Sunday, September 26, 2010

பறக்கும் லிங்கம்


தலைப்பைப் பார்த்ததும் ஏதோ புராணக் கதையில் வரும் சம்பவம் என்று நினைக்க வேண்டாம். அல்லது, கல்லூரி மாணவனோ தாந்திரீகச் சாதகனோ கண்ட அமானுஷ்ய கனவு என்றும் எண்ணவேண்டாம். வேறு என்னதான் விஷயம் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன், சொல்கிறேன்.

"உடம்பெல்லாம் பல்லு. அது என்ன?" - சீப்பு.
"ஒரே பெட்டியில் ரெண்டு தைலம்?" - முட்டை.
இப்படியெல்லாம் கிராமங்களில் விடுகதை போடுவார்களே, அதுபோல் இதுவும் ஒரு தாந்திரீக விடுகதை என்று வைத்துக்கொள்ளுங்கள். இப்போ சொல்லுங்க, "பறக்கும் லிங்கம். அது என்ன?" - விமானம்!

இதை நான் கூறவில்லை. டான் பிரவுன் (DAN BROWN ) எழுதிய டிசப்ஷன் பாய்ண்ட் (DECEPTION POINT ) நாவலில் வரும் ஒரு விமான வருணனை இது. அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலக விமானத்தைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: "Rachel got out of the chopper and gazed up the steep gangway at the bulging hull. Into the flying phallus." (Chapter #6)


ஆனால் விமானத்தின் இரு பக்கங்களிலும் அசையாத இரண்டு இறக்கைகள் நீட்டிக்கொண்டுள்ளன. வானில் பறக்கும் விமானத்தைத் தரையிலிருந்து  அண்ணாந்து பார்த்தால் அது ஒரு பறக்கும் சிலுவைபோல் தோன்றும். அவ்வாறு சிறகுகளை அசைக்காமல் பருந்து மட்டும் மிக உயரத்தில் வட்டமிடுவதைப் பார்க்கலாம். கருடன் என்னும் பறக்கும் சிலுவையில் பயணம் செய்வது ஏசுநாதறல்ல, கிருஷ்ணன்!



விமானத்தை பறக்கும் சிலுவை என்று வைத்துக்கொண்டாலும்தான் என்ன? சிலுவையின் நேர்க்கோடு லிங்கம் என்றும், அதன் குறுக்குக்கோடு யோனி என்றும் ஒரு குறியீட்டு வாசிப்பு உண்டு.

விமானம் கண்டுபிடிக்கப்பட்டது ரைட் சகோதரர்களின் நினைவு மனத்தால் என்றாலும், பின்னால் அதற்கு இப்படியொரு வடிவத்தைக் கொடுத்த தொழில்நுட்பன் (Technologist ) தன் நினைவிலி மனத்திலிருந்துதான் கொடுத்திருக்கிறான். ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானத்தின் வடிவம் ஒரு வவ்வாலைப் போல் இருக்கும். அந்த வடிவத்தின் முன்னோடி ஓவியர் லியோனார்தோ டாவின்சி ஆவார். வவ்வாலின் வடிவத்தில் அவர்தான் முதன்முதலில் விமானத்தைக் கற்பனை செய்து வரைந்தார். அதற்கு ஓர்நிதோஹாப்டர் (Ornithohopter ) என்று பெயர்.

  

பறக்கின்ற வாகனம் ஒன்றிற்கு இப்படியொரு குறியீட்டு வடிவத்தை அவன் கொடுத்துத் திருப்தி அடைந்ததன் உளவியல் பின்னணி என்ன? எந்த ஒரு உயிரியல் சக்தி அவனை மண்ணை நோக்கி, இக உலகை நோக்கி இழுக்கிறதோ, அதே சக்தியைக் கொண்டு அவன் விண்ணை வசப்படுத்த விரும்புகிறான் என்பதுதான் அது!




3 comments:

  1. அன்பு ரமீஸ் பிலாலி,
    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    எல்லாம் ‘சிவ மயம்’ என சிலர் சொல்வது போல எல்லாம் ‘லிங்க’ மயமாக பார்க்கும் உங்கள் பார்வை கி.ராஜ்நாராயணும், இந்திரா பார்த்த சாரதியும் கலந்த கலவையாய் கவர்சியான எழுத்துகளாக மிளிர்கிறது. விசயம் ஏற்புடையதோ இல்லையோ அதை வெளிப்படுத்தும் உங்கள் எழுத்தாற்றல் நிச்சயமாக அற்புதமானது. எல்லாவற்றையும் கேலியுடன் கேள்விகுட்படுத்தும் உங்கள் எழுத்தின் நோக்கம் வெறும் ‘இன்டெலக்சுவல் பிளசராக’ குறுகி விடுவது மட்டும் தான் மிகவும் கைசேதம். ஒரு சாதகனாகிய தாங்கள் உள்வாங்கிய ஆன்மீக கருத்துகளை அறிவு ஜீவிகள் ஆர்வமுடன் வாசிக்கும் வகையில் (பலான கி.ரா. பாணி நகைச்சுவையையை சற்றே தவிர்த்து) எழுத வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள். அது நமது குருமார்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகவும், நமது சகமனிதர்களுக்கு நாம் செய்யும் உபகாரமாகவும் அமையும் என்பது என் கருத்து. அத்தகைய தங்களின் எழுத்துகளை அனுமதித்தால் என் வலை தளத்திலும் வெளியிட/மீள் பதிவு செய்ய மிகவும் விரும்புகின்றேன். தங்களின் அன்பான பதிலை எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் . onoorulameen@gmail.com.
    இத்தனை அற்புத ஆற்றல் வெறும் ‘இன்டெலக்சுவல் பிளசருக்காக’ மட்டும் வீணாகிறதே என்ற கவலையுடன்,நட்புடன்,
    ஒ.நூருல் அமீன் ஃபைஜி

    ReplyDelete
  2. ஐயா,

    இன்று முதல் நான் ரசிக்கும் சில எழுத்தாளர்களில் நீங்களும் ஒருவர்.

    ஆழமான, உயிரோட்டமுள்ள மத உணர்வை உங்களது எழுத்துக்களில் காண்கிறேன்.

    வாழ்க வளமுடன் !!

    ReplyDelete
  3. //அவனை மண்ணை நோக்கி, இக உலகை நோக்கி இழுக்கிறதோ, அதே சக்தியைக் கொண்டு அவன் விண்ணை வசப்படுத்த விரும்புகிறான் என்பதுதான் அது!//

    சரி. புராணத்தில் பேசிய புஷ்பக விமானம் எப்ப‌டி இருந்திருக்கும் இதே போல லிங்க ரூபத்திலா?

    ReplyDelete