“கடந்த –
நிகழ் – எதிர் என்னும் காலப் பிரிவு வெறுமனே பிடிவாதமாகத் தொடரும் ஒரு மாயை
மட்டுமே.” என்றார் நவீன அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
முக்காலம்
என்பது எக்காலத்திலும் இருந்ததில்லை என்று ஞானியரும் சொல்கின்றனர்.
முக்காலம்
என்பது நம் மனம் கற்பனை செய்து அனுபவித்து வரும் அமைப்பு என்று அவர்கள் நமக்கு உணர்த்துகின்றனர்.
”கோலம்
மிகுந்தொளி கூட்டி, மயக்கமும் காட்டி, எழும் / காலம் எனும் பெரும் கற்பனைக்கே மயலாகி…”
என்று பாடுகிறார் திருலோக சீதாராம். காலத்தின் கோலம் யாரும் எளிதில் விட்டு விடுதலை
ஆகி நிற்க முடியாத பெரும் கவர்ச்சி கொண்டது. ஒளி மயமானது, மயக்குவது.
இந்தக் காலமே இடத்தில் பற்பல காட்சிகளைக் காட்டுகிறது. காலம்
ஒருமையாகவும், இடம் பன்மையாகவும் இருக்கிறது என்று கூறுகிறார் பாரதியார்: “காலம் என்றே
ஒரு நினைவும் / காட்சி என்றே பல நினைவும் / கோலமும் பொய்களோ? அங்கு / குணங்களும் பொய்களோ?”
என்பது அவரின் விசாரணை.
கடந்த
– நிகழ் – எதிர் என்று கணங்களின் தொடர்ச்சியாக அமைந்திருக்கும் இந்தக் காலத்துக்கு
ஒரு முடிவு உண்டு, சாவு உண்டு என்பது ஞானிகளின் தரிசனம்.
அதன்
முடிவை “கியாமத்” என்கிறது இஸ்லாம். ’கியாம்’ என்றால் நிற்றல் என்று பொருள். காலத்தின்
தொடரோட்டம் நின்றுவிடும் நிலையை “கியாமத்” என்னும் சொல் குறிக்கிறது. அதற்குப் பிறகு
நொடி இல்லை, நிமிடம் இல்லை, மணி இல்லை, நாள் இல்லை, வாரம் இல்லை, திங்கள் இல்லை, பருவம்
இல்லை, ஆண்டு இல்லை, யுகம் இல்லை, ஊழி இல்லை. காலம் என்று நாம் இன்று அனுபவித்துக்
காணும் ஒன்று இல்லவே இல்லை.
மஞ்சு
தவழ் மலைகள் எல்லாம் பஞ்சுப் பஞ்செனப் பறந்து சிதறும் பேரூழி பற்றிக் குர்ஆன் வருணிக்கிறது.
“அந்நாளில் மனிதர்கள் சிதறிக் கிடக்கும் ஈசல்கள் போலாவர்; மேலும், மலைகள் யாவும் கொட்டப்பட்ட
பஞ்சைப் போன்றாகும்” (குர்ஆன்: 101:3-4)
காலத்தை
இல்லாமல் ஆக்குவது எது? இறை சக்தி என்கிறார் பாரதியார்.
”சக்திக்
கூத்தில் ஒளி ஒரு தாளம்” என்று சொல்லிக் காலம் அளந்த அந்த மகாகவி, ஊழிக் கூத்திடும்
சக்தியின் கோலத்தைப் பார்க்கும்போது காலம் செத்துவிடும் என்று “கியாமத்” பற்றிப் பாடுகிறார்:
“எத்திக்கினிலும் நின்விழி அனல் போய் எட்டித்
தானே எரியும் கோலம் கண்டே சாகும் காலம்”
அதாவது
அண்ட சராசரங்கள் யாவும் வெடித்துச் சிதறி அழியும்போது காலமும் அழிந்துவிடும். இடம்
அழியின் காலமும் அழியும்.
இறைமையின்
ரௌத்திரம் ஓர் அபூர்வ அழகு என்பது ”ரௌத்திரம் பழகு” என்று சொன்ன அந்த மகாகவிக்குத்
தெரிகிறது,. உருவகமாக அதனைப் பெண்ணாக்கி, காளி என்று பெயர் கொடுத்து சாக்த மரபில் நின்று
அவன் பாடுகிறான். அந்த அபூர்வ அழகு முகக் கண்ணுக்கும் அகக் கண்ணுக்கும் உயிருக்கும்
அமர நிலை தரும் அமிர்த விருந்தாகிறது: “மின்னுகின்ற பேரொளி காண், காலம் கொன்ற விருந்து
காண், கடவுளுக்கோர் வெற்றி காணே.”
இறைமையின்
ஒரு ’பார்வை’, ஒற்றை ஒளிச்சுடர், பாய்ந்தால் போதும், மலைகள் பொடிப் பொடியாகும். இறைத்தூதர்
மூசா (அலை) அவர்களின் நிகழ்ச்சி ஒன்று இதனைக் காட்டுகிறது:
”நாம் குறித்த இடத்திற்கு மூசா வந்தபோது
அவரின்
ரட்சகன் அவருடன் பேசினான்;
‘என்
ரட்சகா! யானுனைக் காண வேண்டும்
நின்னை
எனக்குக் காட்டியருள்’ என்றார்;
இறைவன்
அவரிடம் இயம்பினான்:
நீ
எனைக் காணாய் ஒருபோதும்;
எனினும்
நீ அந்த மலையைப் பார்
அது
தன் இடத்தில் நிலைத்திருந்தால்
அப்போது
நீ எனைக் காண்பாய்.’
அவரின்
ரட்சகன் அந்த வெற்பிடம்
ஒளிச்
சுடர் கொண்டு வெளிப்பட்டபோது
பொடித்துப்
பூழ்தி ஆனதுவே!
மூர்ச்சித்து
விழுந்தார் மூசா நபியும்!
தெளிந்து
எழுந்ததும் மொழிந்தார்:
‘நீ
மிகத் தூயன்! உன்னிடம் திரும்பினேன்!
நம்பிக்கையாளருள் முதல்வன் ஆகிறேன்!’”
(குர்ஆன்:
7:143)
இறைவனின்
ஒளிச்சுடர் வெளிப்பட்ட போது வெற்பு பொடிப் பொடி ஆனது. காதல் மிகைக்கும் போது முகத்தின்
அழகே திரையை எரித்துவிடுகிறது! அது பூர்வீக அழகு, தெய்வீக அழகு. அத்தகைய ஒரு காட்சி,
மூசா நபி வேண்டியது போன்ற தரிசனம், பார்வையைக் கூசச் செய்து மயக்கமுற்று விழச் செய்தாலும்
இதயத்திற்கு அது பேரினப் பரிசாகிறது. மகாகவி அல்லாமா இக்பால் சொல்கிறார்:
“உள்ளமையின் திரை சற்றே கிழிந்துள்ளது
பூர்வீக
அழகு வெளிப்பட்டுள்ளது சற்றே!
இதயத்திற்கோ
இது ஓர் ஆயிரம் லாபம்;
பார்வைக்கோ
ஒரே ஒரு நட்டம் மட்டும்!”
(ஹுஸ்னே அஜல் கி ஹே நமூத்; ச்சாக் ஹே
பர்தாயே உஜூத்;
தில் கே லியே ஹஜார் ஸூத்; ஏக் நிகாஹ் கா ஸியான்.
-
பாலே
ஜிப்ரீல் 132: தவ்க்கோ ஷவ்க்.)
”உள்ளமையின்
திரை சற்றே கிழிந்துள்ளது..” என்கிறார் இக்பால். மொத்தத் திரையும் கிழிந்து போவதே
”கியாமத்”. காலமும் இடமுமே உள்ளமையின் திரைகள். அவை கிழியும். அதாவது, இடம் சாகும்;
காலம் சாகும்.
தமிழில்,
‘திரை’ என்றால் அலை என்று ஓர் அர்த்தம் உண்டு. திரை-கடல் என்பது அலை-கடல். அலைகள் கடலால்
ஆனவை. இதுவும் இங்கே பொருந்தும். இடம் காலம் அல்லது ’இட-காலம்’ என்னும் திரை இறைவன்
தன் உள்ளமையில் வெளிப்படுத்திக் காட்டுவது. இறைவனால் ஆனவை. எனவேதான், “நானே காலம்”
(அன தஹ்ரு) என்கிறான் இறைவன்.
அதாவது,
கடந்த-நிகழ்-எதிர் என்னும் முக்காலம் காலாதீதத்தால் ஆனது.
அலையில்
கடலே அன்றி வேறில்லை. அலையைக் காண்பவன் அதில் கடலைக் காணலாகும். அதுபோல், தொடர் காலத்தில்
காலாதீதத்தை அன்றி வேறில்லை. தொடர் காலத்தைக் காண்போன் அதில் காலாதீதத்தைக் காணலாகும்.
”துடிப்பற்று நிற்கிறது இக்கணம்
நடிக்கிறது அதில் காலாதீதம்”
என்று எழுதினார் பிரமிள்.
”மண் துகள் ஒன்றில் மாநிலம் காணல்
விண்ணை
ஒரு சிறு பூவில் பார்த்தல்
ஒரு
கைப்பிடிக்குள் எல்லை இன்மை
சிறு கணம் அதனுள் முடிவிலி காலம்”
என்று “கள்ளமின்மையின் அறிகுறிகள்”
(Auguries of Innocence) என்னும் கவிதையில் எழுதுகிறார் வில்லியம் பிளேக்.
தொடர் நிலைக் காலம் தேய்ந்து மறைந்து காலாதீதம் தரிசனமாகும்
எல்லை வரை எட்ட முயல்கிறது நவீன இயற்பியல். விண்மீன் ஒன்று அழிந்து கருந்துளை ஆகும்
நிகழ்வை ஆய்கையில் காலம் பற்றிய தரிசனம் ஒன்றை அது அடைந்தது. அதாவது, விண்மீன் குலைந்து
மடியுந்தோறும் காலத்தின் கதி, கால ஓட்டத்தின் வேகம் குறைந்து கொண்டே வருகிறது. நிகழ்வு
முடியும் எல்லையில் (event horizon) காலம் சட்டென்று நின்றுவிடுகிறது. எனவே, “விண்மீன்
முழுமையாகக் குலைந்து வீழ முடிவிலிக் காலம் எடுக்கிறது” என்ற்கிறார் ஃபிரிட்ஜாஃப் காப்ரா
(“The Tao of Physics,” Space-Time, p.196.) ஆனால், நடைமுறையில் ஒரு குறிப்பிட்ட காலக்
கெடுவில் இந்நிகழ்வு முடிந்தும் விடுகிறது. எனில், இந்நிகழ்வு அளவுள்ள காலத்தில் நடந்ததா?
அல்லது அளவற்ற காலத்தில் நடந்ததா? என்று கேட்டால், சார்பியல் கோட்பாட்டில் இத்தகு கேள்விகளுக்கு
அர்த்தமில்லை என்று அவர் சொல்கிறார். அதாவது, அங்கே நிகழ் காலமும் காலாதீதமும் ஒன்றே.
அதாவது, நிகழ்வெல்லையில் (event horizon) ‘துடிப்பற்று நிற்கிறதுஇக்கணம், நடிக்கிறது
அதில் காலாதீதம்.’ ஏனெனில், உள்ளமையின் நோக்கில் தொடர் காலமும் காலாதீதமும் ஒன்றே.
ஆன்மிக ரீதியாக நோக்குங்கால், மூசா நபி
அவர்கள் இறைவனின் தரிசனம் வேண்டியபோது ஒரு - “event horizon” – நிகழ்வெல்லை நிலையில்தான்
இருந்தார்கள் என்று கருதலாம். அதாவது சூஃபிகள் சொல்லும் ஃபனா-பகா என்னும் நிலையில்
இருந்திருக்கிறார்கள். அதற்கான குறிப்பு மேற்சொன்ன (7:143)-ஆம் திருவசனத்தில் இருக்கிறது.
அவரின் ரட்சகன் அவருடன் பேசினான்; ‘என் ரட்சகா!
யானுனைக் காண வேண்டும்; நின்னை எனக்குக் காட்டியருள்’ என்றார்’ என்னும் பகுதியைக் கவனிக்கவும்.
இறைவன் அவருடன் பேசினான் என்று சொல்லிவிட்டு உடனே அவர் இறைவனிடம் பேசியதே சொல்லப்படுகிறது.
(”வ கல்லமஹு றப்பஹு கால றப்பி அரினீ அன்ழுர் இலைக்க” என்பது அறபி மூலப் பகுதி.) இறைத்தூதர்
மூசா (அலை) அவர்கள் தன்னிச்சையாக, சுயமாகப் பேசவில்லை. அவர்கள் மொழிந்த அந்தக் கோரிக்கையை
இறைவனே அவர்களைப் பேச வைத்தான் என்பதை இது காட்டுகிறது. அதாவது, அவர்கள் ஃபனா ஃபில்லாஹ்
என்னும் நிலையில் – இறைவனில் தன்னை இழந்த நிலையில் – இருந்தார்கள். ”அவர் தன்னிச்சையாகப்
பேசுவதில்லை” (வ மா யன்திகு அனில் ஹவா – 53:3) என்று நபி (ஸல்) அவர்களைப் பற்றிய வருணிப்புடன்
ஒப்புநோக்கினால், மூசா (அலை) அவர்கள் ஃபனா ஃபிர் றசூல் என்னும் நிலையில் – மூல ஒளியான
நூரே முஹம்மதில் தன் சுயம் மூழ்கிய நிலையில் இருந்தார்கள் என்றும் சொல்லலாம்.
காலாதீதம் ஒளி என்றால் தொடர் காலம் என்பது வானவில். வானவில்லின்
ஒவ்வொரு வண்ணத்திலும் ஒளியே இருக்கிறது. ஒளியே அந்த வண்ணத்தைக் காட்டுகிறது, அந்த வண்ணமாக
இருக்கிறது. அதுபோல்,
காலாதீதம் மௌனம் என்றால் காலம் என்பது ஏழிசை. மௌனமே இசையாகிறது.
இசையின் ஒவ்வொரு ஓசைக்குள்ளும் மௌனம் இருக்கிறது.
காலம்தான்
இடவெளியில் காட்சிகளைக் கொண்டு வந்து தருகிறது. நன்று-இனிது என்று பாரதி சிலவற்றைப்
பேசுகின்ற பாணியில் சொல்வதெனில், காலாதீதம் நன்று; காலம் இனிது.
No comments:
Post a Comment