Wednesday, September 29, 2010

பெருவெடிப்பு மன்னர்கள்!



கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்ட இனம்தான் நம் தமிழினம் என்பதைப் பிரபஞ்சவியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆராய்ச்சி நிரூபித்துவிட்டது என்பதை நான் எழுதிமுடித்து மைகூட காயவில்லை. அதற்குள்ளாகச் செய்தி அறிந்த பல தமிழன்பர்கள் நேரில் வந்தும் அலைபேசியிலும் தங்கள் விம்மித நிலையைத் தமிழில்கூட வெளிப்படுத்த இயலாமல் தவித்தார்கள். 'சங்கப் புலவர்' நமச்சிவாயம் அவர்கள் என் கைகளைப் பற்றிக்கொண்டு, "அந்த வெள்ளைக்கார விஞ்ஞானியை அழைத்துவாருங்கள் தம்பி.சங்கத்தின் சார்பில் அவருக்குத் 'தமிழ்த்தாயின் தலைமகன்' என்று விருது வழங்குவோம்" என்று நெகிழ்ந்தார்.நான் என் கைகளை உருவிக்கொண்டு என் கண்களில் கசிந்த கண்ணீரைத் துடைத்தவனாக, "ஐயா, உண்மையிலேயே அவருக்குத் தலை மட்டும்தான் வேலை செய்கிறது! ஆனால் அவர் தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்தவரில்லையே? எப்படித் தமிழ்த்தாயின் தலைமகன் என்று அழைப்பது. வேண்டுமானால் ஒன்று செய்வோம். 'தமிழ்த்தாயின் தத்துமகன்' என்று விருது வழங்குவோம்!" என்று கூறினேன். என் ஆலோசனை அவருக்கு மகிழ்ச்சி தரவே சகப் புலவர்களிடம் இதைக் கூறி இறும்பூது எய்தச் சென்றார்.இதை நான் எப்படி ஸ்டீபன் ஹாக்கிங்கிடம் கூறுவேன்?


இன்னும் சிலர் அவருடைய 'காலத்தின் சுருக்கமான வரலாறு' என்ற நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கலாம் என்றும், அவருக்கு ஞான பீட விருதே வழங்கலாம் என்றும் கருத்துக் கூறினார்கள். தமிழ் இளைஞர்கள் சிலர்கூடி "இசுதீபன் ஆக்கிங்கு தமிழ்ப் பேரவை" தொடங்கியிருப்பதாகவும் ஒரு அன்பர் நவின்றார். இன்னொரு அன்பர் பல்கலைக்கழகம் ஒன்றில் அல்லது பலவற்றில் ஸ்டீபன் ஹாக்கிங்கின் பெயரால் ஒரு இருக்கை அமைக்கவேண்டும் என்றார். இப்படிப் பலரும் பல ஐடியாக்களை என் முன் பொழிந்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள். இப்பொழுதே கவிஞர்கள் சிலர் ஸ்டீபன் ஹாக்கிங் பிள்ளைத்தமிழ், இசுடீபன் ஆக்கிங்கு மகாகாவியம் என்றெல்லாம் இலக்கியம் படைக்கத் தொடங்கிவிட்டார்கள் என்றும் அறிந்தேன். தலை சுற்றியது. 

ஒரு கருத்து வெளியானால் அதை எல்லோருமே ஏற்றுக்கொண்டு விடுவார்களா என்ன? ஸ்டீபன் ஹாக்கிங்கின் அனுபவமே ஒரு மாயை என்றும், அதற்கும் "கல்தோன்றி மண்தோன்றா..." என்ற பாடல் வரிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் சிலர் மறுப்புக் கூறியுள்ளார்கள். இத்தனைக்கும் என் கருத்து அந்த வரிகளுக்குப் பொருத்தமாகத்தான் உள்ளது.
"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றிய மூத்தக் குடி"
என்பதில் உள்ள "வாள்" என்பதற்கு ஒளி என்று ஒரு பொருள் உள்ளது அல்லவா? அதைத்தான் ஸ்டீபன் ஹாக்கிங்குடைய ஆய்வின்படி பெருவெடிப்பில் தோன்றிய ஒளி என்று நான் கொண்டு அப்போதே தமிழினம் பிறந்துவிட்டது என்று நிறுவியிருந்தேன். இதைத் தமிழ்வீறு.மா.மு.இளவேங்கை என்பவர் வன்மையாகக் கண்டித்து மறுத்துள்ளார். "செந்தமிழ்க் கொம்பு" என்னும் மாத இதழில் அவர் எழுதியுள்ள முப்பது பக்க வீருரையில் ( பத்திரிகை மொத்தம் முப்பத்து நான்கு பக்கங்கள், விளம்பரங்கள் உட்பட!) அவர் கூறியிருப்பதாவது:
"தமிழர்களே! ஆரோ இசுதீபன் ஆக்கிங்கு என்னும் அறிவியலாளனின் பெயரால் இரமீசு பிலாலி என்னும் பித்தன் பிதற்றியுள்ளதை அறிந்து நெஞ்சு வேகின்றோம்."வாளொடு முன் தோன்றிய மூத்த குடி" என்பதில் உள்ள 'வாள்' என்பதற்கு ஒளி என்று பொருள் கூறிப் பிழையான கருத்தைப் பரப்பியுள்ளார். இது தமிழரின் வீரச் சிறப்பை அறவே இருட்டடிப்புச் செய்யும் சதி என்று அறிக. 'வாள்' என்பதற்குப் 'போர்வாள்' என்பதே பொருத்தமான பொருளாம். கல்லும் மண்ணும் தோன்றும் முன்பே தமிழ்க்குடி தோன்றிவிட்டது என்பதில் இசுதீபன் ஆக்கிங்குடன் நமக்குக் கருத்து வேறுபாடில்லை. ஆனால் நம் தமிழ்க்குடியின் முன்னோர் அப்போதே போர்வாளுடன் செருக்களம் புகுந்து விழுப்புண்கள் ஏற்று விளையாடி வந்தவர்கள் என்பதை எக்காளத்துடன் எடுத்தியம்புகிறேன்!"
தோழர் இளவேங்கை அவர்கள் எக்காளத்துடன் கூறுகிறாரோ இல்லை எகத்தாளத்துடன் கூறுகிறாரோ, நான் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டேன். உண்மையில் இளவேங்கை அவர்கள் என் கருத்தை இன்னும் முன்னகர்த்திச் சென்றுள்ளார். அதாவது பெருவெடிப்பு நிகழும் கணத்திற்கு முன்பே தமிழ்ப் புலவர்கள் தோன்றிவிட்டார்கள் என்றால் அப்போதே தமிழ் மன்னர்களும் தோன்றியிருப்பார்கள் அல்லவா? அதாவது சேர சோழ பாண்டிய மன்னர்கள் எல்லாம் பெருவெடிப்பு மன்னர்கள்! BIG BANG EMPERORS! அதுமட்டுமல்ல, பெருவெடிப்பு என்னும் அந்த அற்புத நிகழ்வே திரண்டு நின்ற பிரபஞ்சப் புள்ளியைச் சேர வேந்தன் சூளுரைத்துத் தன் வாளால் கீரியவுடன் வெடித்துச் சிதறியதுதான்!
திருவிளையாடலில் மிகவும் புகழ் பெற்ற ஒருவிளையாடலை நீங்கள் அறிவீர்கள். 'பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா?' என்று பாண்டிய மன்னனுக்கு ஐயம் வந்ததே, அதுதான். அந்தப் புதிரும் இப்போது விடுபட்டு விடை கிடைத்துவிட்டது பாருங்கள். பெண்ணின் கூந்தல் மணம் பிரபஞ்சம் தோன்றிய அந்த ஆரம்பக் கணத்தின் நறுமணம்தான். அந்தக் கணத்தில் பிரபஞ்ச வெளியில் ஒளியும் புகையுமாக இருந்ததாகத்தானே அறிவியல் கூறுகிறது? பெண்ணின் கூந்தல் மணம் அந்தப் பிரபஞ்ச சாம்புராணிப் புகையின் நறுமணம்தான்! அவளுடைய அழகில் ஒளிரும் தேஜஸ் அந்தப் பெருவெடிப்புத் தருணத்தின் ஒளிதான்! இதுதான் தேஜஸ்வினி ரூப தத்துவம்!


இதனைத் தொடர்ந்து வேறு வாசிப்புக்களும் கிளம்பி வந்துகொண்டுள்ளன. சூபித்துவத்தில் ஈடுப்பட்டு கொண்ட என் நண்பர் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டு தன் விளக்கத்தை முன்வைத்தார். (இவர் ஹஜ்ரத் ஜாங்கிரி பாபா என்னும் சூபி ஞானியின் சீடராவார்.குல்பர்காவில் எனக்கு அறிமுகமானார். பின்பு நான்கைந்து முறை நாகூரிலும் சந்தித்துள்ளேன்.) அவர் சொன்ன கருத்தாவது: "வாள் என்றால் ஒளி என்னும் அர்த்தம் சரிதான். ஆனால் அது இறைவன் முதன்முதலாகப் படைத்த ஒளியைக் குறிக்கும். அது நூறே முஹம்மதி என்னும் நபிகள் நாயகத்தின் ஒளிதான். அந்த ஒளியோடு தோன்றிய முதல் குடி சூபிகள் ஆவர். அதாவது தமிழர்கள்தான் உலகில் தோன்றிய முதல் சூபிகள்!" என் சூபி நண்பர் இதற்குத் திருக்குறளை வேறு ஆதாரம் காட்டுகிறார். அதாவது,
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு"
என்பதில் வரும் "ஆதி பகவன்' என்பது இந்த நூறே முஹம்மதி என்னும் முதல் ஒளியைத்தான் குறிக்கிறதாம்!

நுண்ணுயிரியல் துறையில் ஆராய்ச்சிகள் செய்துவருபவரும் தமிழ் ஆர்வலருமான பேராசிரியர்.குரியகோஸ் இன்னொரு கோணத்தில் தன் கருத்தை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். அதன்படி, "வாளொடு முன்தோன்றிய மூத்த குடி" என்பதே தவறாம். பாட பேதமாம். "வாலொடு முன் தோன்றிய மூத்த குடி" என்றுதான் இருக்கவேண்டுமாம். சரிதான், ஐயா லெமுரீயாக் கண்டத்தின் குரங்கு விஷயத்திற்கு வருகிறார் என்றுதான் இதைப் பார்த்ததும் நினைத்தேன். ஆனால் அவர் சொல்லியிருந்ததோ வேறு. கல்லீரலும் மண்ணீரலும் தாயின் கருவறையில் தோன்றுவதற்கு முன், ஏன் கருவே தோன்றுவதற்கு முன், வெறும் தலையும் வாலுமாகத்தான் உயிரணுக்கள் ஜீவ நீரில் நீந்திக் கொண்டிருக்கின்றன. அதைத்தான் 'வாலோடு முன் தோன்றுதல்' என்கிறார் அவர். நல்லவேளை, முன்தோன்றிய வால் என்று கொண்டுகூட்டிப் பொருள் கொண்டு வேறு வகையில் விளக்காமல் இருந்தார்! அது டார்வின் தியரியைப் பிளந்திருக்கும். பின்னால் வால் முளைத்த குரங்குகளாக மற்ற இனங்களெல்லாம் காடுகளில் உலவி வந்த காலத்தில் முன்னால் வால் முளைத்து எழுந்து நடந்த முதல் இனம் தமிழினமே என்னும் கருத்து உண்மையிலேயே மிகவும் புரட்சிகரமானதுதானே!     
  



5 comments:

  1. //காடுகளில் உலவி வந்த காலத்தில் முன்னால் வால் முளைத்து எழுந்து நடந்த முதல் இனம் தமிழினமே என்னும் கருத்து உண்மையிலேயே மிகவும் புரட்சிகரமானதுதானே!//

    கண்டிப்பா!

    சின்ன சந்தேகம்,

    காலத்திற்கு முன்னாலா, காலத்தில் முன்னாலா?
    ஏன்னா இப்பவும் தமிழ் ஆண்களுக்கு முன்னால் தான் வால் முளைக்குது, அதான் கேட்டேன்!

    ReplyDelete
  2. தங்களுக்கு யாப்பெருங்கலக்காரிகை எழுதிய காலம் பற்றி தெரியுமா..? தெரிந்தால் தகவலை பகிர்ந்துகொள்ளவும்..

    ReplyDelete
  3. இரும்பு கண்டு பிடிக்கப் பட்டதே 'தாவீது' காலத்தில்தானே.
    பெரும் வெடிப்புக்குப் பின் தானே உலகம் தோன்றியது. அதற்குப் பின் எத்தனையோ கோடி வருடங்களுக்குப் பின் தானே மனித இனம் தோன்றியது.
    ஒரே கன்ஃபூஸனா இருக்கே.

    ReplyDelete
  4. //நான் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டேன். உண்மையில் இளவேங்கை அவர்கள் என் கருத்தை இன்னும் முன்னகர்த்திச் சென்றுள்ளார். அதாவது பெருவெடிப்பு நிகழும் கணத்திற்கு முன்பே தமிழ்ப் புலவர்கள் தோன்றிவிட்டார்கள் என்றால் அப்போதே தமிழ் மன்னர்களும் தோன்றியிருப்பார்கள் அல்லவா? அதாவது சேர சோழ பாண்டிய மன்னர்கள் எல்லாம் பெருவெடிப்பு மன்னர்கள்! BIG BANG EMPERORS! அதுமட்டுமல்ல, பெருவெடிப்பு என்னும் அந்த அற்புத நிகழ்வே திரண்டு நின்ற பிரபஞ்சப் புள்ளியைச் சேர வேந்தன் சூளுரைத்துத் தன் வாளால் கீரியவுடன் வெடித்துச் சிதறியதுதான்!///

    பெருவெடிப்பு= CO !!!

    நல்ல நகைச்சுவை

    ReplyDelete
  5. உங்களுடைய எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களின் ரகசிய ரோஜா படித்தேன். வேறு ஏதாவது நூல்கள் எழுதியுள்ளீர்களா? ஆமென்றால் , எனக்கு அந்த புத்தக பட்டியல் வேண்டும். நான் எப்படி உங்கள் புத்தகங்களை வாங்குவது? எனது 9677120065 நம்பருக்கு sms அனுப்ப முடியுமா?

    ReplyDelete