Saturday, September 3, 2022

காலம் கனிந்து வரும்

 

("ஆமிர் கலீமி” - ஆகஸ்டு 2022 மாத இதழில் வெளியான கட்டுரை.)



               காலம் என்பது மனித அறிவின் எல்லைகளைக் கடந்த ஒரு பெரும்பொருள். காலத்தின் முன் மனித அறிவு திகைத்தும் வியந்தும் உறைந்து நின்றுவிடுகிறது.

            காலத்துடன் மோதும் மனிதன் தோல்வியே அடைகிறான். ஏனெனில், காலத்துடன் மோதுவது இறைவனுடன் மோதுவதாகும். ”நானே காலமாக இருக்கிறேன் (அனத் தஹ்ரு)” என்பது இறைவாக்கு (ஹதீஸ் குத்ஸி: புகாரி:4549 & முஸ்லிம்: 2246.)

            ”காலத்தின் மீது சத்தியமாக!

             மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்,

             இறை நம்பிக்கை கொண்டு

             நற்செயல்களாற்றி

             ஒருவருக்கொருவர் உண்மையுறுத்தி

             தம்முள் பொறுமை உய்த்தோர் தவிர.”

            (103:1-3)

            நாம் காலத்தை உணரும் அடையாளங்களாக இரவும் பகலும் இருக்கின்றன. அவை இறைவனால் தொடர்ந்து படைக்கப்படுபவை. “நிச்சயமாக அல்லாஹ் இரவைப் பகலுள் நுழைக்கிறான், பகலை இரவுக்குள் நுழைக்கிறான்” (22:61). மேலும், அவன் சொல்கிறான்:  கட்டளை என் கையில் இருக்கிறது; இரவையும் பலகையும் சுழலச் செய்கிறேன்.” (புகாரி:4549 & முஸ்லிம்: 2246.)

            காலம் என்பது ஒரு படைப்பு என்னும் நோக்கில், காலம் சுயமாக நன்மையோ தீமையோ செய்யாது, லாபமோ நட்டமோ தராது. நாஃபி’ஃ (நற்பயன் அளிப்போன்) என்பதும் ழார்ரு (இடரளிப்போன்) என்பதும் இறைவனின் திருநாமங்கள். அவ்விரு பண்புகளும் அவனுக்கே உரியன. அவனல்லாத எதற்கும் சுயமாக அப்பண்புகள் கிடையாது. எனவே, படைப்புகள் தாமாகவே நன்மை தீமை செய்யா. காலம் என்பது தானே லாபமோ நட்டமோ தராது.

            காலம் என்பது இறைவனின் கருவி என்னும் நிலையில் அதைக் கொண்டு அவன் ஏற்றமும் இறக்கமும் செய்கிறான், லாபமும் நட்டமும் தருகிறான், நன்மையும் தீமையும் படைக்கிறான்.



            ”காலத்தின் மீது சத்தியமாக!” என்று சொன்னதில் இறைவன் தன் முத்திரையை இட்டுள்ளான்.

            காலத்தின் மீது சத்தியமிட்டுச் சுட்டிக் காட்டப்பட்ட நான்கு உயர் பண்புகளும் இறைவனின் கருணையால் மட்டுமே ஏற்பட முடியும்.

            ஒருவர் தானாகவே இறை நம்பிக்கை கொள்ள முடியாது. இறைவன்தான் அதனை அவருக்கு அருள வேண்டும்.

            ஒருவர் தானாகவே நற்செயல்கள் புரிய முடியாது. இறைவன்தான் செய்ய வைக்க வேண்டும்.

            எவரும் எவரையும் தானாகவே உண்மையின் பக்கம் உய்க்க முடியாது. இறைவன்தான் அதனை ஆற்றுப்படுத்த வேண்டும்.

            யாரும் சுயமாகவே பொறுமையாக இருக்க முடியாது. “பொறுமையாளன்” (அஸ்-ஸபூர்) ஆன இறைவன்தான் ஒருவரில் தன் பொறுமையை வெளியாக்க வேண்டும்.



            ”அது அதுக்குன்னு காலம் இருக்கு. காலம் வரும்போது தானாக நடக்கும்” என்று பாமர மக்கள் பேசுவது உண்டு. இறைவனே காலமாக இருக்கிறான். அவன் நாடும்போதுதான் எதுவும் நடக்கும் என்பது அதன் உட்பொருள்.

            நேரம் என்பதும் பருவம் என்பதும் காலக் குறிப்புகள். அவற்றைக் காலமாகவே நாம் பாவித்துப் பேசுகிறோம். “காலம் கடந்துவிட்டது” என்கிறோம். “காலம் வந்துவிட்டது” என்கிறோம். உண்மையில், காலம் கடப்பதும் இல்லை, வருவதும் இல்லை. அது எப்போதும் இருந்தபடியே இருக்கிறது. நேரங்களும் பருவங்களும்தான் வருகின்றன, போகின்றன.

            ”அவள் பருவமாகிவிட்டாள்” என்றால் தன் வழியே உயிர்கள் வெளியாகும் பக்குவத்தை அவளின் உடல் அடைந்துவிட்டது என்று அர்த்தம். “அவள் காலமாகிவிட்டாள்” என்றால் அவளின் உயிரே உடலை விட்டு வெளியேறிவிட்டது என்று பொருள். அவள் மரணித்துவிட்டாள் என்று அர்த்தம்.

            ஒருவர் இறந்து போனால் “காலமாகிவிட்டார்” என்று சொல்கிறோம். இதுவரை நேரத்தில் இருந்தார்; இப்போது காலத்தில் ஆகிவிட்டார் என்று அர்த்தம். அதாவது, இறைவனிடம் மீண்டுவிட்டார் என்பதையே அப்படிச் சொல்கிறார்கள். ஏனெனில், இறைவனே காலமாக இருக்கிறான்.

            “Time heals” – காலம் காயங்களை ஆற்றும் என்கிறார்கள். இறைவனே காயங்களை ஆற்றுவான் என்பதே அதன் பொருள்.

            ”காலம் பதில் சொல்லும்” என்று கூறுகிறார்கள். மனித மனம் விடை காண முடியாத வினாக்களுக்கெல்லாம் இறைவனே விடை சொல்வான் என்பதே இதன் அர்த்தம்.



            ”காலம் கனியும்; காரியம் நடக்கும்” என்று சொல்கிறார்கள். கனிவு என்பது தமிழில் ஒரு ஞானச் சொல். அதில் பல அர்த்தங்கள் அடங்கியுள்ளன.

            கனிவு என்பது மென்மை. காய் கல் போல் இருக்கிறது. கனியும்போது மென்மை ஆகிவிடுகிறது. இறைவன் மென்மையானவன் (அல்-ஹலீம்).

            கனிவு என்பது அன்பு, அருள். இறைவன் அன்பாளன் (அல்-வதூது). அருளாளன் (அர்-ரஹ்மான், அர்-ரஹீம்).

            கனிவு என்பது இரக்கம், கருணை. அதனால்தான் ”இரக்கம் காட்டுங்கள்” என்பதற்கு “கனிவு காட்டுங்கள்” என்றும் சொல்கிறோம். இறைவன் இரக்கம் மிக்கவன். அதனால் அடியார்களின் பிழைகளை மன்னிக்கிறான். “நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பொறுப்பவனாகவும் இருக்கிறான்  (இன்னல்லாஹ கஃபூருன் ஹலீமுன் – 2:235)

            கனிவு என்பது அழகு. இறைவன் அழகன். “அல்லாஹ் அழகானவன், அவன் அழகை நேசிக்கிறான்” (இன்னல்லாஹ ஜமீலுன்ய் யுஹிப்புல் ஜமால் – அல்-முஃஜமுல் அவ்சத் – 6906.)

            ’கனிவு’ என்னும் சொல் நற்பண்புகள் அனைத்தையும் திரட்டிக் குறிப்பிடும் சொல்லாக இருக்கிறது. இறைவன் பரிபூரண நல்லோனாக (ஃகைரே மஹழ்) இருக்கிறான்.

            ”காலம் கனிந்து வரும்” என்று சொன்னால் “இறைவன் அருள் செய்வான்” என்றே அர்த்தப்படும்.

            காலம் கனிந்து வரும், அது நம்மையும் கனிய வைக்கும்.

No comments:

Post a Comment