இறைவன்
சொன்னான்
’நானே காலம்’
எல்லாம்
காலத்தில் இருக்கின்றன
எல்லாம் அவனில் இருக்கின்றன
இடமென்பது
வந்ததெல்லாம்
காலத்தை அவதானிக்கத்தான்
இங்கிருந்து
அங்கே
அங்கிருந்து
இங்கே
இத்தனை
இத்தனை நேரம் என்று
கணக்கிட்டுப் பார்த்துக்கொள்வதற்கே
ஒரு விண்மீனுக்கும்
இன்னொன்றுக்கும்
எவ்வளவு
தொலைவு?
சேணெடுந்தொலைவுகள்
அளக்கப்படுகின்றன
ஒளி காணும்
யாத்திரையின்
காலம் என்னும் கணக்கில்தான் அல்லவா?
இடத்தில்
இருக்கின்றன எல்லாம்
காலத்தில் இருக்கின்றது இடம்
அசையாத
ஏக காலத்தில்
அசைகின்றன எல்லாம்
இடத்தில்
பொருள் கொள்ளும் அசைவோ
நேரிய தொடர்க் கணங்கள் காணும்
காலமென
இருக்கும் ஏகனே
அசைக்கின்றான் உள்ளன எல்லாம்
ஒரு கணத்திலிருந்து
அடுத்ததற்கு
ஒரு நிமிடத்திலிருந்து
அடுத்ததற்கு
ஒரு நாளிலிருந்து
அடுத்ததற்கு
ஒரு வாரத்திலிருந்து
அடுத்ததற்கு
ஒரு மாதத்திலிருந்து
அடுத்ததற்கு
ஓர் ஆண்டிலிருந்து
அடுத்ததற்கு
அத்தன்மைத்தே
ஆகின்றது
ஒரு வாழ்விலிருந்து அடுத்ததற்கு
அவரவர்
வாழ்வுதான்
காலத்தின் அளவையோ?
ஈசலால்
அவதானிக்கக் கூடுமோ
நேற்றென்பதும் நாளை என்பதும்?
நாளறிவிக்கும்
சேவலுக்கும் தோன்றுமோ
பத்தாண்டுகள் என்னும் திட்டமெதுவும்?
தொங்கித்
தவமியற்றும் வவ்வால்
அறியுமோ காலத்தைத் தலைகீழாய்?
காலப்
புனலில்
உயிர்தான் படகோ?
குளம்
ஓடை ஏரி நதி
குறுங்கடல்
பெருங்கடல்
ஏதாக
இருப்பினும் என்ன?
எதில்
மிதந்த போதும்
படகு
தொடுவதெல்லாம்
அதனளவு மட்டுமே அல்லவா?
கடலினைத்
தன்னுள் அள்ளிக்கொள்ளும்
கப்பலெனச் செய்க உன்னறிவை!
ஆழியை
நாழி
முகக்கும்
வித்தை பயில்!
ஒவ்வொரு
பொருளும்
கண்ணில்
தெரியும்
காலச் சுவடு
கிளைகளில்
பசுந்தளிர்
ஓரிரு நாட்கள்
பாலுண்
குழவி
ஒரு சில மாதம்
என் இல்லக்
கூடு
ஆனது ஈராண்டு
என் மகனின்
பிராயம்
பன்னீராட்டை
ஆடியில்
என் பிம்பம்
நாற்பதின் நிறைவு
முச்சந்திப்
பெருமரம்
முக்கால் நூற்றாண்டு
இருவிழி
நிறையும்
இரவின்
வான்வெளி
எத்தனை யுகங்கள்?
கடலின்
ஒரு துளி
காட்டும் கடல் சுவை
காலமென
நின்றானைச்
சுவைத்தல்
கூடும்
காலமெலாம்
உட்குவிந்த
’இக்கணம்’
ஒன்றில்
No comments:
Post a Comment