எள்ளில் இருந்துதான் எண்ணெய் உண்டாகும். அதுபோல், இலக்கியத்தைப் பார்த்துத்தான் இலக்கணம் இயற்றப்படுகிறது. ‘இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம்பல்’ என்கிறது நன்னூல்.
இலக்கணம் இருந்தால்தானே புலவர்கள் செய்யுள் புனைவார்கள்? இலக்கணத்துக்கு
முன்பே இலக்கியம் எப்படி? என்று கேட்கலாம்.
ஆம், எந்த மொழி ஆனாலும் அதன் ஆதி இலக்கியம் நாட்டுப்புறப் பாட்டுத்தான்
என்று மானுடவியலும் மொழியியலும் ஒருங்கே உரைக்கின்றன.
பாமரனைப் பின் தொடர்ந்தே பண்டிதன் பிறக்கிறான். பண்டிதப் பனுவல்களுக்கு,
பாமரரின் நாட்டுப்புறம்தான் நதிமூலம்.
இதற்கோர் இலக்கியச் செய்தி இயம்புகிறேன்.
பாரதியின்
ஞானச் சீடர் என்று போற்றப்படும் திருலோக சீதாராம் அவர்களின் மொழிபெயர்ப்புத் திறன்
பற்றி முதுமுனைவர் டி.என்.இராமச்சந்திரன் அவர்கள் விளக்கும்போது ஒரு நிகழ்ச்சியைச்
சொல்கிறார். ஒருமுறை திருலோக சீதாராம், பேராசிரியர் எம்.எஸ்.நாடார், வழக்கறிஞர் ஜெயராமன்,
தஞ்சை மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் சிவராஜ் ஆகியோர் அவரின் வீட்டில் கூடியிருந்தனர்.
திருலோகத்திடம் ஒவ்வொருவரும் ஆங்கில இலக்கியங்களில் இருந்து மேற்கோள்களைச் சொல்லச்
சொல்ல அவற்றை அவர் அக்கணமே அற்புதமாகத் தமிழில் பெயர்த்துச் சொல்கிறார்.
பேராசிரியர் எம்.எஸ்.நாடார் அவர்கள் ஷேக்ஸ்பியர் எழுதிய ஆண்டனி அண்டு கிளியோபட்ரா நாடகத்தில் இருந்து மேற்கோள் வைத்தார்: “Age cannot wither her / Nor customs stale her infinite variety”. உடனே திருலோகம் மொழிபெயர்த்துக் கூறினார்: “காலம் அவள் எழில் காய்வதில்லை / கன்னி இளநலம் கைப்பதில்லை”. “நன்றாக இருக்கிறது. ஆனால் அந்த இன்ஃபினிட் வெரைட்டி வரவில்லையே?” என்று டி.என்.ஆரும் நாடாரும் மறுப்புச் சொன்னார்கள். ”அது வராது. ஆனால் தமிழ் இப்படித்தான் இருக்கும்” என்றார் திருலோகம். தொடர்ந்து, “எனக்குச் சொல்லத் தெரியாதா? ’ஆயிரம் சுவை அவை அலுப்பதில்லை’” என்றார். “இது நல்லாயிருக்கே” என்றார் டி.என்.ஆர். “உங்களுக்குத் தமிழ் தெரியாது” என்றார் திருலோகம். “அப்ப உங்கள் கணக்குல யாருக்குத் தமிழ் தெரியும்?” என்று டி.என்.ஆர் விடாப்பிடியாகக் கேட்கவும், “ரெண்டு பேர் இருக்கறாங்க, பக்கத்துலதான் இருக்கறாங்க. பள்ளி அக்ரஹாரத்துல கந்தசாமிப் பிள்ளை இருக்கறார். திருவையாத்துல பண்டித வித்வான் கோபாலையர் இருக்கார்,” என்று திருலோகம் சொன்னார்.
நண்பர்கள்
கந்தசாமிப் பிள்ளையிடம் போனார்கள். விசயத்தைச் சொன்னார்கள். மொழிபெயர்ப்பை அவர் கேட்டார்.
“ஆயிரம் சுவை… “ என்ற மொழிபெயர்ப்பைச் சொன்னதும். “அடாடாடா, அற்புதம்” என்றார். “ஆனால்
அவர் இப்படிப் பாடவில்லை. ‘கன்னி இளநலம் கைப்பதில்லை’ என்றுதான் பாடினார்” என்று டி.என்.ஆர்
சொல்லவும், ‘கவிஞரே! அப்படியே கிட்ட வாங்க,” என்று டி.என்.ஆரை அழைத்து கட்டிக் கொண்டார்.
சரி, கோபாலையர் கைவிட மாட்டார் என்று நண்பர்கள் திருவையாற்றுக்குப் போனார்கள். அவரிடமும்,
‘ஆயிரம் சுவை…” என்னும் பெயர்ப்பை முதலில் சொல்லிக் காட்டியவுடன், “என்னமா பண்ணீருக்கார்!”
என்று வியந்தார். ‘ஆனால் அவர் அப்படிப் பாடவில்லை. அவர் பாடுனது: ‘கன்னி இள நலம் கைப்பதில்லை’”
என்று டி.என்.ஆர் சொன்னவுடன், தி.வே.கோபாலையர் தன் இரு கரங்களையும் தலை மேல் உயர்த்தி,
“எங்கியோ போய்ட்டாரே! கவிஞரே, இரு கரம் கூப்பி வணங்குகிறேன்” என்றார்.
”கன்னி
இளநலம் கைப்பதில்லை” என்று திருலோகம் செய்திருக்கும் இந்த அழகிய மொழிபெயர்ப்புக்குத்
தமிழில் இலக்கிய நதிமூலம் இருக்கிறது. அது இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம். அதன்
ஒன்பதாம் பகுதியான “கனாத்திறம் உரைத்த காதை”யில் தீய கனவு கண்டு வருந்திய கண்ணகிக்கு
தேவந்தி ஆறுதல் சொல்கிறாள்: “கைத்தாயும் இல்லை கணவற்கு” (55) அதாவது, “நீ உன் கணவனுக்குக்
கசந்துவிடவில்லை” என்கிறாள். கைப்பு என்றால் கசப்பு என்று பொருள்.
பேரறிஞர்களும் புலவர்களும் வியந்துரைக்கும் இந்தச் சொல்லும்கூட
பட்டறிவு மிக்க பாமரத் தமிழரின் புழக்கப் பேச்சில் அன்றாடம் நிகழ்கின்ற ஒன்றுதான்.
“அதுக்கப்புறம் ஒறவு கசந்து போச்சு” என்னும் அலுப்புக் குரல் அவ்வப்போது கேட்பதில்லையா?
அதையும் பெண்ணொருத்தி மிக இலக்கிய நயத்துடன் நாட்டுப்புறப் பாடலாக்கினாள்: “கச்சிருக்கும்போது
கரும்பானேன் – கைக்குழந்தை / வச்சிருக்கும்போது வேம்பானேன்” (பாட பேதம்: கச்சிறுக்கும்போது.)
பண்டு முதல் மக்கள் பேசி வரும் அன்றாட உரையாடல்களில்கூட இலக்கிய
நயம் சுடர் விடுகின்றன. கவிஞனின் உள்ளம் அவற்றை ஓர்ந்து அவதானித்து ஒப்பற்ற கவிதைகளைத்
தீட்டிவிட முடியும். பாரதியின் பின்வரும் வரிகள் ஓர் உதாரணம்:
”பாலும் கசந்ததடீ – சகியே
படுக்கை நொந்ததடீ!
கோலக் கிளி மொழியும் – செவியில்
குத்தல் எடுத்ததடீ!”
வாழ்வில் ஊறும் உரைநடைப் பேச்சுத்தான் கவிதை மொழியாகப் பரிணமிக்கிறது
என்பதை இது காட்டுகிறது.
No comments:
Post a Comment