Sunday, August 13, 2017

மரப்பாச்சி

genre: short story




      காலை ஏழு மணி ஆகிறது. ஜன்னலின் வழியாக சாய்ந்து விழும் பொன் வெய்யிற் கற்றைகள் சுவரில் படியும் ஜாலத்தில் தான் எங்கோ விண்ணில் மிதப்பது போன்ற உணர்வை நிம்மதியான மூச்சுடன் அனுபவித்தார் கித்தாபு. ஹாலில் இருந்து உள்ளே செல்லும் மரக்கதவின் நிலையில் கடைந்து செய்யப்பட்டுள்ள பூவேலைப்பாடுகளின் மீது வெய்யில் படிந்து பளபளத்தும் குழிவுகளில் நிழற்றியும் முப்பரிமாணமாகத் துலங்கும் அழகு அப்படியே மிதந்து வந்து தனது இரு விழிகளுள் ஒற்றைக் காட்சியாய் நுழைந்து மூளையின் திரையில் விழுவது இரு பரிமாணப் படமாகவா அல்லது ஒரே பரிமாணத்திலா அல்லது அதற்குப் பரிமாணமே இல்லையா? காலம் என்பதுதான் நாமிருக்கும் பிரபஞ்சத்தின் நான்காம் பரிமாணம் என்று கண்டறிந்தாராமே ஐன்ஸ்டீன். அதன் திரவத்தன்மையை இப்போது மிக நன்றாகவே உணரமுடிகிறது, உடல்நலம் குன்றி நோய் முற்றி நான்கைந்து முறை மருத்துவமனையில் வாசம் செய்து வந்து ’இனி வரத்தேவையில்லை’ (’பற்று வைத்த புற்று விரைவில் கணக்கை முடித்துவிடும்’) என்னும் கருணைமிகு கைவிரிப்பிற்குப் பிறகு ’ரஹ்மத் மன்ஜில்’-இன் வரவேற்பறையில் கிழக்கு நோக்கிய ஜன்னலின் அருகில் மரப் பெஞ்சில் கிடத்தப்பட்டதிலிருந்து. 

      சரிதான், கித்தாபு சாஹிப் சிந்திக்கத் தொடங்கிவிட்டார். மூளை பலம் ரொம்பவுமே ஜாஸ்தி. இருக்காதா பின்ன? தாள் தாளாகப் படிப்பதற்கே தயக்கம் காட்டும் ஜீவிகள் நிரம்பிய குடும்பத்தில் புத்தகம் புத்தகமாகக்கூட அல்ல நூலகம் நூலகமாக மண்டைக்குள் மண்டிய அதிசியப் பிறவியல்லவா கித்தாபு சாஹிப். அது அவரின் இயற்பெயரல்ல. 1937-இல் அவர் பிறந்தபோது பைல்வானைப் போலிருந்த அவரின் உடலமைப்பைக் கண்டு சிலாகித்து, மசித்த பேரீத்தங்கனிச் சதையுடன் மலைத்தேனும் குழைத்து வாய்க்குள் தடவி மௌலானா மௌலவி முஹம்மது சுலைமான் பாகவி அவர்கள் அல்லாஹுவின் பிரதிநிதியாய் நின்று சூட்டிய பெயர் ‘முஹம்மது உமர்’ என்பது. பெயருக்கான விளக்கத்தையும் ஒரு குட்டி பயானாக அப்போது அவர் சொன்னார். “நாயகத்தோட இரண்டாவது கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு. அவுங்க மிகச் சிறந்த வீரர். தேக பலம் உள்ளவுங்க. அவுங்க ஆட்சீலதான் இஸ்லாம் கிழக்குக்கும் மேற்குக்கும் பரவுச்சு. முப்பது லட்சம் சதுர மைலுக்கு கவர்னரா இருந்து ஆண்டவுங்க. ரொம்ப பேணுதலான சீதேவி.” 

இப்படியாக உமர் என்னும் பெயரின் வரலாற்றுப் பின்னணியைச் செப்பி முடித்தும் ஆவி பறக்கும் சூட்டோடு வழங்கப்பட்ட தேத்தண்ணியைச் சீப்பிக் குடித்தும் மௌ.மௌ.மு.சு அவர்கள் எழுந்து செல்ல எத்தனிக்கையில் வாசல் வரை வழியனுப்பத் தானும் எழுந்த பிள்ளையின் தந்தை காவன்னா பாவன்னா சாகிபு அவரிடம் கேட்டார், “ஏங்க அஸ்ரத், பிள்ளைக்கு முழுப்பேரு என்னமோ சொன்னீகளே?”. தாடியைக் கோதியபடித் திரும்பிப் பார்த்த அஸ்ரத் “முஹம்மது உமர்” என்று பகர்ந்தார். “அதில்லீங்க. பின்னெ பயான் செஞ்சப்ப சொன்னீகளே, உமர் ரலீ…என்னவோன்னு நீட்டமா?” அஸ்ரத் லேசாகக் குலுங்கிச் சிரித்துச் சொன்னார், “உமர் ரலியல்லாஹு அன்ஹு”. “புள்ளைக்கு இவ்வளவு நீளமான பேரு வச்சா எப்படீங்க கூப்பிடறது? நமக்கு அரபியெல்லாம் தெரியாதுங்களே?” என்று தனது ஐயத்தை வினவினார் காவன்னா பாவன்னா ((எ) காதர் பாட்சா). ”உஸ்...” என்று புகைவண்டி போல் ஊதிவிட்டு அஸ்ரத் கனிவுடன் சொன்னார், “அது பிள்ளைக்கு வச்சப் பேரில்லீங்க. கலீஃபாவோட பேரு. பிள்ளைக்குப் பேரு முஹம்மது உமர். நீங்க உமர்னு கூப்டாலே போதும்.”

முப்பது லட்சம் சதுர மைல்களை ஆட்சி புரிந்த கலீஃபா உமரின் பெயரைச் சூட்டப்பட்ட கா.பா.முஹம்மது உமர் என்னும் மைந்தன் பாப்பாக்காடென்னும் அவ்வூரில் பணக்கார வீட்டுப் பிள்ளையாக சிங்கக் குருளை போல் வளர்ந்தான். விவசாயம் கடலைக்காடு எள்ளு கொள்ளு வகையறாக்கள் என்று ஆஸ்தி கண்ட அத்தா ஒரு குறுநில மன்னரைப் போலவே வாழ்ந்தார். இரண்டு மனைவியர் மட்டுமல்லாது மூன்று வைப்பு நிதிகளை வேறு தனது அமால் நாமாவில் பதிவு செய்துகொண்டவர் அவர். துரைமார்களுடன் அவருக்கு நட்பு இருந்தது. வாரத்தில் மூன்று நாட்கள் ’கிளப்’ப்க்குக் கிளம்பிச் சென்று ப்ரிஜ் ஆடி வருவார்.  செவிப்பழக்கத்தில் கொஞ்சம் ஆங்கிலம் பேசுவார். “டூ வைஃப்ஸ் அண்ட் த்ரீ வைப்ஸ்” என்று சிலேடையாகச் சொல்லிக் கெக்கலிப்பார். அவ்வகைச் சல்லாப வாழ்க்கையால் ஆஸ்தி நாஸ்தியாகிவிட்டது. ஹூருல் ஈன்களை நாடி அவர் தாருல் பகாவுக்குப் பயணமானபோது உமருக்குப் பதினெட்டு வயது. முப்பதுக்கு இருபது சதுரடி அளவிலான வீடு ஒன்று மட்டுமே கையில் எஞ்சிற்று. ஏழு தம்பிகளையும் ஐந்து தங்கைகளையும் தானொருவனாகத் தாங்கிக் கரையேற்ற வேண்டிய நிலை. இறுதிவரை ஏகபத்தினி விரதனாகவே வாழ்ந்துவிட்ட உமர் உழைத்ததும் குடும்பம் மேலும் வீழ்ந்துவிடாமல் தூக்கி நிறுத்தியதும் புதுக்கோட்டை அன்னவாசல் குடுமியான்மலை கீரனூர் திருச்சி கறம்பக்குடி அறந்தாங்கி பேராவூரணி காரைக்குடி கானாடுகாத்தான் பொன்னமராவதி இலுப்பூர் அரியலூர் காட்டுபாவாப்பள்ளி என்று உறவுகளின் நெட்வொர்க்கைப் பரத்தியதும் எல்லாம் ஒரு தனிச் சரித்திரம். வேறு சந்தர்ப்பத்தில் அதைச் சொல்கிறேன்.

அத்தாவைப் போலல்லாது உமர் சான்றோர் நட்பில் வளர்ந்தார். கற்றாரை மட்டுமே காமுற்றார். பின்னாளில் தமிழகமெங்கும் புகழீட்டிய இலக்கிய மற்றும் அரசியல் பேச்சாளர் ‘போர்முரசு’ கீரை.அறிவழகன், உயர்நீதி மன்ற நீதிபதியாய் இருந்து ஓய்வு பெற்ற ஜஸ்டிஸ்.ஐ.மு.லக்‌ஷ்மிநாராயணன், திரைகடல் ஓடியும் தீனிசை பரப்பிய ‘தமிழ் தான்சேன்’ மீ.ஈ.மீரான் கனி ராவுத்தர், ‘தயிர்வீதி’ என்னும் நவீன இஸ்லாமியப் புதினம் எழுதி ஊரொதுக்கம் கண்ட எழுத்துச்சித்தர் கவிஞர்.புவிக்கோ என்று அவரது அணுக்கத் தோழர்களின் பெயர்ப்பட்டியல் நீள்வதே அதற்குச் சான்று. அப்படியென்றால் இவர் மட்டும் ஏன் பிரபலமாகவில்லை என்று கேட்கலாகாது. விதி என்று ஒன்று இருக்கிறதல்லவா? இவர் குடத்துள் இட்ட விளக்காகவே இருக்க வேண்டும் என்று எழுத்தாணி கீறிவைத்துள்ளதே? எனினும் இவருக்கு மட்டும்தான் அந்தக் கதி என்றும் ஆகிவிடவில்லையே. ஒன்னாப்பு முதல் எட்டாப்பு வரை இவருடன் பயின்று வந்த ஒருசாலை மாணாக்கர்களான கணபதி என்பார் அஞ்சல் துறையில் பணியாற்றினார், ஆனைக்கு அரைக்கால் டவுசர் போட்டது போல் ஊரையே வலம் வந்துகொண்டிருந்த கேசவமூர்த்தி லைன்மேனாக இருந்தார், ஐந்து வருடங்களுக்கு முன் பேரப்பிள்ளைகளைப் பார்க்கவென்று  போன இடத்தில் அமெரிக்காவில் ஸ்கொயரில் வைத்துத் தவறிப்போன ராமநாதன் கிராமசேவாக இருந்தவர், இளநரை உபயத்தால் ’கொக்கு’ என்று பட்டப்பெயர் கண்ட பரமசிவம் தந்தைவழி அமர்ந்து மளிகைக் கடையுடன் அறுபதாங் கல்யாணம் முடித்தவர், பாரதிதாசனின் மானசீக சீடன் என்று பறைசாற்றும் முகத்தான் முகத்தில் கருநிறப் பட்டாம்பூச்சி போல் மீசை வைத்துக்கொண்டவரும் ‘கதிரொளி’ என்னும் சிற்றிதழ் நடாத்தியவரும் ’அரிவாளினை எடடா – ஒரு இளநீர்க்குலை விழவே!’ என்னும் கவிதைக்காக ஊரளவில் சில காலம் பேசப்பட்டவருமான கவிஞர்.வரிப்புலி என்னும் பீர் முஹம்மது அஞ்சுக்கும் பத்துக்கும் விழாக் கவிதைகள் எழுதியே வீழ்ந்தவர். இப்படியான குடத்துள் இட்ட விளக்குகளும் உமரின் அணுக்கத் தோழர் குழாத்தில் உள்ளனர் என்பதை கவனத்தில் வைக்கவும்.

கரையிலாக் கடலான கல்வியில் காததூரமாவது தினமும் நீந்தாவிட்டால் அந்நாள் பாழ்பட்டுப் போனதாக உமர் உணர்ந்தார். அத்தா காவன்னா பாவன்னா வலிய தேடிய குஸ்திகளில் சுத்துப்பட்ட கிராமத்து முக்கியஸ்தர்களின் மூக்குகளை நிஜமாகவே உடைத்து ‘வஸ்தாது’ என்று பெயர் பெற்றிருந்தார் என்றால் உமரோ உருவத்தால் வலிய வஸ்தாது போலிருந்தும் உள்ளத்தால் மிக மென்மையும் அமைதியும் கொண்டிலங்கினார். அத்தா சிற்றின்பத் துறையில் நுண்மான் நுழைபுலம் கண்டவர் எனில் உமரோ தன் மனையாள் சொலையா பீவியை அன்றி வேறு மாதரை மனத்தாலும் தீண்டியறியாத ‘ஆன்றவிந்தடங்கிய சான்றோர்’ எனப் பிறங்கினார். அத்தாவோ, திண்ணைப்பள்ளியில் ’பிஸ்மில்லாஹ்’ சொன்ன நாளன்றே, தன்னைக் கடிந்தார் என்னும் காரணத்தால் சினந்து உஸ்தாதின் நெற்றியில் ஆணியால் அலிஃப் எழுதி அவரை ஐயங்காராக்கிவிட்டு வீட்டுக்கு ஓடிவந்தவர். ‘படிக்க மட்டும் சொல்லாதீங்க. நானும் உங்களோட வந்து யாவாரத்தப் பாக்குறேன். இந்த பொஸ்தகப் பொழப்பெல்லாம் எனக்கு வேண்டாம்’ என்று ஏழுவயதிலேயே ’கட்டன்ரைட்’டாகத் தனது தந்தை சக்கரை கனி ராவுத்தரிடம் சொல்லி உரிமையை நிலைநாட்டியவர். உமருக்கோ தொடக்கப் பள்ளியில் அவருக்கு அறிவுக்கண் திறந்து வைத்த வைத்தியநாத ஐயர் ஊட்டிய ஊக்கத்தால் புஸ்தகம் வாசிக்கும் ரசனை முற்றிக்கொண்டது. ”புஸ்தகம் கரபூஷணம்” என்று அவர்தான் சொல்லித் தந்து அவரை நூலும் கையுமாக்கினார்.

 முஸ்லிம் என்போன் ’யாவாரம்’ செய்யப் பிறந்தோன், துணிமணிகள் வாங்கி ஜிலுஜிலுவென்று உடுத்துவான், வாசனாதி திரவியங்கள் மூளைக்கு ஏறி மயக்கும்படியாகத் தடவிக்கொள்வான், அரபுக் கிரந்தங்கள் ஓதுவான், பெரிய டம்ளரில் தேத்தண்ணீர் அருந்துவான், நாஷ்டாவுக்கெனில் ஆட்டுக்கால் பாயாவும், வெண்சோற்றுக்கு பெருங்கறித்துண்டுகள் மிதப்பதும் அவை கொழுப்புக் கரைசலிலேயே சமைக்கப்பட்டதுமான தாழியானம் ஊற்றி வாழைக்காய் ரசமும் அப்பளமும் சேர்த்துப் பிசைந்து வயிறு முட்டச் சாப்பிடுவான், வீட்டுக்கு வரும் உறவினர்க்கும் நண்பர்க்கும் வட்டிலப்பம் விளம்பித் தானும் ருசித்து, அவர் சென்ற பின்னர் வருவிருந்து பார்த்திருப்பான், தனது இல்லப் பெண்களுக்கு நகை நட்டுகள் சேர்த்துப் பெருமிதம் கொள்வான் என்னும் பொதுப்புத்தியின் புரிதலை உடைக்கத் தலைப்பட்டார். வீட்டிலொரு நூலகம் உண்டாக்கினார். மார்க்க நூற்களோடு இலக்கிய நூற்களும் (பாரதி மட்டுமன்று அவனின் ஆதர்சக் கவியான ஷெல்லியும் அவர் ஷெல்ஃபில் உண்டு) வாங்கிக் குவித்தார். கூத்தாநல்லூர் ஆதம் டிரஸ்ட் வெளியிட்ட குர்ஆன் விரிவுரை பாகங்கள், தென்னூர் வளர்மதி பதிப்பகத்திலிருந்து ஜமால் முகமது கல்லூரி ஆசிரியர் சையது இப்றாஹீம் வெளியிட்ட ‘இஸ்லாம் பரவிய வரலாறு’ பற்றிய நூற்கள், ஆர்.பி.எம் கனி வெளியிட்ட சூஃபித்துவம் பற்றிய நூற்கள், நாகூர் வித்வான் கண்ணகுமது மகுதூம் முகம்மது எழுதிய இஸ்லாமிய இலக்கிய நூற்கள், தமிழ்த்தாத்தா என்றழைக்கப்பட்ட உ.வே.சா பதிப்பித்த பழந்தமிழ் இலக்கியங்கள், வ.ரா., செல்லம்மாள் ஆகியோர் எழுதிய பாரதி சரிதைகள், மறைமலை அடிகள் எழுதிய மனவளக்கலை நூற்கள், பஞ்ச தந்திரக் கதைகள், வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய விருவிருப்பான துப்பறியும் கதைநூற்கள், உரைவேந்தர் வை.மு.கோ வெளியிட்ட கம்பராமாயண உரைநூற்கள் என்றிவற்றுடன் தான் மிக உரிமையுடன் ’மாமா’ என்றழைத்த தமிழறிஞர் மு.வ அவர்கள் எழுதிய நூற்களெல்லாம் புத்தம் புதுப் பிரதிகளாக ’ரஹ்மத்’ மன்ஜிலில் குடியேறின. அவ்வளவு சிறிய வீட்டில் தனது தனியறை என்று அவர் ஒதுக்கிக்கொண்ட பத்துக்குப் பத்து அறையில் ஒரு சுவரில் வைத்த அலமாறியில் ஆயிரத்து சொச்சம் நூற்கள் இருந்தன. அவர் உண்பதும் உறங்குவதும் எல்லாம் அதில்தான். “தாரிக் படிப்பகம்” என்று பெயரிடப்பட்ட அந்த அறையில் தூண்டுநூற்கனங்களோடு அவர் அமர்ந்திருக்கும் காட்சியைக் காண்போர் ஏதோ ஜின் கனங்களோடு அவர் தலிஸ்மாத்து செய்துகொண்டிருப்பது போல அஞ்சி விலகினர். இவ்வாறாகத் தனக்கேயான ஓருலகை அவர் உருவாக்கிக்கொண்டார். ”எப்பப்பாத்தாலும் படிச்சிக்கிட்டே இருக்கீங்களேண்ணே போரடிக்காதா?” என்று கடைசித் தம்பியான அசனுல்லா கேட்டபோது அவன் தலையில் ஆதூரமாகத் தடவி “படிச்சுப் பாத்தீங்கன்னாத்தானேத்தா தெரியும்? அரபுக் கதை சொல்லீருக்கேன்ல. அதுல ஒரு பறக்கும் பாய் வருமே?” என்றார். ஆமாம் என்றான் அசன். “அது மாதிரி இந்த புஸ்தகம் ஒவ்வொன்னும் ஒரு பறக்கும் பாய்!” என்றார். அசனுக்கு ஆச்சரியம் தாளவில்லை. “இதுங்க மேல ஏறி உட்காந்துக்கிட்டா பறக்குமா?” என்று விழிகள் விரியக் கேட்டான். தம்பியின் கற்பனையை ரசித்துச் சிரித்தபடி அவனிடம் சொன்னார், “நிச்சயம் பறக்கும்ப்பா. ஆனா, படிச்சாத்தான் பறக்கும்.”

கா.பா.முஹம்மது உமர் ’தாள்’களில் தளைப்பட்டதால் தன் நாமம் கெட்டு ‘கித்தாபு’ என்னும் பட்டப்பெயர் அடைந்த காரணச் சரிதையை நுவல்வான் முனைந்து இவ்வளவு பேசிவிட்டேன். ’கிதாப்’ என்னும் அரபிச் சொல்லுக்கு நூல் என்று பெயர். இவருடைய வாசிப்புக் கிறுக்கைக் கண்டு இப்பெயர் வைக்கப்பட்டது. வைத்தது யாரென்று தெரியவில்லை. அவரின் குப்பிம்மா மகனும் கிருத்துருவம் பிடித்தவனுமான ஜெய்னு வைத்த பெயராகத்தானிருக்கும். ஊராருக்கெல்லாம் பட்டப்பெயர் வைப்பதே தன் கடனென்று பணி செய்து கிடந்தவன் அவன். இதில் சாதி மத பேதமெல்லாம் அவனுக்க்குக் கிடையாது. கட்சி பேதம்கூடக் கிடையாது. அவனது அலும்பு தாள முடியாத நிலையை எட்டியிருந்த காலத்தில் ஒரு பெருநாளன்று ’கொத்வா’ மைதானத்தில் வைத்து சுற்றமும் நட்பும் சூழ வளைத்து உடலெங்கும் நையப் புடைத்தனுப்பியதும் ‘ஊர் வேண்டேன் பேர் வேண்டேன் உற்றாரை இனி வேண்டேன்’ என்று ஓடிப்போனவன்தான், எங்கே இருக்கிறானோ? பாம்பேயில் வைத்துப் பார்த்ததாக ’பால்கிதாபு’ வீட்டு மீரா லெவ்வை சொன்னார். புருனை சுல்தானிடம் வேலை பார்க்கிறான் என்று நானாமூனாக் குடும்பத்தார் ஒருவர் தகவல் அனுப்பினார். ’அவனா இருக்காதுங்க. அவன் சாடையில வேற யாரையாவது பாத்திருப்பாங்க. அவன் வாய்க்கு ரெண்டா நாளே தல உருண்டிருக்கும்’ என்று கித்தாபு சாஹிபின் ’சிச்சா’ சாவன்னா பாவன்னா ((எ) சாதிக் பாட்சா)  சொல்லிவிட்டார். ஆக எப்படியோ, தெய்வாதீனமாக, முஹம்மது உமர் என்பார்க்கு ’கித்தாபு’ என்னும் காரணப் பெயர் வாய்த்து அதுவே அனைவர் வாயிலும் நிலைத்துவிட்டது. அவர்தான், இப்போது 2017-இல் தனது எண்பதாம் வயதில் படுத்தப் படுக்கையாய்க் கிடக்கிறார்.

’புல் தடுக்கி பைல்வான்’ என்றொரு சொலவடை உண்டு. பைல்வான் போன்றிருந்த கித்தாபு சாஹிப் தேகத்தை நோய் தின்னவும் எலும்பும் தோலுமாகி நறுக்கிப் போட்ட அருகம்புல் போன்று அந்த மெத்தையில் கிடக்கிறார். கண்கள் குழிகளுக்குள் அமிழ்ந்து விட்டபோதும் ஏதோவொரு தீட்சண்யத்தோடு ஒளிர்கின்றன. நோயின் வெப்புக்கு மீறியதொரு குளுமை அவற்றில் நிரம்பியிருக்கிறது. எட்டு மணிக்கு ஒரு தம்ளர் பால் குடித்தார். ஊற வைத்த ரஸ்க் மூன்று துண்டங்கள் உள்ளே இறங்கிற்று. இனி மதிய உணவுதான். இடையில் வெதுவெதுப்பாக ஒரு தம்ளர் நீர் அருந்துதல் மட்டுமே.

நான்கு நாட்களாகவே ‘இன்னிக்கு என்ன கெழம?’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். காரணம் இருக்கு. அவரது கூட்டாளி ராஜாராமன் நலம் விசாரிக்க வருகிறார். ஒரு வாரத்துக்கு முன்பே செய்தி வந்துவிட்டது. இன்று அந்த நாள். வீடெங்கும் இரைந்து கிடந்த பொம்மைகள் நோட்டுப் புத்தகங்கள் எல்லாவற்றையும் ஒதுக்கித் துப்புறவு செய்து நாற்காலி மேசைகளை எல்லாம் ஒழுங்குபடுத்தி ’கொடவ்னு மாதிரி கிடக்குது. வீடு வீடாவா இருக்கு?’ என்று இரண்டு மகள்களையும் வைதபடியே ஒப்புரவாக்கி வைத்தாள் மருமகள். கவுச்சி தெரியாது ரூம் ஸ்ப்ரே அடித்து வைத்தாள். ரோஜா இதழ்களின் நறுமணம் காற்றில் அலையடித்து வந்து அறைக்குள்ளும் சுழன்று மிதந்து கித்தாபுவின் நாசிக்குள் நுழைந்தது. கண்கள் கிறங்குவது போல் பாவனை செய்தார் கிழவர். இமாம் சஅதி எழுதிய ‘குலிஸ்தான்’ என்னும் ரோஜாவனத்தில் நுழைந்துவிட்டது அவரின் பிரக்ஞை.

கி.பி.1258. பாரசீக சாம்ராஜ்யத்தின் பிரசித்தி பெற்ற நகரங்களுள் ஒன்றான ஷீராஸ். வசந்த காலத்து அதிகாலை. சிவப்பு ரோஜாக்கள் தென்றலில் தலையசைத்துச் சிரிக்கும் மலர்த்தோட்டம். அதன் நடுவே ஒரு வெண்பளிங்கு மேடையில் மாணவர் குழாத்துடன் அமர்ந்திருக்கிறார் ஐம்பது வயது கொண்ட அறிஞர் முஸ்லிஹுத்தீன் சஅதி. நெடிய தேகம். வெண்ணிற அங்கியும் நீல நிறத்தில் பூவேலைப்பாடுகள் செய்த தலைப்பாகையும் அணிந்திருக்கிறார். கையில் தானியற்றிய குலிஸ்தான் காவியத்தின் பிரதியை வைத்திருக்கிறார். கூர்மையான நாசிக்கு மேல் இருபுறமும் சுர்மா தீட்டப்பட்ட நீள நயனங்கள் கூர்மையான பார்வையுடன் பளபளக்கின்றன. ஈரமும் தீரமும் ஒருசேர இலங்கும் பார்வை. அறிஞர் பெருமகன் சன்னமான ஆனால் தெளிவான குரலில் சொல்கிறார், “உள்ளே செல்லும் மூச்சு ஓர் அருட்கொடை. வெளியேறும் மூச்சு ஓர் அருட்கொடை. ஆக, ஒவ்வொரு ஸ்வாசத்திலும் இரண்டு அருக்கொடைகள் உள்ளன. ஒவ்வொரு அருட்கொடைக்கும் ஒருமுறை இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டியது கடமையாகிறது. எனவே, ஒவ்வொரு ஸ்வாசத்திலும் இரண்டு முறை நன்றி செலுத்த வேண்டியவர்களாய் இருக்கிறோம்!” அவர் பேசிக்கொண்டிருக்கிறார். அருகில் புல்புல் பறவை ஒன்று அன்றலர்ந்த ரோஜாவைச் சுற்றிச் சுற்றிப் பறந்து வந்து கொஞ்சுகிறது.

கிளி ஒன்று பீதி கொண்டு அலறுவது போல் சப்தம் எழுந்ததில் கித்தாபு சாஹிப் தனது கற்பனை கலைந்து விழித்தார். அழைப்பு மணி அழுத்தப்பட்டிருக்கிறது. மூத்த பேத்தி ஃபரீதா வெளிக்கதவம் நோக்கிப் பாய்வதைப் பார்க்கிறார். உள்ளே யாரோ இரண்டு மூன்று நபர்கள் நுழைவதை உள்ளே சாய்ந்து விழும் நிழல்கள் காட்டுகின்றன. ‘உமரு…’. இழுபடும் குரலில் தன் வாழ்நாள் நண்பனை உணர்கிறார். வாக்கிங் ஸ்டிக்கை ஊன்றி நடந்தபடி உள்ளே வரும் அந்த தடித்த ஆகிருதியின் முகத்தில் அழுகையும் சிரிப்பும் முயங்கிக்கொண்டிருப்பதான பாவனை. அருகில் நாற்காலியை நகர்த்தும்படி சைகை காட்டுகிறார். திண்டுக்கல்லில் செட்டில் ஆகிவிட்ட ராஜாராமனின் மகன் வெங்கடேஸ்வரன் நாற்காலியை நகர்த்தி வைத்து அப்பாவை மெதுவாக அமர வைக்கிறார். ”சௌக்கியமா அப்பா?” என்று கேட்கிறார். கித்தாபு சாஹிபின் கை காற்றில் அளைகிறது. வெங்கிட்டு அவருக்குத் தன் கையை நீட்டுகிறார். பற்றி மெல்ல தடவிக்கொடுத்தபடி நன்றாயிருப்பதாக ஒரு புன்னகையில் பதில் சொல்கிறார். உட்காரும்படி ஜாடை காட்டுகிறார். தலையில் சேலையால் முக்காடிட்டுக்கொண்டு கதவின் விளிம்பில் நின்றிருக்கும் மருமகளைப் பார்த்துக் கையை உயர்த்தி அபிநயம் பிடிக்கிறார். “என்ன?” என்கிறார் ராஜாராமன். “தேத்தண்ணி போடச் சொல்றாங்க மாமா. உங்களுக்குச் சக்கரை போடலாங்களா?”

தேநீர்க் கோப்பையைப் பிடித்திருக்கும் ராஜாராமனின் கரம் லேசாக நடுங்குகிறது. “என்னடா இப்படி ஆயிட்டெ?” என்று கேவுகிறார். இருவரின் கண்களும் சுரக்கின்றன. “அட என்னப்பா நீ? யாரு அப்படியே இருந்துட்டாங்க சொல்லு? உடம்புக்கு விதிச்சது இப்படித்தான். உடம்பு நானில்லன்னும்போது என்ன கவல?” என்கிறார் கித்தாபு. காலியான தேநீர்க் கோப்பையை மேசையில் வைத்துவிட்டு எழுந்த வெங்கிட்டு பக்கத்தில் ஒரு வேலை இருப்பதாகவும் ஒரு மணிநேரத்தில் வருவதாகவும் சொல்லிச் செல்கிறான். முதியவர்கள் பழங்கதைகளைப் பேசிக்கொண்டிருக்கட்டும்.

நாள் எப்படி நகர்கிறது என்னும் உசாவலுக்கு கித்தாபு பதில் சொல்கிறார். மூத்த பேத்தி ஃபரீதா படிப்பில் மிகவும் கெட்டிக்காரியாம். ஆறாம் வகுப்புப் பயில்கிறாள். வயதுக்கு மீறிய மொழிப்புலமை கொண்டவள். தமிழாகட்டும் ஆங்கிலமாகட்டும், அவள் வாசித்தால் நாளெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கலாம் என்கிறார். குர்ஆன் மிகவும் ராகத்தோடு ஓதுவாளாம். தினமும் மாலையில் அவளை நூல் வாசிக்கச் சொல்லிக் கேட்பது வழக்கமாகிவிட்டது என்கிறார். சாம்ப்பிள் காட்ட விரும்புகிறார். “ஃபரீதா” என்றவர் அழைத்த குரல் ராஜாராமுக்கே சரியாகக் கேட்கவில்லை. ஆனால் அந்தச் சிறுமி வந்து நின்றாள். உள்ளுணர்வின் பலமோ என்னவோ? என்று ராஜாராம் வியந்துகொண்டார். புத்தக அலமாறியின் பக்கம் சுட்டிக்காட்டி கித்தாபு சாஹிப் காட்டிய சாடையைப் புரிந்துகொண்டவளாக ஒரு நூலை எடுக்கிறாள். ரேண்டமாக அப்படி எதையாவது எடுத்துப் படிப்பதுதான். அவள் கையில் பாரதியார் கவிதைகள் வருகிறது. பழைய நூற்பிரதி. பைண்டிங் செய்து வைத்தது. ஏறத்தாழ எல்லா நூற்களுமே அப்படித்தான் இருக்கின்றன. “படிம்மா” என்று மங்கிய குரலில் அவர் சொல்லவும் நூலை கைப்போக்கில் பிளந்து அவள் வாசிக்கத் தொடங்குகிறாள்:

சுயசரிதை

கனவு

“பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்
மெல்லப் போனதுவே” – பட்டினத்துப் பிள்ளை
முன்னுரை
வாழ்வு முற்றுங் கனவெனக் கூறிய
மறைவலோர்தம் உரைபிழை யன்றுகாண்;
தாழ்வு பெற்ற புவித்தலக் கோலங்கள்
சரதமன்றெனல் யானும் அறிகுவேன்;
பாழ்கடந்த பரநிலை என்றவர்
பகரும் அந்நிலை பார்த்திலன் பார்மிசை;
ஊழ் கடந்து வருவதும் ஒன்றுண்டோ?
உண்மை தன்னொலொர் பாதி யுணர்ந்திட்டேன்.
     
       பேத்தி வாசிக்கத் தொடங்கியதிலிருந்தே சிரிப்பொன்று பொங்கியபடி இருந்தது கித்தாபு சாஹிபுக்கு. வாசித்தது போதும் என்றவளைக் கையமர்த்திவிட்டு ராஜாராமிடம் சொன்னார், “எவ்வளவோ வரிக இருக்கு இலக்கியத்துல. இந்தப் பாரதிய பாத்தியா, சுயசரிதைக்கு எந்த வரிய எடுத்து ஆரம்பிக்கிறான்னு? பட்டினத்தாரோட வரிக. பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே... இந்த விரக்தி வராம வாழ்க்கைய திருப்தியா முடிச்சவுங்க ரொம்பக் கம்மிதான் போல. இல்ல என்ன மாதிரி ஆளுக்குத்தான் இப்படியெல்லாம் தோணித் துருவுமோ என்னமோ? உண்மை தன்னிலொர் பாதி உணர்ந்திட்டேன்... உண்மை சூரியன மாதிரி. அதோட பாதியத்தானே பாத்துக்கிட்டிருக்கோம்? முழுசா யாரு பாத்தாங்க? பாக்காட்டியுந்தான் என்ன? மீதிச் சூரியனும் அதே மாதிரித்தானே இருக்கும்? பாதி பாத்தாலே முழுசும் பாத்த மாதிரிதான்னு சொல்லலாம்ல?”. கண்ணோரம் நீர் வழிகிறது. ராஜாராமன் அவரின் கைகளைப் பிடித்துக்கொள்கிறார்.
       
       கையிலொரு பொம்மையை வைத்துக்கொண்டு உள்ளே வருகிறாள் சிறிய பேத்தி. இரண்டரை வயதாகிறது. “ரெண்டாவது. ரஹ்மத்து. அம்மாவோட பேரு” என்று சொல்லி அறிமுகப்படுத்துகிறார். குழந்தை அவர்கள் இருவரையும் பார்த்துவிட்டுத் தனது அகவுலகில் நுழைந்துவிட்டது போல் அமர்ந்து பொம்மையை மடியில் போட்டுக்கொண்டு விளையாட்டில் ஆழ்கிறாள்.
       
      பதினோரு மணிவாக்கில் வந்து ராஜாராமனை வெங்கிட்டு அழைத்துப் போனான். கடைசிச் சந்திப்பு என்பது போல் இருவருக்குமே பட்டது. (‘செம்புலம்’ சிற்றிதழின் கடைசிப் பிரதியைப் பிரசவித்து எடுத்துக் கையில் வைத்துப் பார்த்திருந்த போது அதுதான் இறுதிப் பிரதி என்று ராஜாராமனுக்குத் தோன்றியிருக்குமா?) தான் மய்யித்தாகி அவ்வீட்டின் கூடத்தில் கிடத்தப்பட்டிருப்பது போலவும் இன்று வந்தது போலவே கைத்தடி ஊன்றியபடி வந்து தன்னைத் தன் நண்பன் பார்ப்பது போலவும் கற்பனை செய்தார் கித்தாபு. அந்நாள் வெகு தொலைவில் இல்லை என்பது போல் உணர்ந்தார். அறைக்குள் விளையாடியிருக்கும் பேத்தியைப் பார்த்தார். மடியில் பொம்மையைப் போட்டுக் கொஞ்சிக்கொண்டிருந்தது. பரணிலிருந்து எடுத்துத் தரப்பட்ட பழைய மரப்பாச்சி பொம்மை அது. அவரின் கடைசித் தங்கை தவ்லத்து வைத்து விளையாடியது என்று நினைவு. புதிய பொம்மை வரும்வரை இதை வைத்து விளையாடட்டும் என்று கொடுத்திருக்கிறார்கள். துபாயிலிருந்து தாரிக் வரும்போது புதிய பொம்மை வாங்கி வருவானாம். அது அழகிய பெண் பொம்மையாம். முஸ்லிம் பெண் குழந்தைகள் விளையாடுவதற்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் ஹிஜார்பி (ஹிஜாப் அணிந்த பார்பி) என்னும் பொம்மையாம். அன்னிய ஆடவர்க்கு அப்பொம்மை தனது கரம் சிரம் கால்களைக் காட்டாதாம். இந்த மரப்பாச்சி பொம்மையோ இப்போது ஆணா பெண்ணா என்றுகூட சொல்ல முடியாதபடிக்குத் தேய்ந்து கிடக்கிறது. 

மரப்பாச்சியைத் தனது மடியிலிட்டு விளையாடிக்கொண்டிருக்கும் பேத்தியை கித்தாபு கண்ணிமைக்காது பார்த்துக்கொண்டிருந்தார். அவளில் தனது அம்மாவைப் பார்த்தார். பெண் பிள்ளைகளுக்கு அவர்களின் குழந்தைப் பருவத்திலேயே தாய்மைப் பண்பு துலங்கத் தொடங்கிவிடுகிறது. பொம்மை அவளின் குழந்தையாகிவிடுகிறது. அதனை அவள் வாஞ்சையுடன் போஷிக்கிறாள். அதற்கு அமுதூட்டுகிறாள். தட்டிக்கொடுத்துத் தூங்கச் செய்கிறாள். அத்தகையதொரு அன்பான பிஞ்சுக் கரம் தட்டிக்கொடுத்தால் நிம்மதியாய் உறங்கிப்போகலாம் என்று கித்தாபுக்குத் தோன்றிற்று. சூரியனின் மறுபகக்த்தைப் பார்த்துக்கொண்டிருப்பது போல் அவரின் கண்கள் சுடர்ந்தன.


No comments:

Post a Comment