கிறேன். திருலோக சீதாராம் அவர்களின் மொழிபெயர்ப்பிலான ‘சித்தார்த்தா’ படித்திருக்கிறேன். 

      திரு.ரவிசுப்பிரமணியம் அவர்கள் தங்களைப் பற்றி உருவாக்கிய ஆவணப்படத்தை நேற்று யூட்யூபில் கண்டேன். பழைய நினைவுகள் நெஞ்சிற் கிளர்ந்தன. ஏழெட்டு ஆண்டுகட்கு முன்பே உங்களுக்கொரு கடிதம் எழுத எண்ணி ஏதோ காரணத்தால் தவிர்ந்து போயிற்று. அவ்விஷயம் இப்போது மீண்டும் ஞாபகம் வந்து எழுதத் தோன்றியது. அது, “பூழ்தி” என்னுஞ் சொற் பற்றியதொரு கருத்து.

      1993-ஆம் ஆண்டு தாங்கள் ஆங்கில ஆக்கத்துடன் வெளியிட்ட ”THE HYMNS OF KAARAIKKAAL AMMAIYAAR” என்னும் நூலின் முகவுரையில் “பூழ்தி” என்னுஞ் சொல்லினை பாரதி உண்டாக்கவில்லை, அவருக்கும் முன்பே திருஞானசம்பந்தரும் பேயாரும் அச்சொல்லினைக் கையாண்டுள்ளனர் என்னும் தகவல்களைத் தந்திருக்கின்றீர். எனது மொழிப்புலமை செம்மைப்பட நூல்வழி அமைந்த ஆசான்மாருள் நீங்களும் ஒருவர் என்னும் நன்றியமைய அடியேன் பின்வரும் செய்தியினை உங்களுக்குத் தெரிவிக்க விழைகிறேன்.

      மகாகவி பாரதி பிறந்து வளர்ந்த எட்டயபுரத்தில் வாழ்ந்து அடங்கியிருக்கும் இஸ்லாமியப் பெருங்கவி உமறுப்புலவர் செய்த “சீறாப்புராணம்” என்னும் பாரகாவியத்துள் “பூழ்தி” என்னுஞ் சொல் இடம்பெற்றிருக்கிறது. அடியேன் வாசித்த வகையில் கிடைத்த சான்றுகள் இவை:
      ”கரிய பூங்குழல் சென்னிறப் பூழ்தியிற் கரந்து” (சீறா:1:7:63)
      ”தேறிலா துறுக்கி யிருகரம் புதைப்பச் செறிதரு பூழ்தியை வாரி” (சீறா:2:3:116).
      ”பங்கிகள் பூழ்தியிற் பதிய ........” (சீறா:2:3:126)
      ”பூழ்தியெடுத் தெற்றி யெறிந்த வரவும்… …..“ (சீறா:3:3:83)
      ”விரைவிற் துடைத்தான் வாய்ப்பூழ்தி யுமிழ்ந்தான்...” (சீறா:3:3:92)
      ”புதயக் கிடந்த பூழ்திதுடைத் தெழுந்தார்...” (சீறா:3:3:95)

      புழுதி என்பது பூழ்தி என வழங்கப்படுவதுடன் மேலும் மருவி ‘பூழி’ என்றும் வடிவங் கொள்ளும். புழுதி நிறைந்த கொடிய காட்டிற்கு இராமன் செல்ல வேண்டும் என்று கைகேயி சொல்வதாக அமைந்த பிரசித்தமான பாடலில் ”பூழி வெங்கானம் நண்ணி” (க.ரா: 1690) என்று கம்பன் யாப்பதைக் காண்கிறோம்.

      இந்தப் ”பூழி” என்னும் வடிவத்தையும் உமறுப்புலவர் கையாண்டிருக்கிறார். ”உடுத்த பூழியிற் புதைமணி யெனவுட லொடுங்கி” (சீறா:1:4:47; நாச்சிகுளத்தார் பதிப்பு (செப்டம்பர் 1974)) என்று அவர் பாடுகிறார். இவ்வரிக்கு, “தரித்த பூழ்தியின்கண் புதைந்த விரத்தினத்தைப் போன்று...” எனப் பொழிப்புரை வரைகிறார் சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர்.

      கவிஞர் திருலோக சீதாராம் அவர்களைப் பற்றிய விழாவில் நீங்கள் பேசுகையில் “a chaste pearl embedded in mud” என்றொரு வரியை அவர் தமிழில் எப்படி மொழிபெயர்த்தார் என்று சொன்னதாக ஞாபகம். “பூழியிற் புதைமணி” என்னும் சொற்றொடர் அதனை எனக்கு நினைவூட்டுகிறது.

      தமிழ் லெக்ஸிகான் செய்த அறிஞர் பெருமக்கள் காரைக்கால் அம்மையாரையே நினைவு வைத்திருக்கவில்லை என்னும்போது சீறாப்புராணத்தைப் படித்திருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது நியாயமன்று.

      எட்டயபுரத்தில் வாழ்ந்திருந்த உமறுப்புலவர் ஆழ்வார் பாடல்களிலும் கம்பராமாயணத்திலும் தோய்ந்து தமிழறிவு முதிரப் பெற்றிருப்பார் என்பதென் துணிபு. அதற்கான சான்றுகளை சீறாப்புராணம் நெடுகிலும் பரக்கக் காணலாம். அவற்றையெல்லாம் தனியொரு ஆய்வாக நிதானத்துடன் நிகழ்த்தி வருகிறேன், பாற்கடல் நக்கப் புகுந்ததொரு பூனையைப் போல.

பணிவுடன்.,
முனைவர்.அ.தௌஃபீக் ரமீஸ்,

      தி.ந.இரா அவர்கள் சீறாப்புராணம் படித்திருப்பர் என்றே ஊகிக்கிறேன். எனினும் அவரெழுத்துக்களில் அதற்கான சான்று ஏதும் கிட்டில என்பதை ஆதரவு கொண்டே அவருக்கு மடல் எழுதத் துணிந்தேன். எண்பத்துமூன்று அகவை நிரம்பிய ஒரு பெரியவருக்கு இப்போது போய் ஒரு செய்தியை அறிவித்தல் அவசியமா என்று கேட்பது நியாயமல்ல. ”கல்வி கரை இல, கற்பவர் நாள் சில” (நாலடியார்:135) என்னும் சமணமுனிவர் வாக்கு அட்சரலட்ச உண்மை அன்றோ?

 

No comments:

Post a Comment